பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

களர் மற்றும் உவர் மண் வகைகளுக்கேற்ற வேளாண்மை

களர் மற்றும் உவர் மண் வகைகளுக்கேற்ற பயிர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மண்ணின் குறைகள்

நீண்ட கால வேளாண்மையாலும், இயற்கையாகவும் மண்ணின் தரம் குறைந்து கொண்டு வருகிறது. மண்ணின் இரசாயனப் பண்புகள் மாறுபடுவதால் உண்டாகும் குறைகளான களர், உவர் தன்மைகள் நிலத்தையும், விளைச்சலையும் பாதிக்கின்றன.

நிலப்பரப்பில் உப்பு தேங்கும்பொழுது, சாதாரண மண் உப்பு மண்ணாகிறது. மழை அல்லது நீர்பாசனத்தால் உப்பு, நீரில் கரைந்து மண்ணின் அடித்தளத்திற்கு சென்றுவிடும். வடிகால் சரியாக அமைந்தால் உப்புநீர் நிலப்பரப்பினின்று வெளியேறிவிடும். இதனால் மண்ணின் உப்புத்தன்மை குறையலாம். பொதுவாக உப்பு மண்களில் சாப்பாட்டு உப்பு (சோடியம் குளோரைடு) பரவலாகக் காணப்படும். இத்தகைய மண்களிலிருந்து உப்பு வெளியேறினாலும், மண்ணிலுள்ள களித்துகள்கள் உப்பின் பகுதியான சோடிய அயனிகளை ஈர்த்துக் கொள்கின்றன. சோடியம் சார்ந்த மண் களர்மண்ணாகும்.

களர் மண் (சோடிய மண்)

அதிகமான சோடிய அயனிகள் மண்ணின் களித் துகள்களால் ஈர்க்கப்பட்டிருந்தால், மண்ணோடு நீர் சேரும் பொழுது மண்கட்டிகள் சிறு துகள்களாக உடைந்து பின் களித்துகள்கள் தனித்தனியாகப் பிரிந்து விடுகின்றன. களித்துகள்களால் கலங்கிய மண் நீர் குழம்பாகிறது.

களர் மண் வயலில் மழை அல்லது நீர் பாசனத்தின் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்து, பிரிந்த களித்துகள்கள் மண்ணிலுள்ள துவாரங்களை அடைக்கின்றன. மண்ணின் நீர் கடத்தும் திறன் குறைந்து நீர்த் தேக்கம் உண்டாகிறது. பயிர்களின் வேர் சுவாசம் தடைபடுகிறது. மண் காய்ந்த பின் இறுகி செங்கல் மாதிரி கடினமாகிறது. பயிரின் வேர் வளர்ச்சி குன்றி விளைச்சல் குறையும். மழைக்காலத்தில் களர்மண் மண்ணரிப்பால் பாதிக்கப்படும்.

உப்பு மண்

பாறைகள் சிதைந்து மண்ணாகும் பொழுதோ அல்லது உப்புநீர் பாசனத்தாலோ, மண்ணில் பல்வேறு உப்புகள் தேங்குகின்றன. நிலத்தின் அடித்தள நீரில் உப்பு அதிகமாக இருந்தால், மண்ணின் நுண்ணிய துவாரங்களின் வழியாக மேல்மட்டத்திற்கு நீர் உறிஞ்சப்படுகையில் மண்ணில் உப்பு அதிகரிக்கலாம். பொதுவாக, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உப்புகள் மண்ணில் காணப்படுகின்றன. உலகின் பல பாகங்களிலும் உப்பு மண்ணில் சாப்பாட்டு உப்பான சோடியம் குளோரைடு மிகுந்து காணப்படுகிறது. உப்புகள் மண்ணில் உள்ள நீரில் கரைந்து, உப்பு அயனிகளின் அளவு அதிகரிக்கும் பொழுது பயிர்களால் நீரை உறிஞ்ச முடிவதில்லை. இதனால் பயிர்கள் வாடி மடிகின்றன. சோடியம் குளோரைடு போன்ற அயனிகள் பயிர்களுக்கு நஞ்சாக அமையலாம்.

களர் மண்ணில் நீர் சேரும்பொழுது மண்ணின் கட்டமைப்பு சிதையும். இத்தகைய இயல்புப் பண்புகளின் குறைபாடுகளால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. ஆனால், உப்புமண்ணில் நீர் சேரும் பொழுது மண்கட்டிகள் சிதைந்தாலும் களித்துகள்கள் பிரிவதில்லை. மண்ணின் கட்டமைப்பு சீரழிவதில்லை. உப்புமண்ணில், மண்ணீரில் கரைந்த அதிகளவு உப்பால் பயிரின் நீர் உறிஞ்சும் திறன் குறைவதோடு, சில அயனிகள் பயிருக்கு நஞ்சாக மாறலாம்.

உவர் மண்

மண்ணின் கார அமிலத்தன்மை 8.5க்கு மேற்பட்டால் கார மண்ணாகும். சுண்ணாம்பு மிகுந்த மண்களில் கார அமிலத் தன்மை 8 முதல் 8.5 வரை இருக்கும். இந்த அளவீடுகளில் பயிர்கள் நன்றாகவே வளர்கின்றன. ஆனால், சோடியம் கார்பனேட் (சலவை உப்பு) அல்லது சோடியம் பைகார்பனேட் (சோடா உப்பு) போன்ற உப்புகள் இருந்தால் மண்ணின் காரத்தன்மை அதிகமாகிறது. உவர் மண்ணில் இந்த உப்புகள் இருப்பதால் சோடியம் அயனிகளும் அதிகரித்துக் காணப்படும். ஆதலால் உவர் மண் சோடியம் சார்ந்த மண்ணாகி தண்ணீருடன் சேரும்பொழுது, களர் மண்ணைப் போன்று கட்டமைப்பு குலைந்து களித்துகள்கள் தனித்தனியாகப் பிரிகின்றன. மண்ணின் இயல்புப் பண்புகள் சீரழிந்து விளைச்சல் குன்றும். சோடிய மண்ணில் அதிகமானால், அதாவது உவர் மண்ணில், மண்ணின் தரம் விரைவாக சீரழியும். உவர் மண்ணில் இருக்கும் கார்பனேட் அல்லது பைகார்பனேட் அயனிகள் பயிர்களுக்கு நஞ்சாகின்றன.

எனினும், இயற்கையிலேயே இக்குறைபாடுகளை தாங்கி வளரக்கூடிய தக அமைப்புகளைக் கொண்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • அதிகக் களரைத் தாங்கி வளரக்கூடிய பயிர்கள் - நெல் (பி.ஒய்.1., கோ.43, பையூர் 1 இரகங்கள்), ராகி (கோ.11, கோ.12, கோ.13 இரகங்கள்)
 • மிதமான களரைத் தாங்கி வளரக்கூடிய பயிர்கள் - சோளம் (கோ.24, கோ.25), கரும்பு (கோ.771), கம்பு, பருத்தி(எம்.சியு.7, எம்.சியு.10), கோதுமை, சூரியகாந்தி, சூபாபுல், வேலிமசால், வரகு, கொய்யா, இலந்தை.
 • களர்த்தன்மையால் பாதிப்பேற்படும் பயிர்கள் - பீன்ஸ், கடலை, மொச்சை, எலுமிச்சை
 • அதிகளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய பயிர்கள் - பருத்தி, பார்லி, ராகி, சுகர்பீட், தோட்ட பீட்ரூட், குதிரை மசால், பெர்முடா புல், உவர் புல், ஸ்பினாச் கீரை
 • நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய பயிர்கள் - தக்காளி, முட்டைகோசு, உருளைக்கிழங்கு, கோதுமை, நெல், கேரட், வெங்காயம், பரங்கிக்காய், மக்காச்சோளம், சூரியகாந்தி, ஆமணக்கு, மாதுளை, அத்தி, திராட்சை
 • குறைந்த அளவு உப்பைத் தாங்கி வளரக்கூடிய பயிர்கள் - தோட்ட அவரை, முள்ளங்கி, ஆரஞ்சு, எலுமிச்சை, பச்சை அவரை

சுண்ணாம்பு படிவங்கள் உள்ள சரளை மண்ணில் ஆண்டுப்பயிர்கள் வேண்டாம். ஆழமான குழி எடுத்து அதற்குள் செம்மண் + மணல் + மட்கிய எருவைக் கலந்து இட்டு மரக்கன்றுகளை நடலாம். இரும்பு, மக்னீசியம் சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு ஒரு கிராம் நுண்ணூட்டச்சத்து கலவையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மஞ்சள் நிறம் மாறும் வரை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். வெள்வேல், புளி, வேம்பு, புங்கம், அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, சவுக்கு, மஞ்சள் கொன்றை மரங்கள் நன்றாக வளரும்.

கார அமிலத்தன்மை

மண்ணில் ஹைட்ரஜன் அயனிகள் அதிகரிக்கும்பொழுது மண் அமிலத்தன்மை அடைகிறது. இந்த அயனிகள் மிகக்குறைவாக இருந்தால் காரத்தன்மை அடைகிறது. மண்ணில் கார அமிலத் தன்மை 5.5க்கு கீழே இருந்தால் அமில மண்ணென்றும் 8.5க்கு மேலே இருந்தால் கார மண்ணென்றும், அறியலாம். இதற்கிடைப்பட்ட அளவீடுகள் (5.5லிருந்து 8.5 வரை) பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

மண்ணின் கார அமிலநிலைக்கேற்ற பயிர்கள்

 • 5.0க்கு கீழ் - தேயிலை, தர்பூசணி
 • 5.0 -5.6 - புகையிலை, உருளைக்கிழங்கு
 • 5.0 -7.0 - கடலை, துவரை, தட்டைப்பயறு
 • 5.5- 6.0 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
 • 5.5-7.00 - தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை , திணை
 • 5.5- 6.0 சர்க்கரை வள்ளிக் கிழங்கு
 • 5.5-7.5 தென்னை, வாழை, மஞ்சள், சோயா மொச்சை
 • 6.0 - 8.0 ங்காயம், எலுமிச்சை, உளுந்து, பாசிப்பயறு, மொச்சை
 • 6.0 - 8.5 சூரியகாந்தி, கேழ்வரகு, தக்கைப்பூண்டு
 • 8.5க்கு மேல் - பனை, ஈச்சை, சீமைக்கருவேல், கருவேல், யூகலிப்டஸ் போன்றவையாகும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top