சாமை என்பது மண் வளம் குறைந்த மானாவாரி (புஞ்சை) நிலங்களில் விளையும் ஒரு சிறுதானிய பயிராகும். அரிசியை மட்டுமே உட்கொள்ளுவதால் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வரும் இன்றைய நிலையில் மாற்று உணவாக ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை உட்கொள்வது நல்லது. சாமைப்பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை.

சாமையின் ரகங்கள்
கோ 3, கோ 4(சாமை), பையூர்2, கோ 1 ஆகிய ரகங்கள் உள்ளன.
உழுதல்
சித்திரை வைகாசி மாதங்களில் இறக்கை கலப்பை அல்லது மரக்கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.
பருவம்
ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிடலாம்.
விதையளவு
கை விதைப்பு முறை மூலம் விதைக்கும் போது ஏக்கருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும்.
கொர்து அல்லது விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.
இடைவெளி
பயிர் இடைவெளியானது 22.5 செ.மீ – 7.5 செ.மீ இருக்க வேண்டும்.
உரம்
ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது பரப்பி, பின்னர். உழ வேண்டும். தழை மணிசத்துக்களை ஏக்கருக்கு முறையே 44:22 கிலோ அளவில் இட வேண்டும்.
களையெடுத்தல்
வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு முதல் மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களையெடுக்க வேண்டும். கை விதைப்பு முறையில் இரண்டு முறை கையினால் களையெடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
பயிர் விதைக்கும் நேரங்களிலும், பூக்கும் பருவங்களிலும், பால் பிடிக்கும் சமயங்களிலும் மண்ணில் கட்டாயம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அவ்வாறு நீர் பராமரிப்பு செய்வதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு இருப்பது சிறப்பு.
களை எடுத்தல்
விதைத்த 20 நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
சிறு தானியப்பயிர்களில் பெரும்பாலும் விதை மூலமும் மண் மூலமும் நோய் தாக்கம் ஏற்படுகிறது. குலைநோய் மற்றும் கரிப்பூட்டை நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.
- சிறு தானிய விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோவை 15 கிலோ சாண உரம் அல்லது 10 கிலோ மணலில் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.
- பூஞ்சாணக்கொல்லிகள்- 2 கிராம் கார்பென்டாசிமை 1 கிலோ விதையில் கலந்து விதைக்கவும்.
- நோய்கள் பெரிய அளவில் மகசூல் இழப்பைத் தருவதில்லை.
அறுவடை
கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு (80 - 90 நாட்களில்) அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்
- இத்தானியத்தின் மாவை பல்வேறு வகையில் உணவாக பயன்படுத்தலாம்.
- சாமை பயிர், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வல்லது.
- உடல் அசதி மற்றும் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பு தரும்.
- எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும்.
- வயிறு தொடர்பான நோய்களையும் மலச்சிக்கலையும் போக்க வல்லது.
ஆதாரம் : பசுமை தமிழகம்