பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / தானியங்கள் / நெல் சாகுபடி / நெற்பயிரைப்பாதுகாக்க உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெற்பயிரைப்பாதுகாக்க உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பம்

நெற்பயிரைப்பாதுகாக்க உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

புதிய பி.டி. தொழில்நுட்பம்

நெற்பயிரைத் தாக்கும் நோய்களில் இலைக்கருகல் நோய் நெல் உற்பத்திக்கு சவாலாக உள்ளது. இந்த நோய் தாக்கத்தால் 6% முதல் 70% வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழையின் போது இந்த நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

இலைக்கருகல் நோயின் காரணி அறிகுறி மற்றும் பரவும் விதம்

நெற்பயிரின் இலைக்கருகல் நோய் சேந்தோமோனாஸ் ஒரைசே பேத்தோவார் ஒரைசே என்றும் பாக்டீரியல் நுண்ணுயிரியால் ஏற்படுத்தப் படுகிறது. இந்த நுண்ணுயிரி இலையின் காயமடைந்த பகுதியின் வழியாக அல்லது இயற்கையாக உள்ள ஹைடத்தோடு எனப்படும் இலைத்துளையின் வழியாக உட்புகுந்து தாவரத்தில் நீர் எடுத்து செல்லும் திசுவான சைலம் திசு குழாயின் உட்பகுதியில் பல்கி பெருகி சேந்தேன் என்னும் வேதிப்பொருளை அதிகமாக உற்பத்தி செய்து நீர் எடுத்து செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. நீர் பரவுவது தடைப்படுவதால் இலை நுனியிலிருந்து காய ஆரம்பித்து பின்பு இலை முழுவதும் பரவி காய்ந்து விடும். இலையானது சூரிய ஒளி மற்றும் இலை பச்சையத்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்ய இயலாது. இதனால் விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. பாக்டீரியல் நுண்ணுயிரி அதிகமாக பல்கி பெருகியவுடன் இலைத்துளையின் வழியாக மஞ்சள் நிற நீர் திவலையாக வெளிவரும். இதனால் காற்று அல்லது மழைத்துளி மூலமாக இந்த நோய் கிருமி பாதிக்கப்பட்ட செடியிலிருந்து பாதிக்கப்படாத செடிக்குப் பரவுகிறது.

நோய் எதிர்ப்பு தன்மையுடைய மரபணுக்கள்

  • பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக்கட்டுப்படுத்த வேதியியல் மருந்து இல்லை. எனவே நோய் எதிர்ப்புடைய ரகங்களைப் பயிரிடுவதே இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி. நோய் எதிர்ப்புத்தன்மையுடைய பல வகையான நெல் ரகங்களிலிருந்து 35க்கும் அதிகமான (Xa1, Xa2…….. Xa38) நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்கக் கூடிய மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
  • உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்புத்தன்மையானது மரபணு மூலக்கூறு குறியீடு தேர்வு (DNA marker Assisted Selection) மூலம் நோய் எதிர்ப்புத் தன்மையுடைய ரகத்திலிருந்து அதிக விளைச்சல் தரக்கூடிய நோய் எதிர்ப்புத்திறனற்ற ரகத்திற்கு மாற்றப்படுகிறது.
  • இரண்டு அல்லது மூன்று நோய் எதிர்ப்புத்தன்மையுடைய மரபணுக்களை ஒன்றாக இணைத்து இலைக்கருகல் நோயை உருவாக்கக்கூடிய அனைத்து வகையான பாக்டீரியா நுண்ணுயிரிக்கு எதிர்ப்புத்தன்மை உருவாக்கப்படுகிறது.
  • Xa5, Xa7, Xa13, Xa21 ஆகிய மரபணுக்களின் கூட்டு சேர்க்கை அதிகமாக நோய் எதிர்ப்பு தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.  Xa13, Xa21 மரபணுக்களின் கூட்டு சேர்க்கை இந்தியாவில் இலைக்கருகல் நோய்க்கு காரணமான அனைத்து வகையான பாக்டீரியாக்களுக்கு சிறந்த எதிர்ப்புத்தன்மை உருவாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
  • இந்த மரபணுக்கள் உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களான பூசா பாசுமதி, BPT5204 (சோன மசூரி), திரிகுணா மற்றும் பல ரகங்களிலும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் ரகத்திலும் பயன்படுத்தப்பட்டு விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டு நோய் எதிர்ப்புத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம், புதுடில்லி, நெல் ஆராய்ச்சி கழகம், ஹைத்ராபாத், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், ஒரிஸா, பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம், லூதியான், வேளாண்மைப் பல்கலைக்கழகம் தார்வார்ட், கர்நாடகா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இலைகருகல் நோய்க்கான எதிர்ப்புத்தன்மை உடைய ரகங்களை மரபணு மூலக்கூறு குறியீடு தேர்வு மூலமாக உருவாக்கி ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.

விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்தும் புதிய பி.டி. தொழில்நுட்பம்

பி.டி. என்பது என்ன?

பி.டி. என்பது ஒரு பாக்டீரியா நுண்ணுயிரி. இதன் முழு பெயர் பேசில்லஸ் துரிஜியன்சிஸ். இதன் சுருக்கமான பெயர்தான் பி.டி. இது மண்ணில் வளரக்கூடியது. இந்த பி.டி. உருவாக்கக்கூடிய ஒரு கிரிஸ்டல் புரதம் பயிர்களுக்கு பெரிய அளவில் சேதத்தை உருவாக்கக் கூடிய லெபிடாப்டிரன் குடும்பத்தைச் சேர்ந்த புழுக்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அப்புழுக்களை அழித்து பயிர்களைப் பாதுகாப்பு செய்யக்கூடியது. உதாரணமாக பருத்தி காய்ப்புழு, மக்காச்சோள கதிர்ப்புழு கத்திரியில் காய் மற்றும் தண்டுப்புழு, நெல்லில் தண்டுத்துளைப்பான் மற்றும் பல. ஒவ்வொரு பூச்சி குடும்பத்திற்கும் தனித்தனி பி.டி. புரதங்கள் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. ஒரே பி.டி. புரதம் பல பூச்சிக் குடும்பங்களைக் கொல்வதில்லை.

பி.டி. புழுக்களைக் கொல்லும் விதம்

புழுவானது பி.டி. நுண்ணுயிரியை சாப்பிடும் பொழுது, பி.டி. உருவாக்கக்கூடிய நச்சுப்புரதம் பூச்சியின் உணவுக்குடலில் செயல்படத் தொடங்குகிறது. பூச்சியின் உணவு மண்டலம் காரத்தன்மை (பி.எச்.10.5) கொண்டது. இந்த காரத்தன்மை பி.டி. புரதத்தின் வீரியத்தை அதிகப்படுத்தி உணவுக்குழாயில் துளையை ஏற்படுத்தி உணவுக்குழாயை சேதப்படுத்தி புழுவை சாப்பிட முடியாமல் செய்கிறது. இதனால் புழு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது.

முந்நாட்களில் பி.டி.யை புழுக்களை அழிப்பதற்கு பயன்படுத்திய முறை

முந்நாட்களில் பி.டி. நுண்ணுயிரி நொதித்தல் முறை மூலம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 50 வருடங்களாக பி.டி.யை உயிரி பூச்சி மருந்தாக விவசாயிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மிகச்சில பூச்சி மருந்துகளில் பி.டி.யும் ஒன்று. இந்த பி.டி. உயிரி பூச்சிக்கொல்லி மருந்தை பயிரில் தெளிக்கும் திரவ வடிவமாகவும் அல்லது மண்ணில் இடும் துகள் உருண்டையாகவும் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த இரண்டு முறையிலும் புழுவானது இலையின் அடிப்பகுதிக்கு அல்லது தண்டு மற்றும் காயின் உட்பகுதிக்குத் துளையிட்டு சென்று விட்டால் பி.டி.யை புழுவால் உண்ண முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்தக் குறைகளைக் களைய வேளாண் விஞ்ஞானிகளால் புதிய தொழில்நுட்பம் கையாளப்பட்டது. வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்து பூச்சியின் மேல் படுவதாலும், மருந்து தெளித்த இலை, காய் மற்றும் தண்டுப்பகுதியை உண்பதாலும் பூச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. பி.டி. புரதம் பூச்சியின் உணவுக்குடலில் மட்டும் நச்சாக மாறி பூச்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்றைய நவீன பி.டி. தொழில்நுட்பமுறை

வேளாண் விஞ்ஞானிகள் பி.டி. நுண்ணுயிரியிலிருந்து புழுக்களுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும் கிரிஸ்டல் புரதத்தை உருவாக்கக் காரணமான மரபணுவைப் பிரித்து எடுத்து அந்த மரபணுவை பயிர் மரபணுவுடன் இணைத்து விடுகிறார்கள். இதனால் பயிரானது பி.டி. கிரிஸ்டல் புரதத்தை சொந்தமாக உற்பத்தி செய்து பயிரை தாக்கும் புழுக்களிடம் இருந்து தற்காப்பு செய்து கொள்கிறது. மேலும் பயிர் உருவாக்கும் இந்த கிரிஸ்டல் புரதம் நீரினால் அல்லது மழையால் பயிரிலிருந்து நீக்கப்படுவதில்லை மற்றும் சூரிய ஒளியினால் சிதைக்கப்படுவதும் இல்லை. இந்த பி.டி. பயிர் நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் புழுக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இந்த பயிருக்கு “வேற்று மரபணு தாங்கிய பயிர்” என்று பெயர். ஆங்கிலத்தில் “டிரான்ஜினிக் பிளாண்ட்” என்று கூறுவர். இந்த தொழில்நுட்பத்திற்கு “மரபணு மாற்றம்” என்று பெயர். ஆங்கிலத்தில் “டிரான்ஜினிக் டெக்னாலஜி” என்று அழைப்பர். Cry1 AC மற்றும் Cry2 Ab ஆகிய இரு மரபணுக்கள் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் கிரிஸ்டல் புரதத்தை உருவாக்க பி.டி. தொழில்நுட்பத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பி.டி. தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்படும் விளைவு

  • பி.டி. யால் மனிதனுக்கு ஏற்படும் விளைவு ஏதும் இல்லை.
  • பி.டி. கிரிஸ்டல் புரதம் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பூச்சி குடும்பத்திற்கு மட்டுமே நச்சுத்தன்மையை உருவாக்கக் கூடியது. இதுதான் பி.டி. கிரிஸ்டல் புரதத்தின் சிறப்பு தன்மை. இந்த கிரிஸ்டல் புரதம் காரத்தன்மை உடைய (பி.எச்.10.5) உணவு குடலில் ஒரு குறிப்பிட்ட அல்லது சிறப்பு தொடர்பு பகுதியில் மட்டும் ஒட்டும் தன்மை கொண்டது. இந்த ஒட்டுதலால் நச்சு ஏற்படுத்தப்படுகிறது. இந்த சிறப்பு தொடர்பு பகுதியில் மட்டும் ஒட்டும் தன்மை கொண்டது. இந்த ஒட்டுதலால் நச்சு ஏற்படுத்தப்படுகிறது. இந்த சிறப்பு தொடர்பு பகுதி சில குறிப்பிட்ட (லெபிடாப்டிரன்) பூச்சி குடும்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சிறப்பு தொடர்பு பகுதி மற்ற பூச்சி குடும்பத்திற்கோ, விலங்கிற்கோ அல்லது மனிதனுக்கோ நச்சுத்தன்மை அல்லது தீங்கு ஏற்படுவதில்லை. எனவே பி.டி. கிரிஸ்டல் புரதத்தினால் ஒரு உயிரிக்கு தீங்கு அல்லது நச்சு ஏற்பட வேண்டுமானால் அந்த உயிர் சிறப்பு தொடர்பு பகுதியை தன் காரத்தன்மை உடைய (பி.எச். 10.5) உணவு குடலில் பெற்றிருக்க வேண்டும். மேலும் மனிதனின் உணவு மண்டலம் அமிலத்தன்மை கொண்டது.
  • ஆய்வக சோதனையில் 18 நபர்கள் 1 கிராம் பி.டி. நுண்ணுயிரியை 5 முறை 10 நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டும் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டும் இருந்த போது அந்த நபர்களுக்கு கிரிஸ்டல் புரதத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த பி.டி. உருவாக்கக் கூடிய கிரிஸ்டல் புரதம் செரிமான நொதியால் மனித உணவு மண்டலத்தில் விரைவில் சிதைக்கப்படுகிறது.
  • பி.டி. யால் மண்வளம் மற்றும் நிலத்தடி நீரில் விளைவு
  • மண்ணில் பி.டி.கிரிஸ்டல் புரதம் மிதமான நிலைப்பு தன்மை உடையது. பி.டி.கிரிஸ்டல் புரதம் மண் துகள்களுடன் ஒட்டிக்கொள்வதால் நிலத்தடி நீருடன் கலப்பதில்லை. ஆதலால் நீரின் தூய்மை கெடுவதில்லை. அமிலத்தன்மை உடைய மண்ணில் இந்தப்புரதம் நிலைத்திருப்பதில்லை. சூரிய ஒளியில் இப்புரதம் படும்போது சூரிய ஒளியில் உள்ள U.V. அலைக்கற்றையால் விரைவாக சிதைக்கப்படுகிறது. பி.டி. உருவாக்கும் கிரிஸ்டல் புரதம் மண்ணில் மூன்று முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும் பின்பு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் கிரிஸ்டல் புரதம் சிதைக்கப்படுகிறது. பி.டி. மரபணு உடைய பயிர் பயிரிடப்பட்ட நிலத்தில் உள்ள மண் நுண்ணுயிரிகளின் வகை மற்றும் எண்ணிக்கையில் எந்த வித பாதிப்பு மற்றும் வேறுபாடும் காணப்படவில்லை.

பி.டி.யால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு

ஆய்வக சோதனை நடத்தியதன் படி நாய், பன்றி, எலி, மீன், தவளை மற்றும் பறவைகளுக்கு பி.டி. புரதத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விவசாயத்தில் நன்மை தரும் பூச்சிகளான ஊண் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

பி.டி. பயிரின் நன்மைகள்

  • பி.டி. பயிரானது பருவம் முழுவதும் பூச்சி எதிர்ப்புத்தன்மை பெற்றுள்ளது.
  • வேதி பூச்சி மருந்து தெளிப்பதைக் குறைத்துள்ளது. இதனால் பூச்சி மருந்து வாங்க செலவாகும் பணத்தையும் பூச்சி மருந்து தெளிக்க ஆகும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
  • இது பூச்சி தாக்குதலினால் ஏற்படும் விளைச்சல் குறைவதை தடுத்து அதிக விளைச்சலைக் கொடுக்கிறது.
  • பி.டி. குறிப்பிட்ட பூச்சி குடும்பத்திற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பயிருக்கு தீங்கு தரும் பூச்சி இனங்களை அழிக்க உதவுகிறது.
  • மனிதன் வேதியியல் பூச்சி கொல்லி மருந்துடன் தொடர்பு கொள்ளும் நிலைமையைக் குறைக்கிறது.
  • பி.டி. விரைவில் சிதைந்து விடுவதால் மண் மற்றும் நீர் மாசுபடுவது தடுக்கப்படுகிறது
  • வேதியியல் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் மண், நீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுபாடு குறைகிறது.
  • உணவுப்பொருட்கள் வேதியியல் பூச்சி கொல்லிகளின் எஞ்சிய நஞ்சில்லாமல் கிடைக்கிறது.

பி.டி. பயிர் பயிரிடுவதால் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகள்

பூச்சியானது பி.டி. நச்சு புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைவதைக் கட்டுப்படுத்த 20% பி.டி. அல்லாத பயிரும் 80% பி.டி. பயிரும் நிலத்தில் பயிரிட வேண்டும். பி.டி. அல்லாத 20% பயிரில் வளரும் பூச்சிக்கும் 80% பி.டி. பயிரில் வளரும் பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைந்த பூச்சிக்கும் இடையே பிறக்கும் சந்ததி பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை இல்லாததாக இருக்கும். எனவே 20% பி.டி. அல்லாத பயிரைப் பயிரிடுவதால் பூச்சியானது பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைவதைத் தாமதமாக்குகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.96296296296
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top