பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இஞ்சி சாகுபடியில் பூச்சி மேலாண்மை

இஞ்சி சாகுபடியில் பூச்சி மேலாண்மை செய்தல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ் நாட்டில் மானாவாரியாக இஞ்சி சுமார் 50 எக்டர்களில் பயிர் செய்யப்படுகின்றது. இஞ்சியை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் குறிப்பாக "இஞ்சி குருத்துத் துளைப்பான்", "கிழங்கு ஈ" ஆகியவை மிக அதிகமாக தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.

குருத்துத் துளைப்பான்

அறிகுறிகள்

முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் முதலில் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகின்றன. பின்னர் புழு தண்டில் துளையிட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்து தண்டின் உட்பகுதியைத் தின்று கொண்டே குருத்தின் அடிப்பகுதியை அடையும். குருத்தின் அடிப்பகுதியைத் தின்பதால் குருத்து வாடி காயத் தொடங்கும். குருத்தின் கீழ், புழுவின் கழிவுப் பொருட்கள் கொண்ட துளைகள் காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும்.  இதனால் கிழங்கு விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. இவை மஞ்சள், கொய்யா, மா, மாதுளை, ஆமணக்கு, புளி, கீரை வகைச் செடிகள், சோளம், மல்பெரி, கோகோ போன்ற பயிர்களையும் தாக்கும்.

வளர்ச்சிப்பருவம்

தாய் அந்துப் பூச்சி சிறியதாக இருக்கும். இறக்கைகள் வெளிறிய சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிய கருப்பு நிறப்புள்ளிகள் இறக்கை முழுவதும் காணப்படும். புழுப்பருவம் ஐந்து பருவ நிலைகளைக் கொண்டது. புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிறமாக உடலில் சிறு உரோமக் கால்களுடன் இருக்கும். வளர்ந்த புழு வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 10 - 14 நாள்கள் ஆகும். தாய் அந்துப்பூச்சி 30 - 60 முட்டைகள் வரை இடும்.

மேலாண்மை முறைகள்

தாக்கப்பட்ட குருத்து, புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். டைமீத்தோயேட் அல்லது மாலத்தியான் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. அல்லது இன்டாக்சாகார்ப் 0.6 மி.லி. அல்லது நோவாலுரான் 0.6 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

கிழங்கு ஈ

அறிகுறிகள்

முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் குருத்தின் அடிப்பகுதியைத் துளையிட்டு கிழங்கினுள் சென்று கிழங்கைத் துளைத்துத் திண்ணும். குருத்தின் அடிப்பகுதி, கிழங்கைத் துளைத்துத் திண்பதால் குருத்து, மஞ்சள் நிறத்தில் மாறி பின்னர் வாடி காயத் தொடங்கும். கிழங்கினுள் சென்று உண்பதால் கிழங்கு அழுகிவிடும்.

வளர்ச்சிப்பருவம்

தாய் ஈயின் உடல் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும். சிறிய சாம்பல் நிறப் புள்ளிகள் இறக்கை முழுவதும் காணப்படும். பெண் ஈ முட்டைகளை மண்ணிற்கு அருகில் உள்ள தண்டுகளில் இடும். இந்த முட்டைகள் இரண்டு முதல் ஐந்து நாள்களில் பொறிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு தண்டினுள் குடைந்து சென்று கிழங்கை உண்ணும். புழுப் பருவ காலம் 13 முதல் 18 நாள்கள் ஆகும். கூட்டுப் புழுப் பருவம் 10 முதல் 15 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து முதிர்ந்த பூச்சியாக உருமாற சுமார் நான்கு வாரங்கள் ஆகும்.

மேலாண்மை முறைகள்

  • பூச்சி தாக்காத நல்ல விதைக் கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.
  • விதைக் கிழங்குகளை டைக்குளோர்வாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அக்கரைசலில் 5 நிமிடம் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும்.
  • தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. அல்லது பெனிட்ரோதயான் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.20833333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top