பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்

நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

 • நீர் மேலாண்மை பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் மிகவும் அவசியமானது ஆகும். ஆனால் இன்றைய வறட்சியினால் குடிநீருக்கும், வீட்டு தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழில் சாலைகளிலும் மாபெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.
 • இதற்கான நிரந்தரத் தீர்வை காணுவது மிகவும் இன்றி அமையாதது ஆகும். விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப்படவேண்டும்.
 • இதற்கு அனைத்து குளங்களையும், குட்டைகளையும், கண்மாய்களையும், ஊருணிகளையும் தூர் எடுக்கவும், ஆழப்படுத்தவும் செய்தல் வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களிலும் புதிய ஏரிகளையும், குட்டைகளையும், நீர் பிடிப்பு பகுதிகளை உருவாக்கவும் வேண்டும். நீர் பாசன வாய்க்கால்களைச் செப்பனிடவும், பண்ணை குட்டைகளை உருவாக்குவதை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
 • இதனை இப்போது இருக்கும் மாநில, நடுவண் அரசின் திட்டங்களின் மூலமே உடனடியாக நடைமுறை படுத்தலாம். தமிழகத்தில் இன்று வறட்சியினால் வேலை இல்லாமல் திண்டாடும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கொண்டு, நடுவண் அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், மேலே கூறிய அனைத்து நீர் சேகரிப்பிற்கான வேலைகளை உடனடியாக செய்யலாம்.
 • இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலும் நீர் ஆதாரங்களை பெருக்கிக்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பினை 150 நாட்களுக்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இதன் மூலம் ஊரெங்கும் குறைந்தது 4 நீர் தேக்க குட்டைகளாவது புதிதாக வெட்ட வேண்டும். இருப்பதைத் தூர்வார வேண்டும்.
 • மேலும் இதில் தமிழக அரசு தனது அனைத்து துறைகளையும், குறிப்பாக வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை, பொது பணித்துறை, கல்வி துறை, விளையாட்டு துறை, நீர் பாசனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை, கால்நடை துறை மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நீர் மேலாண்மைக்கான விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும்.
 • இதில் பொது மக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரதிநிதிகளின் மூலமும் நீர் மேலாண்மையை ஒரு சமுதாயப் பொறுப்புப் பணியாக மாற்றிட வேண்டும்.
 • நீர் மேலாண்மை செய்வதுடன், விவசாயிகளும் பாதுகாக்க படவேண்டும். இதனை நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சி திட்டங்களையும் ஒன்றிணைத்து செயல் படுத்துவதன் மூலம் நடைமுறைப் படுத்தலாம். இதற்கு குறைந்தது மூன்று வகையான ஒருங்கிணைப்பு தேவை.
 • ஒரு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியானது போதுமானதாக இல்லாதபோது, மற்ற திட்டத்தில் உள்ள நிதியை, கிராம சபையின் (பழைய) வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதல் பெற்று எடுத்து நீர் பிடிப்பு பகுதிகளை மேம்படுத்தவும், புதியதாக குளம், குட்டை வெட்டவும் பயன்படுத்தலாம்.
 • மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துடன், ஒருங்கிணைந்த தேசிய நீர் மேலாண்மை திட்டத்தில் உள்ள நிதியையும் பயன்படுத்தலாம்.
 • தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையுடன், நீர்ப் பாசனத் துறை, பொதுப் பணித்துறை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், வேளாண் பல்கலைக்கழகங்களும் சேர்ந்து ஒரு சிறந்த நீர் வறட்சி மேலாண்மைக்கு வித்திட்டுக் கிராமம் தோறும் வழங்கலாம். தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்துடன், ஒருங்கிணைத்த தேசிய நீர் மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவற்றை ஒருங்கிணைத்து, ஒரு நிரந்தர வருவாய்க்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
 • அடுத்தகட்டமாக கிராமம்தோறும் விவசாயிகள் ஆலோசனை மையம் அல்லது ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை மையத்தை அரசு உடனடியாக உருவாக்கிடல் வேண்டும். நீர் சேமிப்பு மற்றும் சரியான உபயோகம், நீர் மேலாண்மை பற்றிப் பயிற்சி தருவதுவும், மேலும் அதற்காக விவசாயிகளின் திறமைகளை இம்மையத்தின் மூலம் மேம்படுத்துவதுவும் மிக முக்கியமானது ஆகும்.
 • இந்த மையங்களின் மூலம் கிராமங்களுக்கு தேவைப்படும் நீர் அளவினை கணக்கிட்டு, அதை சேமிப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். இதில் குடி நீர், கால் நடை பராமரிப்பு, வேளாண்மைக்குத் தேவையான நீர் அளவினை கண்டறிதல் வேண்டும்.
 • பிறகு கிராமங்களுக்கு தேவையான நீரை குளம், குட்டைகளில் மூலமாகவோ, ஆழ் குழாய் கிணறுகளின் மூலமாகவோ, ஆற்று நீரை தேக்குவதின் மூலமாகவோ பயன்படுத்துவதின் மூலமாகவோ நிவர்த்தி செய்தல் வேண்டும். இது ஒவ்வொரு கிராமத்திற்கும் நீண்டகால தண்ணீர் தேவை - செலவிடுதலுக்கான திட்டமிடுதலை உருவாக்கும்.
 • அதாவது ஒவ்வொரு கிராமத்திற்குமான நீர் வரவு-செலவு திட்டம் தீட்டப்படல் வேண்டும். இதனை அரசின் உதவி மூலமே செயல்படுத்தப்பட முடியும். மேலும் தண்ணீருக்கான திட்டமிடல் விவசாயிகளிடமிருந்து பெறுவதே சரியானதாக இருக்கும்.
 • இதில் தற்போது, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களும், உறுப்பினர்களும் பங்கேற்று, கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றி தருவது மிக்க பலனை தரும். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களை இத்திட்டமிடுதலில் பங்கேற்க செய்து, குடி நீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூற வேண்டும். கிராம, வட்ட, மாவட்ட, மாநில நீர் மேலாண்மை கொள்கை, நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை உடனடியாக வரைவு செய்து மக்களிடம் சேர்க்க வேண்டும்.
 • மேலும் நீர்ப் பாசனத்தைச் சீர் அமைக்கவும், இருக்கின்ற தண்ணீரை வைத்து வேளாண் உற்பத்தி செய்யவும், தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவும், புதிய நீர்பாசன உத்திகளைக் கடைபிடிக்கவும், குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்யவும் நீர் பயனீட்டாளர்கள் அமைப்பை உடனடியாகக் கிராமம் தோறும் ஏற்படுத்துதல் வேண்டும்.
 • இந்த அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை வழிமுறைகளை எடுத்து கூறுவது அவசியமாகும். இதில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினர்களாகச் சேர்த்துவிட வேண்டும். புதிய நீர் மேம்பாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளைக் கடைப்பிடிக்க செய்தல் வேண்டும்.
 • நிறைய நீர் தேவைப்படும் நெல், கரும்பு பயிர்களைத் தவிர்த்து, பயறு வகைகளையும், பருத்தியையும் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு பயிரிடலாம். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் 50% நீர் விரயமாவது தவிர்க்கப்படும். பல்வேறு பகுதிகளில் ஆழ் குழாய் கிணறுகளின் மூலம், நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டு விரயமாக்கப்படுகின்றது.
 • இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வாரியத்தின் உதவி கொண்டு நீர் எடுக்கப்பட வேண்டிய அளவை விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும். காவேரி மற்றும் மற்ற ஆற்று நீர் பாசன மாவட்டங்களில், நீர்ப் பாசன முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
 • விவசாயிகளின் கடன் சுமைகளை நீக்குவது பற்றியும், அதற்குத் தகுதியான விவசாயிகளைத் தேர்ந்தெடுப்பதுவும் கிராம சபை விவசாயிகள் ஆலோசனை மையம், நீர் பயனீட்டாளர்கள் அமைப்பு, நீர் மேலாண்மை மையம் ஆகியவை முடிவு செய்து அரசுக்கு அனுப்பலாம்.
 • மேலும் விவசாயிகள் ஆலோசனை மையங்களின் மூலம், அரசு உளவியல் ஆலோசனைகளை வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, தற்கொலைகலைத் தவிர்க்கலாம். மேலும் நகர் மற்றும் கிராம புறங்களிலும் எங்கெல்லாம், நீர்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதோ, அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும்.
 • இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பரப்பளவு அதிகமாவதுடன், மழை நீர் அதிகம் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி.

ஆதாரம் : தினமணி

3.80357142857
Nithya Feb 09, 2019 06:42 PM

Very nice..use full

sowndharya Jan 20, 2019 12:45 PM

It's very useful....nice but I need more information.....

Santhosh Jan 21, 2019 10:55 AM

It's very use full for Me Thanks

Kanishka Nov 19, 2018 08:44 PM

Very nice and useful for students

Deepika Nov 10, 2018 10:17 AM

மிகவும் அற்புதமான திட்டங்கள் இதை உபயோகத்துக்கு கொண்டு வந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் நாட்டின் பொருளாதாரமும் மேம்பட வாய்ப்புண்டு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top