பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விதை மற்றும் விதைப்பு

விதை மற்றும் விதைப்பு பற்றிய பற்றி தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விதை

"வித்தே விளைச்சலுக்கு ஆதாரம்” தரமான விதைகளே உயர்வான விளைச்சலுக்கு அடித்தளமாக அமைகின்றன. வளர்ந்து வரும் வேளாண் தொழில்நுட்பத்தில் விதை முக்கிய மலிவான இடுபொருளாகும். ஊட்டச்சத்துக்கள், நீர், பயிர் பாதுகாப்பு இடுபொருட்கள் ஆகியவற்றை சரியாக, முறையாகப் பயன்படுத்தினாலும், தரமான விதைகளை தேர்ந்தெடுக்கவில்லையெனில், விளைச்சலின் முழுப் பயனையும் பெற முடியாது. அதனால் தரமான விதையைத் தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கிய பணியாகும்.

விதை வரையறை

தன் தாயைப் போன்ற தோற்றம் மற்றும் பண்புகளுடைய அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி பெற்ற, கருவுற்ற, முதிர்ந்த சூலகமே விதை எனப்படும். விதையென்பது பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை மட்டும் குறிப்பதில்லை. கிழங்குகள் (மஞ்சள்), இலையுடன் சேர்த்த தண்டுகள் (முருங்கை), கரணைகள் (கரும்பு), முளைப் பகுதிகள் (உருளைக் கிழங்கு) ஆகியவற்றையும் குறிக்கும்.

தானியம் வரையறை (Grain - Definition)

உணவுக்காக சாகுபடி செய்யப்படும் தாவர விளைபொருட்களுக்கு தானியம் என்று பெயர். இது உணவுக்காக பயன்படுத்தப்படும் தாவரங்களின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும்.

தரமான விதையின் குணங்கள்

 • அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி பெற்றதாக இருக்க வேண்டும். அகத்துாய்மை, புறத்தூய்மை பெற்றதாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச முளைப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பின்பொழுது விதை வீரியம் மற்றும் முளைப்புத் திறன் பாதிக்கப்படக் கூடாது.
 • விதை நேர்த்தியினால் வீரியம் பாதிக்கப்படகூடாது.

விதை உறக்கம் (Seed Dormancy)

சாதகமான சூழ்நிலை அமைந்தாலும் சில விதைகள் உடனடியாக முளைக்காமல், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பே முளைக்கின்றன. இந்த ஒய்வு நிலைக்கு உறக்க நிலை என்று பெயர். விதை உறக்கம் இரண்டு வகைப்படும்.

அ. முதல் நிலை உறக்க நிலை (Primary Dormancy)

சில விதைகள் முளைப்பதற்கு உரிய சாதகமான சூழ்நிலை அமைந்தாலும், அவற்றில் உள்ள கடின மேலுறை, விதைக் கரு முற்றாத நிலை போன்ற காரணங்களால் உடனடியாக முளைப்பதில்லை. இதற்கு முதல்நிலை உறக்கநிலை என்று பெயர். முதல் நிலை உறக்க நிலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

 1. இயல்பு உறக்கநிலை
 2. பாரம்பரிய உறக்க நிலை
 3. தூண்டப்பட்ட உறக்க நிலை

ஆ. இரண்டாம் நிலை உறக்க நிலை (Secondary Dormancy)

நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகள் கூட சாதகமற்ற சூழ்நிலையில் உறக்க நிலையை அடைகின்றன. இதற்கு இரண்டாம் நிலை உறக்க நிலை என்று பெயர்.

இரண்டாம் நிலை உறக்க நிலையானது வெப்பநிலை மாறுபாடு, ஒளி பற்றாக்குறை, இரசாயனங்கள், வாயுக்கள், வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

உறக்க நிலையை நீக்குதல்

 1. இயந்திரங்களை கொண்டு விதை உறைகளின் மேல் சிராய்ப்புகளை ஏற்படுத்தி உறக்க நிலையை நீக்கலாம் உம். பயறு வகைகள்.
 2. இரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்து உறக்க நிலையை குறைக்கலாம் உம். பருத்தி அமில விதை சிகிச்சை
 3. வளர்ச்சி ஊக்கிகளை கொண்டு நேர்த்தி செய்து உறக்க நிலையை நீக்கலாம். உ.ம். ஜிப்ரலிக் அமிலம் - கோதுமை, பார்லி
 4. மிகக் குறைந்த வெப்பநிலையில் (5 - 10°C) குறிப்பிட்ட காலத்திற்கு விதைகளை வைத்திருந்து உறக்க நிலையை நீக்கலாம். உம். ஆப்பிள், ரோஜா, ADT43 ரக நெல் விதையை 40-50°C வெப்பநிலையில 10 நிமிடம் வைத்து உறக்க நிலையை நீக்கலாம்.
 5. விதைகளை ஒடும் நீரில் குறிப்பிட்ட காலம் வைப்பதால், முளைப்பை தடை செய்யும் உறக்கநிலை அகற்றப்பட்டு இரசாயனங்கள் நீக்கப்படுகிறது. உ.ம். கொத்தமல்லி.
 6. சில விதைகளை தீயிலிட்டு எரித்து, விதை உறையின் தடிமனை குறைத்து உறக்க நிலை நீக்கப்படுகிறது உ.ம். தேக்கு விதைகள்
 7. அதிக வெப்பநிலை உள்ள நீரில் குறிப்பிட்ட காலம் வைத்து உறக்க நிலையை நீக்கலாம் உ.ம். வேலமரம்.
 8. சில விதைகளை நீரில் ஊறவைத்து விதைப்பதால் உறக்கநிலை நீக்கப்படுகிறது. உ.ம். கருவேலம்
 9. விதைகளை கைகளால் தரையில் தேய்த்து உறக்க நிலையை நீக்கலாம். இது அனைத்து மரப்பயிர்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.

விதை நேர்த்தி (Seed Treatment)

விதைகளை இரசாயன மருந்துகளுடன் சிகிச்சை செய்வதற்கு விதைநேர்த்தி என்று பெயர். விதை நேர்த்தி கீழ்வரும் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

 • பூச்சி தாக்குதலைத் தவிர்க்க
 • பூசண தாக்குதலை தடுக்க
 • ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்த
 • முளைப்பு திறனை தூண்ட
 • வறட்சியை தாங்க

பூச்சிக்கொல்லி விதை நேர்த்தி

வளரும் பயிர்களில் பூச்சி தாக்குதலை குறிப்பிட்ட காலம் வரை கட்டுக்குள் வைக்க இந்நேர்த்தி மேற்கொள்ளப்படுகிறது. உம். பருத்தி மற்றும் வெண்டை விதைகளில் இமிடாகுளோப்ரிட் சிகிச்சை

பூசன விதைநேர்த்தி

நோய்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த இந்நேர்த்தி உதவுகிறது. உம். தானியம் மற்றும் பயறு வகை பயிர்களில் கார்பன்டசிம் விதை நேர்த்தி.

உயிர் உர நேர்த்தி

வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தவும், மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தை கிடைக்கும் வடிவத்திற்கு மாற்றவும் உயிர் உர நேர்த்தி செய்யப்படுகிறது.

முளைப்புத் திறனை அதிகரிக்கும் விதை நேர்த்தி

விதைகளின் முளைப்புத் திறனை தூண்டி, அதிக முளைப்புத் திறனை பெற இரசாயனங்களைப் பயன்படுத்தி விதைநேர்த்தி செய்யப்படுகிறது. உ.ம். ஜிப்ரலிக் அமிலம்.

கடினமாக்கல் விதைநேர்த்தி (Seed Hardening)

மானாவாரி நிலங்களில் வறட்சியை தாங்கி வளர விதைகளுடன் இரசாயன மருந்தை கொண்டு நேர்த்தி செய்தல் கடினமாக்கல் விதை நேர்த்தியாகும்.

உம். பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் KH,PO, பொட்டாசியம் குளோரைடு KC)

விதை நேர்த்தியின் வகைகள்

விதை நேர்த்தி மேற்கொள்ளப்படும் முறையைப் பொறுத்து

 1. ஈர விதை நேர்த்தி
 2. உலர் விதை நேர்த்தி

என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஈர விதை நேர்த்தி (Wet Seed Treatment)

ஒட்டுப்பசையை பயன்படுத்தி, இரசாயன மருந்துகளை விதைப் பரப்பின்மேல் படியச் செய்யும் நேர்த்தி ஈர விதை நேர்த்தி ஆகும். உம், ஆறிய அரிசிக் கஞ்சியுடன் திராம்.

உலர் விதை நேர்த்தி (Dry Seed Treatment)

விதை மேல் இரசாயன மருந்து பூச்சு ஒட்டுப்பசை இன்றி மேற்கொள்வது உலர் விதை நேர்த்தி. உம். நெல் விதைகளுடன் கார்பன்டசிம்.

விதைப்பு (Sowing)

தரமான விதைகளை பண்படுத்தப்பட்ட மண் மீது விதைத்து பயிர் உற்பத்தி மேற்கொள்வதே விதைப்பு ஆகும். இது நேரடி விதைப்பு, நாற்றங்கால் விதைப்பு என இரண்டு முறைகளில், வரிசை மற்றும் வரிசையற்ற யுக்திகளில் நடவு செய்யப்படுகிறது. மேலும் விதைப்புக்கு மனித வேலையாட்கள் அல்லது இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

நேரடி விதைப்பு (DirectSowing)

தயார் செய்யப்பட்ட நிலத்தில் விதைகளை நேரடியாக மண் மீது விதைப்பது நேரடி விதைப்பு ஆகும். நேரடி விதைப்பு கீழ்க்கண்ட முறைகளில் மேற்கொள்ளப் படுகிறது.

 • கை விதைப்பு
 • ஊன்றுதல்
 • சால் விதைப்பு

நன்மைகள்

 1. மானாவாரி மற்றும் கலப்பு பயிர் சாகுபடிக்கு கைவிதைப்பு சிறந்த முறையாகும். மேலும் விதைப்பு செலவு குறைவு
 2. ஊன்றுதல் மற்றும் சால் விதைப்பு முறைகள் மூலம், சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் வரிசை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
 3. இம்முறையில் விதைத் தேவை குறைவு.

நாற்றாங்கால் நடவு (Transplanting)

பயிர் விதைகளை சிறிய பரப்பில் விதைத்து குறிப்பிட்ட காலம் வரை பராமரித்து, வயலில் நடவு செய்யும்முறை நாற்றாங்கால் நடவு ஆகும்.

நன்மைகள்

 1. நடவு வயல் தயாராகாத நிலையில் நாற்றங்கால் தயார் செய்து தக்க சமயத்தில் நடவு செய்யலாம்.
 2. குறிப்பிட்ட இடைவெளியில் வரிசை நடவு செய்வதால் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.
 3. நடவு வயலில் குறைவான நாட்கள் இருப்பதால் பயிர் பாதுகாப்பு செலவு குறைவதுடன், விரைவில் முதிர்ச்சி நிலையை அடைகின்றன. எனவே அடுத்த பயிரை காலதாமதமின்றி சாகுபடி செய்யலாம்.
 4. தரமற்ற மற்றும் பூச்சி, நோய்களால் பாதிக்கப்பட்ட நாற்றுகள் நாற்றங்காலிலேயே அகற்றப்படுவதால், ஆரோக்கியமான நாற்றுக்கள் மட்டுமே நடவு வயலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
 5. பயிர், ரகம், பட்டம், விதைப்பு முறை ஆகியவற்றைப் பொறுத்து விதைத்தேவை மாறுபடுகிறது.
 6. பயிர் உற்பத்தியில் மண்ணிற்கு அடுத்தபடியாக விதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விதை நேர்த்தியின் வாயிலாக வீரியம் மற்றும் முளைப்புத்திறன் பாதுகாக்கப்படுவதுடன், பூச்சி மற்றும் நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படுவதால் பயிர் உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.9347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top