பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ரோஸ்மேரி சாகுபடி தொழிற்நுட்பங்கள்

ரோஸ்மேரி சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ரோஸ்மேரி ஒரு வாசனைப் பயிராகும். இது ஒரு  பல்லாண்டு பயிராகும். புதர் போல் 1 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடி எல்லா பருவங்களிலும் பசுமையாக இருக்கும் இதில் எண்ணெய் சுரப்பிகள் இலைகளின் கீழ்ப்பகுதிகளில் காணப்படும். இதன் இலைகள் வாசனைப் பொருட்களாக உணவு வகைகள்,  குளிர்பானங்கள், சூப் மற்றும் ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் வாசனையூட்டும் பொருட்களாக சோப், வாசனை திரவியங்கள் மற்றம் மதுபானங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

மண் மற்றும் காலநிலை

நல்ல வடிகால் வசதியுள்ள மண் வகைகள் மற்றம் மண்ணின் கார அமில தன்மை 65 – 70 இருப்பது பயிர் வளர்ச்சிக்கு உகந்தது. கடல் மட்டத்திலிருந்து உயரம் 700 மீட்டர் முதல் மலைப்பாங்கான பகுதிகளில் பயிர் செய்ய ஏற்றது.

பருவம்

ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவமாகும்.

நிலம் தயார் செய்தல்

நிலம் தேர்வு செய்த பிறகு நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். அத்துடன் நிலத்தை வளப்படுத்த பல்வேறு வகையான தானியப் பயிர்கள், பயறு வகைப் பயிர்கள், தலைச் சத்து தரும் பயிர்கள், செண்டுமல்லி பயிரிட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும். இப்பியிர்களை 40 முதல் 50ஆம் நாளில் ரொட்டோவேட்டர் கொண்டு அதே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். பின்பு ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு நன்கு கலக்கும்படி உழவு செய்ய வேண்டும்.

நடவு முறை

வேர்விட்ட செடிகளை வரிசைக்கு 60 செ.மீ. செடிக்கு 45 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அதாவது ஏக்கருக்கு சுமார் 15,000 வேர்விட்ட செடிகள் தேவைப்படும். நட்ட 6 மாதத்திற்கு பின், செடியின் மைய தண்டை வெட்டி விடுவதால் பக்கக் கிளைகள் வளர ஏதுவாகும்.

ஊடு பயிர் சாகுபடி

ரோஸ்மேரி பயிர் நட்ட பிறகு வெங்காயத்தை ஊடு பயிராக பயிர் செய்யலாம். இதனால் இரண்டு பயிரும் கன்னி பயிராக செயல்படுவதால் பூச்சி தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

உரமிடுதல்

ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 18 கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல்சத்து அடியுரமாக இடவேண்டும். 24 கிலோ தழைச்சத்து மேலுரமாக 3 முறை பிரித்து ஒவ்வொரு அறுவடைக்குக் பிறகும் இடவேண்டும். மண் பரிசோதனை செய்து அதன் படி இராசயண உரமிடாத நிலத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் மண் புழு உரம் இடவது மிகச் சிறந்தது.

களை எடுத்தல்

நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை நன்கு கொத்திவிட்டு பின்பு 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஆண்டிற்கு 4 முதல் 5 முறை களை எடுக்க வேண்டும். களைச் செடிகளைப் பிடுங்கி அந்தந்த இடத்திலேயே ஒரு பார் விட்டு ஒரு பார் மூடாக்கு இடுவதால் களைச் செடிகளின் முளைப்பு கட்டுப்படுத்தப்பட்டு மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுகிறது.

பயிர் வளர்ச்சி ஊக்கி

அமிர்த கரைசல்

இதனை செய்ய சுமார் 10 லிட்டர் தண்ணிருக்கு ஒரு கிலோ மாட்டுச் சாணம், ஒரு லிட்டர் மாட்டுகோமியம் இத்துடன் 100 மில்லி கரும்புபால் அல்லது 100 கிராம் வெல்லம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் வைத்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் வீதம் கலந்து இலை மூலம் தெளிக்கலாம். அல்லது நீர் பாய்ச்சும் பொழுது தண்ணீருடன் கலந்து விடலாம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் செய்யும் பொழுது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் பெருகி மண் வளம் மேம்பாடு அடைகிறது. இதனால் விளைச்சலும் கூடுகிறது.

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யத்தை 10 லிட்டர் நீரில் 250 மி.லி. வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்கலாம். இதன் மூலம் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இது புழு, பூச்சி விரட்டியாக செயல்பட்டு பயிருக்கு நோய் தாங்கும் சக்தியை தருகிறது.

நீர்பாய்ச்சுதல்

இப்பயிர் வறட்சியை தாங்கவல்லது. ஆதலால் மழை இல்லாத காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

பயிர்ப் பாதுகாப்பு

இப்பயிரை சாறு உறிஞசும் பூச்சிகள் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாகவும், சுருண்டும் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம். பூச்சி விரட்டியை தயாரிப்பதற்கு வேம்பு, பார்த்தீனியம், நொச்சி, புகையிலை, வசம்பு, பூண்டு, காட்டாமணக்கு, ஆடதொடா, எருக்கு, உண்ணிச்செடி, சோற்றுக்காற்றாழை மற்றம் பிரண்டை இவற்றில் எதாவது ஐந்து வகைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு கிலோ எடுத்து சிறு துண்டுகலாக நறுக்கி மண் பானை அல்லது பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு இத்துடன் சாணக்கரைசல் 1 பங்கு ஊற்றி ஊற வைக்க வேண்டும். தினமும் கலக்கி விட்டு 1 வாரம் கழித்து 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசலை கலந்து பயன்படுத்தலாம். இது பூச்சி விரட்டியாகவும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.

வெள்ளைப்புழு

பாதிக்கப்பட்ட ரோஸ்மேரி பயிர் வெளுத்து காய்ந்து காணப்படும். அதன் வேர்ப்பகுதி முழுவதுமாக புழுக்களால் தின்று சேதம் அடைந்திருக்கும். இதனால் ரோஸ்மேரி பயிர் வாடிவிடும்.

மேலாண்மை முறைகள்

ரோஸ்மேரி நடவுக்கு முன்பு வயலை இரண்டு முறை ஆழமாக உழுதிட வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களில் காய்ந்தபோன செடிகளை அகற்றி அதன் அடிப்பாகத்தில் காணப்படும் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். கடைசி உழவில் மெட்டாரைசியம் எனும் உயிர் பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு எட்டு கிலோ என்ற விகிதத்தில் மண்ணில் இடவேண்டும். பாதிக்கப்ட்ட செடிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள செடிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. குளோர்ஃபரிபாஸ் கலந்து செடியின் அடிப்பகுதி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும் அல்லது கீழ்க்காணும் முறையினை கையாண்டு பயன்பெறலாம். அவைகள்

  • ஒரு ஏக்கருக்கு 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 மண் பானைகள் தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பானைகளை 5 வெவ்வேறு இடங்களில் கழுத்து மட்ட அளவிற்கு மண்ணில் புதைக்க வேண்டும்.
  • ஆமணக்கு விதை ஐந்து கிலோ எடுத்து இடித்து பொடி செய்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.
  • 10 நாட்கள் கழித்து இந்த கரைசலை புதைத்து வைத்து ஒவ்வொரு பானைக்கும் 2 லிட்டர் விகிதம் ஊற்ற வேண்டும்.
  • பின்பு பானையின் கழுத்து மட்ட அளவிற்கு தண்ணீரை ஊற்றி நிரப்பி வைக்கவும்.
  • கரைசலின் வாசனைக்கு வண்டுகள் பானையில் விழும் அவ்வப்பொழுது அகற்ற வேண்டும்.

இலை சுருட்டு புழு

இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி, புழு அதனுள் இருந்து பச்சையத்தை உண்டு சேதம் உண்டாக்கும். இலைகள் காய்ந்துவிடும்.

மேலாண்மை முறைகள்

ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி.வேப்பெண்ணெய் அல்லது இரண்டு மி.லி வேப்பங்கொட்டை கரைசல் ஏதாவது ஒன்றை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

வாடல் நோய்

சில வயல்களில் அறுவடைக்கு பிறகு செடிகள் காய்ந்து வாடி விடும்.

மேலாண்மை முறை

தரைமட்டத்திலிருந்து 50 செ.மீ. மேல் உள்ள தழைகளை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். அறுவடைப்பின் உடனேயே காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 விகிதம் கலந்து செடிகளை சுற்றி ஊற்ற  வேண்டும்.

வேர் அழுகல் நோய்

மழைக்காலங்களில் பயிரின் வேர் பகுதி ரைசோடானியா சோலானி என்ற பூஞ்சாணம் தாக்கப்படுவதால் வயலில் ஆங்காங்கே செடிகள் காய்ந்து காணப்படும்.

மேலாண்மை முறை

ஒரு சதவிகித போர்டோ கலவையை செடியினை சுற்றிலும் வேர்கள் நன்கு நனையும்படி ஊற்றப்பட வேண்டும். 10 கிலோ குப்பையுடன் ஒரு கிலோ டிரைகோடர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சாணத்தை நன்கு கலந்து வேரைச் சுற்றியிட்டு மண் அனைக்க வேண்டும்.  இதனை 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து 4 லிருந்து 5 முறை கையாளவேண்டும்.

அறுவடையின் போது கவனிக்க வேண்டியவை

  • ரோஸ்மேரி வயல்களில் 10 சதவிகிதம் அதாவது அங்கும், இங்குமாக பூத்து இருந்தால் அறுவடைக்கு சரியான தருணமாகும்.
  • ரோஸ்மேரி பயிர் அறுவடையின் போது நிலமட்டத்தில் இருந்து 15 செ.மீ. வரை விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
  • அறுவடையின் போது செடிகள் மற்றும் வேர்கள் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அறுவடை செய்த ரோஸ்மேரி இலைகளை நிழலான இடத்தில் உலர விட வேண்டும்.
  • ரோஸ்மேரி இலைகளை குவியலாக இடாமல் பரவலாக இட வேண்டும்.
  • அறுவடை செய்த ரோஸ்மேரி இலைகளின் மீது தண்ணீர் தெளிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
  • அறுவடை செய்த ரோஸ்மேரி இலைகளை பாலித்தீன் கவர் கொண்டு மூடி வைப்பதை அல்லது சாக்குப்பையில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.05555555556
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top