பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / வேளாண்மையும் விவசாயிகளின் நல்வாழ்வும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மையும் விவசாயிகளின் நல்வாழ்வும்

வேளாண்மையும் விவசாயிகளின் நல்வாழ்வும் பற்றிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளன.

முன்னுரை

விவசாயமே இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பங்களிப்பு தொழிற் பிரிவாக இன்றளவும் இருக்கிறது. 2014-15 ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பு கூட்டலில் இந்த விவசாயப் பிரிவின் பங்கு 16.1 சதவிகிதமாக இருந்தது (புதிய வரிசைகளின் கீழ் 2011-12 விலை அடிப்படையில்). பொருளாதார அம்சங்களைத் தாண்டி இந்த விவசாயப் பிரிவு உணவு மற்றும் ஊட்டச்சத்தில் சமூகப் பாதுகாப்பை வழங்குகின்ற பிரிவாகவும் உள்ளது. மேலும் நாட்டில் பெரும் பான்மையோருக்கு வேலை அளிக்கிறது. ஊரக உழைப்புச் சக்தியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த விவசாயப் பிரிவில் வேலையில் இருந்த உழைப்புச் சக்தியின் சதவிகிதம் 1993-94ல் 64.8 சதவிகிதமாக இருந்தது. இது 2011-12ல் 48.9 சதவிகிதமாக குறைந்து விட்டது. இந்த அளவுக்குக் குறைந்திருந்தாலும் இந்த விவசாயப் பிரிவுதான் இப்பொழுதும் அதிக அளவு உழைப்புச் சக்திக்கான வேலைவாய்ப்புகளைத் தந்து வருகின்றது. தொழில் மற்றும் சேவைகள் போன்ற இதர பொருளாதாரப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட விவசாயத் தொழிலாளர்களுக்கான வருமானம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளும் விவசாயப் பிரிவும் உற்பத்தித்திறன் சார்ந்த திடீர் ஏற்றத் தாழ்வுகளாலும் நிலையற்ற விலையாலும் பாதிக்கப்படுகின்றனர். பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் சீதோஷ்ண ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிதீவிரமான பருவநிலை செயல்களை எதிர்கொள்ள வழக்கமான நிறுவனம் சார்ந்த உதவி போதாததாகவும் அளவில் சிறியதாகவும் உள்ளது. இந்தியாவில் இத்தகைய பருவநிலை மாறுதல் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயல்களின் தாக்கங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் நல்வாழ்வைக் காத்துப் பராமரிக்க கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. இத்தகைய தாக்கங்களை எதிர் கொண்டு விவசாயிகளின் நல்வாழ்வைப் பேணுவதற்கான முயற்சிகளை எடுக்கும் அதே நேரத்தில் சமாளிக்க வேண்டிய வேறுபல பிரச்சனைகளும் உள்ளன.

விவசாயிகளின் நல்வாழ்வுக்கான முயற்சிகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் அதே வேளையில், நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப உருவாக்கம் ஆகியவற்றுக்கான முயற்சிகளும் இணையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு அதிகவருமானங்கள் தருவதாகவும் உணவுப் பயிர்கள் மற்றும் இதர விவசாயப் பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும். 2020-21ஆம் ஆண்டிற்கு தேவைப்படும் உணவு தானியங்கள் தேவை 277 மில்லியன் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களுக்கான தேவை 71 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. தானியங்கள் உற்பத்தி இன்று அதிகரித்து வருகின்றது. இப்போதைய வளர்ச்சி விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், உணவு தானியங்களின் தேவை பூர்த்தி செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கலாம். பருப்பு வகைகளில் மட்டும் பற்றாக்குறை இருக்கலாம். அதிக அளவு பற்றாக்குறை தாவர எண்ணெய் / உணவு எண்ணெயைப் பொறுத்து ஏற்படக்கூடும். இதில் 60 சதவிகிதம் உள்நாட்டு நுகர்வுக்கான தேவை இறக்குமதியால் பூர்த்தி செய்யப்படுகின்றது.

விவசாயத் திறனையும் விவசாயம் சார்ந்த தொழில்களை விரிவுபடுத்தவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன. உற்பத்தித்திறனை அதிகரித்தல், விவசாயிகளுக்கு லாபகரமான விலைகளை நிர்ணயித்தல், விவசாயம் சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் ஆகியன இதில் அடங்கும். சந்தை மற்றும் நிலம் சார்ந்த சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதனை நிறைவேற்ற முடியும். கிழக்குப் பகுதி மாநிலங்களை மாற்று உணவு தானியக் களஞ்சியமாக உருவாக்க வேண்டும். அதற்காக நிறுவனங்கள் மற்றும் விநியோக அமைப்புகளை கட்டமைக்கும் தேவைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். நெருக்கடிகளைக் குறைக்கவும் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும் விவசாயிகளுக்கு ஆதரவு தர வேண்டும். பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலம் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அரசின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களில் விவசாயிகளின் நல்வாழ்வு முக்கிய இலக்காக இருக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் அவர்களது நலவாழ்வை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் பலவிதமான புத்தாக்க நடவடிக்கைகளையும் மரபை மீறிய தீர்வுகளையும் எடுத்து வருகிறது. கூடுதலான நிலப்பரப்புக்கு நீர்ப்பாசன வசதி அளித்தல் மற்றும் தரமான வேளாண் உள்ளீடுகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் சிறப்பான உற்பத்தியைத் தரும் வழிமுறைகளுக்கான ஆதரவைத் தந்து வருகின்றது. விளைச்சல் இல்லாமல் போகும் ஆபத்தையும் நிரந்தரமில்லாத விலை சூழலையும் சமாளிப்பதற்கு ஏற்றதாக விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கு பெரிய அளவில் கவனம் செலுத்தப்படுகின்றது. பயிர் காப்புறுதிக்கு அதிக ஊக்கத்தொகை அளித்தல், தேசிய விவசாயச் சந்தையைக் கட்டுப்படுத்துதல், விலையை நிலைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை முறையில் விவசாயம், பாரம்பரிய விவசாயம், கால்நடை பராமரிப்பு, மீன் பிடித்தல் போன்ற பலதரப்பட்ட செயல்பாடுகள் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளன. வேளாண் குறித்த அனைத்து பிரிவுகளிலும் விவசாயிகளுக்கு சரியான, சிறந்த தகவல் கிடைத்தல் வேண்டும். தகவல் கிடைப்பது என்பது விவசாயிக்கு புதிய தொழில்நுட்பங்கள், புதிய சந்தை வாய்ப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதாக அமையும். இதற்காகவே முழுநேர தொலைக்காட்சி அலைவரிசை “கிசான் சேனல்" (உழவர் அலைவரிசை) தொடங்கப்பட்டு உள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல திட்டங்களும் செயல் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் பல லட்சம் விவசாயிகளுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவை அறிமுகப்படுத்தப்பட்டன. கீழ்வரும் பத்திகளில் அவற்றுள் முக்கியமான சில திட்டங்கள் விளக்கிச் சொல்லப்படுகின்றன:

பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் திட்டம் (பி.எம்.கே.எஸ்.ஒய்)

பயிரிடப்படும் நிலப்பரப்பில் 55 சதவிகித நிலப்பரப்பு நீர்ப்பற்றாக்குறை உள்ள நாடாக நம் நாடு உள்ளது. இத்தகையச் சூழலில் ஹர்கேத்கோபானி மூலமாகவும் ஒரு துளியில் கூடுதல் தானியம் மூலமாகவும் மட்டுமே விவசாயிகளுக்கான நல்வாழ்வை, நற்பலனை அடைய முடியும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் திட்டமானது இந்த பாசனநீர் பற்றாக்குறை அம்சத்தை சரியான அணுகு முறையில் பார்க்கின்றது. தாழ்வாக காய்த்துத் தொங்கும் பழவகைகளுக்கும் நீர் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பி.எம்.கே.எஸ்.ஒய் திட்டமானது இயக்க முனைப்போடு நடைமுறைப்படுத்தப்படும். 28.5 லட்சம் ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும். பி.எம்.கே.எஸ்.ஒய் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ4,510 கோடியாகும். இந்த நிதியில் ஏ.ஐ.பி.பி.க்கான ஒதுக்கீடு, நீர் மூலவளம், நதி மேம்பாடு - கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் 2015-16 ஆண்டுக்கான பி.எம்.கே.எஸ்.ஒய் ஹர்கேத் கோபானி திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ2,510 கோடியும் அடங்கும்.  2016-17ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பி.எம்.கே.எஸ்.ஒய் திட்டத்துக்கான முன்னுரிமைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள ஏ.ஐ.பி.பின் கீழ் உள்ள 89 நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உடனடியாக 80.6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்திவிட முடியும். அடுத்த ஆண்டுக்கு தேவைப்படும் நிதித்தேவை ரூ.17,000 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அதே போன்று தொடர்ச்சியாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேவைப்படும் நிதி ரூ.86,500 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 31 மார்ச் 2017க்குள் மேற்சொன்ன 89 நீர்ப்பாசனத் திட்டங்களில் 23 திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நபார்டு வங்கியில் நீண்டகால நீர்ப்பாசன நிதியம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தொடக்க நிதி முதலீடாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற 2016-17ல் பட்ஜெட் மூலமும் சந்தையில் கடன் வாங்குவதன் மூலமும் ரூ.12,517 கோடி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீர் சேமிப்பு மற்றும் நீர் அறுவடைக்கு புத்தாக்கமான நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்யுக்தவிவர் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. நிறுவன சமூகப் பொறுப்புடைமை (சி.எஸ்.ஆர்) நிதியைப் பயன்படுத்தி நீர்நிலைகளை உருவாக்குவதும் புனரமைப்பு செய்வதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். கர்நாடக அரசாங்கம் நுண்நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான மானியத்தை அதிகப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மானியத்தோடு கூடுதலாக மானியம் அளித்து சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகளுக்கான மானியத்தை 100%ஆக அதிகரித்து உள்ளது. நிலம்நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அவர்களுக்கு வழி காட்டும் விசேஷமான அமைப்பை குஜராத் மாநிலம் நிறுவனமயப்படுத்தி உள்ளது. மத்திய நிதியை குஜராத் பசுமைப் புரட்சிக் கழகம் பெறுகிறது. பின்னர் நுண்நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுகின்றது. ஆரம்ப மூன்று ஆண்டுகளுக்கான பராமரிப்புக்கு வழிகாட்டுகின்றது. ராஜஸ்தான் மாநிலம் கால்வாய் பாசன இடங்களில் கிணறு மற்றும் தெளிப்பு முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. கால்வாய், மூடப்படுதல், உடைதல், நீர்ப்பற்றாக்குறை ஆகிய அம்சங்கள் சாதாரண நிகழ்வாக ஏற்படும் பகுதிகளாக இவை இருக்கின்றன. நீர் சேமிப்பு, நீர் அறுவடை மற்றும் நீரைத் திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு புத்தாக்கமான மற்றும் ஒருங்கிணைந்த நடைமுறைகளை பிற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

பிரதான் மந்திரி கிருஷி பீம யோஜனா

2016ஆம் ஆண்டின் கரீஃப் பருவத்தில் இருந்து பிரதான் மந்திரி ஃபசல் பீம யோஜனா நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண் காப்புறுதித் திட்டம் (என்.ஏ.ஐ.எஸ்) மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்புறுதித் திட்டம் (எம்.என்.ஏ.ஐ.எஸ்) ஆகிய இரண்டுக்கும் பதிலாக இந்தப் புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் பயிர் / நிலத்துக்கான காப்புறுதி பிரீமியத்தில் விவசாயிகளின் பங்கினை நாடு முழுவதும் சீரமைத்தல். காப்புறுதித் தொகையில் உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச பங்குத்தொகை 2% என்பதற்கேற்ப இதனைக் குறைத்தல். இந்த 2% என்பது கரீஃப் பருவ உணவு தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகளுக்குப் பொருந்தும், ரபீ பருவ உணவு தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகளுக்கு 1.5% பொருந்தும். அதே வேளையில், கரீஃப் மற்றும் ரபீ பருவ வருடாந்திர வர்த்தகப் பயிர்கள் / வருடாந்திர தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5% பொருந்தும். 2016-17ஆம் ஆண்டுக்கு ரூ5,500 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் கரீஃப் பருவம் முதலே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி ஆபத்துக்குள்ளாகும் பயிர் உற்பத்தியை மேற்கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரும் நிவாரணமாக அமையும் அம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

மண் ஆரோக்கிய அட்டை திட்டம்

பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு இந்தியாவில் உரத்தின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இந்த உரப்பயன்பாடு முறையற்ற சமச்சீரற்ற விகிதத்தில் யூரியாவின் பயன்பாட்டுக்கு சாதகமாக அமைந்து விட்டது. யூரியாதான் நைட்ரஜனுக்கு ஆதார மூலமாகும். 1970களின் தொடக்க ஆண்டுகளில் நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) இடையிலான சராசரி விகிதம் 6:19:1 ஆக இருந்தது. இந்த விகிதாச் சாரம் நைட்ரஜனுக்குச் சார்பானதாக மாறி 1996ஆம் ஆண்டில் 10:29:1 என்றானது. பிறகு எதிர்மாறாக நைட்ரஜன் பயன்பாட்டு விகிதம் ஓரளவு குறைந்தது. எனினும் 2012-13ஆம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம் 8.2:32:1ஆக இருந்தது. இந்திய விவசாயிகள் அதிகப்படியாக யூரியா பயன்படுத்துகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. மேலே கூறிய புள்ளி விவரங்கள், இந்த கருத்து மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட கருத்து என விளக்குகின்றது. மண்வகை, பயிர் வகை; நீர்ப்பாசனம், மழைநீர் மட்டுமே கிடைக்கும் பாசன நிலம் போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விரிவான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இப்போது விவசாயிகளின் நிலத்தின் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல்களை அவர்களுக்குத் தெரிவிப்பதற்காக மண் ஆரோக்கிய அட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னுடைய நிலத்தின் ஊட்டச்சத்து தன்மை குறித்த விவரம் தெரிந்தால் விவசாயி உரங்களை எந்த விகிதத்தில் நியாயமாகப் பயன்படுத்தலாம் என முடிவு எடுப்பது எளிதாகலாம்.

பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் இயற்கைமுறை விவசாயம்

மழைநீரை மட்டுமே நம்பி உள்ள விவசாயப் பகுதிகளில், பயிர் விளைச்சலை அதிகரிக்க இயற்கைமுறை விவசாயத்தை அறிமுகப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சாகுபடி நிலத்தில் மழைநீரை மட்டுமே நம்பியுள்ள நிலத்தின் பங்கு 55% ஆகும். இதற்காக அரசாங்கம் இரண்டு முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் திட்டம் "பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா” ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்றாண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும். இரண்டாவதாக அரசு மதிப்புக்கூட்டு தொடர் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் பெயர் "வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை முறை விவசாய மதிப்புத் தொடர் மேம்பாட்டுத் திட்டம்" என்பதாகும். இதன் முக்கிய நோக்கம் மதிப்புக் கூட்டல் ஆகும். இந்தப் பிராந்தியங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை முறை விவசாய விளைபொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பதற்கு உதவி அளிக்கப்படும். இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ412 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தேசிய வேளாண் சந்தை (என்.ஏ.எம்)

வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை அமைப்புகள் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வுகளாலும் தீர்வை மற்றும் மண்டி வரி விதிப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தச் சந்தை எல்லா மாநிலங்களிலும் வெளிப்படையானதாகவோ ஒரே சீரானதாகவோ இருப்பதில்லை. லாபகரமான விலையை விவசாயிகள் பெறுவதற்கு இவை பெரிய தடைக்கற்களாக உள்ளன. ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாய விளைபொருட்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மோசமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

விலை நிலைப்படுத்தலுக்கான நிதியம் (பி.எஸ்.எஃப்)

விவசாயம் செய்யும் போது எதிர்பாராத விலை ஏற்றத்தாழ்வு என்பதுதான் விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஆகும். விவசாயம் முடிந்த பிறகு விளைபொருளை விற்பனைப் பருவத்தில் விற்க முயலும் போது விவசாயிக்கு மிகக்குறைந்த லாபத்திலேயே விலை அமைந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயம் விவசாயியே அந்தப் பொருளை வாங்க நினைக்கும் போது அவரது வாங்கும் திறனைத் தாண்டி பலமடங்கு அதிகமாக அந்தப் பொருளின் விலை அமைந்து விடுகின்றது.

ராஷ்ட்ரீய கோகுல் மிஷன்

விவசாயப் பிரிவில் மொத்த மதிப்புக் கூட்டலில் கால்நடை 25 சதவிகிதம் பங்கு வகிப்பதோடு 21 மில்லியன் பேருக்கு சுய வேலை வாய்ப்பையும் வழங்கி உள்ளது. அதிக வேகமான வளர்ச்சி கண்டுவரும் வேளாண் பிரிவாக இது திகழ்கின்றது. எந்த விதமான துன்ப நிலையையும் எதிர்த்து சமாளிப்பதற்கான வாய்ப்பை கால்நடைப் பிரிவு வழங்குகின்றது. மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்துக்கும் வழிவகை செய்கின்றது. உள்நாட்டு கால்நடை வகைகளை பாதுகாப்பதற்காக 2014-15ல் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் தொடங்கப்பட்டது. உள்நாட்டு கால்நடை வகைகளை இனப் பெருக்கம் செய்வதற்காக, ஒருங்கிணைந்த கால்நடை மேம்பாட்டு மையங்கள் (கோகுல் கிராம்) அமைப்பது இந்த இயக்கத்தின் நோக்க மாகும்.

தேசிய காமதேனு இனப்பெருக்க மையம்

உள்நாட்டு இனப்பெருக்கத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் தேசிய காமதேனு இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு மையம் வட இந்தியப் பகுதியிலும் மற்றொரு மையம் தென்னிந்தியாவிலும் அமைகின்றது. உள்நாட்டு கால்நடை இனப்பெருக்கத்தை உள்நாட்டு முறையிலும் விஞ்ஞான முறையிலும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உருவாக்கப்படும் இந்த மையங்கள் உயர்சிறப்பு மையங்களாக செயல்படும். உள்நாட்டு மாட்டு இனப்பெருக்க வகைககள் (39 ஆடு மாடுகள் மற்றும் 13 எருமைகள்) மிதுன், யாக் ஆகியவற்றின் மாதிரி மந்தைகள் பாதுகாக்கப்படும். அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் மரபணுவியல் திறனை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடக்குப் பிராந்தியத்துக்கான காமதேனு இனப்பெருக்க மையத்தை அமைப்பதற்கு மத்தியபிரதேசத்துக்கும் தென்பிராந்தியத்துக்கான மையத்தை அமைப்பதற்கு ஆந்திரப்பிரதேசத்துக்கு தலா ரூ.25கோடி தரப்பட்டுள்ளது.

நீலப்புரட்சி

மீன்வள மேம்பாட்டுக்கும் மீனவர் சமுதாய மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் நீலப் புரட்சி என்ற பதாகையின் கீழ் மீன்வள ஒருங் கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப் பட்டு உள்ளது. இந்த நீலப்புரட்சியின் குறிக்கோள்களை அடைவதற்காக வகுக்கப் பட்டுள்ள பல்வேறு மீன்வளத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ3,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.


கால்நடை மேம்பாட்டுத்திட்டம்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : ஜே.பி.மிஸ்ரா, வேளாண் ஆலோசகர், நிதி, ஆயோக், இந்திய அரசு.

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top