பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உழவியல் முறைகள்

உழவியல் முறைகள் (Agronomic Practices) சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பயிர் சாகுபடிக்கேற்ற சூழ்நிலைகள் நிலவும் சுற்றுச்சூழல், மண் வகை மற்றும் பாசன வளமை ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல சாகுபடி முறைகள் வேறுபடுகின்றன.

பண்ணை (Farm)

குறிப்பிடப்பட்ட எல்லை வரையரைக்குட்பட்ட பயிர்கள், கால்நடைகள் மற்றும் அதைச்சார்ந்த பண்ணைத் தொழில்கள் ஆகியவை ஒருங்கிணைந்த நிலப்பகுதி பண்ணை எனப்படுகிறது.

சாகுபடி (Cultivation)

சூரிய ஆற்றலை பயனுள்ளதாக மாற்றி தாவரங்கள் மற்றும் விலங்குகள் மூலம் பொருளாதார தரவுகளை உற்பத்தி செய்யும் முறைக்கு சாகுபடி என்று பெயர்.

சாகுபடி வகைகள்

நன்செய் சாகுபடி (Wetland Cultivation)

ஏரி, குளம், கால்வாய் மற்றும் கிணறுகள் மூலமாக நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டு, சாகுபடி காலம் முழுவதும் நீர் தேங்குமாறு செய்யப்படும் சாகுபடி நன்செய் சாகுபடி ஆகும்.

உம். நெல்

புன்செய் சாகுபடி / தோட்டக்கால் சாகுபடி (Gardenland Cultivation)

மழை மூலம் பெறப்பட்ட நிலத்தடிநீரைப் பயன்படுத்தியும், கூடுதலாக பாசன வசதி செய்தும் பயிர் விளைச்சலை செய்தல் புன்செய் அல்லது தோட்டக்கால் சாகுபடி எனப்படுகிறது.

உ.ம். பருத்தி, கரும்பு

மானாவாரி சாகுபடி (Rainted Cultivation)

முழுவதும் மழையை மட்டும் நம்பி, மழைநீரின் ஈரப்பதத்தை தேக்கி, பயன்படுத்தி பயிர் விளைச்சலை செய்தலே மானாவாரி சாகுபடி எனப்படுகிறது. இத்தகைய சாகுபடி ஆண்டு மழையளவு 800 மி.மீ க்கு குறைவாக உள்ள பகுதிகளில் பின்பற்றப்படுவதால் அதிக அளவு வறட்சிக்கு ஆட்படுகிறது. ஆனால் ஆண்டு மழையளவு 800 மி.மீ க்கு அதிகமாகப் பெறப்படும் பகுதிகளில் இத்தகைய வறட்சியின் பாதிப்பு குறைவாக இருப்பதுடன் மண், ஈரப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு மானாவாரி சாகுபடி சிறப்பாக செய்யப்படுகிறது, உம். குறு தானியப் பயிர்கள், ஆமணக்கு

பயிர் சுழற்சி (Crop Rotation)

பயிர் சுழற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முன்கூட்டியே திட்டமிட்டவாறு பல்வேறு வகையான பயிர்களை விளைவித்தலேயாகும். இது தொடர்ச்சியான பயிர் சாகுபடி எனவும் அழைக்கப்படுகிறது. இருக்கக்கூடிய வளங்களை அதிக அளவில் பயன்படுத்தி மண்வளம் பாதிக்கப்படாத வகையில் உயர்ந்தபட்ச பயிர் விளைச்சலைப் பெறுவதே பயிர் சுழற்சியின் குறிக்கோளாகும்.

  • பயறுவகைப் பயிர்களை தானியப் பயிர்சாகுபடிக்கு முன்னதாக விளைவித்து வளிமண்டல தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துதல்.
  • ஆணிவேர் தொகுப்புடைய பயிர்களைத் தொடர்ந்து சல்லிவேர் தொகுப்புடைய பயிர்களைப் பயிரிட்டு பயிர்களுக்கான சத்து கிடைத்தலை உறுதி செய்தல்.
  • தேவைக்கேற்ப பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களை தொடர்ச்சியாக பயிரிடாமல் மாற்றிப் பயிரிட்டு பூச்சிகளின் நிலைப்புத் தன்மையை அழித்தல்.
  • பயிர் தேர்வு உழவர்களின் பொருளாதார சக்திக்கு ஏற்றதாக இருத்தல்.
  • பயிர் தேர்வு அந்தந்த பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு உகந்ததாக இருத்தல்.
  • சரிவான நிலப்பகுதிகளில் மண் அரிமானத்தைத் தடுக்கக்கூடிய தடுப்புப் பயிர்களை பயிரிடுதல்.
  • மானாவாரி நிலப்பரப்பில் வறட்சியைத் தாங்கும் பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்.
  • தாழ்வான மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளில் நீரினில் நின்று விளையக்கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிரிடுதல்.
  • சிறந்த பயிர் சுழற்சி என்பது குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை தருவதோடு மண்ணில் நலத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பயிர் சுழற்சியில் பல்வேறு வகையான பயிர்களை பயிடுவதால் அவற்றின் கழிவுகளால் மண்ணிற்கு தேவையான அங்ககப் பொருட்கள் கிடைக்கப் பெறுகிறது.
  • மண்ணின் இயற்பியல் தன்மையை கட்டமைக்கிறது.
  • பண்ணையின் ஆக்கத்திறனை அதிகரிக்கிறது.
  • இருக்கக்கூடிய வளங்களை மிகையான அளவில் பயன்படுத்தலாம்.
  • பூச்சி, நோய் மற்றும் களைகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு பயிர்த் திட்டம் (Mono Cropping System)

ஒரு பயிர்த் திட்டம் என்பது, ஒரே பயிரை ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு அல்லது பருவத்திற்குப் பருவம் திரும்பத் திரும்ப விளைவித்தலேயாகும்.

உ.ம். டெல்டா பகுதியில் நெல் சாகுபடி

நெல் சாகுபடியைப் பொறுத்த வரையில் ஒற்றைச் சாகுபடி முறை சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. வேலையாட்கள், இயந்திரங்கள், சந்தைப்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்பட்டாலும் மண்ணின் சத்துக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன் மண் வளத்தை நிலைநிறுத்த கவனம் செலுத்துவதில்லை. பயிர் பூச்சிகள், நோய்கள் மற்றம் களைகள் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. மேலும் இயற்கை வளங்கள் முற்றிலும் பயன்படுத்தப்படுவதில்லை.

பல பயிர்த் திட்டம் (Multiple Cropping System)

பல பயிர்த் திட்டம் என்பது இரண்டுக்கு மேற்பட்ட பயிர்களை ஒரே நிலத்தில் ஒராண்டில் அடுத்தடுத்து விளைவித்தலே ஆகும். இது தீவிர சாகுபடி பண்ணையம் எனவும் அழைக்கப்படுகிறது.

இது பயிர் விளைச்சலை அதிகரிக்கின்றது. தீவிர சாகுபடி, கிடைக்கக்கூடிய நிலம், நீர், வேலையாட்கள் மற்றும் பொருளாதாரம் போன்ற வளங்களைப் பொறுத்து செய்யப்படுகிறது.

உ.ம். பருத்தி - பயறு வகைகள்

சாகுபடி முறைகள்

  • பல்பயிர் சாகுபடி
  • தொடர்ச்சியான (அடுத்தடுத்த) சாகுபடி
  • தொடர் (ஒன்றைத் தொட்டு ஒன்று) சாகுபடி
  • மறுதாம்பு (ஒன்றிலிருந்து) சாகுபடி

தொடர்ச்சியான சாகுபடி (Sequential Cropping)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரு நிலத்தில் ஒராண்டில் பயிர் செய்தல் தொடர்ச்சியான சாகுபடி எனப்படுகிறது. இரண்டாவதாக செய்யப்படும் பயிரானது முதல் பயிர் அறுவடை செய்தபிறகு விதைக்கப்படுகிறது. உ.ம். நெல் - நெல் - பருத்தி

தொடர் சாகுபடி (Relay Cropping)

முதல் பயிரின் அறுவடைக்கு முன்பே இரண்டாவது பயிரை விதைத்து செய்யும் சாகுபடிக்கு தொடர் சாகுபடி எனப்பெயர். இதில் முதல் பயிருக்கு இட்ட ஊட்டச்சத்துக்களின் உபரியும், மண் ஈரமும், சத்துக்களும் உடனடியாக பயன்படுத்தப்பட்டு பயிர் விளைச்சலுக்கு துணை புரிகின்றன. உம். நெல் அறுவடைக்கு முன்பாக உளுந்து விதைத்தல் (தஞ்சாவூர் பகுதிகளில் மிதி உளுந்து சாகுபடி)

மறுதாம்பு சாகுபடி (Ratoon Cropping)

அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் அடிக்கட்டைகளை மீண்டும் பயிர் சாகுபடிக்கு அனுமதித்தல் மறுதாம்பு சாகுபடி எனப்படும். உ.ம். தீவனப் பயிர்கள் - விதைத்த 75 நாட்களுக்கு பிறகு தொடர்ச்சியான குறுகிய இடைவெளியில் தொடர்ந்து வெட்டுதல் கரும்பு மறுதாம்பு சாகுபடி

ஊடுபயிர் சாகுபடி (Inter Cropping)

முதன்மை பயிரின் எண்ணிக்கை மற்றும் விளைச்சல் பாதிக்காத வகையில் அதே நிலத்தில் கூடுதலாக மற்றொரு பயிரை விளைவித்தல் ஊடுபயிர் சாகுபடி எனப்படும்.

  • ஒர் அலகு நிலத்தில் ஒரே கால கட்டத்தில் நிலையான விளைச்சல்
  • உயர்ந்த அளவு சத்துக்கள் தேவைப்படும் காலங்களில் பயிர்கள் ஒன்றுக்கொன்று போட்டியிடுதலைத் தவிர்த்தல்
  • தேர்ந்தெடுக்கப்படும் பயிர்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் தன்மையானதாக இருத்தல்
  • கரியமில வாயு (CO), தண்ணிர், ஒளி மற்றும் இடவசதி போன்றவற்றிற்கு அதிக போட்டியைத் தவிர்த்தல்
  • இப் பயிர்கள் வெவ்வேறு வேர் அமைப்பு, ஆழம் போன்றவற்றைக் கொண்டிருத்தல்
  • பயிர் வளர்ச்சி வளங்களான ஒளி, சத்துக்கள் மற்றும் நீர் போன்றவற்றை நல்ல முறையில் பயன்படுத்துதல்
  • களைக் கட்டுப்பாடு
  • நிலையான விளைச்சல் மற்றும் கூடுதல் வருமானம் கிடைத்தல்
  • நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் குறைதல்
  • மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாத்தல்

கலப்பு பயிர் சாகுபடி (Mixed Intercropping)

எவ்வித வரிசை அமைப்பும் பின்பற்றப்படாமல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர்களை ஒரே நேரத்தில் விளைவித்தலை கலப்பு பயிர் சாகுபடி என்கிறோம். இது பெரும்பான்மையாக மானாவாரி சாகுபடியில் பின்பற்றப் படுகிறது. பல்வேறு பயிர்களின் விதைகள் கலக்கப்பட்டு மொத்தமாக விதைக்கப்படுகிறது. இதில் வெவ்வேறு மட்டங்களில் வளரக்கூடிய பயிர்களும், ஒன்றுக்கொன்று உதவி புரியும் பயிர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

உம் : சோளம், கம்பு மற்றும் தட்டைப்பயறு

உழவு (Tillage)

உழவு என்பது கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு மண்ணை விதை விளைச்சலுக்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தி தயார் செய்தலாகும். உழவின் தந்தை என அழைக்கப்படும் திருமிகு ஐட்ரோடெல் என்பவர் மண்ணை பண்படுத்துவதற்கு உழவே தலையாயது என்கிறார்.

பண்படுத்துதல்

பண்படுத்துதல் என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.

உழவின் குறிக்கோள்கள்

  • சிறந்த விதைப்புக்கும், முளைப்புக்கும் ஏற்றவாறு மண்ணைப் பண்படுத்துதல்.
  • பயிர் விளைச்சலுக்கு உகந்தவாறு மண்ணைத் தயார்படுத்துதல்
  • வெற்றிகரமாக களையைக் கட்டுப்படுத்துதல்
  • மழைநீரை உள்வாங்கும் விதமாக மண்ணை உழுதல்
  • உரம் மற்றும் சத்துக்களை மண்ணுடன் நன்கு கலக்கச் செய்தல்
  • மண்ணில் காற்றோட்டம் ஏற்படச் செய்தல்
  • நீர் ஊடுருவும் தன்மையைத் தரப்படுத்துதல்
  • மேல் மண்ணைப் பண்படுத்துதல்

உழவின் வகைகள்

பருவத்தில் உழவு (Seasonal Tillage)

பருவத்தில் உழவு என்பது சரியான பருவ காலத்தில் மழையைத் தொடர்ந்து மண்ணை உழுது பயிர்சாகுபடி செய்வது ஆகும். இது முதன்மை உழவு மற்றும் ஊடுழவு என இரு வகைப்படும்.

முதன்மை உழவு (Primary Tillage)

முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன.

முதன்மை உழவின் வகைகள்

முதல்நிலை உழவு (Primary Tillage)

அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. நாட்டுக் கலப்பை, இரும்பு இறக்கைக் கலப்பை, போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.

இரண்டாம்நிலை உழவு (SecondaryTillage)

முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல், மட்டப்படுத்துதல், கீறிவிடுதல் போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும்.

மூன்றாம்நிலை உழவு (TertiaryTillage)

பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.

ஊடுழவு (InterTillage)

ஊடுழவு என்பது பயிரை பாதிக்காமல், பயிருக்கிடையில் உழவு செய்தலாகும். கொத்துக் கலப்பை கொண்டு மண் அணைத்தல், களையெடுத்தல், உரமிட மண் கோதுதல் போன்றவை ஊடுழவு வகையைச் சார்ந்தவையாகும்.

வறண்ட உழவுமுறை (DryTillage)

வறண்ட நிலப்பரப்பில் பயிர் முளைப்பதற்கு மட்டும் ஈரம் உள்ளபோது செய்யப்படும் உழவு வறண்ட உழவு எனப்படுகிறது. உருளைக் கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இம்முறை கையாளப்படுகிறது.

சேற்றுழவு (Puddling)

நீர் தேங்கி நிற்கும் நிலையில் வயல்களில் உழுவது சேற்றுழவு எனப்படும். நெல் சாகுபடியில் இம்முறையை பயன்படுத்தி நீர் வீணாவதைத் தடுத்து, பருவம் முழுவதும் நீரைத் தேக்கி வைத்து விளைச்சலைப் பெறலாம்.

விளைவிக்கவில்லையென்றாலும் அடுத்த பருவத்திற்காக முன்கூட்டியே மண்ணை பண்படுத்தி வைத்தலே பருவமில்லா உழவு எனப்படும். இது அறுவடைக்குப் பிந்திய உழவு, கோடை உழவு, குளிர்கால உழவு என வகைப்படுத்தப்படுகிறது.

சிறப்பு வகை உழவுகள்

அடிமண் உழவு (Sub soil Tillage)

மண்ணின் மேற்பரப்புக்கு 15 செமீ கீழே கடினமான மண் தட்டை உடைத்து உழவு செய்தல் அடிமண் உழவு எனப்படும்.

மட்டப்படுத்துதல் (Leveling)

வயல்களில் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் முறையே மட்டப்படுத்துதல் ஆகும்.

சுத்தமான உழவு (Perfect Tillage)

நிலத்தின் எந்த ஒரு மூலையிலும் எவ்வித பயிரும் இல்லாமல் சுத்தமாக உழவு செய்தலின் மூலம் களைகள், பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

உழவின் உளவுகள்

களைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், முந்தைய பயிர் சாகுபடியின் எச்ச ஈரத்தில் நேரடியாக விதைத்து சாகுபடி செய்தலே உழவில்லா உழவு எனப்படும்.

மூடாக்கு உழவு

மண்ணின் மேற்பரப்பில் பயிர் இருக்கும்போது, இயந்திரக் கலப்பையைக் கொண்டு 15 செமீ ஆழத்தில் வெட்டி, திருப்பிப் போட்டு உழுது விடுவது மூடாக்கு உழவாகும். இம்முறையில் மண் ஈரம் பாதுகாக்கப்படுவதுடன், களைகளின் வளர்ச்சியும் தடைபடும்.

வேதியியல் உழவு (Chemical Tillage)

களையெடுத்தல் போன்ற இடைப்பட்ட உழவுகளுக்குப் பதிலாக களைக் கொல்லிகளைக் கொண்டு களைகளைக் கட்டுப்படுத்திய பின் மிகக் குறைந்த அளவில் உழவு செய்து சாகுபடி செய்தல் வேதியியல் உழவு எனப்படுகிறது.

நாற்றங்கால் (Nursery)

நாற்றங்கால் என்பது சாகுபடி செய்யப்படும் பயிர்களில் நேரடி விதைப்பு தவிர பிற பயிர்களின் விதைகளை அவற்றின் வளர் சூழலுக்கு ஏற்றவாறு சேற்றுப் பாங்கிலோ, புழுதிப் பாங்கிலோ பாவி தனியாக வளர்த்து, நடவிற்கு பயன்படுத்த பண்படுத்தும் இடமே ஆகும்.

நாற்றங்கால்களின் வகைகள்

நஞ்சை நிலங்களில் குறிப்பாக நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் நாற்றங்கால்கள் மூன்று வகைப்படும். இது தவிர காய்கறி பயிர்களுக்கும் நாற்றங்கால் முறை பின்பற்றப்படுகின்றது.

ஈர நாற்றங்கால் (Wet Nursery)

தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நல்ல பாசன வசதியும், வடிகால் வசதியும் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்கால் பகுதி நன்கு உழப்பட்டு, களைகளோ, முந்தைய பயிரின் கட்டைகளோ இல்லாதவாறு சேற்றுழவு செய்யப்பட்டு சமப்படுத்தியிருத்தல் வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தொழுஉரம் அடியுரமாக இடவேண்டும். இடையே நடப்பதற்காக 50 செ.மீ அளவில் பாதை விட்டு சுற்றிலும் வடிகால் வசதியுடன் 4 முதல் 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நாற்றங்கால் பரப்பு பரிந்துரைக்கப்பட்ட உரமிடப்பட்டிருக்க வேண்டும். (பொதுவாக 10 கிலோ தழைச்சத்து, 5 கிலோ மணிச்சத்து, 5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 2 கிலோ துத்தநாக சல்பேட்). ஊற வைத்து முளைக்கட்டிய விதைகளை சீராக தூவ வேண்டும். அவ்வாறு விதை தூவும் போது நாற்றங்காலில் சுமார் 5 செ.மீ உயரத்திற்கு தண்ணிர் தேங்கியிருக்க வேண்டும். தினமும் காலையில் தண்ணிர் வடிகட்டப்பட்டு பின் பாய்ச்சப்பட வேண்டும். களைகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். பின் சரியான தருணத்தில் நாற்று பறிக்கப்பட்டு வயல்களில் நடவு செய்யப்பட வேண்டும்.

வறள் நாற்றங்கால் / புழுதி நாற்றங்கால் (Dry Nursery)

ஈர நாற்றங்காலைப் போன்றே படுக்கைகள் அல்லது பாத்திகள் அமைக்கப்பட்ட பிறகு, விதைகளை பாவிய பிறகு தண்ணிர் பாய்ச்சுவதற்கு மாற்றாக தூவாளி கொண்டு தெளிக்கப்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாகவும், நாற்றுகள் நன்கு முளைக்கும் வரையிலும் செய்ய வேண்டும்.

பாய் நாற்றங்கால் / டபோக் நாற்றங்கால் (Dapog Nursery)

பருவமழை தாமதமாக பெய்ய நேர்ந்த காலங்களில் குறைந்த வயதில் நாற்றுக்களை நடுவதற்கு பக்குவப்படுத்தப் பயன்படும் நாற்றங்கால்களுக்கு பாய் நாற்றங்கால்கள் என்று பெயர். நல்ல சிமெண்ட்டினாலான தளமிடப்பட்ட பகுதியோ, நெகிழித்தாள் (Plastic paper) விரிக்கப்பட்ட கட்டாந்தரையிலோ விரிப்புகளின் மீது மண் கொட்டப்பட்டு அவை இறுக்கமாக்கப்பட்டு விதைகளை தூவிகை அல்லது மரச்சட்டத்தினாலோ மேலாக அழுத்திவிடும் பொழுது விதைகள் அமிழ்ந்து விடுவதுடன் நீர் பாய்ச்சப்படும் போது நாற்றுக்கள் நன்கு வளரத் தொடங்குகின்றன. 12 முதல் 15 நாட்களில் நாற்றுக்கள் நடவுக்கு தயாராகி விடுகின்றன. மேலும் தொலைவில் உள்ள வயல்களுக்கும் பாய்கள் தகுந்த அளவில் வெட்டி எடுக்கப்பட்டு சுருட்டிக் (வேர் உட்பக்கம் இருப்பதுபோல்) கொண்டு செல்லப்படுகிறது.

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் (Raised Bed Nursery)

தானியங்களில் ராகிக்கு மட்டும் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது. நன்கு புழுதியாக்கப்பட்ட இலகுவான மண்ணில் போதுமான அளவு அகலத்தில் மேட்டுப்பாத்தி (சுமார் 15 செ.மீ ஆழத்திற்கு வயலில் குறியிடப்பட்ட பகுதியை சுற்றிலும் மண்வெட்டியால் தோண்டி எடுக்கப்படும் போது 15 செ.மீ. உயரமுள்ள மேட்டுப்பாத்தி கிடைக்கப்பெறும்) அமைக்க வேண்டும். பின் ராகி விதைகளை பரவலாகத் தூவி நீர் பாய்ச்சி தக்க பருவத்தில் பறித்து நடவு செய்ய வேண்டும். பெரும்பாலான காய்கறிகளும் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால்களில் வளர்க்கப்படுகின்றன.

நவீன நாற்றங்கால்கள் (Special Nursery

காய்கறிகளுக்கென்றே தனியாக நவீன நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. காய்கறிப் பயிர்களில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் பின்பற்றப்பட்டாலும் நீர் பாய்ச்சும்போது மிகை அளவு தண்ணிர் பயன்படுத்தப்பட்டு அதன் பயனுறு அளவு (Use efficiency) குறைகிறது. ஆனால் நவீன நாற்றங்கால்களில் தெளிப்பு நீர்பாசன முறை, குழி அட்டைகள், வளர் ஊடகங்கள் மற்றும் வலைக் கூடங்கள் அமைக்கப்பட்டு நாற்றுக்கள் வளர்க்கப்படுகிறது. அறிவியல் பூர்வமாகவும், குறைந்த அளவு வளங்கள் பயன்படுத்தப்படலும் இணைந்து துல்லிய பண்ணை தத்துவத்தில் தற்போதைய தேவைக்கேற்ப இந்நாற்றங்கால் முறை நவீனமயமாகி உள்ளது.

உழவுக் கருவிகள் (Tillage implements)

ஏதாவது ஒரு வேலைக்குப் பயன்படும் சாதனம் பொதுவாக கருவி எனப்படுகிறது. இக்கருவிகள் கால்நடைகளைக் கொண்டோ விசை இழுவி (Tractor)களைக் கொண்டோ இயக்கப்படுகின்றன. இவ்வகைக் கருவிகள் முதன்மை உழவுக் கருவிகள், இரண்டாம் நிலை உழவுக் கருவிகள் மற்றும் ஊடுழவுக் கருவிகள் என்று அவற்றின் தேவைக்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன.

முதன்மை உழவுக்கருவிகள்

நாட்டுக் கலப்பை (Country Plough)

பழங்காலந்தொட்டு நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் கலப்பை நாட்டுக் கலப்பையாகும். இதில் மரத்தால் ஆன வளைவுத் துண்டும், அத்துடன் இணைக்கத்தக்க அமைப்பிலான கைப்பிடித்துண்டும் (மேழி) கொண்டது. வளைவுத் துண்டின் மையத்தில் துளையிடப்பட்டு நீளமான மரச்சட்டம் இணைக்கப்பட்டிருக்கும்.

இதில் எருதுகள் பூட்டுவதற்கு வசதியாக நுகத்தடி எனப்படும் மரத்தாலான குறுக்குச் சட்டமும் இருக்கும். வளைவுத் துண்டின் கீழ்த்தண்டில் நுனியில் துருத்தியவாறு அமைப்பில் இரும்பாலான பட்டைக்கம்பி பொறுத்தப்பட்டிருக்கும். இது உழவின் போது மண்ணைக் கிழித்து 'V' வடிவ பள்ளத்தை (சால்) ஏற்படுத்தும். நுகத்தடியை முன்னும் பின்னும் நகர்த்தி பிணைத்து ஆழமான உழவு அல்லது மேற்போக்கான உழவைப் பெறலாம்.

முற்படுத்தப்பட்ட இரும்பு கலப்பை (Improved Iron Plough)

நாட்டுக்கலப்பையைப் போன்றே எல்லா வகையிலும் செயல்படக்கூடியது. ஆனால் வளைவுத் தண்டிற்குப்பதிலாக இரும்புச் சட்டங்களைக் கொண்டு கீழ்ப்பகுதி இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் சட்டமும், நுகமும் மரத்தாலானதாக இருக்கும். இது தேய்மானம் அடையாமல் நீண்டநாள் உழைக்கக்கூடியது.

மேலுர் கலப்பை

மரத்தாலான கலப்பைதான். நாட்டுக்கலப்பையை ஒத்தது. ஆனால் கீழ்ப்பகுதியில் இரும்பு கொழுவிற்குப் பதிலாக இரும்புப் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் நஞ்சை நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இரும்பு இறக்கைக் கலப்பை (Mould Board Plough)

உழவில் உந்தி பிளக்கப்படும் மண், திரும்பி கீழே விழுமாறு வளைவாக வார்க்கப்பட்ட இரும்பாலான சட்டங்களுடன் கூடிய கலப்பை இரும்பு இறக்கைக் கலப்பை ஆகும். இது எருதுகளாலும், விசை இழுவிகளாலும் இயக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வார்ப்புச்சட்டம், கைப்பிடிச் சட்டம், கொழு மற்றும் முன்னோடும் சக்கரம் ஆகியன உள்ளன. இவை இயல்பான நாட்டுக் கலப்பை உழவின் ஆழத்தை விட ஆழமாக அதாவது சுமார் 30 செ.மீ ஆழத்திற்கு உழவை ஏற்படுத்துகின்றன.

சட்டிக்கலப்பை (Disc plough)

சட்டிக் கலப்பை அல்லது தட்டுக்கலப்பை என்பது சட்டிகள் போன்ற கடின இரும்பாலான தட்டுகளால் மண்ணை புரட்டிப்போடும் வகையில் உழவு செய்யப் பயன்படுவது. இது விசையிழுவியால் மட்டும் இயக்கக்கூடியது. இந்தத் தட்டுக்கள் 60 முதல் 90 செ.மீ விட்டமுடையன. ஒவ்வொரு தட்டும் தனித்தனியான அச்சுக்களில் சுழலும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டிக் கலப்பையை இறுகிய மண் பரப்பு, கடின காய்ந்த நிலம், கற்கள் நிறைந்த கரடுமுரடான நிலம், களைகள் மண்டிய நிலம் மற்றும் ஆழ உழவு தேவைப்படும் நிலம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

பின் திருப்பத்தக்க சட்டிக் கலப்பை (Reversible Disc Plough)

பின் திருப்பத்தக்க வெட்டியெடுக்கப்படும் மண்ணை அதற்கு முந்தைய உழவின் பள்ளத்தில் இட்டு நிரப்பும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் உழவுக்கு பின் வயல் நன்கு சமப்படுத்தப்பட்டது போல தோன்றும்.

திருப்புக் கலப்பை (TurnWrest Plough)

இதுவும் ஒருவகையான பின் திருப்பத்தக்க கலப்பைதான். ஆனால் சட்டிக்கு பதிலாக இருக்கும் வார்ப்புச் சட்டத்தை மையத்திற்கு இடமாகவும் இருக்கிறது.

கொத்துக்கலப்பை

இவ்வகைக் கருவிகள் 20-30 செ.மீ நீளமுடையதான தரையை பிளக்கும் தன்மை உடைய கொழுக்களைக் கொண்டிருக்கும். இவை உறுதியான சட்டத்தினால் பிணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கடினமான மேற்பரப்பையும் சுமார் 20 செ.மீ ஆழத்திற்கு உழமுடியும். இவ்வகை கலப்பைகள் கடினமான சட்டிக் கலப்பை போன்றவற்றால் பெயர்த்துப் போடப்பட்ட பெரிய கட்டிகளை உடைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பலுகு (Harrows)

இது கொத்துக் கலப்பை போன்றே ஆனால் அதிக அளவில் கொத்துக்களைக் கொண்டதாக இருக்கும். இவற்றின் கொத்துக்கள் 5 முதல் 8 செ.மீ இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் கொத்துக் கலப்பையினால் உடைபடாமல் விடுபட்ட சிறு கட்டிகளை உடைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுமார் 10 செ.மீ அளவிலான ஆழத்தில் உழவு செய்கின்றன.

ஊடுழவுக்கருவிகள்

ஜப்பானிய சுழல் களைவெட்டி (Japanese Rotary Weeder)

இரண்டு சிறிய பற்களைக் கொண்ட உருளைகள் ஒரு சட்டத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு உருளையிலும் 5 பற்களைக் கொண்ட கத்திகள் பொருத்தப்பட்டிருக்கும். இக்கருவியை கைகளால் முன் பின்னாகத் தள்ளி இயக்கும் போது (நெல் வயல்களில்) களைகள் சிறந்த முறையில் அழிக்கப்படுகின்றன. மேலும் இவை வெட்டப்பட்ட களைகளை மிதித்து உழுது விடுவதால் அவை மக்கி மண்ணுக்கு உரமாகின்றன.

கூம்புக் களைவெட்டி (Cone Weeder)

இதில் இரண்டு உருளைகளுக்கு பதிலாக கூம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இவையும் நெல்வயலில் பயன்படக்கூடியதாகும்.

நீளக்கைப்பிடி களைவெட்டி

பயிர்களில் சல்லிவேர் தொகுப்புடைய களைகளை அழிக்கப் பயன்படும் கருவியாகும். மண்ணின் ஈரப்பதம் 8-10 சதம் இருக்கும் போது மானாவாரி மற்றும் தோட்டக்கால் பயிர்களில் பயன்படுத்தலாம். இது கையால் இயக்கக் கூடியது. இவை இரண்டு வகைப்படும்.

  • பல்வடிவம்
  • நட்சத்திர சக்கரை வகை

சிறப்பு வகைக் கருவிகள் (Special Implements)

உழவுத் தொழிலில் பயன்படும் சில சிறப்பு வகை கருவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பல்பயன் கருவிகள் தூக்கி - வேளாண் உபகரணங்களை எடுத்துச் செல்லப் (Multipurpose toolbar/carrier) பயன்படுகிறது.
  • நிலம் மட்டப்படுத்தும் கருவிகள் (Land levelling implements) மேல்மண் செதுக்கி - நிலத்தை மட்டப்படுத்தும் போது மண்ணை (Buck scrapper) தொலைவில் கொண்டு செல்ல பயன்படும்.
  • மட்டப்பலகை (Leveling board) - புழுதிக் காட்டில் மண்ணை மட்டப்படுத்துவதற்கு பயன்படும்
  • பரம்பு சேற்று வயலில் வயலை மட்டப்படுத்துவதற்கு பயன்படும் பார்கலப்பை - கரும்பு, பருத்தி, காய்கறிகள் போன்ற (Ridge plough) பயிர்களுக்கான பார்கள் அமைக்கப் பயன்படுகிறது.
  • வரப்புக் கலப்பை (Bundformer) - உயரமான பார்கள் (வரப்புகள்) அமைக்கப் பயன்படுகிறது
  • பாத்தி - வரப்பு அமைக்கும் - குறிப்பிட்ட இடைவெளியில் பாத்தியும் அவற்றில் (Bed-furrow former) பார் வரப்பும் அமைக்கப் பயன்படும்
  • உருளைகள் (Rollers) – மண் இறுக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
5.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top