பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அறுவடை மற்றும் அறுவடை பின்நேர்த்தி

அறுவடை மற்றும் அறுவடை பின்நேர்த்தி (Harvest and Post Harvest Technology) பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உற்பத்தியாளர்களிடமுள்ள விளைபொருள் உபயோகிப்பாளரைச் சென்றடையும் வரை பலவிதங்களில் சேதம் ஏற்பட்டு பொருளாதார அளவில் இழப்பை ஏற்படுத்துகிறது. விதைகளின் முளைப்புத் திறன், விளைபொருட்களின் தரம், எடை மற்றும் உற்பத்தியாளருக்கு கிடைக்கும் லாபம் ஆகியவை குறைகிறது, அதனால் அறுவடை சமயத்திலும், அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய நுட்பங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவடையின் போதும், பதன் செய்யும்போதும், சேமிப்பின் போதும் ஏற்படும் பெருமளவு சேதங்களைக் குறைக்கலாம்.

அறுவடை என்பது பயிரிடப்பட்ட பயிரிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை முதிர்ச்சிக்குப் பின் சேகரித்தல் ஆகும். அறுவடை பின் நேர்த்தி என்பது பயிரை அறுவடை செய்ததில் இருந்து அது நுகர்வோரை அடையும் வரை மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். உயர் விளைச்சல் தரும் இரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு அதில் அறுவடைபின் தொழில் நுட்பங்கள் பின்பற்றப்படாததால் 25 - 33சதம் வரை இழப்பு ஏற்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. அறுவடை பின் நேர்த்தி என்பது விதை பிரித்தெடுத்தல், தூற்றி சுத்தம் செய்து தரம் பிரித்தல், உலர்த்துதல், பதப்படுத்துதல், சிப்பமிடல், சேமிப்பு மற்றும் விற்பனை ஆகிய செயல்களை அடக்கியது.

அறுவடை முறைகள் (Harvesting Methods)

முதிர்ச்சி அடைந்த பயிர் பாகங்களை அறுவடை செய்யும் முறை, பயிருக்கு பயிர் மாறுபடும். அவை, முழுப்பயிரையும் அறுவடை செய்தல் உம். பயறுவகைகள். கதிர்களை மட்டும் அறுவடை செய்தல் உம். தானியப்பயிர்கள். காய், கனிகளை அறுவடை செய்தல் உம். பல்லாண்டுப் பயிர்கள். கால இடைவெளியில் அறுவடை செய்தல் உம். காய்கறிகள், பருத்தி.

விதை பிரித்தெடுத்தல் (Seed Separation)

மனித மற்றும் இயந்திர சக்திகளைப் பயன்படுத்தி முதிர்ந்த காய்கனிகள் மற்றும் கதிர் பாகங்களிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. உம். கதிரடிக்கும் இயந்திரம், நிலக்கடலை விதைபிரிப்பான்.

விதைகளை தூற்றி சுத்தம் செய்து தரம் பிரித்தல் (Winnowing, Cleaning and Seed Grading)

தூற்றுதல்

பிரித்தெடுத்த தானியங்களில் உள்ள அடர்த்தி குறைவான தூசு மற்றும் குப்பைகளை காற்றின் மூலம் பிரித்தெடுக்கும் முறை தூற்றுதல் எனப்படும். தூற்றுவதற்கு இயற்கையான அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட காற்று பயன்படுத்தப்படுகிறது.

சுத்தம் செய்தல்

தூற்றிய விதைகளில் உள்ள கற்கள், மண்கட்டிகள் போன்ற தேவையற்ற பொருட்களை சல்லடையின் உதவி கொண்டு சலித்துப் பிரித்தலுக்கு சுத்தம் செய்தல் என்று பெயர்.

தரம் பிரித்தல்

சுத்தம் செய்த விதைகளில் உள்ள முதிராத, உடைந்த, நோய் தாக்கிய விதைகளை பிரித்தெடுக்கும் முறை தரம் பிரித்தல் எனப்படும். இதற்கு வெவ்வேறு கண் அளவுள்ள சல்லடைகள் பயன்படுகிறது. விதைகளை தூற்றி சுத்தம் செய்து தரம் பிரிக்க கிரிப்பன் வகை சுத்தப்படுத்தி மற்றும் தரம் பிரிக்கும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

உலர்த்துதல் (Drying)

விதையின் தரம் மற்றும் சேமிப்பினை நிர்ணயிக்கும் காரணிகளுள் உலர்த்துதல் முக்கியமான ஒன்றாகும். அறுவடையின் போது விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அதே நிலையில் சேமிப்புக்கு கொண்டு சென்றால் விதையின் தரம் குறைந்து விடும். எனவே விதைகளில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாப்பான அளவுக்கு (8-12சதம்) கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். உலர்த்துதலை பல்வேறு முறைகளில் செய்து விதையிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்கலாம்.

இயற்கை முறையில் பயிர் வயலில் இருக்கும் போதே நிலவும் உலர் தட்பவெப்பநிலையைப் பயன்படுத்தி விதைகளில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கலாம். சூரிய ஒளியைப் பயன்படுத்துதல் அல்லது நிழலில் உலரவைத்தல் மூலம் விதையின் ஈரப்பதத்தை தேவைப்படும் அளவுக்கு கொண்டு வரலாம். இம்முறையில் அடிக்கடி விதைகளை மேல் கீழாக புரட்டி விரைவில் உலர வைக்கலாம். செயற்கை முறையில் விதைகளை உலர வைக்க உலர்த்துவான்கள் பயன்படுகின்றன. இம்முறை மிக அதிக அளவு விதைகளை விரைவில் உலர்த்தப் பயன்படுகின்றது. மற்றொரு முறையில் கால்சியம் குளோரைடு, கால்சியம் ஆக்ஸைடு, சிலிக்காஜெல் போன்ற இரசாயனங்களும் விதை உலர்த்துதலில் பயன்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்துதல் (Processing)

பழம், காய்களைப் பதப்படுத்துதல் என்பது நுண்கிருமிகளிலிருந்து பாதுகாத்து, எதிர்காலத் தேவைக்குப் பழங்களையும், காய்களையும் சேமித்து வைப்பதாகும்.

பதப்படுத்துதலின் நோக்கம்

நுண்கிருமிகளின் செயல்பாட்டை தடுப்பது. உம். வடிகட்டுவான் மூலம் வடிகட்டுதல் சிதைவுறுதலை தாமதப்படுத்துதல் (உம்) காய்கனிகளை நீராவியிலோ அல்லது கொதிக்கும் தண்ணீரிலே சில நிமிடங்கள் வைத்தல் பூச்சிகள், சிறுபிராணிகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் ஏற்படும் மாற்றங்களைத் தடுத்தல் போன்றவையாகும்.

பதப்படுத்துதலின் முறைகள்

நுண்ணுயிர் பெருக்கத்தை தடுத்தல் (ஏசெப்சிஸ்) அதிக வெப்பத்தில் பதப்படுத்துதல், மிதமான வெப்பத்தில் பதப்படுத்துதல், வேதிப்பொருட்கள் மூலம் பதப்படுத்துதல், உலர வைத்தல், வடிகட்டுதல், சர்க்கரை மூலம் பதப்படுத்துதல், புளிப்பூட்டுதல், உப்பு மூலம் பதப்படுத்துதல்

சிப்பமிடல் (Packaging)

விளை பொருளை சிறிய அளவுகளில் சிப்பமிட்டு வைக்கும்போது அவற்றை அடையாளம் காணுதல், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லுதல், உபயோகப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கும். எனவே தரம் பிரிக்கப்பட்ட விதைகளை சிப்பமிடுதல் இன்றிமையாததாகும். சிப்பமிடுதலுக்கு பயன்படுத்தப்படும் பொருள், விதையின் தன்மை, சேமிக்கும் கால அளவு, சேமிப்புக் கிடங்கின் அமைப்பு, விதையின் ஈரப்பதம், சிப்பமிடும் பொருளின் விலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக சிப்பமிடும் பொருள் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. காற்று புகும் சேமிப்பு கலன் உம். சணல்பை, துணிப்பை, காகிதப்பை (Moisture vapour permeable container)
  2. காற்று எதிர்ப்பு சேமிப்புகலன் உம். 200 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் (Moisture vapour resistant container) உறை கொண்ட சணல்பை
  3. காற்று புகா சேமிப்பு கலன்கள் உம். தகரடின்கள், 700 காஜ் தடிமன் (Moisture vapour proof container) கொண்ட அலுமினியத்தாள் கொண்ட பாலித்தீன் பைகள்.

சிப்பமிடப் பயன்படும் பொருள் பயிருக்கேற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக தானியப்பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை சேகரிக்க துணிப்பை மற்றும் சணல் பைகள் ஏற்றது. காய்கறி மற்றும் பூக்களின் விதைகளை சேமிக்க பாலித்தீன் பைகளை பயன்படுத்தலாம். 5சதம் குறைவான ஈரப்பதம் உள்ள விதைளை சேமிக்க அலுமினியத்தாள் கொண்ட பாலித்தீன் பைகள் சிறந்தது.

இவற்றைத் தவிர தீவனப்பயிர்களை உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் என இருவகைகளில் சேமிக்கலாம். பசுந்தீவனத்தை குழிகளில் (Silage) சேகரித்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். உலர் தீவனம் ஹே' (Hay) என்றழைக்கப்படுகிறது.

சேமிப்பு (Storage)

ஒரு சில பருவங்களில் மட்டுமே அறுவடையாகும் குறிப்பிட்ட பயிர்கள், மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் தேவைப்படுவதால் அவற்றை சேமிப்பது அவசியமாகிறது. உணவுக்காக சேமிக்கப்படும் தானியங்களைத் தவிர மற்ற தானியங்களின் முளைப்புத்திறன் பாதிப்படையாமல் பூச்சி, பூசணத்தாக்குதலைக் குறைக்க விதை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.

சேமிப்பை பாதிக்கும் காரணிகள்

விதையின் பாரம்பரிய குணங்கள், அறுவடைக்கு முந்தைய தட்பவெப்பநிலை, விதையின் வடிவம், விதையின் ஈரப்பதம், பூச்சி மற்றும் நோய்க்காரணிகள், சேமிப்புக் கிடங்கிலுள்ள வசதி, விதை நேர்த்திக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயனம் ஆகியவற்றை பொருத்து சேமிப்பு முறை, காலம் மற்றும் சேமிப்பின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

சேமிப்பு முறைகள்

பொதுவாக உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கீழ்க்கண்ட இருமுறைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

மூட்டைகளில் சேமித்தல்

உணவு தானியங்களில் நெல், கோதுமை, கம்பு மற்றும் உடைத்த பயறு வகைகள் மூட்டைகளில் சேமிக்கப்படுகிறது. நல்ல உலர்ந்த நிலையில் உள்ள தானியங்களை இரண்டு வருடங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இவ்வாறு மூட்டைகளில் சேமிக்கும் தானியங்களை பெரிய கிடங்குகளில் சேமித்து வைக்கலாம். இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ் நாடு தானிய சேமிப்புக் கிடங்குகள் இவ்வகை வசதிகளைக் கொண்டுள்ளன. இவ்வகை கிடங்குகளில் 5000 டன்கள் வரை தானியங்களை சேமிக்கலாம்.

கலன்களில் சேமித்தல்

நிலத்திற்கு அடியில் கலன்களை அமைத்து இரண்டு வருடங்களுக்கு மேல் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களை மொத்தமாக சேமிக்கலாம். இம்முறையில் தானியங்களை சேமிப்பது எளிதானது, செலவு குறைவானது. இதேபோல் தானியங்களை நிலத்திற்கு மேலேயும், வீடுகளுக்கு உள்ளேயும் சேமிக்கலாம். இதற்கு செவ்வக வடிவிலான செங்கல் சுவர்களால் கட்டிய கிடங்குகள் உபயோகப்படுகின்றன. கிராமப்புறங்களில் செவ்வக வடிவிலான மூங்கில் கூடைகளும், உருண்டையான பெரிய பானைகளும் தானியங்களை சேமிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிற்கு வெளியே மேடான பகுதிகளில் இரும்பு, அலுமினியம் அல்லது காங்கிரீட் கட்டிடக்கலன்கள் அமைக்கப்பட்டு தானியங்கள் சேமிக்கப்படுகின்றன.

மேலும் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய தானிய சேமிப்பு ஆராய்ச்சிக்கழகம் கண்டுப்பிடித்த, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆப்பூர் உலோகக் கலன் (Hapur metal bin) மற்றும் செங்கல், மணல், சிமெண்ட் பொருள்களால் உருவாக்கப்பட்ட பூசாகுதிர் (Pusabin) முதலியவற்றை விதை மற்றும் தானிய சேமிப்பிற்குப் பயன்படுத்தலாம். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தானியங்கி பூச்சிகளை நீக்கும் கலன் (Automatic insectremoval bin) பூச்சிகளைத் தானாகவே அகற்றும் திறன் உடையது. இது 50 - 250 கிலோ வரையிலான கொள்ளளவு கொண்டது. இதனை உபயோகித்து தானியங்களில் 95 சதம் வரை பூச்சிகள் வராமல் பாதுகாக்கலாம். இந்த கண்டுபிடிப்பு மத்திய அரசின் புதிய கண்டுபிடிப்புக்கான விருதினை 2002ம் ஆண்டு தமிழகத்திற்குப் பெற்றுத் தந்தது.

சேமிப்பு கலன்களில் உள்ள பூச்சிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட குழாய் வடிவப் பொறி, கூம்பு வடிவப்பொறி, பயறு வண்டுபொறி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். குழாய் வடிவப் பொறி தற்சமயம் சுமார் இரண்டு லட்சம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரிகளிலும், வேளாண் விரிவாக்க மையங்களிலும் இப்பொறியை கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர தானிய சேமிப்பில் ஏற்படும் பயறு வண்டுகளின் முட்டைகளை நீக்க, பயறு வண்டு முட்டை நீக்கும் கருவி என்ற பொறியை கண்டறிந்து, அதற்கான இந்திய காப்புரிமையை (Indian Patent) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இக்கருவியைக் கொண்டு பயறு வண்டுகளின் முட்டைகளை, விதைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீக்கிவிடலாம்.

சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு

தானியங்களை அறுவடைக்குப் பின் நன்றாக உலர்த்தி ஈரப்பதம் 8 முதல் 10 சதத்திற்குள் இருக்குமாறு சேமிக்க வேண்டும்

கிடங்குகளின் சுவர்கள், தரைப்பகுதி, கூரைப்பகுதி போன்றவற்றில் காணப்படும் வெடிப்புகள், உடைப்புகள் ஆகியவற்றை சிமெண்டால் நன்கு பூசி பின்னர் சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடிக்க வேண்டும்.

சேமிப்பு அறையின் சுற்றுச்சுவரில் தரைமட்டத்திலிருந்து 3 அடி உயரத்தில் பக்கவாட்டில் 1.5 அடி அகலத்திற்கு வெளிப்புறத்தில் நீட்டிவிட்டு, அதன் வாசற்படி சுவரை தொடாமல் இருக்கும்படி அமைப்பதன் மூலம் எலிகள் கிடங்குகளுக்கு உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். சேமிப்பு அறையின் ஜன்னல்களுக்கு கம்பிவலை பொருத்துவதால் பறவைகள் நுழைவதைத் தடுக்கலாம்.

தானிய சேமிப்பிற்க்கு பயன்படுத்தப்படும் சாக்குப்பைகள் புதியதாக இருக்கவேண்டும். பழைய சாக்குப்பைகளை மாலத்தியான் 50 சதம் ஈசி அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்சி 0.1 சதம் கரைசலில் நனைத்து பின் நன்கு உலர்த்தி பிறகு உபயோகிக்க வேண்டும். மூட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டி இல்லாமல் தனித்தனியாக, அடுக்கடுக்காக, நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

மூட்டைகள் தரையின் மேல்படாமல் மரப்பலகைகள் அல்லது இரும்பு தட்டுக்களின் (Dunnage) மேல் அடுக்க வேண்டும். மூட்டைகளை அடுக்கும்போது ஒரு அடுக்கிற்கு (Stack) ஆறு முதல் எட்டு மூட்டைகள் வரை அடுக்கினால் போதுமானது. அடுக்கப்பட்ட மூட்டைகளின் இடைவெளிப்பகுதியிலும் சேமிப்பு அறையின் கதவு, சுவர்கள் ஆகியவைகளிலும் மாலத்தியான் 50 சதம் ஈசி மருந்தினை, ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி என்ற அளவில் அல்லது டைகுளோர்வாஸ் 76 சதம் எஸ்சி மருந்தினை 7 மில்லி அளவு கலந்து பூச்சிகளின் நடமாட்டம் அறிந்து உடனே தெளிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ஊதாகதிர் விளக்குப் பொறிகளை, கிடங்குகளில் நீண்டநாள் சேமித்து வைக்கும்போதும், பூச்சி தாக்கப்பட்ட தானிய மூட்டைகள் கிடங்கிற்கு வரும் போதும், புகைமூட்டம் போட்ட பின்பும் பயன்படுத்தலாம். சேமிப்பு தானியங்களில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை 15 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும். பூச்சிகள் இருப்பின் அலுமினியம் பாஸ்பைடு (செல்பாஸ்) மாத்திரைகளை ஒரு டன்னிற்கு மூன்று மாத்திரைகள் என்ற அளவில் உறையில் இட்டு மூடி புகைமூட்டம் செய்தல் அவசியம். ஐந்து நாட்கள் வரை நச்சுப்புகை வெளியேவராமல் மூடி வைக்கவேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top