பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுதானியங்கள் பயிர் சாகுபடி

சிறுதானியப் பயிர் சாகுபடி

சிறுதானியங்கள்

சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி ஆகியவை சிறுதானியங்கள் எனப்படும். வறண்ட, மானாவாரிப் பகுதி சாகுபடியில் சிறுதானியப் பயிர்கள் முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சியில் சிறுதானியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற ஆறு சிறுதானியப் பயிர்கள் 2.90 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு 19.82 லட்சம் ஹெக்டேரில் இருந்து 7.77 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இதனுடைய உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 522 கிலோ என்ற நிலையிலிருந்து 1,176 கிலோவாக அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த உற்பத்தியின் உயர்வுக்கு உயர் விளைச்சல் ரகங்களையும், வீரிய ஒட்டு ரகங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருவதே காரணமாகும்.

தினை, சாமை, வரகு, பனிவரகு சாகுபடி தொழில்நுட்பம்

தினை, வரகு, சாமை மலைவாழ் மக்களால் பெரிதும் விரும்பி பயிரிடப்படும் சிறுதானியப் பயிராகும்.

இது மிகக் கடினமான வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. மேலும் பலவகையான மண் வகைகளிலும், மண் வளம் குறைந்த நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.

இந்தப் பயிர்கள் தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக இந்தப் பயிர்களின் மகசூல் 650 கிலோ ஹெக்டேர் ஆகும். தேர்வு செய்யாத ரகங்களைப் பயிரிடுவதே இவ்வளவு குறைந்த மகசூலுக்கு முக்கியக் காரணமாகும்.

இதனைத் தவிர்க்க அதிக மகசூல் தரக் கூடிய ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 1500 - 2000 கிலோ என்கிற அளவுக்கு அதிக மகசூல் பெறலாம்.

தினை (கோ 7) ரகத்தின் சிறப்பியல்புகள்

1. மிக குறுகிய வயது (85 - 90 நாள்கள்), 2. அதிக தூர்கள் (7 - 8), 3. அதிக கதிர் நீளம் (29 செ.மீ.), 4. அதிகப் புரதச் சத்து (13.26 சதவீதம்), 5. கால்சியம் சத்து (0.35 சதவீதம்), 6. திரட்சியான மஞ்சள் நிற தானியம், 7. அதிக மகசூல், 8. பூச்சி, நோய்களை தாங்கி வளரும் தன்மை, 9. வறட்சியைத் தாங்கி அதிக அளவில் விளைச்சல் தரும் கோ(தி) 7 என்ற இந்த தினை ரகம் தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றதாகும்.

வரகு ரகங்கள் - கோ 3, ஏபிகே 1, சாமை ரகங்கள் - கோ 2, கோ 3, பனிவரகு ரகங்கள் - கோ 3, கோ 4.

மேற்கண்ட பயிர்கள் ஆடி, புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்றது.

நிலம் தயாரித்தல்

செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்ட மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்

வறட்சியைத் தாங்கி வளர, விதைகளை கடினப்படுத்தி பின்பு விதைக்க வேண்டும்.

ஒரு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் உரம்) விதைகளை 6 மணிநேரம் ஊரவைத்து நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ், ப்ளோரசன்ஸ் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் அல்லது டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்றளவில் நன்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி

அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிரை விதையுடன் கலந்து இடுவதால் 25 சதவீதம் தழைச்சத்தை சேமிக்கலாம்.

ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் (3 பாக்கெட்கள்) அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிர் கலவையை குளிர்ந்த அல்லது அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும்.

இவ்வாறு கலந்த விதைகளை 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதையும் விதைப்பும்: கை விதைப்பு அல்லது விதைப்பான் அல்லது கொர்ரு கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யலாம்.

இப்படி செய்வதால் அதிகப் பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதையை விதைத்து முடிக்கலாம்.

உரமிடல்: ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பிய பிறகு நிலத்தை உழ வேண்டும்.

பின்னர் 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின்போது அடியுரமாக இட வேண்டும்.

மேலுரமாக 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20 - 25 நாள்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி இட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் கலவையை 12.5 கிலோ அளவில் மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும்.

தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது.

களை நிர்வாகம்

சிறுதானியப் பயிர்களில், விதைத்த 3-ஆம் நாள் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை ஹெக்டேருக்கு 750 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்.

நிலத்தில் தெளிக்கும்போது போதியளவு ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு விதைத்த 20 - 25 நாள்களில் ஒரு இடை உழவு அல்லது கைக் களை எடுக்க வேண்டும்.

பயிர் களைத்தல்

விதைத்த 18 - 20-ஆம் நாளில் செடிகளை களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இந்தப் பயிர்களில் பொதுவாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து, அடித்து பின் விதைகளைப் பிரித்தல் வேண்டும்.

கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை இரண்டு முறை செய்யலாம்.

கதிர்களை களத்தில் நன்கு காயவைத்து தானியங்களை அடித்துப் பிரித்து தூய்மைப்படுத்தி சேமிக்கலாம்.

தானியங்களைப் பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.

தானிய மகசூல்

மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 1500 - 1800 கிலோ தானிய மகசூல் பெறலாம்.

தீவன மகசூல்

மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 4.5 - 5.30 டன் தட்டை மகசூல் பெறலாம்.

எனவே, மேலே சொல்லப்பட்ட உழவியல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் சிறுதானியப் பயிர்களின் தானிய மகசூலை அதிகரிக்கலாம் என்றார் அவர்.

பயிர் விதையளவு

(கிலோ - ஹெக்டேர்)     பயிர் இடைவெளி

தினை வரிசை விதைப்பு        10                    25-க்கு 10 செ.மீ.

சாமை வரிசை விதைப்பு        10                    25-க்கு 10 செ.மீ.

வரகு வரிசை விதைப்பு          10                   45-க்கு 10 செ.மீ.

பனி வரகு வரிசை விதைப்பு      10                   5-க்கு 10 செ.மீ.

குதிரை வாலி வரிசை விதைப்பு   10                   25-க்கு 10 செ.மீ.

மழைக்கால நோய்களில் பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?

 • பருவநிலை மாற்றத்தால் மழைக் காலத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கண்டறிந்து முறையான பராமரிப்பு மேற்கொண்டால் பயிர்களைப் பாதுகாக்கலாம்.
 • நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நெல் பயிர்கள் 30 முதல் 45 நாள்கள் வளர்ச்சி பெற்ற நிலையில் உள்ளன.
 • தொடர்ந்து விட்டு, விட்டு பெய்த மழையினாலும், சிதோஷண நிலை மாற்றத்தாலும் பூச்சி, நோய்த் தாக்குதல்களில் பயிர் சேதமடையும்.
 • மேலும் நெல் பயிரை இலைச் சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி, பாக்டீரியாவினால் ஏற்படும் இலை கருகல் நோய் போன்றவை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன.
 • இதையொட்டி விவசாயிகள் இந்தப் பருவத்தில் தங்களது பயிர்களை கவனமாக கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
 • நெல் பயிர்களுக்கு இந்தப் பருவத்தில் பூச்சியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.
 • உதாரணமாக, இலைச் சுருட்டுப் புழுக்கள் மெல்லிய இழை கொண்டு இலைகளை மடித்து இலையின் உள்ளே சென்று பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால் இலைகள் வெண்ணிறமாக மாறிவிடும்.
 • இதன் தாக்குதல் வழக்கமாகும்போது பயிரின் வளர்ச்சிக் குன்றி மகசூல் குறைந்து விடும். இதேபோல், இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலும் இந்தப் பருவத்தில் அதிகரிக்கும்.
 • இவை ஆண் அந்துப் பூச்சி இனம் மஞ்சள் நிறத்தில் முன் இறக்கையில் கரும்புள்ளி காணப்படும். பெண் அந்துப்பூச்சி இலையின் மேற்பாகத்தில் முட்டையிட்டு முட்டை குவியல்களை வெண்ணிறப் பஞ்சியால் மூடிவிடும்.
 • முட்டையிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். வளர்ந்த புழுக்கள் தண்டின் அடிபாகத்தில் சிறு துவாரமிட்டு தண்டின் உள்ளே சென்று சதைப் பகுதியைத் தின்றுச் சேதப்படுத்தும்.
 • மேலும், புழுக்கள், அதன் கழிவுகள் உள்ளே காணப்படும். இதன் தாக்குதலால் இளம் பயிரின் நடுக் குருத்து காய்ந்து விடும்.
 • தண்டு வளரும் பருவத்தில் அதாவது கதிர் உருவாகும் பருவத்தில் தாக்குவதால் வெளிவரும் கதிர்கள் வெண்கதிர்களாக மாறிவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
 • எனவே இதுபோன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். முட்டை குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
 • முட்டை ஒட்டுண்ணியை ட்ரைகோலிராமா ஜப்பானிக்கம் இட்டுத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.
 • மேலும், பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோரிபை ரீபாஸ் 20 (500 மில்லி லிட்டர் அளவு) அல்லது ட்ரையசோபாஸ் 40 (250 மில்லி லிட்டர் அளவு) ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு காலை, மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
 • நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய்: பாக்டீரியா இலைக் கருகல் நோய் என்பது காற்று, மழை நீரால் இலைகள் ஒன்றோடு ஒன்று, உராய்வதன் மூலம் பரவுகிறது.
 • நெல் பயிரின் இலைகளின் ஓரங்கள், நடு நரம்புப் பகுதியில் இருப் புள்ளிகள் தோன்றி, பிறகு அதிகப் பெரியதாக மாறி இலைக் கோடுகளை ஏற்படுத்தும்.
 • பின்பு இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும். இவற்றை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் எடுத்துக் கொண்டு இதனுடன் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ரா சைக்கிளின் சல்பேட் ஒரு ஏக்கருக்கு 120 கிராம் சேர்த்து தெளித்து இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இதேபோல் பருவத்துக்கேற்ப பூச்சித் தாக்குதலைக் கண்டறிந்து முறையாகப் பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் முழுமையாகப் பயனடையலாம்


சிறுதானிய பயிர்கள்

ஆதாரம்: தினமணி நாளிதழ்

2.87878787879
நல்லசேனாபதி ந Nov 24, 2016 10:23 AM

எனக்கு மிகவும் அரிதான தகவல் அதற்கு நன்றி தானிய விதைகள் வேண்டும் ந:70*****29

TASNA Oct 23, 2015 10:50 AM

http://farmer.gov.in/Seed.aspx?scod=18 என்ற இணையத்தைக் காணவும். அதில் முகவரி, தொலைப்பேசி எண் என தங்களுக்கு தேவையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

isaac Thangaraj Oct 22, 2015 09:12 AM

வரகு விதைகள் விதைபதற்கு விதை கிடைக்கும் இடம் மற்றும் செல் நம்பர் ஆகியவை தரவும் எனது ஊர் சம்பவர்வடகரை (தென்காசி) செல் நம்பர் 96*****68

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top