பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அறுவடைக்கு உதவும் இயந்திரங்கள்

பல்வேறு பயிர்களில் அறுவடை செய்ய உதவும் இயந்திரங்களின் சிற்ப்பியல்புகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நெல் கதிரடிக்கும் இயந்திரம்

கதிரடித்தல் என்பது கதிரிலிருந்து மணியை பிரித்தெடுத்தல் அல்லது மணியை செடியிலிருந்து பிரித்தெடுக்கும் பணியாகும். கதிரடித்தல் மூலம் கதிரிலிருந்து மணியையும், காயிலிருந்து பயறையும் பிரித்தெடுக்கலாம். கதிரடித்தல் பணி கீழ்க்காணும் அடிப்படை தத்துவங்களை கொண்டு செய்யப்படுகிறது.

  • அதிக விசையுடன் கதிரை தாக்குதல் அல்லது நெருக்குதல் மூலம் மணிகளை பிரித்தெடுத்தல்
  • தேய்த்தல் மற்றும் நசுக்குதல் மூலம் மணிகளை பிரித்தெடுத்தல்

கதிரடித்தல்

கதிரடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கு கதிரடிக்கும் இயந்திரம் என்று பெயர். இவ்வியந்திரத்தின் விசையைக் கொண்டு கதிருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மணிகள் பிரித்தெடுக்கப்படுகிறது. மணியை கதிரிலிருந்து பிரித்தெடுக்க தேவைப்படும் விசை கீழ்க்காணும் காரணிகளை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

  • செடியின் வகை
  • இரகம்
  • முதிர்யுறும் நிலை
  • கதிரின் ஈரப்பதம்

எந்தவொரு கதிரடிக்கும் இயந்திரத்திலும் அதன் செயல்திறன் கீழ்க்காணும் காரணிகளால் பாதிக்கிறது

  • கதிரடிக்கும் உருளையின் வேகம்
  • உருளையில் உள்ள அடிப்பான்களின் எண்ணிக்கை
  • உருளையின் அளவு
  • உருளைக்கும் அதன் கீழே உள்ள சல்லடைக்கும் உள்ள இடைவெளி
  • பயிரின் தன்மை மற்றும் ஈரப்பதம்
  • பயிர் உட்செலுத்தும் வழி
  • உட்செலுத்தும் அளவு

கதிரடிக்கும் முறைகள்

  • மனித சக்தியால் கதிரடித்தல்
  • கால்நடைகளை கொண்டு கதிரடித்தல்
  • இயந்திரங்களை கொண்டு கதிரடித்தல்

மனித சக்தியால் கதிரடித்தல்

இம்முறையில் கதிர் பாகம் உள்ள பயிரை கையால் எடுத்து கல்லின் மீது மோதுமாறு அல்லது தரையில் அடித்து மணிகள் பிரித்தெடுக்கப்படுகிறது. இம்முறை மெதுவாகவும், அதிக ஆட்கள் தேவைப்படுவதாகவும் இருக்கும்.

கால்நடைகளை கொண்டு கதிரடித்தல்

இம்முறையில் கதிரடிக்கும் களத்தில் நன்கு பரப்பி வைக்கப்பட்டிருக்கும் பயிர்களின் மீது கால்நடைகளை தொடர்ந்து நடக்க வைக்கும் பொழுது, கால்நடைகளின் உடல் எடையால் கதிரை நசுக்கி மணிகள் பிரித்தெடுக்கப்படுகிறது.

இயந்திரங்களை கொண்டு கதிரடித்தல்

இம்முறையில் இன்ஜினால் இயங்கும் டிராக்டர் அல்லது இயந்திரங்களில் கீழ்க்காணும் பணிகள் செய்யப்படுகிறது.

  • அறுவடை செய்த பயிர் இயந்திரங்களுக்குள் செலுத்துதல்
  • கதிரிலிருந்து மணியை பிரித்தெடுத்தல்
  • வைக்கோல் பிரித்தெடுத்தல் மற்றும் கதிரைமணிகளை தூசுகளிலிருந்து சுத்தம் செய்தல்
  • மணிகளை தனியே சேகரித்தல்

கிராமப்புறங்களில் அறுவடைக்குப்பின் நெற்கதிர்கள் ஆட்களால் தரையின் மீதோ அல்லது கல்லின் மீதோ அடிக்கப்பட்டும் களத்தில் காயவைத்து மாடுகளால் தாம்பு கட்டியும் நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் பிரித்தெடுக்கப்படும். இம்முறை பண்டைக் காலத்திலிருந்து பழக்கத்தில் உள்ளது. இப்படி பிரிக்கப்பட்ட நெல்லை காற்றின் உதவியைக் கொண்டு தூற்றி, நெல் மணிகள் தனியாகவும், தூசு தனியாகவும் பிரிக்கப்பட்டு வந்தன.

நாளடைவில் வேளாண்மைத் தொழிலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டத்தால் தக்க சமயத்தில் நெல் மணிகள் பிரித்தெடுக்கப்படாமல் வைக்கோல் மற்றும் நெல் முதலியன மழை, காற்று மற்றும் விலங்குகள் போன்றவற்றால் சேதாரம் ஏற்பட வாய்ப்புண்டானது. ஆகவே, நெல்மணிகளைப் பிரித்தெடுக்க கதிரடிப்பான் போன்ற இயந்திரம் வேளாண் பெருங்குடி மக்களுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது.

இத்தேவையைப் பூர்த்தி செய்ய மின்விசையினால் இயங்கும் பலவகைப்பட்ட கதிரடிப்பான்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளிடையே பிரபலமடைந்து வந்தன.

இயங்கும் முறை

இதில் நெற்கதிர்களைத் திணிக்கும் திரிகை வாய்ப்பெட்டி, சுழலும் கதிரடிக்கும் உருளை, காற்றுத்துருத்தி பவர்டில்லரின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ளது. நெற்கதிர்களைத் திணிக்கும் வாய்ப்பெட்டி ஆட்கள் நின்று கொண்டு கதிர்களைத் திணிக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உருளை சுழல்வதற்கான விசை பெல்ட் மூலம் பவர்டில்லரின் கிளட்ச் புள்ளியுடன் இணைகப்பட்டிருக்கும். சுழற்சி ஏற்படுத்தும் உறிஞ்சு விசையானது கதிர்களை உள்ளே இழுத்துக் கொள்ளவும், கதிர் உதிர்க்கப்பட்டு வெளியே தள்ளவும் ஏதுவாக உள்ளது. கதிரடிக்கும் உருளையின் மேற்புறத்தில் திருகுசுழல் வடிவத்தில் இரும்பு பட்டை அரங்கள் நீளவாக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

வாய்ப்பெட்டியின் வழியாக நெற்கதிர்கள் உள்ளே திணிக்கப்படும்போது இரும்புப் பட்டை அரங்களில் நெல்மணிகள் தானாகப் பிரித்தெடுக்கப்படுவதுடன் உருளைக்கு கீழேயுள்ள இரும்புச் சல்லடை போன்ற பாகத்திற்கும், உருளைக்கும் உள்ள இடைவெளி மூலம் வெளியேறும் பொழுது மீதமுள்ள நெல்மணிகளும் கதிரிலிருந்து பிரிக்கப்படுகின்றன.

நெற்பயிர்களின் தன்மைக்கேற்றவாறு இந்த இடைவெளியை சரியாக அமைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இல்லையெனில் நெல்மணிகள் உடைவதற்கும் அல்லது மணிகள் கதிரிலிருந்து பிரிக்கப்படாமல் வருவதற்கும் வாய்ப்புண்டு. இரும்புச் சல்லடையின் கீழ்ப்புறம் அமைக்கப்பட்டுள்ள காற்றுத் துருத்தியானது ஒரே சீரான அளவு காற்றை மணிகள் வெளியே வரும் வாயினருகில் செலுத்துகிறது. இதனால் பதர், தூசு போன்றவை தூற்றப்பட்டு தொலைவில் சென்று விழுகின்றன. நெல் சுழலும் உருளையின் விசையினாலேயே வெளியே வந்து விழுகின்றன. துருத்தியிலிருந்து வரும் காற்றைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதி உண்டு.

சிறப்பியல்புகள்

  • ஒரு மணி நேரத்தில் அடிக்கப்படும் நெல் மணியின் அளவு 630 கிலோ. எனவே, மற்ற கதிரடிக்கும் இயந்திரங்களை விட அதிக திறன்.
  • ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கேற்ப டிரெயிலா போன்ற சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • பவர்டில்லரின் வருடாந்திரப் பயன் அதிகரிக்கப்படுவதால் அதிக லாபம்.
  • மின்சாரம் இல்லாத இடங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

நிலக்கடலை காய் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலக்கடலைச் செடியிலிருந்து காயைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும், நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலைக் கையினால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஒரு ஆள் ஒரு நாளில் 10 முதல் 15 கிலோ அளவே பிரித்தெடுக்க முடிகிறது. ஆகவே, அறுவடைக் காலங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சிரமத்தைப் போக்க நிலக்கடலை காய் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் வேலையாட்களையும், நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தலாம். இவ்வியந்திரத்தில் பல சுழலும் தன்மை கொண்ட உருளை, குழிவு சல்லடை, துருத்தி, முன் பின் ஆடும் வெவ்வேறு அளவு சல்லடைகள் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை இயக்க 5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

அறுவடை செய்த செடியை இவ்வியந்திரத்திலுள்ள இடுபெட்டியில் செலுத்தும்போது சுழலும் உருளையில் உள்ள முனைகள் மற்றும் சுற்றிலும் உள்ள குறுக்கு கம்பிகளின் உதவியால் செடியிலிருந்து காய்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. காய் மற்றும் செடிகள் கீழே பொருத்தப்பட்டுள்ள சல்லடையின் மேல் விழுகின்றன.

சிறப்பியல்புகள்

  • அறுவடை செய்த உடனேயே உலர்த்தாமல் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுக்கலாம்.
  • ஒரு மணி நேரத்தில் சுமார் 150 கிலோ காய்களைப் பிரித்தெடுக்கலாம்.
  • இக்கருவியை உபயோகிப்பதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும், 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது.

மக்காச்சோள உதிர்த்தி

  • உலர்த்தப்பட்ட மக்காச்சோளக் கதிரிலிருந்து மக்காச்சோள மணிகளை உதிர்த்துவதற்கு மக்காச்சோள உதிர்த்தி என்னும் இயந்திரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உலர்த்தப்பட்ட தோல் நீக்கிய மக்காச்சோளக் கதிர்கள் உலர்த்தியின் தட்டில் ஒவ்வொன்றாகச் செலுத்தப்படுகின்றன.
  • இப்படிச் செலுத்தப்படும் கதிர்கள் சுழன்று கொண்டிருக்கும் பற்சக்கரங்களால் உள்ளிழுக்கப்படுகின்றன. பற்சக்கரத்தின் எதிர்புறம் குமிழ்கள் கொண்ட உதிர்க்கும் தட்டு சுழன்று கொண்டிருக்கிறது. பற்சக்கரத்தால் உள்ளிழுக்கப்பட்ட கதிர்கள் இடுக்கியின் உதவியால் அமிழ்த்தப்பட்டு உதிர்க்கும் தட்டிலுள்ள குமிழ்களின் மீது செலுத்தப்படுகின்றன. இப்படிச் செலுத்தப்படும் பொழுது கதிரிலுள்ள மணிகள் தனியாகவும், சக்கை தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.
  • இடுக்கியின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள திருகுச்சுருளின் அழுத்தத்தை மாற்றிக் கொடுப்பதன் மூலம் வேறுபட்ட அளவுகளுள்ள மக்காச்சோளக் கதிர்களையும் இக்கருவியைக் கொண்டு உதிர்க்க முடியும். அளவு வாரியாகப் பிரித்துக் கொண்டால், கதிர் அளவிற்குத் தகுந்தவாறு திருகுச்சுருள் அழுத்தத்தை அமைத்துக் கொள்ளலாம்.

தீவனப்பயிர் வெட்டும் கருவி

  • கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனத்தின் அளவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் தீவனத்தை வீணாக்காமல் குறித்த நேரத்தில் போட வேண்டும். தட்டு, புல் போன்ற தீவனங்களை சிறிது சிறிதாக போட்டால் சேதப்படுத்தாமல் நன்கு உண்ண முடியும்.
  • சில விவசாயிகள் கத்தியை பயன்படுத்தி தட்டு வெட்டும் வேலையைச் செய்கின்றனர். இவற்றை உபயோகப்படுத்தும் போது தட்டு வெட்டுபவர், அடிக்கடி குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
  • இம்முறையில் தொடர்ந்து தட்டுவெட்டுவது மிகவும் கடினமாக இருப்பதுடன், சிறிது நேரம் வேலைக்குப்பின் சோர்வு அதிகம் ஏற்படுகிறது.

மேற்கூறிய குறைகளை நிவிர்த்தி செய்ய கை வலிமை மற்றும் கால் வலிமையினால் இயங்கக் கூடிய தட்டுவெட்டும் கருவி ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் முழுவதும் தேனிரும்பினால் செய்யப்பட்டது. அதில் ஒரு பக்கம் தட்டு வைக்கும் மேசை உள்ளது. அதன் ஒரு விளிம்பில் கத்தி பொருத்தப்பட்டுள்ளது. கால் வலிமையை பயன்படுத்தும் வகையில் படி அமைப்பு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் கை மற்றும் காலினால் விசையைக் கொடுத்து தட்டு வெட்டுவதால் களைப்புத் தெரிவதில்லை. நீண்ட நேரம் ஒய்வு எடுக்காமல் தட்டு எளிதாக வெட்டலாம். ஒரு மணியில் 300 கிலோ தட்டு வெட்டலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.33333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top