பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மேல் மண் இறுக்கமும் - நிவர்த்தி முறைகளும்

மேல் மண் இறுக்கமும் நிவர்த்தி முறைகளும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மேல் மண் இறுக்கம் என்பது (surface soil crusting) உலகின் பல நாடுகளில், பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் காணப்படும் பிரச்சனையாகும். வெப்பமான மற்றும் மித வெப்பமான சீதோஷ்ண நிலைகள் இது உண்டாவதற்கு ஏற்ற சூழ்நிலைகளாகும்.

 • பொதுவாக மேல் மண் இறுக்கம் என்பது மணற்பாங்கான மேற்பரப்பு மண்ணில் ஏற்படும் ஒரு பௌதிக பிரச்சனையாகும். மேல் மண்ணில் விழும் மழைத்துளிகளின் தாக்கத்தாலும், அதனை தொடர்ந்து ஏற்படும் வறட்சியாலும் மேல் மண் இறுக்கம் ஏற்படுகின்றது.
 • இவ்வாறு இறுகும் தன்மையால் மண்ணின் மேல்பரப்பு கடினமடைந்து, விதைக்கப்படும் விதைகள் முளைத்து வெளிவரும் போது ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, முளைப்பதற்கு ஒரு தடையை ஏற்படுத்துகிறது. இதனால் விதை முளைப்பு திறன் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மேலும் மழைநீர் நிலத்தில் உட்புகுவதற்கும் தடையாக இருப்பதால், மழைநீர் மேலோட்டமாக ஓடிச் சென்று வடிந்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான நீரை மண்ணின் அடிப்பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை. இது தவிர மண் அரிப்பு உண்டாவதற்கும் இது ஏதுவாக அமைகிறது.
 • இத்தகைய மேல்மண் இறுக்கம், மணற்பாங்கான நிலங்களிலும், செம்பொறை மண் வகைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ்வகையான மேல் மண் இறுக்கம் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் செம்மண் வகைகளிலும், வயலோகம் மண் வகைகளிலும் மற்றும் வேறுசில மண்வகைகளிலும் காணப்படுகிறது.
 • மண்கண்டம் அதிக ஆழமில்லாமல் கீழ்பரப்பில் பாறைகள் காணப்படுதல், மேற்பரப்பு மண்ணில் அதிக களியில்லாமல் மணற்சாரியாக இருத்தல், மண்ணில் அங்ககப் பொருட்கள், சுண்ணாம்புச் சத்து மற்றும் பயிர்களுக்குத் தேவையான மற்ற மணிச்சத்து பொருட்கள் குறைவாக இருத்தல் போன்றவை மேல் மண் இறுக்கம் ஏற்பட முக்கியக் காரணங்களாகும். மேலும் மணற்பாங்கு மற்றும் களி அதிகமில்லாத நிலங்களில் இப்பிரச்சனை பொதுவாக ஏற்படுகிறது. இந்த வகையான மண்ணில் மண்துகள்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கூட்டாக இல்லாமல் தனித்தனியாகவும், கூட்டாக உள்ளவை வலுவற்றதாகவும் உள்ளன. மழைநீர் வேகமாக நிலத்தில் விழும் பொழுது வலுவற்ற மண்துளிகளின் கூட்டு சிதைந்து விடுகிறது. இப்படி தனித்தனியான மண்துளிகள் மழை நீரால் மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டு மண்ணின் துவாரங்களை அடைத்து மண் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தவகை மண் இறுக்கம், பிறகு அமிலத்தன்மையுள்ள நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகளுடன் கலந்து மேலும் இறுக்கமடைகிறது. இவ்வாறான மண் இறுக்கம் காய்ந்த நிலையில் கான்க்ரீட் போல கடினமாக இருக்கும். ஆனால், ஈரப்பதத்தில் இருக்கும் பொழுது மிருதுவாக இருக்கும்.

மேல்மண் இறுக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

 • மண்ணின் மேற்பரப்பு இறுகி மிகக் கடினமாகி விடுகிறது. இதனால் விதைகள் முளைத்து வெளிவருவது மிகவும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது இயலாததாகி விடுகிறது.
 • மண் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்து, மழைநீர் மண்ணில் தங்காமல் ஓடிவிடுகிறது. மண்ணிற்கும் மேற்பரப்பிற்கும் நடக்கும் ஆக்சிஜன் போன்ற வாயு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் பயிரின் வேர்வளர்ச்சி பாதிக்கப்படும்.
 • மண்ணின் அழுத்தம் அதிகமாகிறது. மண்ணில் துளைகள் குறைந்து, மண்ணின் கூட்டுத்தன்மை குறைந்து, பயிர் வளர்ச்சிக்குத் தகுதியில்லாத பௌதீக குணங்கள் ஏற்படுகின்றன. இவை பயிர் வளர்ச்சியையும், விளைச்சலையும் மிகவும் பாதிக்கின்றன.

மேல் மண் இறுக்கத்தை நிர்வகிக்க வேண்டிய வழிமுறைகள்

 • மண் துளிகள் கூட்டு அல்லது கூட்டமைப்பு சிதையாமல் இருக்க நிலத்தை சற்று அதிகமான ஈரப்பதத்தில் உழவு செய்ய வேண்டும்.
 • பல தடவை நிலத்தை உழுவதால் நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், அவை சுரக்கும் பாகு போன்ற திரவங்களினால் மண்துளிகளின் கூட்டுகள் நிலத்தில் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
 • வேளாண் கழிவு பொருட்களான இலை, தழைகள், வைக்கோல் போன்றவற்றை நிலத்தின் மேற்பரப்பில் பரப்பி வைத்தால் நிலத்தில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு மழைநீர் தாக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி மண் துளிகளின் கூட்டு சிதைந்து விடாமல் பாதுகாக்கலாம்.
 • தொழுஉரம் (10 டன் / எக்டர்) மற்றும் தென்னை நார் கழிவு உரம் (12.5 டன் / எக்டர்) இட வேண்டும். சுண்ணாம்பு தூளை எக்டருக்கு 2 டன் வீதம் இடலாம்.
 • சர்க்கரை ஆலை கழிவு எக்டருக்கு 5 முதல் 10 டன் வரை இடுவது நலம் பயக்கும்.
 • நெல் உமி போன்ற பயிர்கழிவுகளை எக்டருக்கு 5 டன் அளவில் இடுவதாலும் மண் இறுக்கத்தின் பாதிப்பு குறையும்.
 • விதைகளை பார்களின் சரிவில் விதைக்க வேண்டும்.
 • பெரிய அளவுடைய விதைகளை மேல் மண் இறுக்க பிரச்சனையுள்ள நிலங்களில் ஒரு குழிக்கு இரண்டு அல்லது மூன்று விதைகளாக கூட்டாக விதைக்கலாம். தெளிப்பு நீர் பாசன முறைகளைக் கையாண்டு, அதன் மூலமாக மண்ணிற்கும், பயிருக்கும் தேவையான அளவு நீரை அடிக்கடி அளித்து வருவதால் நிலம் காயாமல் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும். எனவே மேல் மண் இறுக்க பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது. பொதுவாக செம்பொறை மண்வகைகளில் அங்கக மற்றும் தழைச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும், அதிகப்படியான மணிச்சத்து மண்ணில் பிடித்து வைக்கப்படுவதாலும், உயிர் உரங்கள் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற மணிச்சத்து உரங்களை பயன்படுத்தினால், மேல் மண் இறுக்க பிரச்சனை நிவர்த்தியாவதோடு நிலங்களில் உள்ள சத்துக்கள் உடனடியாக பயிர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
 • மேற்கண்ட அனைத்து மேல் மண் இறுக்க நிவர்த்திமுறைகளை கருத்தில் கொண்டு, உழவர்கள் தங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு உள்ள நிர்வாக முறைகளை மேற்கொண்டு பயன்பெற்று, மண்வளம் காத்து, பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top