பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / உரம் / இயற்கை உரம் / இதர இயற்கை உரங்கள் / இயற்கை உரமும், விளைச்சலைத் தடுக்கும் பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கை உரமும், விளைச்சலைத் தடுக்கும் பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகளும்

இயற்கை உரமும், விளைச்சலைத் தடுக்கும் பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இயற்கை விவசாயம்

இந்திய நாடு இயற்கை சார்ந்த ஒரு விவசாய நாடு. இந்த விவசாயத் தொழிலே அனைத்துத் தொழில்களுக்கும் மூலத்தொழிலாகும். ஆரம்பத்தில் இயற்கையான முறையில் வேளாண்மைத்தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. பின்பு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இயற்கையான முறையில் நடைபெற்ற விவசாயமானது செயற்கையான முறையாக மாறியது. சல்பேட், பாஸ்பேட் எனப்பல “பேட்” உரங்கள், மண்ணில் நிறைந்து இருந்த மணிச்சத்தையும், தழைச்சத்தையும், சாம்பல் சத்தையும் அதன் உயிர்தன்மையையும் இழக்கச் செய்தன. இதனால் இந்த உரங்களில் விளைந்த உணவுகளை உட்கொண்ட மனிதர்களுக்கு புதுப்புது நோய்கள் தொற்றியது.

தற்போது இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை அறிந்த தற்போதைய விவசாயிகள் இயற்கையான முறையில் நிலத்தை பராமரிக்கவும், இயற்கை உரத்தைப் பயிரிடவும் துவங்கியுள்ளனர். ஆதலால் உலக அளவில் இன்று இயற்கை வேளாண்மைக்கு உயிரோட்டம் பெற்றிருக்கிறது.

நிலத்தை வளம் கொழிக்க வைக்கும் மண்புழுக்களின் செயல்பாடு குறித்து இன்று உலகெங்கும் மண்புழு உரத்தை பயன்படுத்த முனைந்துள்ளனர் விவசாயிகள்.

மண்புழு உர தயாரிப்பு முறை

முதலில் நீர்த்தேக்கம் இல்லாத மேடான இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். குழி முறையை விட தொட்டி முறையில் மண்புழு வளர்ப்பது எளிதானது. அதனால் 2 மீட்டர் நீளம் 1மீட்டர் அகலமுள்ள பாலிதீன் தாளை விரிக்கவும், சிமெண்ட்டு தரையாக இருந்தால் பாலிதீன் தாள் தேவை இல்லை. சுற்றி 3 செங்கல் ஜல்லிகளை நிரப்பி 7 செ.மீ உயரம் மணலை நிரப்பவும். ஒரு லிட்டர் வேப்ப விதைக் கரைசல் அல்லது கடற்பாசி உரம் இடுவது மிகவும் நல்லது. இதன் மீது போதிய ஈரமாக நீர் விடவும் பின் 10 செ.மீ உயரம் களிமண் அல்லது வண்டலை நிரப்பவும். 2 லிட்டர் தயிர் மற்றும் சாணி கரைசலை தெளிக்கவும்.

ஈரப்பதம் 40 சதவீதம், வெப்பநிலை 20 சதவீதமாக இருப்பது சிறந்தது. 15 நாட்கள் கழித்து குளிர்ந்த பின்னர் 1000 மண் புழுக்களுக்கு குறைவில்லாமல் மண்ணுடன் 5 செ.மீ உயரம் இடவும். மேலும் 10 செ.மீ உயரம் வைக்கோல் அல்லது வேறு பண்ணைக் கழிவுகளை இடவும். பின் தென்னை அல்லது பனை ஓலைகளைக் கொண்டு மூடவும். நாள்தோறும் நீர் தெளிக்கவும். அதிக நீர்விட தேவையில்லை. தொடர்ந்து 30 நாட்கள் இவ்வாறு பராமரிக்கவும். இதன் மீது தென்னங்கீற்று கொட்டகை அமைப்பது நல்லது. கரையான், பூனை, கோழிகள், எலிகள் போன்றவையிடமிருந்து காக்க மெல்லிய வலை அமைப்பது நல்லது.

30 நாட்கள் கழித்து மண் புழுக்கள் இனப்பெருக்கம் செய்திருக்கும். மண்புழு படுக்கை அமைத்திருக்கும். 31 ஆம் நாள் முதல் ஓலைகளை அகற்றிவிட்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மண்புழுக்களுக்கு உணவாக 50 கிலோ மக்கிய எரு அல்லது பண்ணைக் கழிவுகளை ஒவ்வொன்று முறை 5 செ.மீ உயரம் இட்டு நீர்த்தெளிக்கவும். ஏற்கனவே உயிர் உரம் கலந்து இருப்பின் மிகச் சிறந்ததாகும். 45 நாட்கள் கழித்து மண்புழு உரம் 500 கிலோ அளவு கிடைக்கும். ஆண்டுக்கு 8 தடவை எடுக்கலாம்.

மண்புழுஉரம் பாதுகாப்பு

சேகரம் செய்த உரத்தை மூன்று நாட்கள் வெயிலில் உலரவைத்து லேசான ஈரப்பதத்துடன் பாலிதீன் பைகளில் அடைத்துவைக்கவும். தேவையான போது வயல்களுக்கு இடலாம். செயற்கை உரங்களை விட 10 மடங்கு சிறந்த உரம் மண்புழு உரமாகும்.

அனைத்து உரங்களுள் மண்புழு உரமே அரசன்

மண்புழு உரம் காரம், அமிலம் தன்மை இல்லாமல் நடுநிலையில் இருக்கும். லேசாக இருக்கும் டீதூள் போல் இருக்கும். இதில் நுண்ணுயிர் வேகமாக வளர்ச்சி அடையும். நுண்ணுயிர்கள் 10-10 என்ற அளவில் இருக்கும். ஆதலால் இதனை மண்புழு உரம் என்பதை விட மண்புழு உயிர்உரம் என அறிஞர்கள் அழைப்பர். இவ்வுரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் பிற இயற்கை உரங்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. மேலும் நுண்ணூட்டச் சத்துக்களான கால்சியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், மெக்னீசியம், மேங்கனீஷ் ஆகியவை போதுமான அளவில் உள்ளன. இது தவிர வளர்ச்சி ஊக்கிகளான ஜிப்ரலின்ஸ், ஆக்சின்ஸ் சைட்டோ கினிக்ஸ் போன்றவையும் உள்ளன. இந்த வளர்ச்சி ஊக்கிகள் பிற எந்த உரங்களிலும் இல்லை. மேலும் நிலத்திற்கு மண்புழு உரங்கள் இடும்போது தேவையற்ற களைகள் அறவே முளைப்பதில்லை. இந்த சிறப்புமிக்க உரத்தை எல்லா பயிர்களுக்கும் மேலுரமாக இடலாம். செடிகள் உடனே சிதறாமல் எடுத்து வளர்ச்சி பெறும். மண்புழு உரத்தில் மண்புழுக்கள் இருக்காது. ஆனால் அதன் முட்டைகள் இருக்கும். இதை வயலில் இட்டதும் குஞ்சுபொரித்து புழுவாக மாறும். மண்புழு இனப்பெருக்கம் ஒரே புழு மூலம் நடைபெறும். ஆண்பெண் உறுப்புகள் ஒரு புழுவில் இருப்பது ஒரு வரப்பிரசாதமாகும். இத்தகைய சிறப்புமிக்க சத்துக்கள் இதில் இருப்பதால் உரங்களின் அரசன் என்று இவ்வுரத்தைக் கூறுகின்றனர்.

தாவரக் கரைசலால் கட்டுப்படும் பூச்சி மற்றும் நோய்கள்

வேம்பு விதைக்கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சி – நோய்கள்

வேம்பு பொருட்கள் 200 வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. வேம்புப் பொருளில் உள்ள அசாடிராக்டின் புழுக்களைக் கட்டுப்படுத்துகின்றது. பயிர்களைப் பூச்சிகள் உண்ண விடாமல் தடுக்கின்றது. பெண் பூச்சிகள் முட்டை இடாமல் தடுக்கின்றது. பூச்சிகள் மலடாகின்றன. எனவே அனைத்துப் பயிர்களில் வரும் தத்துக்கிளி, பச்சைப்பூச்சி, வெட்டுக்கிளி, புழுக்கள், இலைப்பேன், அந்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, புகையான், பழஈக்கள், நூல் புழுக்கள், கம்பளிப் புழு, காய்த்துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு, நுனிக்குருத்துப்புழு, நத்தைகள், படைப்புழு என 200 வகையான பூச்சிகளை இவை கட்டுப்படுத்தி நிலத்திற்கு வளம் சேர்கின்றன.

நோய்க்கட்டுப்பாட்டில்

இந்த வேம்பு விதைக்கரைசலால் பயிர்களைத் தாக்கின்ற வாடல்நோய், வேரழுகல், இலையுறைக் கருகல், துங்ரோ, வைரஸ், தேமல், இலைப்பூசணங்கள், சாம்பல் நோய், செம்புள்ளி நோய், தண்டு அழுகல் நோய் முதலியன கட்டுப்படுகின்றன.

வேம்பு விதைக்கரைசலால் நன்மை தரும் பூச்சிகளின் வளர்ச்சி

சிலந்திகள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், அசுவுனிப்பூச்சிகளை உண்ணும் வண்டுகள், தீமை செய்யும் பூச்சிகளின் ஒட்டுண்ணிகளாக உள்ள குளவிகள் முதலிய உயிரினங்களுக்கு வேம்புக்கரைசல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் மண் புழுக்களின் வளர்ச்சி 25 சதவிகிதம் கூடுகிறது.

மஞ்சள் பொடி மூலம் கட்டுப்படும் நோய் வகை

கொடிவகை, காய்கறிகள், மிளகாய், வெண்டை பயிர்களுக்கு வரும் சாமல் நோய்க்கு ஏக்கருக்கு 8 கிலோ சாம்பலுடன் 2 கிலோ மஞ்சள் தூளை கலந்து விடியற்காலை தூவவும். இவ்வாறு வாரம் இருமுறை தூவி வந்தால் இப்பயிர்கள் செழிப்பாக வளரும். பூச்சிகள் அழியும்.

இஞ்சி மூலம் கட்டுப்படும் பூச்சிகள்

அசுவுணி, அமெரிக்கன் படைப்புழு, இலைப்பேன், இலைப்புள்ளி, பயறு வண்டு, வெள்ளை ஈ, வேர் முடிச்சுப்புழு, காய்த்துளைப்பான் போன்ற பூச்சிகளை இஞ்சிப்பொடி அல்லது இஞ்சிக் கரைசல் மூலம் பயிர்களுக்கு வரும் நெல் செம்புள்ளி, இலை நரம்புத்தேமல் நோய் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.

சீத்தாப்பழ இலைக்கரைசல்

இப்பழ இலைக்கரைசல் மூலம் பயிர்களை அழிக்கின்ற அசுவுணி, இலை திண்ணும் புழுக்கள், ஈக்கள், செதில் பூச்சி, பச்சைத் தத்துப்பூச்சி, பருத்தி சிகப்புப் பூச்சி, புகையான், வெட்டுக்கிளி, பயிறு வண்டு, பூசணி வண்டு, தானிய வண்டு முதலியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

நொச்சி இலைக்கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சிகள்

சாதாரணமாக வயல்வெளிகளில் விளைந்திருக்கும் நொச்சிச்செடியால் உருவாக்கப்பட்ட கரைசலைக் கொண்டு ஆமணக்குப்புழு, கம்பளிப்புழு, நெல்தண்டு துளைப்பான், வைரமுதுகு, அந்துப்பூச்சி, பயறுவண்டு முதலியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

பப்பாளி இலைக்கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சிகள்

படைப்புழு, வேர் முடிச்சுப்புழு, கம்பளிப்புழு முதலியன.

பப்பாளிப் பழம் மூலம்:

இப்பழத்தைத் துண்டுகளாக வெட்டி வயலின் வரப்பு ஓரம் வைத்து எலிகளைக் கொல்லலாம்.

தும்பைச்செடிமூலம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

பருத்தி சிகப்புப் பூச்சி, பாக்டீரியா நோய் முதலியன.

புகையிலைக்கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சிகள்:

அசுவுணி, அமெரிக்கன் படைப்புழு, இலைச்சுருங்கல் நோய், இலைப்பேன், கதிர் நாவாய்ப்பூச்சி, நெல்தண்டு துளைப்பான், புகையான், வெள்ளை ஈ, வேர் முடிச்சுப்புழு.

பூண்டுக்கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சிகள்:

அசுவுணி, இலைத்துளைப்பான், படைப்புழு, நுனி குருத்துப்புழு, காய்த்துளைப்பான் முதலியன.

பச்சை மிளகாய் கரைசல் மூலம் கட்டுப்படும் பூச்சிகள்:

அசுவுணி, செதில் பூச்சி, புள்ளிவண்டு, இலைச்சுருட்டுப்புழு, படைப்புழு, நுனி குருத்துப்புழு, காய்த்துளைப்பான் முதலியன.

பூ மற்றும் பழம் உதிர்வதைத் தடுக்க:

பெருங்காயத்தை செடிகளின் வேரில் இட்டு பூ மற்றும் பழம் உதிர்வதைத் தடுக்கலாம். 20 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

மேற்கூறிய இயற்கை உரம் கொண்டும், இயற்கைத் தாவரக் கரைசல் கொண்டும் வேளாண்மை செய்தால் குறைந்த முதலீட்டில் நிறைய வருவாய் பெற்று தமிழக விவசாயிகள் வளம் பெறலாம்.

ஆதாரம் : www.siragu.com

3.04464285714
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Stelas Rajakumar Anojan Jul 15, 2019 10:23 AM

எப்படி இக் கரைசல்களை உருவாக்க முடியும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top