பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

செடிமுருங்கை பி.கே.எம் 1-ன் நவீன சாகுபடி முறைகள்

செடிமுருங்கை பி.கே.எம்.1 - ன் நவீன சாகுபடி முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

“மொரிங்கா ஒலிபெரா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட முருங்கையானது, மொரிங்கேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இது மிகவும் வேகமாகவும், வறட்சியை தாங்கி வளரக் கூடியதாகவும் உள்ளது. இப்பயிர் வெவ்வேறு விவசாய முறைகளுக்கும் வெவ்வேறு தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கும் ஏற்றதாக உள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இப்பயிரின் பல்வேறு உபயோகங்களுக்காகவும், அதிகம் பூக்கக்கூடிய தன்மையினாலும், எளிதில் வளரக்கூடியது என்பதினாலும், முருங்கையின் பொருட்களுக்கு அதிக தேவைகள் இருப்பதினாலும் முருங்கை சாகுபடி செய்யப்படும் பரப்பளவு அதிகமாகி உள்ளது.

இந்தியாவில் முருங்கை தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக முருங்கை தொன்று தொட்டு சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், முருங்கை காய்ப்பதற்கு மிக நீண்ட காலம் ஆகும், நடவுக்கு ஏற்ற குச்சிகள் கிடைப்பதற்கு சிரமமாக உள்ளது, வறண்ட நிலங்களில் மழை பெய்யும் நாட்கள் குறைவாக உள்ளது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது என அதன் சாகுபடியில் வெவ்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்திலிருந்து விதை மூலம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு செடி முருங்கை இரகங்களை வெளியிட்டனர். அவை : பி.கே.எம். 1, பி.கே.எம். 2. இதை வெளியிட்டவுடன் இந்தியாவில் முருங்கை சாகுபடி பரப்பளவு கணிசமாக உயர்ந்துள்ளது. தென்மாநிலங்களில் பயிரிடப்பட்டு வந்து பல்லாண்டு முருங்கையின் மாற்றாக இவை பயிரிடப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் சாகுபடிப் பரப்பளவு வெகுவாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது செடிமுருங்கை எல்லா மாவட்டங்களிலும் புஞ்சை நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

பருவம் மற்றும் நடவு

செடிமுருங்கை விதை மூலம் பரப்பப்படுகிறது. விதைகளை நேரடியாக நிலத்தில் விதைக்கலாம் அல்லது நாற்றுக்கள் வளர்த்து நாற்றுக்களை நிலத்தில் நடலாம். தென்மாநிலங்களில் முருங்கையை செப்டம்பர் மாதத்தில் விதைக்கலாம். விதை விதைக்கும் பருவத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பூக்கும் பருவம் மழைக்காலங்களோடு ஒன்றிவிடும் இதனால் பூக்கள் பெரிதும் உதிர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் இடைவெளி விட வேண்டும். இதனால் ஒரு எக்டரில் 1600 செடிகள் வளர்க்கலாம். 45 x 45 x 45 செ.மீ. அளவுள்ள குழிகளை அமைத்து, குழிகளின் நடுவே விதை விதைக்க வேண்டும். விதைகள் விதைத்து 10 முதல் 12 நாட்களில் முளைக்கும். ஒரு எக்டருக்கு சுமார் 625 கிராம் விதைகள் தேவை. விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.

பயிர் பராமரிப்பு

செடிகள் சுமார் 75 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் நுனிகளை கிள்ளிவிடவேணடும். இதனால் பக்கக்கிளைகள் அதிக அளவில் உருவாகும். மேலும் செடிகளின் உயரமும் குறைவாக காணப்படும். விதை விதைத்த 60 நாட்களுக்குப்பின் நுனிகளை கிள்ளுவதினால் அதிக உற்பத்தி உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மறுதாம்புப் பயிர்

செடி முருங்கையில் முதல் பருவ அறுவடை முடிந்தவுடன் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட வேண்டும். இதிலிருந்து வரும் மறுதாம்பு பயிர் நான்கு முதல் ஐந்து மாதங்களில் காய்ப்பிற்கு வரும். ஒருமுறை விதைத்தவுடன் மூன்று பருவங்களுக்கு உற்பத்தியை எடுக்கலாம். மறுதாம்புப் பயிருக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு மரத்திற்கு சுமார் 20-35 கிலோ தொழுவுரத்துடன் அளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் உற்பத்தி

செடிமுருங்கையில் உற்பத்தி ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே காணப்படும். காய்கள் சரியான நீளம் மற்றும் தடிமனை அடைந்தவுடன் அறுவடை செய்யவேண்டும். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு அறுவடை இருக்கும். ஒருமரத்திற்கு ஒரு வருடத்திற்கு சுமார் 250-400 காய்கள் உற்பத்தியாகும்.

முருங்கையில் அடர்நடவு முறையில் இலை உற்பத்தி

முருங்கை இலைகள் கீரையாகவும், மாட்டுத்தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகின்றன. இதனை அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதினால் ஒரு எக்டருக்கு மிக அதிக அளவாக 650 டன்கள் கீரை உற்பத்தி செய்யலாம். அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு நிலத்தினை 60 செ.மீ. ஆழத்தில் ரோட்டரி கலப்பை கொண்டு உழ வேண்டும். இதனால் அதிக வேர் வளர்ச்சி உண்டாவதோடு நீர் வடியும் தன்மையும் அதிகமாகிறது. பின்னர் 10 x 10 செ.மீ. இடைவெளியில் (ஒரு எக்டருக்கு ஒரு மில்லியன் செடிகள்) தேவையான உரங்களை அளித்து விதைக்க வேண்டும். செடிகள் சுமார் 50 செ.மீ. வளர்ந்தவுடன் இலைகளை நிலத்திலிருந்து 15 முதல் 20 செ.மீ. வெட்டிவிட வேண்டும். முதல் ஆண்டில் 20 முதல் 30 சதவிகித நாற்றுக்களுக்கு சேதம் ஏற்படும் ஆனால் பின்னர் செடிகள் அடர்த்தியாக வளரும். ஒரு வருடத்திற்கு ஒன்பது முறை அறுவடை செய்யலாம். இதனால் 650 டன்கள் இலை உற்பத்தி கிடைக்கும்.

ஊடுபயிராக செடி முருங்கை

செடிமுருங்கையை பழைய தென்னை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். முருங்கை தனிப்பயிராக சாகுபடி செய்துள்ள தோட்டங்களில் பீன்ஸ், தட்டைப்பயறு, வெண்டை போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

பூச்சி தாக்கம்

 • மறுதாம்பு பயிர்களை பூச்சி தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
 • அறுவடைக்குப்பிந்திய பதப்படுத்துதலுக்கும் ஏற்றுமதிக்கும் உகந்த காய்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

இடர்பாடுகள்

 • முருங்கையில் அயல் மகரந்தச் சேர்க்கையில் அதிகப்படியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. விதைகளை கட்டாயமாக ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் விதைப்பு செய்தல் வேண்டும்.
 • பழ ஈ அதிக சேதாரத்தை தோற்றுவிக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
 • முருங்கையை பெட்டியிலடைக்கும் முறையில் நவீன முறைகளை பின்பற்றுவதில்லை
 • ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அதிக விளைச்சல் தோன்றி சந்தையில் விலை குறைவாக கிடைக்கிறது.
 • குளிர் பதனிடும் முறை முருங்கையில் பின்பற்றப்படுவதில்லை

சிறிய அளவில் முருங்கை சாகுபடி செய்தலின் நன்மைகள்

 • குறைந்த அளவு நீரே இப்பயிருக்கு தேவை
 • இப்பயிருக்கு அதிகம் கூலியாட்கள் தேவையில்லை குடும்ப தொழிலாளர்களைக் கொண்டே பல்வேறு வேலைகளைச் செய்யலாம்.
 • அதிக படியான இயற்கை உரமோ, இரசாயன உரமோ தேவையில்லை
 • குறைந்த அளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் எளிதில் காய்களை சந்தைக்கு எடுத்துச் செல்லலாம்.
 • முருங்கை மரத்தினை மறுதாம்பிற்காக வெட்டிவிடும்போது, வெட்டி விட்ட மரங்களிலிருந்து காகிதம் மற்றும் காகிதக்கூழ் தயாரிக்கலாம். இதுவும் சிறு விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
 • மிக அதிக உற்பத்திக்கு செடிக்கு செடி 3 மீட்டர் இடைவெளி விட வேண்டும். மரத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் களை வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

2.97916666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top