பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / தானியங்கள் / நெல் சாகுபடி / கூடுதல் மகசூல் பெற நெல் நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கூடுதல் மகசூல் பெற நெல் நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை

கூடுதல் மகசூல் பெற நெல் நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை

சம்பா நெல் நடவு சாகுபடி செய்யும் விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளில் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொண்டால் கூடுதல் மகசூல் பெறமுடியும். தற்போது சம்பா நெல் நடவுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடவு வயலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அளிப்பது இன்றியமையாதது. ஊட்டச்சத்து மேலாண்மையை முறையாக மேற்கொண்டால் நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் கிடைத்து நெல் பயிர்கள் நன்கு செழித்து வளரும்.

கரிம (அங்கக) உரங்கள்

1 ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் மற்றும் 2.5 டன் பசுந்தாள் உரமிட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை பூப்பூக்கும் முன்பு மடக்கி உழுதுவிட வேண்டும். இதை மடக்கி உழவு செய்யும்போது ஒரு அங்குலம் உயரத்துக்கு வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும். பசுந்தாள் மிதிப்பான் பயன்படுத்தி மண்ணுக்குள் மறையுமாறு அமிழ்த்துவிட வேண்டும். பசுந்தாள் தழை உரமெனில் சிறிது சிறிதாக நறுக்கி வயலில் பரப்பி மிதிப்பது நல்லது.

நுண்ணுயிர் உரங்கள்

அசோலா- சம்பா பருவத்துக்கு 1 ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை நடவு செய்த 3 முதல் 5 நாட்களுக்குள் பரவலாகத் தூவி நெற்பயிருடன் வளரவிட வேண்டும். அசோலா வளர்ச்சியடைந்தபிறகு களையெடுக்கும் போது களையெடுக்கும் கருவி மூலமாகவோ அல்லது காலால் வயலுக்குள் மிதித்துவிட வேண்டும்.


நெல் வயலில் அசோலா வளர்ப்பு

உயிர் உரங்கள்

ஓர் ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் 4 பொட்டலங்கள் (800 கிராம்) எடுத்து 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராகத் தூவி விட வேண்டும் அல்லது அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிரிகளை ஒவ்வொன்றிலும் 200 மில்லியை 1 லிட்டர் நீரில் கலந்து அதை நன்கு தூளாக்கப்பட்ட 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

சூடோமோனாஸ் புளோரசன்ஸ்

ஓர் ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் உயிர்ப் பூஞ்சாணத்தை 10 கிலோ தொழு உரத்துடனும் 10 கிலோ மணலுடனும் கலந்து நடவுக்கு முன்பு சீராகத் தூவினால், பயிருக்கு நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.

ரசாயன உரங்கள்

மண் பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே உரமிடுதல் வேண்டும். அவ்வாறு உரமிடுவதால் பயிரின் தேவைக்குக் குறைவாகவோ அதிகமாகவோ உரமிடுவதைத் தவிர்க்கலாம். இதனால், உரச் செலவு குறைகிறது. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் பொதுப் பரிந்துரையாக ஓர் ஏக்கருக்கு 33 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாகக் கடைசி உழவின்போது இட வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை

நெல் நுண்ணூட்டக் கலவையை ஓர் ஏக்கருக்கு 5 கிலோ அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பு சீராகத் தூவ வேண்டும். மாறாக இந்த நுண்ணூட்டக் கலவையை அடி உரமாக இடக்கூடாது. இந்த ஊட்டச்சத்து மேலாண்மையை நெல் நடவு வயலில் விவசாயிகள் மேற்கொண்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும்.

ஆதாரம் : தினமணி

3.02542372881
சூசைராஜ் Nov 04, 2019 11:02 AM

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெள்ளை பொன்னியில் கதிர்பிடித்தபின் நெல் கதிரில் குலை நோய் தாக்குகின்றது நெல் மணிகள் பதராகிவிடுகின்றது
42508

தண்டபாணி Jul 20, 2019 08:40 AM

நுண்ணூட்டச்சத்து நெல் பயிர் தெளிப்பதர்கு ஒரு லிட்டர் நீருடண் எவ்வளவு கிராம் சேர்க்கவேண்டும் ௯௨௬௫

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top