பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கார்னேசன்

கார்னேசன் சாகுபடி குறிப்புகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.

கார்னேசன் மலர்

இன்றைய உலகத்தில், ரோஜா மலருக்கு அடுத்தபடியாக கார்னேசன் மலர் மிக பிரபலமான மலராகும். கார்னேசன் மலரானது கிராம்பின் வாசனையைக் கொண்டது. மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா, சிவப்பு, மெரூன், ஆரஞ்சு, லாவண்டர் நிறம், செர்ரி மற்றும் வெள்ளை நிறங்களில் மலரும். அமெரிக்க ஆழ்சிவப்புநிற இரகங்களை கொய்மலர் பயன்பாட்டிற்காக வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

வகைகள்

கொடிவகைகள்:
மாஸ்டர், ரிவெரா, சூப்பர் ஸ்டார், கில்லர், வெள்ளை ஜெயிண்ட், மலாஹா, டெல்லி மற்றும் சோலார்.

பூங்கொத்து வகைகள்: அலிஸ்டார், டார்லிங், ஹேப்பினெஸ், செர்ரிபேக், விர்கோ, குளோஸ் அப், இந்திரா, வீரா மற்றும் கிஸ் சாகா.

மண்

கார்னேசன் மலர் சாகுபடிக்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது மிக முக்கியமானது. கார்னேசனின் வேர்கள் நீர் வடியாத மிக மோசமான நிலைமைகளில் பாதிப்புக்குள்ளாகும். இதற்கு நன்கு நீர் வடியும், காற்றோட்டமுள்ள மண் வேண்டும். கடின மண்களில் வேர்களின் வளர்ச்சி மிகவும் தடைபடும். இதனால் செடியின் வளர்ச்சி மற்றும் பூக்களின் தரமும் குறையும். மணல் சார்ந்த இரும்பொறை மண் (அ) இரும்பொறை சார்ந்த மணல் கலந்த மண் கார்னேசன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. அதிகளவு களிமண் (அ) வண்டல் கொண்ட மண்களில் அங்கக பொருள் (அ) மட்கிய கம்போஸ்ட் உரத்தை மண்ணில் கலந்து விட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் சாகுபடி செய்யும் இடங்களில், போதுமான அளவு அங்ககப் பொருள் இட்டு கலந்து விட வேண்டும். அமிலக் காரத்தன்மை 6 முதல் 7 வரை இருப்பது மகிவும் ஏற்றது. அதிகப்படியான மற்றும் குறைவான அமிலக் காரத்தன்மையால் மலர் தரம் மிகமோசமாக பாதிக்கப்படும்.

வானிலைச் சூழல்

கார்னேசன் சாகுபடிக்கு போதுமான சூரியஒளி வேண்டும். குளிர் காலங்களிலும், கோடைக்காலங்கலும் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும் ஒளியின் செறிவு அதிகமாக உள்ள பல இடங்களிலும் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இருந்தாலும், சூரியஒளி நேரடியாக செடியின் மீது பட்டால் எரிந்தது போலாகிவிடும் மற்றும் மலர்களின் தரம் குறைந்து விடும். கார்னேசன் செடியின் தண்டுகள் கெட்டியாக, எளிதில் உடைந்து விடுமாதலால், காற்று பலமாக வீசும் இடங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். இருக்கக்கூடிய ஒளியின் அடர்த்தியைப் பொறுத்து தேவைப்படும் வெப்பநிலை மாறுபடும். கோடைக்காலங்களில், நல்ல வளர்ச்சி மற்றும் பூக்கள் பெறுவதற்கு தகுந்த வெப்பநிலை 13.2 ̊செ. முதல் 14.3 ̊செ. ஆக இருக்க வேண்டும். குளிர்காலங்களில், மிகக்குறைந்த வெப்பநிலை 110 ̊செ. – 11.1 ̊செ. அளவு இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. கோடைக்காலங்களில் வறண்ட சூடான காற்று நிலவுவது செடியின் வளர்ச்சியை மிக மோசமாகப் பாதிக்கும்.

சாகுபடி முறை

இரகங்களைத் தேர்வு செய்தல்

சாகுபடி செய்வதற்கு பல இரகங்கள், பலவித நிறங்களில் உள்ளன. இந்த இரகங்களின் உற்பத்தித் திறன் மற்றும் பூவின் தரத்தைப் பொறுத்து மாறுபடும். இரகங்களை சரியாகத் தேர்வு செய்தால் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கலாம். பலதரப்பட்ட வேளாண் சூழ்நிலைகளுக்கு ஏற்ற இரகங்கள், நிறம், சந்தையில் விரும்பும் இரகத்தைப் பொறுத்து சாகுபடி செய்ய வேண்டும். இருந்தாலும், இந்தியச் சந்தைகளில், நிறத்திற்கென எந்த விதமான முன்னுரிமையும், தரப்படுவதில்லை. ஆனால் சர்வதேச சந்தைகளில், சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு, வெள்ளை நிற மலர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இருந்தாலும், சந்தையில், நிறத்திற்கு முக்கியத்துவம் தருவதால், சாகுபடியாளர்களும், 50%  வெள்ளைநிற மலர்கள், 45% சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற இரகங்கள், 5% தான் மீதமுள்ள இரகங்களைப் பயிரிடுகின்றனர்.

பசுமைக் குடில்

பாதுகாப்பான நிலைகளின் கீழ் கார்னேசன் மலர்களை வர்த்தக ரீதியாக பயிர் செய்யலாம். தகுந்த, போதுமான அளவு வெளிச்சம், காற்றோட்டம் நன்றாக உள்ள இடங்களில், பசுமைக்குடில்கள் அமைக்கலாம். பசுமைக்குடிலின் அமைப்பு நெருக்கமாக இருக்கக் கூடாது. அவை மரத்தால் அமைக்கப்பட்டு, 45 செ.மீ அகல இடைவெளி விட்டு மரச்சட்டங்களைப் பொருத்த வேண்டும்.

வருடம் முழுவதும் காற்றோட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக கோடைக்காலங்களில், வெப்பநிலையை குறைக்க வேண்டும். போதுமான அளவு காற்றோட்டம் உள்ளவாறு ஜன்னல்கள் அமைக்க வேண்டும். சூடுபடுத்துதல் மற்றும் குளிர்படுத்துதல் அமைப்பை ஏற்படுத்துவதால் உட்புற வெப்பநிலையை ஒரே மாதிரி வைத்துக் கொள்ளலாம். நீராவியாதலை குளிர்படுத்தும் புதிய முறையால் கோடை மற்றும் வசந்த காலங்களில் பசுமைக்குடில் வெப்பநிலையை குறைக்கலாம். பசுமைக்குடிலின் இறுதியில் (அ) பக்கவாட்டில் உள்காற்று வெளியேற்றும் விசிறிகளை அமைப்பதால் பசுமைக்குடிலின் உள்ளே உள்ள  வெப்பக் காற்றை வெளியேற்றலாம். நீராவியாகக் கூடிய ஈரப்பதத்தால் காற்றில் உள்ள வெப்பநிலை குறையும். வெளிப்புற ஈரப்பதம் மிகக் குறைவாக இருந்தால், இந்த முறை அவ்வளவு பயனைத் தராது.
சிறு விவசாயிகள் குறைந்த விலை முதல் நடுத்தர விலையுடைய பசுமைக் குடில்களை அமைக்கலாம். குறைந்தவிலை பசுமைக் குடிலை அமைக்க ஆகும் செலவு ஒரு சதுர அடிக்கு 20 ரூபாய் ஆகும். நடுத்தர விலையுடைய பசுமைக்குடிலுக்கு 40 ரூபாய் / சதுரஅடி, புற ஊதா கதிர்கள் ஊடுருவாத 200 காஜ் அளவுடைய பாலித்தீன் சீட்கள் கொண்டு பசுமைக்குடில் அமைக்கலாம். தற்பொழுது, புறஊதா ஊடுருவாத, கந்தகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பாலித்தீன் சீட்கள் கொண்டு அமைக்கப்படுகின்றன.

நிலத்தைத் தயார் செய்தல்

நிலத்தை 45 செ.மீ ஆழத்திற்கு 4 (அ) 5 முறை உழுது தயார் செய்ய வேண்டும்.

படுக்கைகளை அமைத்தல்

படுக்கைகள் 80 செ.மீ அகலமும், 30 செ.மீ உயரமும், தேவைப்படும் நீளமும் கொண்டு அமைக்கலாம். 2 படுக்கைகளுக்கு நடுவில் 40 செ.மீ அளவுக்கு நடைபாதை விட வேண்டும்.

மண்ணைத் தயார் செய்தல்

கார்னேசன் சாகுபடி செய்வதற்காக, தரைப்படுக்கைகள், உயர்த்தப்பட்ட அடுக்குத் தளம் (அ) பானைகள் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றில் வடிகால் வசதி இருக்க வேண்டும். வளர்ச்சிக்குத் தேவைப்படும் நிலைகளை உருவாக்கித் தருவதற்கு, அங்ககப் பொருள் தேவையான அளவு எடுத்து மண்ணுடன் கலந்து அளிக்க வேண்டும்.

பயிர் பெருக்கம்:

கார்னேசன் செடியை செடியின் துண்டுகள் மூலம் பெருக்கம் செய்யலாம். குளிர்காலம் முடிந்தவுடனேயே வேருடன் கூடிய துண்டுகளை தயார் செய்யலாம். 4 வாரங்கள் கழித்து, இந்தத் துண்டுகள் வேர்விடும். அவை கோடைக் காலங்களில் நடுவதற்கு தயாராகிவிடும்.

இடைவெளி :

செடிகளை நடுவதற்குப் போதுமான இடைவெளி வேண்டும். அதிக இடைவெளி விடுவதாக இருந்தால், மகசூல் குறையும். அதுவே செடிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகும் போது, பூக்களின் தரம் குறையும் பரிந்துரைக்கப்படும் இடைவெளி 15x15 செ.மீ இந்த செடித் துண்டுகளை மிக ஆழமாக நடவேண்டும். இல்லையென்றால் அழுகிவிடும்.

வலையிடுதல்

செடிகள் நேராக, கீழே சாயாமல் வளரவேண்டும். அதனால், நாம் நல்ல தரமுடைய, நீளமான தண்டுடைய பூக்களை அறுவடை செய்ய முடியும். நடுவதற்கு முன், நைலான் நூல் கொண்டு (7.5x7.5 செ.மீ) 12 செ.மீ உயரத்திற்கு வலையிட வேண்டும். இரண்டாவது வலையிடுதல் 24 செ.மீ உயரத்திற்கு வலையிட வேண்டும். மூன்றாவது, நான்காவது வலையிடுதல் 36 செ.மீ, 50 செ.மீ, 65 செ.மீ என்றவாறு வலையிடுதல் வேண்டும்.

உரமிடுதல்

 • நடுவதற்கு 60 நாட்களுக்கு முன் பசுந்தாள் உரமிடவேண்டும்.
 • நன்கு மட்கிய தொழுஉரம் ஒரு எக்டருக்கு 50 டன் என்ற அளவிலும் கம்போஸ்ட்  ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும்
 • வேப்பங்கட்டி ஒரு எக்டருக்கு 1.25 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் 25 கிலோ / எக்டர் என்ற அளவிலும் இட வேண்டும்.
 • மண்புழு உரம் 5 டன்/ எக்டர் என்ற அளவில் நடும்போதும், நட்டபின் 3,4, 5வது மாதத்திலும் இடலாம்.
 • வேப்பணெண்ணெய் 5% என்ற அளவில் நட்டபின் 3,4,5 வது மாதங்களில் இடலாம்.
 • வேப்பணெண்ணெய் 5% என்ற அளவில் மண்ணில் நனைத்து 3,4,5 வது மாதத்திலும் இடவும்.
 • அக்னி ஹோட்ரா சாம்பலை நட்ட 60,90,120 வது நாட்களுக்குப் பின் மூன்று முறை தெளிக்கலாம்.

இடை உழவு முறைகள்

கை களையெடுத்தல் தேவைப்படும் பொழுது எல்லாம் செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

மகசூல் மற்றும் பூக்களின் தரத்தை உயர்த்தவும் பின்வரும் வளாச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம்.

 • பஞ்சகாவ்யா 3% என்ற அளவில் நட்டு 1 மாதத்திற்கு பிறகு, 10 நாட்கள் இடைவெளி விட்டு, ஒரு வருடத்திற்கு 35 தெளிப்பு வருமாறு தெளிக்க வேண்டும்.
 • தசகாவ்யா 3% அடர்த்தியுடைய திரவத்தை 1 லிட்டர் /மீ2  என்ற அளவில் மாதத்திற்கு ஒரு முறை மண்ணில் கலந்து இடவேண்டும்.
 • வெர்மிவாஷ் 10% அளவுடைய திரவத்தை நட்டபின் 3,4,5,6,7,8 வது மாதங்களில் இலை வழி உரமிடவேண்டும்.
 • மாட்டுக் கொம்பு சிலிக்கா 2.5 கிலோ /எக்டர் என்ற அளவில் நட்டபின் தெளிக்கலாம்.
 • மஞ்சூரியன் டீத்தூள் (5%) நட்டபின் 30,45,60,75 வது நாட்களில் மண்ணில் கலந்து இடவேண்டும்.

கிள்ளிவிடுதல் மற்றும் மொட்டுக்களை அகற்றுதல்

செடிகள் 70 முதல் 90 நாட்கள் இருக்கும் போது, 20 -25 செ.மீ உயரம் அடையும் பொழுது, மொட்டுகளைக் கிள்ளிவிடவேண்டும். 5-6 இலைகளை விட்டு, மொட்டுக்களை கிள்ளிவிட வேண்டும். பக்கக் கிளைகளில் உள்ள கிளை மொட்டுக்களையும் கிள்ளிவிட வேண்டும். பக்கக் கிளைகளைக் கிள்ளிவிடுவதால், அதிக பக்கக் கிளைகள் தோன்றும் மற்றும் அதிக மலர்களும் நல்ல தரத்துடன் உற்பத்தியாகும்.

பாசனம் செய்தல்

வேர் துண்டுகளை நட்டபின் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். உயர்மட்ட தூவல் பாசனம் (அ) பனித்துளித் தூவல் அமைப்பு மூலம் நீர் பாய்ச்சுவதால் மண்ணின் மேற்பரப்பு எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும். தெளிப்பு பாசன அமைப்பு பயன்படுத்தும் பொழுது, ஒரு நாளைக்கு சிலமுறை பாசனம் செய்யப்படும். மற்றும் வேர்த்துண்டுகள் வளரும் பிந்திய நிலைகளில், உயர்மட்ட தூவல் (அ) மண் மேற்பரப்பு பாசனம் மூலம் செய்ய முடியும். பூ மொட்டுக்கள் தோன்றும் பொழுது, உயர்மட்டத் தூவல் ஆங்காங்கே விடுபட்டு இருக்க வேண்டும். அவை மண்மேற்பரப்பு பாசன அமைப்பு மூலம் மாற்றியமைக்க வேண்டும்.

புறவிதழைச் சுற்றி கட்டுதல்

புல்லி இதழ் (அ) புறவிதழ் வெடிப்பது (அ) விடுபடுதல் என்ற பிரச்சனையால் பூக்களின் தரம் பாதிக்கப்படும். இதைக் குறைப்பதற்கு பூ மொட்டின் புறவிதழைச் சுற்றி, பூ மொட்டு விரிவதற்கு முன், சுற்றிக் கட்டவேண்டும். தற்பொழுது, 6மி.மீ அகலமுடைய பிளாஸ்டிக் நாடா கொண்டு கட்டிவிட வேண்டும். அறுவடைக்குப் பின்னரும், பிளாஸ்டிக் நாடாக்களை அப்படியே விட்டு விடவேண்டும். மொட்டுக்கள் மிகச் சிறிய அளவில் இருக்கும் பொழுது, நாடாவைக் கட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பூ மொட்டுக்கள் உருவமற்று இருக்கும். மொட்டுக்களின் விட்டம் பெரியதாக இருந்தால் (அ) புளவிதழின் அரைப்பகுதி வரை நாடாக்கள் கொண்டு கட்டப்படும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

கட்டுப்பாட்டு முறைகள்

வெள்ளை ஈக்கள்

மஞ்சள் நிற பிளாஸ்டிக் பானைகளை விளக்கெண்ணெய் தடவி வெள்ளை ஈக்களைப் பிடிக்கலாம்

அசுவிணிகள்

வேப்பஇலைச் சாறு 10% அளவு எடுத்து இலைமேல் தெளிக்க வேண்டும்.

உறிஞ்சும் பூச்சிகள்

10% பூண்டு – மிளகாய் சாற்றை இலை மேல் தெளிக்க வேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

மண்ணில் பைரித்ரம் நச்சுப்பொறி வைக்கலாம்

நோய்கள்

கட்டுப்பாட்டு முறைகள்

இலைப்புள்ளி

5% மஞ்சூரியன் வடித்த டீத்தூள் நட்ட 2,3,5 மாதங்களுக்குப் பிறகு இலை மேல் தெளிக்கலாம்.

கருகல் நோய்

அக்னி ஹோட்ரா சாம்பல் (தெளிப்பதற்குமுன், 200 கிராம் அக்னி ஹோட்ரா சாம்பலை 1 லிட்டர் கோமியத்தில் 15 நாட்களுக்கு ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) நட்டு ஒரு மாதத்திற்கு பிறகு, ஒரு மாத இடைவெளி விட்டு, மூன்று முறை தெளிக்க வேண்டும்.

மண்வழிபரவும் நோய்கள்

டிரைக்கோடர்மா விரிடி @ 5 கிலோ / எக்டர் (அ) சூடோமோனஸ் ப்ளுரசென்ஸ் @  5 கிலோ / எக்டர் என்ற அளவில்  இடவேண்டும்.

அறுவடை

செடி நட்டு 5 மாதங்கள் கழித்து பூக்கத்  தொடங்கும். மொட்டின் அளவு மற்றும் இதழ் வளர்ச்சியைக் கொண்டு அறுவடைக்கான காலத்தை நிர்ணயிக்கலாம். நிலையான கார்னேசன் வகைகளில், பூக்களின் வெளி இதழ்கள் திறக்காத பொழுது, அதாவது தண்டிற்கு நேராக பெயிண்ட் பிரஷ் போன்று இருக்கும் நிலையில் வெட்ட வேண்டும். கொடி வகை கார்னேசனில், பூங்கொத்தில் மேல் உள்ள 2-3 பூக்கள் மலர்ந்தவுடன், மீதமுள்ள மொட்டுக்கள் நல்ல நிறத்தை தரும் பொழுது வெட்ட வேண்டும். பூக்களை அறுவடை செய்தவுடன், நீரில் வைக்க வேண்டும். கூர்மையான கத்தி கொண்டு பூக்களை வெட்டக் கூடாது. ஒரு வாரத்தில் 2 -4 அறுவடை செய்யலாம். இந்தச் செடியை தோட்டத்தில் 1 ½  வருடத்திற்கு வளர்க்கலாம்.
மகசூல் : 8 பூக்காம்புகள் /செடி / வருடம்

தரம்பிரித்தல்

அறுவடை செய்தவுடனேயே, பூக்கள் தரம்பிரிக்கப்பட்டு கொத்தாகக் கட்டப்படுகின்றன. தண்டின் நீளம், பூக்களின் விட்டம், பூவின் வெளிப்புறத்தோற்றம், நோய் மற்றும் பூச்சிகளற்று இருத்தல், தண்டில் ஏதும் பிளவு இல்லாமல் இருத்தல், புறவிதழ்கள் வெடிக்காமல் இருத்தல் போன்றவற்றை கணக்கில் கொண்டு தரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு தரமுள்ள  கொத்திலும் 25 தண்டுகள் கொண்ட கொத்து காணப்படும்.

பொதிகட்டுதல் மற்றும் போக்குவரத்து செய்தல்

கார்னேசன் மலர்கள் துளைகள் உள்ள அட்டை பெட்டிகளில் வைத்து அடுக்கப்படுகின்றன. ஒரு பெட்டியில் 800 கார்னேசன் மலர்களை அடுக்கலாம். பெட்டிகளின் உள்ளே பூசியிருக்க வேண்டும். 25 மலர்கள் கொண்ட கொத்துகள் கட்டப்பட்டு அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்கிற்கு நடுவிலும் செய்தித்தாளை வைத்து அடுக்கலாம். குளிர்பதன வேன்களில் 2 ̊ - 4 ̊செ. வெப்பநிலையில் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.97727272727
Dec 24, 2018 10:41 AM

கார்னேசன் நாற்று வாங்க அரசு மானியம் கொடுத்து உதவ வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top