பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாட்டின் மண் வளம்

தமிழ்நாட்டின் மண் வளம் (Soil Fertility of Tamilnadu) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

"மண்ணின்றேல் மனித சமுதாயம் இல்லை" என்பது திண்ணம். ஏனெனில் மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான். தாவர வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் அங்ககப் பொருட்கள் அடங்கிய பல கண்டங்களாலான (horizon) அமைப்பே மண்ணாகும். ஒவ்வொரு மண் அடுக்கும் பெளதீக, ரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாறுபடுகின்றது.

மண் அடுக்கில் கண்ணுக்குத் தெரியும் பகுதி மேல் மண் எனவும், தாவரத்தின் வேர் மண்டலத்தை தாங்கி, சத்துக்களைக் கொடுக்கும் பகுதி அடிமண் எனவும் அழைக்கப்படுகிறது.

மண்ணின் பணிகள்

 1. செடிகள் ஊன்றி நிற்க ஊடகமாக செயல்படுகிறது.
 2. தாவர வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைத் தேக்கி வைத்து அளிக்கிறது.
 3. வேர்கள் சுவாசிக்க காற்றோட்டத்தை அளிக்கிறது.
 4. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நீரினை சேமித்து வைக்கிறது.
 5. வேர் மண்டலத்தில் சாதகமான வெப்பநிலையை பராமரிக்கிறது.

மண் உருவாகக் காரணங்கள் (Soil Formation)

பெளதீக, இராசாயன மற்றும் உயிரியல் காரணிகளின் கூறுகளான தட்பவெப்பநிலை மாற்றம், காற்றோட்டம், நீரோட்டம், தாவர வளர்ச்சி, உயிரிகளின் செயல்கள் ஆகியவற்றால் பாறைகள் சிதைந்து மண் உருவாகிறது.

பெளதீக காரணிகள் (Physical Agents)

வெப்பத்தினால் பாறைகள் விரிவடைந்து சுருங்குவதால் தகர்தல் ஏற்படுகிறது. நீரோட்டங்கள் மற்றும்நீர் உறைதல் ஆகியவற்றால் பாறையில் அரிமானம் ஏற்படுகிறது. மேலும் தாவரங்களின் வேர்பாகங்கள் பாறைகளில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. மேற்கூறிய செயல்களினால் பாறைகள் சிதைவுற்று அச்சிதைவுகளிலிருந்து மண் உண்டாகிறது.

இராசயன காரணிகள் (Chemical Agents)

நீர்ப்பகுப்பு, கார்பனீகரணம் மற்றும் ஆக்ஸிகரணம் ஆகியவற்றின் காரணமாக தாதுப்பொருட்களில் வேதி மாற்றம் ஏற்பட்டு பாறைகள் சிதைவடைந்து மண் உண்டாகிறது.

உயிரியல் காரணிகள் (Biological Agents)

மண்ணில் வாழும் உயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகள் தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணில் சேர்த்து மண் உருவாக்கத்தில் உதவுகிறது.

மண் அடுக்குகள் (Soil Profile)

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து அடியில் உள்ள தாய்ப்பாறை வரை பல்வேறு விதமான படிவுகளுக்கு மண் கண்டங்கள் என்று பெயர்.

மண் அடுக்கைப் புரேஃபைல் (Profile) என்று சொல்வர். இது O, A, B, C மற்றும் R என ஐந்து கண்டங்களாக பிரிக்கப்படுகிறது. இதில் O, A மற்றும் B பயிர் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்கிறது.

தமிழ்நாட்டின் மண் வகைகளும், காணப்படும் இடங்களும்

தமிழ்நாட்டில் ஐந்து முக்கிய மண் வகைகள் உள்ளன. அவை செம்மண் (62 சதம்), வண்டல் மண் (16 சதம்), கரிசல் மண் (12 சதம்), சரளை மண் (3 சதம்) மற்றும் மணற்சாரி மண் (7 சதம்) ஆகும்.

செம்மண் (Red soil)

 • திருச்சி,
 • மதுரை,
 • இராமநாதபுரம்

செந்தோமிலிமண் (Red loamy Soil)

 • செங்கல்பட்டு,
 • வடஆற்காடு,
 • தென்ஆற்காடு,
 • சேலம்
 • திருச்சிராப்பள்ளி

ஆழமற்ற செம்மண் (Shalow red soil)

 • கோவை,
 • மதுரை

ஆழமான செம்மண் (Deep red loam)

 • கோவை,
 • மதுரை,
 • இராமநாதபுரம்,
 • திருநெல்வேலி
 • கன்னியாகுமரி

செம்மண் மற்றும் கரிசல்

 • கோயம்புத்தூர்,
 • மதுரை,
 • இராமநாதபுரம்
 • திருநெல்வேலி

வண்டல் மண்

 • தஞ்சாவூர்,
 • திருவாரூர்,
 • நாகப்பட்டினம்,
 • விழுப்புரம்,
 • தூத்துக்குடி,
 • திருச்சிராப்பள்ளி,
 • கடலூர்
 • கன்னியாகுமரி மாவட்டம்

கரிசல் மண்

 • இராமநாதபும்,
 • புதுக்கோட்டை,
 • திருச்சிராப்பள்ளி,
 • கடலூர்
 • தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், நீலகிரி மாவட்டம் தவிர

செஞ்சரளை மண் (Laterite)

 • செங்கல்பட்டு,
 • காஞ்சிபுரம்,
 • திருவள்ளூர்,
 • கன்னியாகுமரி,
 • தஞ்சாவூர்,
 • புதுக்கோட்டை
 • நீலகிரி மலைப்பகுதிகள்

மணற்சாரிமண் (Red Sandy soil)

 • கடலூர்,
 • காஞ்சிபுரம்,
 • வேலுர்,
 • சேலம்,
 • தர்மபுரி,
 • இராமநாதபுரம்,
 • திருச்சி,
 • புதுக்கோட்டை,
 • தஞ்சாவூர்,
 • சிவகங்கை,
 • விருதுநகர்,
 • மதுரை,
 • திண்டுக்கல்,
 • நாகப்பட்டினம்,
 • தூத்துக்குடி,
 • திருநெல்வேலி,
 • கோவை,
 • திருப்பூர்
 • நீலகிரி

மண்ணின் பண்புகள்

மண்ணின் பண்புகளை கீழ்க்கண்டவாறு மூவகையாகப் பிரிக்கலாம்.

 1. பெளதீகப் பண்புகள்
 2. இரசாயனப் பண்புகள்
 3. உயிரியல் பண்புகள்

மண்ணின் பண்பானது துகள் அளவு, மண் நயம், மண் அமைப்பு, மண் அடர்த்தி, பரும அடர்த்தி, துகள் இடைவெளி, மண்ணின் நிறம், மண்ணின் வெப்பம், நிலக்காற்று, நிலநீர், நீர்பிடிப்புத்திறன், நிலமட்கு மற்றும் மண்ணில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

பெளதீகப் பண்புகள்

துகள் அளவு (Particle Size):

மண் துகள்களின் குறுக்களவை பொருத்து மண் துகள்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

மண் நயம் (Soil Texture):

மண்ணிலுள்ள துகள் வகைகளின் விகித அடிப்படையில் மணல், களிமண், வண்டல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். துகள் வகைகளின் சதவீத மாறுபாட்டிற்கேற்ப உழவு முறை, நீர்ப்பிடிப்புத்திறன் மற்றும் ஊட்டத்திறன் ஆகியவை மாறுபடும். மணல் துகள்கள் 85 சதத்திற்கு மேல் இருந்தால் அது மணற்சாரி மண் எனப்படும். இது அதிக காற்றோட்டம் கொண்டதாகவும், ஈரத்தை தாங்கி நிற்கும் திறனற்றதாகவும், அங்ககப்பொருட்கள் விரைவில் சிதையும் தன்மை கொண்டதால் வளம் குன்றியதாகவும் இருக்கும். களிதுகள்கள் 40 சதத்திற்கு மேல் கொண்டது களிமண்ணாகும். இதில் ஈரம் காக்கும் தன்மை அதிகமாகவும், காற்றோட்டம் குறைவாகவும் இருக்கும். களிமண், மணற்சாரி மண்ணைக் காட்டிலும் வளமுடையதாகும். களிதுகள்கள் 10-25சதம் மற்றும் வண்டல் 30-50சதம் கொண்ட மண் வண்டல் மண் எனப்படும். இது பயிர் சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும்.

மண் அமைப்பு (Soil Structure)

மண்ணிலுள்ள இம்மித்தொகுதிகளின் அடுக்கே மண்ணின் அமைப்பு ஆகும். மண் இம்மிகள் தனியாகவோ அல்லது திரளாகவோ காணப்படும். மண்ணின் தன்மையையும், குணங்களையும் மண்ணின் அமைப்பே உறுதி செய்கிறது. மண் அமைப்பு உருளை, பட்டகம், கனசதுரம், தகடு, மணி மற்றும் நுண்ணுருண்டை போன்றவையாகும்.

மண் அடர்த்தி (Particle Density)

ஒரு கன செ.மீ. அளவுள்ள மண் துகள்களின் நிறையை கிராமில் குறிக்கும் எண் மண் அடர்த்தியாகும். இது சராசரியாக 2.65 மெகா கிராம்/கன மீ ஆக இருக்கும்.

பரும அடர்த்தி (Bulk Density)

ஒரு கன செ.மீ. உலர்ந்த மண்ணில் உள்ள துகள் மற்றும் துகள் இடைவெளி ஆகியவற்றின் நிறையை கிராமில் குறிக்கும் எண் பரும அடர்த்தி எனப்படும்.

மண் துகள்களின் இடைவெளியின் கன அளவை கொண்டே மண்ணின் காற்றோட்டம், நீர்பிடிப்பு திறன், நீர் கடத்தும் திறன் போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இது சராசரியாக 133 மெகா கிராம் /கன. மீ ஆக இருக்கும்.

துகள் இடைவெளி (Pore Space)

மண் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி துகள் இடைவெளி ஆகும். இது துகள்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பொறுத்துமாறுபடும். துகள் இடைவெளியில் காற்றும், நீரும் இருக்கும். துகள் இடைவெளி மணலில் மிகக் குறைவாகவும், களி மற்றும் வண்டல் மண்ணில் அதிகமாகவும் இருக்கும்.

மண்ணின் நிறம் (Soil Colour)

மண்ணிலுள்ள கனிமங்களின் தன்மை மற்றும் அளவைப் பொறுத்து மண்ணின் நிறம் மாறுபடும். மக்கிய அங்ககப்பொருள் நிறைந்த மண் கருமை நிறத்திலும், இரும்பபுச்சத்து நிறைந்த மண் சிவப்பு நிறத்திலும், நீரேற்றம் பெற்ற இரும்புச் சத்துள்ள மண் மஞ்சள் நிறத்திலும், வடிகால் வசதி குறைந்த மண் நீலநிறத்திலும் இருக்கும்.

மண்ணின் வெப்பம் (Soil Temperature)

மண்ணின் வெப்பநிலை விதை முளைப்பதற்கும், பயிர் வளர்ச்சிக்கும் அவசியமாகும். மேலும் மண்ணின் இரசாயன மற்றும் உயிரியல் மாற்றங்களுக்கு மண்ணின் வெப்பம் அவசியமாகின்றது. மண்ணின் வெப்பமானது மண்ணின் நயம், அமைப்பு, நிறம், அங்ககப்பொருட்களின் அளவு, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

நிலநீர் (Soil Water)

தாவரங்களுக்குத் தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றை நிலநீரே அளிக்கின்றது. மேலும் மண்ணில் போதிய அளவு ஈரம் இருந்தால்தான் வேர் தூவிகள் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை கிரகித்துக் கொள்ளும். நிலநீர் மூன்று விதங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. அவை நுண்புழைநீர் (Capilary Water), உறிஞ்சு நீர் (Hygroscopic Water) மற்றும் புவிஈர்ப்பு விசை (Gravitational Water) நீராகும். இதில் நுண்புழை நீர் மட்டுமே தாவரங்களால் பயன்படுத்தக் கூடியது.

நீர் பிடிப்புதிறன் (Water Holding Capacity)

மண்ணிலுள்ள புவி ஈர்ப்பு விசை நீர் வடிந்த பின்னர் துகள் இடைவெளியில் தேங்கி இருக்கும் நீரின் அளவே அம்மண்ணின் நீர்பிடிப்பு திறன் எனப்படும். மண் நயம், துகள் அமைப்பு, மண் கண்டத்தின் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து நீர் பிடிப்பு திறன் மாறுபடுகிறது. களி மற்றும் அங்ககப்பொருட்கள் நிறைந்த மண்ணின் நீர் பிடிப்பு திறன் அதிகமாகவும், மணற்பாங்கான மண்ணின் நீர் பிடிப்பு திறன் குறைவாகவும் இருக்கும்.

நிலக்காற்று (Soil Air)

மண் துகள்களுக்கு இடையில் உள்ள காற்று நிலக்காற்றாகும். இது வேர்களின் சுவாசத்திற்கு மிக அவசியம். மண் துகள்களுக்கிடையே உள்ள இடைவெளியில் நீரின் அளவு அதிகரிக்கும் பொழுது நிலக்காற்றின் அளவு குறையும். நிலநீர் மற்றும் நிலக்காற்று சமஅளவில் மண் இடைவெளிகளில் இருப்பது பயிர் வளர்ச்சிக்கு உகந்தது.

நிலமட்கு (Soil Humus)

மண்ணிலுள்ள அங்ககப் பொருட்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் போது தோன்றும் பொருள் நில மட்காகும். நில மட்கின் அளவைப் பொறுத்து மண்ணின் ஊட்டத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் மாறுபடுகிறது.

இரசாயணப்பண்புகள்

கார அமிலநிலை (pH)

மண்ணிலுள்ள ஹைட்ரஜன் அயனிகளின் செறிவே அதன் கார அமில நிலை pH எனப்படும். இது 0 - 14 என்ற அளவுகோளில் குறிப்பிடப்படுகிறது. 0 - 6.5 வரை அமில நிலை எனவும், 6.5 - 7.5 வரை நடுநிலை எனவும், 7.5 - 8.5 உவர் நிலையாகவும் > 8.5 களர்நிலையாகவும் கருதப்படுகிறது. நடுநிலையிலுள்ள மண்ணில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும் நிலையில் இருப்பதால் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

மின்கடத்து திறன் (Electrical Conductivity)

மண்ணிலுள்ள மொத்த கரையக்கூடிய உப்புக்களின் அளவு மின் கடந்து திறன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இது மண்ணின் உவர் தன்மையை நிர்ணயிக்கிறது. மின் கடத்தும் திறன் (dsm") பண்பு 0-1.0 சாதகமானது 1.1 - 3.0 விதை முளைப்புத்திறனை பாதிக்கும் > 3.1 பயிர் வளர்ச்சியை பாதிக்கும்

அயனிப் பரிமாற்றம் (lon Exchange)

களி கூழ்மங்கள் அவற்றிற்கு வெளியே உள்ள நேர் அல்லது எதிர் மின்னேற்றம் பெற்ற அயனிகளை கிரகித்துக் கொண்டு தன்னகத்தே உள்ள நேர் அல்லது எதிர் அயனிகளை வெளியிடும் செயலுக்கு அயனிப் பரிமாற்றம் என்று பெயர்.

மான்ட்மோரில்லோனைட் (Montmorillionite)

களி கூழ்மம் அதிகமுள்ள மண்ணில் நேர் அயனிப் பரிமாற்றம் அதிகமாகவும், இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடு கூழ்மம் அதிகம் உள்ள மண்ணில் எதிர் அயனிப் பரிமாற்றம் அதிகமாகவும் இருக்கும். அங்ககப் பொருட்கள் அதிகமுள்ள மண்ணில் அயனிப் பரிமாற்றம் அதிகமாக இருக்கும். அயனிப் பரிமாற்றம் அதிகமுள்ள மண்ணே ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்தி பயிர்களுக்கு அளிக்கும் வளமான மண்ணாகும்.

உயிரியல் பண்புகள்

மண்ணில் வாழும் உயிரினங்கள் (Soil Microorganims)

மண்ணிலுள்ள உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அங்கக வடிவில் (கிடைக்காத நிலை) உள்ள ஊட்டச்சத்துக்களை அனங்கக வடிவில் (கிடைக்கும் நிலை) மாற்ற உதவி புரிகின்றன.

உயிரி செயல்பாடு

 • பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தம் செய்கிறது. நைட்ரேட், நைட்ரைட்டை தோற்றுவிக்கிறது. கந்தகம் மற்றும் இரும்பை ஆக்ஸிகரணம் செய்கிறது.
 • பூசணம் அங்ககப் பொருளை மண்ணில் மக்கச் செய்கிறது.
 • ஆக்டினோமைசீட்டுகள் ஊட்டச்சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது. அங்ககப் பொருட்களை மண்ணில் மக்கச் செய்கிறது.
 • மண்புழு அடிமண்ணை மேற்பரப்புக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. மண்ணில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்துகிறது. வடிகால் வசதியை மேம்படுத்துகிறது. நூற்புழு மண்ணிலுள்ள மக்கும் அங்ககப்பொருட்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் உண்கிறது.

மண்ணின் ஊட்டத்திறன் மற்றும் மண்ணின் உற்பத்தித் திறன்

பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான விகிதத்தில் அளிக்கும் மண்ணின் திறன் அம்மண்ணின் ஊட்டத்திறன் எனப்படும். பயிர்கள் நன்கு வளர்வதற்கு தேவையான சூழ்நிலையில் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துக்களை அளிக்கும் மண்ணானது நல்ல மகசூலை கொடுக்கும். மண்ணின் இத்திறனே மண் உற்பத்தித்திறன் எனப்படும்.

 • தேவைக்கேற்ப சரியான முறையில் உரமிடுதல்
 • பயிர் சுழற்சியை பின்பற்றுதல் கலப்பு பயிரிடுதல்
 • மண் அரிமானத்தைத் தடுத்தல்
 • முறையான சாகுபடி வேலைகளை மேற்கொள்ளுதல்
 • மண்ணை சீர்திருத்தும் பொருட்களை இடுதல்

மண்ணின் குறைபாடு மற்றும் நிவர்த்தி

பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கும் தன்மை கொண்ட மண்ணிற்கு பிரச்சனை உள்ள மண் என்று பெயர். மண்ணின் பெளதீக மற்றும் இரசாயன மாறுபாடுகளால் மண்ணின் ஊட்டத்திறன் பாதிக்கப்பட்டு பிரச்சனை உள்ள மண் உருவாகிறது. குறைந்த நீர் ஊடுருவும் தன்மையுள்ள மண், அதிக நீர் ஊடுருவும் தன்மையுள்ள மண், அடிமண் இறுக்கம், மேல்மண் இறுக்கம், புதை மண், அமில மண், களர் மண் மற்றும் உவர் மண் போன்றவை பிரச்சனை உள்ள மண் வகைகளாகும்.

குறைந்த நீர் ஊடுருவும் தன்மையுள்ள மண் (Slow Permeable Soil)

களி சதவீதம் அதிகமாக உள்ளதால் நீர் உட்புகும் திறன் குறைந்து, மேற்பரப்பு நீர் ஒட்டம் ஏற்படும். இந்நீரோட்டத்தால் மேல் மண் அரித்து செல்லப்படுவதால், ஊட்டச்சத்துக்களும் அடித்துச்செல்லப்படும். வடிகால் வசதி குறைபாடு ஏற்படும். இம்மண்ணை மேம்படுத்த வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். ஆற்று மணல், அல்லது மணற்பாங்கான செம்மண் இடுவதன் மூலம் களித் தன்மையை குறைக்கலாம்.

அதகி நீர் ஊடுருவும் தன்மையுள்ள மண்

பிரச்சனை உள்ள மண்ணில் மணல் அளவு 70 சதத்திற்கும் அதிகமாக இருப்பதால் நீர் பாய்ச்சும் பொழுது நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கு பயன்படாமல் அடி கண்டங்களுக்கு வடிந்து சென்று விடும். இம்மண்ணை நிவர்த்தி செய்ய சுமார் 400 கிலோ எடை கொண்ட கல் உருளையை தகுந்த ஈரப்பதத்தில் 8-10 முறை பயன்படுத்தி மண்ணை இறுக்கமடைய செய்யலாம். அங்கக உரங்களான தொழுஉரம், கம்போஸ்ட் அல்லது பசுந்தாள் உரங்களை இடலாம். இம்மண்ணின் தரத்தை பொறுத்து களிமண்ணை ஒரு எக்டருக்கு 100 டன் என்ற அளவில் இட்டு மண் நயத்தை மாற்றலாம்.

அடிமண் இறுக்கம் (Subsoil Hardening / Hardpan)

இது அடிமண்ணில் களிமண், இரும்பு, அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கால்சியம் கார்பனேட்டுடன் சேர்ந்து இறுக்கமடைவதால் ஏற்படும் பிரச்சனையாகும். இதனால் மண் பரும அடர்த்தி 18 மெகா கிராம்/கன மீ க்கு மேல் இருக்கும். இம்மண்ணில் நீர் உட்புகும் திறன், நீர் பரவும் திறன், காற்றோட்ட வசதி, ஊட்டச்சத்து பரவும் திறன் பாதிக்கப்படும். இம்மண்ணை நிவர்த்தி செய்ய உளிக்கலப்பையைக் கொண்டு, 0.5 மீட்டர் ஆழத்தில் 2-3 வருடங்களுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும்.

மேல் மண் இறுக்கம் (Surface Crusting)

கூழ்ம இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகள் மண் துகள்களுடன் இணைந்து, மண் காயும்போது மேல் மண் இறுக்கமாகின்றது. இதனால், விதை முளைப்புத்திறன் மற்றும் வேர் வளர்ச்சி பாதிப்பு குறைந்தநீர் உட்புகும் திறன், மேல் மண்அரிப்பு, வேர்மண்டலத்தில் காற்றோட்ட வசதி குறைபாடு முதலியவை ஏற்படும். இம்மண்ணை நிவர்த்தி செய்ய மண்ணை தகுந்த ஈரப்பதத்தில் உழவு செய்ய வேண்டும். சுண்ணாம்பு ஒரு எக்டருக்கு 2டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும். அதிக அளவு அங்கக உரங்களை இடவேண்டும்.

புதைமண் (Fluffy Paddy Soil)

தொடர்ந்து தண்ணீரை தேக்கி, சேற்றுழவு செய்வதால் மண் அமைப்பு உடையப்பெற்று மண் அமைப்பில்லாமல் மாறிவிடும். இதனால் இம்மண்ணின் பலம் குறைந்து சேற்றுழவு செய்யும்போது மாட்டின் கால்கள் புதைந்து விடும். மண் பரும அடர்த்தி குறைந்துவிடும். மேலும் வேர்கள் ஊன்றி நிற்க ஏதுவாக இல்லாததால் பயிர் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். இம்மண்ணை நிவர்த்தி செய்ய சுமார் 400 கிலோ எடை கொண்ட கல் உருளையை எட்டு முறை பயன்படுத்தி மண்ணை கடினப்படுத்ததலாம்.

அமில மண் (Acid Soil)

அதிக மழைப்பிரதேசங்களிலும், நிலத்தின் சரிமானம் அதிகமுள்ள பகுதிகளிலும் மழைநீரால், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் அயனிகளின் இழப்பீடு ஏற்பட்டு ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு மிகுந்த அமிலமண் உண்டாகிறது. இதன் கார அமில நிலை 6.5க்கும் குறைவாக இருக்கும்.

அமில மண்ணால் ஏற்படும் பிரச்சினைகள்

 1. இம்மண்ணில் பயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அலுமினியம் மற்றும் இரும்பு அயனிகள் அதிகமாக இருக்கும். இவை சூப்பர் பாஸ்பேட் இடும்போது நீரில் கரையாத அலுமினியம் மற்றும் இரும்பு பாஸ்பேட்டுகளை தோற்றுவிப்பதால் இவ்வுரம் இம்மண்ணில் பலனளிக்காது.
 2. கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் குறைபாடு ஏற்படும்.
 3. பாக்டீரியாக்களின் செயல்பாடு இம்மண்ணில் குறைவாக இருக்கும்.
 4. நோய்க் காரணிகளின் தீவிரம் அதிகமாகும்.

அமிலமண் சீர்திருத்தம் (Reclamation of AcidicSoil)

அமிலமண்ணை சீர்திருத்த கால்சியம் கார்பனேட் (CaCO) அல்லது கால்சியம் ஆக்ஸைடு (CaO) அல்லது கால்சியம் ஹைட்ராக்சைடு (Ca (OH) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை இட்டு ஹைட்ரஜன் அயனிகளை அகற்றுவதன் மூலம் நிலத்தை வளப்படுத்தலாம்.

களர்மண் (Sodic Soil)

மண்ணின் களித்துகள்களில் சோடியம் அயனிகள் அதிகமாக படிந்து காணப்படுவது களர் மண்ணாகும். இதன் கார அமிலத்தன்மை 8.5க்கு அதிகமாகவும், சோடியம் அயனிகளின் படிவு 15 சதத்திற்கு அதிகமாகவும் இருக்கும்.

களர் மண்ணால் ஏற்படும் பிரச்சினைகள் :

 1. கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புக்கள் அதிகமாக காணப்படுவதால் மண்ணில் கார அமிலத்தன்மை பத்துக்கும் அதிகமாகும்.
 2. நீர் உட்புகும் தன்மை குறைந்து நீர் தேங்கி நிற்கும்.
 3. மண்ணில் குறைந்த காற்றோட்டம் நிலவும்.
 4. மேல் மண் இறுக்கம் அதிகரிக்கும்.
 5. நுண்ணுயிரிகளின் செயல்திறன் குறையும்.
 6. தழை, மணி, இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்கள் இம்மண்ணில் குறைவாக இருக்கும்.

களர்நில சீர்திருத்தம்

 1. களர் நிலத்தை சரிவுக்கேற்ப சமன் செய்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து வடிகால்களை அமைக்க வேண்டும்.
 2. நான்கு அங்குல உயரம் நீர் தேங்கும் அளவிற்கு வரப்புகள் அமைக்க வேண்டும்.
 3. பாத்திகளின் உட்புறம் ஆழமாக சேற்றுழவு செய்ய வேண்டும்.
 4. மண் பரிசோதனை பரிந்துரைப்படி ஜிப்சம் இட்டு நீர் பாய்ச்சி மரக்கலப்பையால் மேலாக மண்ணை நன்கு கலக்க வேண்டும்.
 5. நீர் வடிந்த பிறகு மறுபடியும் நீர் பாய்ச்சி உழுது வடிய விடவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
 6. பசுந்தாள் உரம், கம்போஸ்ட் முதலிய அங்ககப் பொருட்களை மண்ணில் இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். நெல், ராகி, பருத்தி, தீவனப் புல் மற்றும் மரவகைகளை பயிர் செய்யலாம்.
 7. கால் பங்கு கூடுதலான உரப்பரிந்துரையை பின்பற்ற வேண்டும்

உவர் மண் (Saline Soil)

நீரில் கரையும் தன்மையுடைய உப்புக்களான சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் சல்பேட்டை அதிக அளவில் கொண்டிருக்கும் மண் உவர் மண்ணாகும். இந்த உப்புக்கள் பயிர் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கின்றன. இம்மண்ணின் கார அமிலத்தன்மை 8.5க்கு குறைவாக இருக்கும்.

உவர் மண்ணினால் ஏற்படும் பாதிப்புகள் :

 1. மண்ணின் மேற்பரப்பில் வெண்ணிற உப்பு பரவி காணப்படும்.
 2. பயிர்களின் நீர் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படும்.
 3. பயிருக்கு சரியான அளவில் ஊட்டச்சத்து கிடைக்காது.
 4. நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்திறன் குறையும்.
 5. அங்ககப்பொருட்கள் சிதைவுறுதல் தடைபடும்.

உவர் நில சீர்திருத்தம்

 • தரமான பாசன நீரை பயன்படுத்தி உப்பை வெளியேற்ற வேண்டும்.
 • பார்சால் முறையில் பயிர் விதைப்பு செய்யலாம்.
 • அங்கக உரங்களை மண்ணில் இடலாம்.
 • அதிக அளவு தழைச்சத்தினை இடவேண்டும்.
 • சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் உவர்தன்மையின் பாதிப்பினைக் குறைக்கலாம்.
 • அடுத்தடுத்த சால்களில் பாசனம் மேற்கொள்ளலாம்.

மண் அரிமானம் (Soil Erosion)

ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மேல் மண் அரித்து செல்லப்படுவது மண் அரிமானம் எனப்படும். இது இயற்கை மண் அரிமானம் மற்றும் செயற்கை மண் அரிமானம் என இருவகைப்படும். காற்று மற்றும் மழைநீர் ஆகியவற்றின் மூலமாக இயற்கை முறையில் மண் அரிமானம் ஏற்படுகிறது. செயற்கை மண் அரிமானம் மனிதரின் செயல்பாடுகளால் மட்டுமே ஏற்படுகிறது.

மண் அரிமானம் ஏற்படக்காரணங்கள்

 1. மழை (Rainfall): அதிக மழையின் காரணமாக நிலத்தின் மேற்பரப்பில் வழிந்தோடும் நீர் மண் அரிமானத்தை ஏற்படுத்துகிறது.
 2. மண்ணின் தன்மை (Soil Type): களி நிரம்பிய மண்ணிலும், மேற்பரப்பு கடினமாக இருக்கும் மண்ணிலும் மழைநீர் உட்புகாமல் வழிந்தோடும். அவ்வாறு வழிந்தோடும் நீர் மேல் மண்ணை அரித்து செல்லும்.
 3. நிலத்தின் சரிவு (Sope of Land): நிலத்தின் சரிவு அதிகரிக்கும் போது மழை நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிமானத்தை ஏற்படுத்தும்.
 4. காற்று (Wind): இயற்கை அல்லது செயற்கை காற்று தடுப்பான்கள் இல்லாத போது காற்றின் மூலம் மண் அரிமானம் ஏற்படுகிறது.
 5. தாவரங்கள் (Vegetation): தாவரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள நிலப்பரப்பில் இடைவெளி இல்லாததால் மண் அரிமானம் ஏற்படாது. செடிகள் இல்லாத கட்டாந்தரையில் மழை விழும்போது மண்துகள்கள் சிதறி, ஒடும் தண்ணிருடன் கலந்து மண் அரிமானம் ஏற்படும்.
 6. மனிதன் (Human): காட்டை அழித்தல், புல் தரைகளில் கால்நடைகளை மேய்த்தல் மற்றும் பயிர் சாகுபடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மனிதனால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மண் கொண்டு செல்லப்படுவதால் அரிமானம் ஏற்படுகிறது.

மண் அரிமானத்தின் விளைவுகள்

 1. ஊட்டச்சத்துக்கள் மிகுந்த மேல் மண் அடித்துச் செல்லப்படுகிறது.
 2. விதைக்கப்பட்ட நிலங்களில் விதை மற்றும் பயிர்கள் மண் அரிமானத்தால் பாதிக்கப்படுகிறது.
 3. மண் அரிமானத்தால் கொண்டு செல்லப்படும் மண் ஓரிடத்தில் குவிக்கப்படுவதால் அந்த இடத்தில் உள்ள பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
 4. சரிவான பகுதியில் நீர் வேகமாக வழிந்தோடுவதால் மண் நீரை உறிஞ்சுவது குறைந்து பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
 5. நிலத்தில் பள்ளங்களைத் (Gulies) தோற்றுவித்து நிலம் பாழாகிறது.

மண் அரிமானத்தை தடுக்கும் முறைகள்

 • சம உயர வரப்புகள் (Contour Bunding): ஒரே அளவு உயரமுள்ள இடங்களை ஒன்று சேர்த்து சம உயர வரப்புகள் அமைத்து பயிரிடுவதால் மண் அரிமானத்தை தடுக்கலாம்.
 • சரிவுக்கு எதிராக சாகுபடி செய்தல்: சரிமானத்திற்கு எதிராக உழவு செய்து, விதைத்து, மற்ற சாகுபடி வேலைகளை மேற்கொள்வதால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
 • வடிகால் வசதி செய்தல் (Providing Drainage): அதிகப்படியான மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி அமைப்பதன் மூலம் மண் அரிமானத்தை குறைக்கலாம்.
 • நெருக்க நடவு / சாகுபடி (Dense Cropping): வேகமாக வளர்ந்து நிலப்பரப்பை ஆக்கரமிக்கும் பயிர்களை சாகுபடி செய்து மண் அரிமானத்தை குறைக்கலாம்.
 • வரப்புகள் அமைத்தல் (Compartmental Bunding): சரிவுக்கு எதிராக நிலத்தை சிறுபகுதிகளாகப் பிரித்து வரப்புகள் அமைத்து அரிமானத்தை குறைக்கலாம்.
 • காற்றுத் தடுப்பான்கள் (Wind Break): சவுக்கு, யூக்லிப்டஸ், அசோகமரம், சீமைக்கருவேல் போன்ற மரங்களை காற்றுத் தடுப்பானாக வளர்த்து காற்றின் வேகத்தைக் குறைக்கலாம்.
 • பண்ணைக் குட்டைகள் அமைத்தல் (Farm Ponds): சிறு குட்டைகள் அமைத்து வடிந்து வரும் நீரை சேகரித்து வைப்பதால் மண் அரிமானத்தை குறைக்கலாம். பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் இடத்தை வழிந்தோடும் நீரின் அளவு, நிலச்சரிவு, மழையளவு, மண்வகை மற்றும் மண்ணின் நீர் ஊடுருவும் திறனைப் பொறுத்து தெரிவு செய்ய வேண்டும்.
 • ஊடுபயிர் (Intercrop): பருத்தி போன்ற பயிர்களை வரிசையில் நட்டுப் பயிர் செய்யும் போது வரிசைக்கிடையே உளுந்து, கடலை போன்ற பயிர்களை பயிர் செய்து மண்ணரிப்பை கட்டுப்படுத்தலாம்.
 • நிலமூடாக்கு (Mulching): பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்தி நிலமூடாக்கு செய்து மண் அரிமானத்தை தடுக்கலாம்.
 • கால்நடைகளின் மேய்ச்சலை தவிர்த்தல் (Prohibiting Grazing): சரிவு அதிகமுள்ள இடங்களில் கால்நடைகள் மேய்வதைத் தடுத்து மண் அரிமானத்தை குறைக்கலாம்.
 • நில சீர்திருத்தம் (Reclamation): அரிமானத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வளமான மண்ணை இட்டு சீர்திருத்தலாம். அங்ககப் பொருட்களை அதிகம் இட்டு மண்ணரிப்பை குறைக்கலாம்.

மண் குறைபாடு ஏற்பட்டால் மனித சமுதாயம் அழிவது திண்ணம். உதாரணமாக நைட்ரேட் நச்சினால் நீலக்குழந்தை உண்டாகின்றது. எனவே நம் வருங்கால சந்ததியினர் நலமாக இருக்க வேண்டுமெனில் மண் வளம் காக்க வேண்டியது அவசியம். மண்ணில் அங்கக மற்றும் அனங்கக உரங்களை சேர்த்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து இடுவதன் மூலம் மண் வளம் காத்து பயிர் வளர்ச்சியைப் பெருக்க முடியும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top