பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அதிக மகசூலும், தரமான விதையும்

தரமான விதை உற்பத்தி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பயறு வகைகளில் தரமான விதை தயாரிப்புக்கு மூலவிதையின் தரமே முக்கிய காரணியாக விளங்குகிறது.

ஆலோசனைகள்

  • விதையின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், கடந்த 60 வருடங்களாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, விதை பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தற்போதைய காலகட்டத்தில், தரமான விதைகளை விவசாயிகள் தேர்வுசெய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
  • அதிக மகசூலுக்கு விதையே மூலாதாரமாக விளங்கி வருகிறது.
  • இதனால், விதையின் தேவை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகள் தரமான விதை தயாரிப்பு தொழில்நுட்பங்களை அறிந்து, வேளாண். விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் பயறுவகைகளின் விதை உற்பத்தியில் ஈடுபடலாம்.
  • இதன்மூலம், குறைந்தநாளில், நிறைய லாபத்தை விவசாயிகள் ஈட்டமுடியும். கோடைவெப்பம், குறைந்துவரும் நிலத்தடி நீர்வளம், அதிகரித்து வரும் நீர்த்தேவை, சாகுபடிச் செலவுகளையும் குறைக்கும் வகையில், பயறுவகைகள் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடவேண்டும்.
  • வேளாண் உற்பத்தியில் தரமான விதை, வளமான மண் வகையினையும் பயன்படுத்துவதால் மொத்த மகசூலில் 20 சதம் வரை அதிகரிக்கிறது.
  • இதற்கு மூலவிதையை தேர்வுசெய்யும்போது, தன்மகரந்தச் சேர்க்கை பயிர்களில் 20 சதமும், அயல்மகரந்தச் சேர்க்கை பயிர்களில் 35 சதமும் வீரியஒட்டுரக பயிர்களில் 100 சதமும் சான்றிதழ்பெற்ற விதையை பயன்படுத்த வேண்டும்.
  • மேலும், இந்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விதைச்சான்று அளிப்புத் தரத்துக்கு ஏற்ற புறத்தூய்மை, வினையியல் திறன், முளைப்புத் திறன், மரபுத்தூய்மை விதை நலம் வீரியத்தையும் கொண்டுள்ளதாக இருப்பதே தரமான விதையாக நிர்ணயிக்கப்படுகிறது.
  • இத்தகைய தரமான விதைகளைப்பெற விதைஉற்பத்தி தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
  • விதை உற்பத்தி என்பது வேளாண் பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது.
  • விதை உற்பத்தியானது விதைப்பு முதல் அறுவடை வரையிலும் உயரிய தொழில்நுட்பங்களை கையாளுவதுடன் தகுந்த ஆய்வாளர்களின் மேற்பார்வையுடன் விதை உற்பத்தி செய்யப்படவேண்டும்.

நிலம் தயாரிப்பு

  • பயறுவகை விதை உற்பத்திக்கு நிலம் நன்கு புழிதியாக உழவு செய்யப்படவேண்டும்.
  • பயிர்களின் ரகத்துக்கேற்ப செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளியும் பாருக்குப் பார் 45 செ.மீ. இடைவெளியும் அவசியம் வேண்டும்.
  • பயறுவகைக்கு ஏக்கருக்கு அடியுரமாக தொழுஉரம் 5 டன், யூரியா 20 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும். உரத்தை பார்களின் பக்கவாட்டில் போடவேண்டும்.

விதைநேர்த்தி

  • விதை சான்றுபெற்றதாக இருக்க வேண்டும். உளுந்து, பாசிப்பயறு ஏக்கருக்கு 8 கிலோ, ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி இமிடாகுளோபிரிட் மருந்தைக் கொண்டு ஒருமித்த விதை நேர்த்தி செய்தால், விதை முளைத்த பின்னர் தெளிக்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கலாம்.
  • விதை நேர்த்தியால் 30 நாள்கள் வரை மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஒருமித்த விதை நேர்த்தியின் காரணமாக மகசூலில் 15 சதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  • தரமானவிதை தனது பாரம்பரிய குணங்களில் இருந்து குறைவுபடாமலும், விதைத்தவுடன் நன்கு முளைத்து செழிப்பாக வளரும்.
  • இதுவும் அதிக மகசூலுக்கு அடிப்படையானது. தோட்டத்தில் களை, பிறரக கலப்பு, பிற பயிர்கள் விதை கலப்பில்லாமலும் நோய் தாக்குதல் இல்லாமலும் பாதுகாக்கவேண்டும்.
  • உளுந்து பாசிப்பயிறு போன்றவை தன்மகரந்த சேர்க்கை பண்புடையவை. எனவே, பிற பயிர்கள் 5 மீட்டருக்கும் அப்பால் இருக்க வேண்டும். விதை முதிர்ச்சியடையும்போது அதிக மழையும், அதிக வெயிலும் இல்லாமலிருப்பது அவசியம்.

நீர் மேலாண்மை

  • விதைப்புடன் நீர்விடவேண்டும். பின்னர் மூன்றாம்நாள் உயிர் நீர் விட வேண்டும்.
  • பிறகு மண்ணின் நீர்செழிப்புக்கேற்ப நீர்பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும், ஈரப்பதம் பேணும் வகையில் நீர்பாய்ச்ச வேண்டும்.
  • களை கட்டுப்பாட்டுக்கு 15 நாளில் ஒருமுறையும் அடுத்த 15 நாளில் மற்றொரு முறையும் களையெடுக்கவேண்டும்.

பயிர்ஊக்கி

  • பயறுவகைச் செடிகளில் பூக்கள் அதிகம் உதிர்ந்துவிடும். இதனால், உற்பத்தி குறைவு ஏற்படும்.
  • இதைதவிர்க்க பூ பூக்கும் தருணத்தில் லிட்டர் நீருக்கு 4 மில்லி அளவில் பிளோனோபிக்ஸ் என்ற பயிர்வளர்ச்சி ஊக்கியை செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும்.
  • பூச்சி பூஞ்சாண நோய்களால் செடிகள் பாதிக்காதவாறு பாதுகாப்பதே தரமான விதை உற்பத்திக்கு மூலாதாரமாகும்.
  • காய்ப்பு பருவத்தில் செடி வளர்ச்சி குன்றி கருகினால், லிட்டர் நீரில் 1 கிராம் கார்பன்டைசிம் கரைசலைக் கலந்து செடிகளின் வேரில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

  • காய்கள் நன்கு முற்றி கருப்பேறியதும் அறுவடை செய்யவேண்டும்.
  • காய்களை இரண்டு நாள்கள் நிழலில் உலர வைத்து மூங்கில் குச்சியால் அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும்.
  • பின்னர், விதைகளை வெயிலில் காயவைத்து பாதுகாக்க வேண்டும்.
  • விதை உற்பத்தியில் மதுரை வேளாண். அறிவியல் மையம் விவசாயிகளுக்கு தேவையான நுட்பங்களையும், உதவிகளையும் வழங்கும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top