பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை

தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை (Climate of Tamilnadu) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பயிர் சாகுபடியில் தட்பவெப்பநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட பயிரின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விளைபொருளின் தரம் ஆகியவற்றை அப்பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலையே நிர்ணயிக்கிறது. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் தட்பவெப்ப நிலையை ஆதாரமாகக் கொண்டே அமைந்துள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள் யாவும், பெருமழை மற்றும் கொடிய வறட்சியின் காரணமாகவே ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பகுதியின் காலநிலையே அப்பகுதியின் தாவர இன வகைகளையும், அதைப் பின்பற்றிய வேளாண்மை முறைகளையும் தீர்மானிக்கிறது. ஒரு பகுதியில் தோன்றுகின்ற மண் வகைகளும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே அமைகிறது; ஏனெனில் தட்பவெப்ப நிலையினைப் பொறுத்து ஒரே தாய்ப் பாறையில் இருந்து வெவ்வேறு விதமான மண் வகைகள் தோன்றக்கூடும்.

சாதகமற்ற தட்பவெப்ப நிலையின் காரணமாகப் பெருமளவில் பூச்சிகள் மற்றும் நோய்கள் தோன்றி சாகுபடி செய்யப்படும் பயிரை பாதிக்கலாம். தட்பவெப்பநிலை பற்றிய அறிவு ஒரு சிறந்த மூலதனமாகும். ஆகவே வேளாண் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனது பகுதியில் நிலவுகின்ற தட்பவெப்ப நிலையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

வானிலை (Weather)

ஒரிடத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலவும் காற்றின் ஈரப்பதம், காற்றின் அழுத்தம், காற்றின் திசை வேகம், மழையளவு மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றைக் குறிப்பது வானிலை எனப்படும்.

தட்பவெப்பநிலை (Climate)

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டு முழுவதும் நிலவும் வானிலையின் சராசரியே அப்பகுதியின் தட்பவெப்பநிலை எனப்படும். பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணிகளான நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய மூன்றும் தட்பவெப்பநிலையுடன் தொடர்புடையவையே. எனவே வானிலையைப் பொறுத்தே பயிரின் வளர்ச்சி அமைகிறது. மேலும் வானிலை என்பது அடிக்கடி மாறும் தன்மை உடையது.

நுண்வானிலை (Microclimate)

நுண்வானிலை என்பது தாவரத்திற்கு அருகாமையில் உள்ள வானிலையைக் குறிக்கும். பயிரின் வேர்ப்பகுதியில் இருந்து, தண்டின் நுனிபாகம் வரை நிலவும் வானிலையே பயிரின் நுண்வானிலை எனப்படும்.

தட்பவெப்ப நிலையின் முக்கியத்துவம்

ஒரு குறிப்பிட்ட பட்டத்தில் விதைப்பது நல்ல மகசூலைக் கொடுக்கிறது. மழையற்ற, சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள நாட்களில் பயிர்கள் அறுவடைக்கு வரும்படியாக நடவு அல்லது விதைப்பு செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் அறுவடை செய்வதற்கும், தானியத்தை உலர்த்தி, பக்குவப்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும். பருவ நிலையைப் பற்றிய விவரங்கள் தெரிந்து இருப்பது, பூச்சி மற்றும் நோய்களுக்கெதிரான தடுப்பு நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். நிலவும் வானிலையை அறிந்து உரமிடுவது சிறந்தது; உதாரணமாக பெருமழைக்கு முன்னர் உரமிட்டால், அது மழைநீரில் கலந்து வீணாகும். கதிரில் மணி பிடிக்கும் காலத்தில் மழைபெய்தால், தானியங்கள் பதராகும். முதிர்ந்த தானியங்கள் முளைத்து சேதமடையும். மேலும் புதிய இரகங்களை சாகுபடி செய்ய தட்பவெப்பநிலை பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

வானிலை முன்னறிவிப்பின் முக்கியத்துவம்

பயிர் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் வானிலை 50 சதம் வரை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. மழை பற்றிய வானிலை முன்னறிவிப்பு, ஒரு பகுதியின் பயிர் உற்பத்தியை நிர்ணயித்து நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. ஒரு பகுதியில் அதிக மழை பெறும் போது வெள்ள நிவாரணப் பணிகளையும், குறைந்த மழை பெறும் போது நீர் சேமிப்பு முறைகளையும் திட்டமிடலாம். தக்க தருணத்தில் செய்யப்படும் சரியான வானிலை முன்னறிவிப்பு நிச்சயமான உற்பத்திக்கு வழிவகை செய்கிறது. சாதகமற்ற வானிலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படும் இழப்புகளை வானிலை முன்னறிவிப்பால் குறைக்கலாம். வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதல்கள் பற்றி முன்னறிவிப்பு செய்து இழப்பைத் தவிர்க்கலாம். வானிலை முன்னறிவிப்பினைப் பின்பற்றி நீர் பயன்பாடு பற்றித் திட்டமிடலாம்.

தமிழ்நாட்டின் பருவ காலங்கள் (Seasons of Tamil Nadu) ஒரு இடத்தில் நிலவும் தட்பவெப்பநிலையைப் பொறுத்தே வேளாண் பருவ காலங்கள் அமைகின்றன.

தமிழ்நாட்டில் இது நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 1. பனிக்காலம் ஜனவரி - பிப்ரவரி
 2. கோடைக்காலம் - மார்ச் - மே
 3. தென்மேற்குப் பருவகாலம் - ஜூன் - செப்டம்பர்
 4. வடகிழக்குப் பருவகாலம் அக்டோபர் - டிசம்பர்

இப்பருவங்களைப் பொருத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிர் இரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிரிடப்படுகின்றன.

தமிழ்நாட்டின் முக்கிய பட்டங்கள் மற்றும் பயிர்கள்

சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)

 • நெல்,
 • சோளம்,
 • கம்பு,
 • ராகி,
 • துவரை,
 • பச்சைப்பயறு,
 • தட்டைப்பயறு,
 • அவரை,
 • நிலக்கடலை,
 • கரும்பு,
 • சூரியகாந்தி

ஆடிப்பட்டம் (ஜூன்-ஜுலை)

 • நெல்,சோளம்,
 • கம்பு,
 • ராகி,
 • மக்காச்சோளம்,
 • தினை,
 • சாமை,
 • வரகு,
 • துவரை,
 • உளுந்து,
 • பச்சைப்பயறு,
 • தட்டைப்பயறு,
 • அவரை,
 • மொச்சை,
 • சோயாமொச்சை,
 • நிலக்கடலை,
 • எள்,
 • ஆமணக்கு,
 • சூரியகாந்தி,
 • தென்னை,
 • கரும்பு,
 • காய்கறிகள்.

புரட்டாசிப்பட்டம் (செப்-அக்டோபர்)

 • நெல்,
 • கோதுமை,
 • கம்பு,
 • ராகி,
 • மக்காச்சோளம்,
 • குதிரைவாலி,
 • பனிவரகு,
 • துவரை,
 • உளுந்து,
 • பச்சைப்பயறு,
 • தட்டைப்பயறு,
 • அவரை,
 • சோயாமொச்சை,
 • பருத்தி

ஐப்பசிப்பட்டம் (அக்-நவம்பர்)

 • கோதுமை,
 • கொள்ளு,
 • கொண்டைக்கடலை,
 • குசும்பா

கார்த்திகைப்பட்டம் (நவம்பர் - டிசம்பர்)

 • எள்,
 • சூரியகாந்தி

மார்கழிப்பட்டம் (டிசம்பர் - ஜனவரி)

 • ராகி,
 • நிலக்கடலை,
 • சூரியகாந்தி,
 • தென்னை,
 • கரும்பு

தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி)

 • நெல்,சோளம்,
 • மக்காச்சோளம்,
 • பருத்தி,
 • கரும்பு,
 • காய்கறிகள்

மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்)

 • சோயாமொச்சை,
 • நிலக்கடலை,
 • எள்

தமிழ்நாட்டின் வேளாண் தட்பவெப்ப மண்டலங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள்

பெறப்படும் மழையளவு, நீர்ப்பாசன வசதி, மண்வளம், பயிரிடப்படும் பயிர்இரகங்கள் ஆகியவற்றைப் பொருத்து தமிழ்நாடு ஏழு வேளாண் தட்பவெப்பநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அ. வடகிழக்கு மண்டலம் (North Eastern Zone)

திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகள் இம்மண்டலத்தில் அடங்கும். இம்மண்டலத்தில் திரூர்குப்பம், விரிஞ்சிபுரம், திண்டிவனம், விருத்தாச்சலம், குடியாத்தம், கடலூர், பாலூர், சென்னை, வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

ஆ வடமேற்கு மண்டலம் (North Western Zone)

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் இம்மண்டலத்தில் உள்ளன. இப்பகுதியில் ஏத்தாப்பூர், பையூர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

இ. மேற்கு மண்டலம் (Western Zone)

ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆகியவை இம்மண்டலத்தில் உள்ளன. இப்பகுதியில் பவானிசாகர், ஆழியார் நகர், தடியன் குடிசை, வாகரை, கொடைக்கானல், வைகை அணை ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

ஈ. காவிரி டெல்டா மண்டலம் (Cauvery Delta Zone)

இம்மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, சிதம்பரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கும். ஆடுதுறை, பட்டுக்கோட்டை, காட்டுத்தோட்டம், வேப்பங்குளம், சிறுகமணி, வம்பன் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

உ. தெற்கு மண்டலம் (Southern Zone)

அனைத்து வேளாண் தட்பவெப்ப நிலை மண்டலங்களிலும் இது மிகப்பெரியதாகும். இதில் சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் போன்றவை அடங்கும். பரமக்குடி, அம்பாசமுத்திரம், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, இராமநாதபுரம், ஶ்ரீவில்லிப்புத்தூர், செட்டிநாடு போன்ற இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

ஊ. அதிக மழை பெறும் மண்டலம் (High Rainfal Zone)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதிகள் இம்மண்டலத்தில் உள்ளன. இம்மாவட்டம் மற்ற மாவட்டங்களிலிருந்து வேறுபட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டதுடன், அதிக அளவு மழையையும் பெறுகிறது. திருப்பதிசாரம், பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

எ.மேற்குத் தொடர்ச்சிமலை மண்டலம் (Western Ghats Zone)

நீலகிரி, சேர்வராயன்மலை, ஏலகிரி, கொல்லிமலை, பச்சைமலை, ஆனைமலை, பழனிமலை, பொதிகைமலை ஆகியவை இதில் அடங்கும். ஏற்காடு, உதகமண்டலம், கூடலூர் ஆகிய இடங்களில் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

ஒரு பயிர் முளைப்பதிலிருந்து அறுவடை வரை உள்ள அனைத்து வளர்ச்சி கால கட்டங்களிலும் பின்வரும் காரணிகள் பெருமளவில் மாறுபாடுகளை தோற்றுவிக்கின்றன.

தட்பவெப்ப நிலைக் காரணிகள் (Climatic Factors)

வெப்பம், காற்று, மழை மற்றும் ஈரப்பதம் போன்ற தட்பவெப்பநிலைக் காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள் பயிர் மகசூலை நிர்ணயம் செய்கின்றன.

வெப்பம் (Temperature)

பயிர் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 10-40°C ஆகும். விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வெப்பம் பெரும் பங்கு வகிக்கிறது.

காற்று (Wind)

தாவரங்களின் வளர்ச்சி மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு காற்று மிகவும் அவசியமாகும். காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. உலர்ந்த காற்று நீராவிப்போக்கை அதிகரிக்கிறது. அதிக திசை வேகத்துடன் வீசும் காற்று பயிருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.

மழை (Rainfall)

தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஈரத்தை மழை கொடுக்கிறது. மண்ணில் தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்துகிறது. ஆனால் அதிக மழை மண் அரிமானத்தை ஏற்படுத்தும்.

ஈரப்பதம் (Humidity)

காற்றில் ஈரப்பதம் குறையும்போது பயிர்வளர்ச்சி குறையும். ஆனால் அதிக ஈரப்பதம் பயிரில் பூசணங்களின் தாக்குதலை ஊக்குவிக்கிறது.

மண்காரணிகள் (Soil Factors)

மண்ணின் இயல்பு, மண்ணின் அமைப்பு மற்றும் மண்ணில் உள்ள இடைவெளி ஆகியவை முக்கிய மண் காரணிகளாகும்.

மண்ணின் இயல்பு (Soil Texture) : மண்ணில் உள்ள களி சதத்தைப் பொருத்து மண்ணை வகைப்படுத்தலாம். மணற்பாங்கான மண் நீரை குறைவாகவே பிடித்து வைத்துக் கொள்கிறது; வண்டல்மண் பயிர்சாகுபடிக்கு மிகவும் ஏற்றது; களிமண் பிசுபிசுக்கும் தன்மை கொண்டது.

மண்ணின் அமைப்பு (Soil Structure) : மண்ணில் உள்ள இம்மி தொகுதிகளின் அமைப்பே மண்ணின் அமைப்பாகும். நல்ல பயிர் வளர்ச்சிக்கு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் மண் அவசியம். தட்பவெப்ப நிலை, சாகுபடி வேலைகள், மண்ணில் உள்ள அயனிகளின் செறிவு, நுண்ணுயிரிகள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிர்கள் போன்றவை மண்ணின் அமைப்பை பாதிக்கின்றன.

மண் இடைவெளி (Pore Space) : மண் இம்மிகளுக்கு இடையில் உள்ள இடம் மண் இடைவெளி எனப்படும். இந்த இடைவெளியில் காற்று மற்றும் நீர் இருக்கும். மண் இடைவெளி மணலில் மிகக்குறைவாகவும் (30 சதம் வரை), களிநிலத்தில் அதிகமாகவும் (50-60 சதம் வரை) இருக்கும்.

உயிரியல் காரணிகள்

நிலவாழ் உயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்றவை பயிர் வளர்ச்சியை பாதிக்கும் உயிரியல் காரணிகள் ஆகும். முதல் மழையின்போது வெளிவரும் மண்வாசனைக்கு ஆக்டினோமைசீட்டுகள் எனும் நிலவாழ் நுண்ணுயிரிகளே காரணமாகும்.

உயிரியல் காரணிகள் மண்ணின் அமைப்பை அபிவிருத்தி செய்து நிலைபெறச் செய்கின்றன. மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன. தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அங்ககப் பொருட்களை நிலத்தில் மக்கச் செய்து பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

உ.ம். மண்ணில் காற்றோட்ட வசதி மற்றும் மண் வளம் அதிகரித்தல் - மண்புழு மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்துதல் – பாக்டீரியாக்கள் அங்ககப் பொருட்களை மக்கச்செய்தல் – ஆக்டீனோமைசிட்டுகள் பயிர்வளர்ச்சியை நிர்ணயிப்பதில் வானிலை பெரும்பங்கு வகிக்கிறது. எனவே விதை விதைப்பு முதல் விளைபொருள் அறுவடை வரை வானிலை முன்னறிவிப்பினை உபயோகித்து பயன்பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top