பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / சர்க்கரைப் பயிர்கள் / கரும்பு சாகுபடி / நீடித்த கரும்பு சாகுபடி முறையில் ஊடுபயிர்கள் சாகுபடி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீடித்த கரும்பு சாகுபடி முறையில் ஊடுபயிர்கள் சாகுபடி

நீடித்த கரும்பு சாகுபடி முறையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கரும்பு ஏறத்தாழ ஓராண்டு வயதுடைய ஒரு வணிகப்பயிர் ஆகும். இது பொதுவாக 80-90 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யப்படுகின்றது. தற்பொழுது நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் பயிர் வரிசைக்களுக்கிடையே அதிக இடைவெளியாக 150 செ.மீ. (அதாவது 5 அடி) வரை பின்பற்றப்படுகின்றது. இவ்வாறு அதிகமான இடைவெளி இருப்பதாலும் கரும்பின் ஆரம்பகால வளர்ச்சி மெதுவாக இருப்பதாலும் பயிர் வரிசைகளுக்கிடையே களைச் செடிகள் அதிகமாக வளர்ந்து, சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக பயிருடன் போட்டியிடுவதால் கரும்புப்பயிரின் வளர்ச்சி வீதம் குறைகின்றது. மேலும், பயிர் வளர்ந்து அதன் இலைகள் நிலப்பரப்பை முழுமையாக மூடுவதற்கு சுமார் 4 - 5 மாதங்கள் ஆகும். அதுவரை களைகளின் ஆதிக்கம் கரும்புப் பயிரில் அதிகமாகக் காணப்படுகின்றது.

கரும்பு பயிருக்கு அதிக இடுபொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும், இது, பார் அமைத்தல், நடவு செய்தல், களையெடுப்பு, தோகை உரித்தல், விட்டம் கட்டுதல் மற்றும் அறுவடை என அதிகமான ஆட்கூலி தேவைப்படும் பயிராகும். இப்பயிர் மூலம் வருமானம் கிடைப்பதற்கு, ஓராண்டு காலம் ஆவதால் இடைப்பட்ட காலத்தில் விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் செலவுகளுக்கு விவசாயிகள் பிற தொழில்களையே சார்ந்திருக்க நேரிடுகிறது. எனவே, கரும்பில் ஊடுபயிர் சாகுபடி செய்தால், நிலத்தை முழுமையாக பயன்படுத்துவதுடன், இடைநிலை வருமானம் ஈட்டவும் ஏதுவாக அமையும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே வயலில் பயிரிடுவதே 'ஊடுபயிர் சாகுபடி' என்றழைக்கப்படுகின்றது.

கரும்பில் ஊடுபயிர் சாகுபடியின் நன்மைகள்

பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் தனி நபர் விவசாய சாகுபடிப் பரப்பு உள்ளிட்ட தற்கால கட்டத்தில், ஊடுபயிர் சாகுபடி என்பது நிலப்பயன்பாடு, நேரப்பயன்பாடு, தீவிரப்பயிர் சாகுபடி, அதிக வருமானம் போன்ற பயன்களுடன், அதிக வேலை வாய்ப்பையும் தரவல்ல ஓர் சிறந்த தொழில்நுட்பமாகும். மேலும், இது இடுபொருட்களைத் திறம்பட பயன்படுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான பல்வேறு வகை உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யவும், அதிக இலாபம் ஈட்டவும் உதவுகின்றது. இத்துடன், ஊடுபயிர் சாகுபடி முறையில் கரும்பைத் தாக்கும் கரிப்பூட்டை நோயின் நோய் பரப்பும் காரணிகளின் இயக்கத்தைக் குறைத்து, அந்நோயின் தாக்குதலைக் குறைக்கவும் இயலும். கரும்பில் சோயாபீன்ஸ் ஊடுபயிர் செய்யும் போது கரும்பின் தரம் சிறந்து விளங்குவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கரும்பில் ஊடுபயிர் செய்வதற்கான சாத்தியக் கூறுகள்

  • பயிர் வரிசைகளுக்கிடையே அதிக இடைவெளி (3 - 5 அடி) பின்பற்றுதல்
  • ஊட்டச்சத்து மற்றும் நீர்த்தேவைக்காக கரும்புடன் போட்டியிடாத பயிர்கள்
  • நிமிர்ந்து வளரும் தன்மை மற்றும் கரும்பின் வேரமைப்புடன் மாறுபட்ட வேரமைப்பு கொண்டிருத்தல்.
  • கரும்பைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளைத் தாங்கும் பயிராக இல்லாதிருத்தல்.

கரும்பில் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கேற்ற பயிர்கள்

வெப்ப மண்டல பகுதிகள் : பயறு வகைப் பயிர்கள் - உளுந்து, சோயாபீன்ஸ், பாசிப்பயறு எண்ணெய்வித்துப் பயிர்கள் - சூரியகாந்தி (முன்பட்டம்) காய்கறிப்பயிர்கள் - வெண்டை, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கீரை வகைகள் பசுந்தாள் உரப்பயிர்கள் - சணப்பு, தக்கைப் பூண்டு

மிதவெப்ப மண்டலப் பகுதிகள் : முன்பட்டம் - உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோசு, வெங்காயம், வெள்ளைபூண்டு, கோதுமை, பார்லி, கடுகு, பட்டாணி போன்றவையாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் உளுந்து, பாசிப்பயறு, சோயாபீன்ஸ் ஆகிய பயறு வகைப்பயிர்களும், சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு ஆகிய பசுந்தாள் உரப்பயிர்களும் கரும்பில் சிறந்த ஊடுபயிர்களாகப் பயிரிடப் படுகின்றன.

கரும்பில் ஊடுபயிர் பராமரிப்பு முறைகள்

  • ஊடுபயிர் என்பது கூடுதல் வருமானத்திற்காகப் பயிரிடப்படும் பயிரே ஆகும்.
  • நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில்  வரிசைகளுக்கிடையே 5 அடி இடைவெளி விடப்படுவதால் இம்முறை ஊடுபயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும்.
  • ஊடுபயிர் செய்ய இருக்கும் வயலில் ஏற்கெனவே கரும்பு பயிரிட்டு கரும்பில் அட்ரசின் களைக்கொல்லி பயன்படுத்தியிருப்பின், ஓராண்டு முடிந்த பின்னரே ஊடுபயிர் செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல் மற்றும் நடவு செய்தல்

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் 5 அடி இடைவெளி வரிசைகளில் கரும்பு நாற்றுக்களை 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இரண்டு கரும்பு வரிசைகளுக்கிடையில் பயறு விதைகளை 30 செ.மீ. இடைவெளி வரிசைகளில் பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். விதைத்தபின் வயலில் நன்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும். பயறு வகைப்பயிர்களுக்கு எக்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்தில் கால் பங்கு அதாவது 12.5 கிலோ மணிச்சத்து மட்டும் கரும்பின் அடியுரத்துடன் சேர்த்து வயலில் இட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

கரும்பு வரிசையின் இடைவெளியில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் களைகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும், பிரதானப் பயிரான கரும்பு மற்றும் ஊடுபயிர்களில் களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஊடுபயிர் செய்யப்பட்ட நிலையில் கரும்பிற்குப் பரிந்துரைக்கப்படும் பொதுவான களைக் கொல்லியான 'அட்ரசின்' மருந்தைப் பயன்படுத்துதல் கூடாது. மாறாக, ஒரு எக்டருக்கு தையோபென்கார்ப் (2.5 கிலோ / எக்டர்) அல்லது பென்டிமெத்தலின் (2.5 கிலோ/ எக்டர்) அல்லது அலக்குளோர் (2.5 கிலோ / எக்டர்) களைக்கொல்லி மருந்தினை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து, கரும்பின் மேல் படாத வண்ணம் விசிறி அல்லது டிப்ளெக்டர் வகை நாசில் கொண்ட கைத்தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர், 45-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பிரதானப் பயிரான கரும்பு மற்றும் ஊடுபயிர்களில் தென்படும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த போதுமான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பயிறு வகைப் பயிர்களை கரும்பில் ஊடுபயிராக இடுவதால் குருத்துப்புழுக்களின் தாக்குதல் குறைந்து காணப்படுகின்றது.

அறுவடை

  • ஊடுபயிர்களின் சரியான முதிர்ச்சிப் பருவத்தில் அவற்றை அறுவடை செய்திட வேண்டும்.
  • அறுவடைக்குப் பின் ஊடுபயிர்களின்  கழிவுகளை நிலத்தில் மண்ணோடு நன்றாக கலந்து விட வேண்டும். பின்பு, ஊடுபயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பினைச் சுத்தம் செய்து கரும்பு வரிசையில் மேலுரம் இட்டு, மண் அனைத்து உடனடியாக நீர்பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் கரும்பிற்குத் தேவையான அனைத்து உழவியல் நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும்.
  • பயறு வகைப் பயிர்களின் மூலம் 19 முதல் 28 சதவிகிதம் வரை கூடுதல் விளைச்சலும், 18 முதல் 42 சதவிகிதம் வரை கூடுதல் நிகர இலாபமும் கிடைக்கும்.

ஊடுபயிராக பசுந்தாள் உரப்பயிர்கள்

  • சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு ஆகிய பசுந்தாள் உரப்பயிர்களின் விதைகளை ரைசோபியத்துடன் விதைநேர்த்தி செய்து, எக்டருக்கு 10 கிலோ என்ற விதையளவில் கரும்பு நட்ட 3ம் நாளில் பார்களின் பக்கவாட்டில் 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • இவற்றை நட்ட 50 - 60 நாட்களில் மண்ணில் கலந்து விட வேண்டும். இதனால் கரும்பு வயலில் எக்டருக்கு 7.12.5 டன் அங்கக உரம் சேர்க்கப்பட்டு அதன் மூலம் 10-30 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது. மேலும் கரும்பின் விளைச்சல் எக்டருக்கு 10-12 டன் வரை அதிகமாக கிடைக்கும்.
  • மேலும், கரும்பு வயலில் குருத்துப்புழுக்கள் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதல் குறைகின்றது.
  • இதனால், பயிர் இடைவெளி சிறப்பான முறையில் பயன்படுவதோடு, களைகளையும் கட்டுப்படுத்தி, அதேசமயம் விவசாயிகள் இரட்டை வருமானம் பெறுவதும் இதில் சாத்தியமாகிறது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top