பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெல் சாகுபடி சாவல்களும், தீர்வுகளும்

நெல் சாகுபடி சாவல்களும், தீர்வுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பொதுவாக தமிழ்நாட்டில் நெல் சாகுபடி சேற்று உழவியல் நாற்று விட்டு நடவு செய்தல், புழுதியில் விதைத்தல் என இரு மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யப் படுகின்றது. இவற்றில் சேற்றில் நாற்று விட்டு நடவு செய்தல், நேரடி நஞ்சை விதைப்பு சேற்றில் ஈர நெல், புழுதியில் வறள் விதைப்பு (மானாவாரி, புழுதி விதைப்பு கூடுதல் பாசனம் மற்றும் புழுதி விதைப்பு கால்வாய்ப் பாசனம் உட்பட), மேட்டு நில வறள் விதைப்பு, நீர் விதைப்பு என்பவை பெரும்பான்மையான இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் முறையாகும்.

தமிழ்நாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் புழுதியில் நேரடி விதைப்பு பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றில் 80 விழுக்காட்டிற்கும் மேல் புழுதி நெல் விதைப்பு சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

வங்க கடலோர மாவட்டமாக உள்ளதால் வேளாண்மைக்கான நீரை தீர்மானிக்கும் காரணியாக வடகிழக்கு பருவமழை திகழ்கிறது. இது கடைக்கோடி மாவட்டமாக இருப்பதால் மழை நீர் ஆற்று நீராக மாறி ஆற்றுக்கால்வாய்ப் பாசன வசதி பெற வாய்ப்பில்லை. மேலும், வைகை நதியின் நீர் வரத்து இம்மாவட்டம் வரை நீள்வது அரிதான ஒன்று. எனவே, இம்மாவட்ட உழவர்கள் பெரும்பாலும் மானாவாரி பயிர்த்திட்டங்களையே செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், இம்மாவட்டம் முழுமையும் கண்மாய்கள் நிறைந்து காணப்படுகிறன. இக்கண்மாய்கள் மழை நீரை சேமிக்கும் அமைப்புகளாக செயல்பட்டு பெய்யும் நீரைத்தேக்கி வைத்து வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு மழை நீரை சேமித்து வைத்து அதிலிருந்து பாசன வசதி பெறுவதற்கும் வாய்ப்பு குறைவு. ஏனெனில், தேக்கி வைக்கப்படும் நீர் பயிர்காலம் முழுவதும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் இருப்பதில்லை. எனவே, முதல் மழை தொடங்கியதில் இருந்து அதை வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்படுகிறது.

சாகுபடி முறைகள்

இம்மாவட்ட உழவர்கள் தாங்கள் பெறவிருக்கும் முதல் மழையையும் பயன்படுத்தும் நோக்கில் புழுதி உழவு செய்து வைக்கப்பட்ட வயல்களில் "முன் பருவிதைப்பு" மேற்கொள்கின்றனர். இத்தகைய முன் பருவ விதைப்பு செய்யும் போது நெல் விதையை வறளாகவே பயன்படுத்துகின்றனர்.

எதிர்பார்த்த முதல் அல்லது இரு வாரங்களுக்குள் பெறப்படும் முதல் மழையில் விதைகள் முளைக்கும். மழைச்செறிவு காலம் சாதகமாக இருக்கும் நிலையில் கனமழை தொடங்கும் முன் பயிர்கள் முதல் களை எடுக்கும் பருவம் அல்லது தூர்க்கட்டும் பருவத்தை அடைந்துவிடுகின்றன. பின்னர் பெறப்படும் கனமழையினால் கண்மாய்கள் நிரம்பப்படுமாயின், இந்த நெல் சாகுபடி பாசன சாகுபடியாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. மாற்றாக, இவ்வாறு புழுதி விதைப்பு சாகுபடி செய்ய தாமதம் ஆனாலோ, வாய்ப்பு அமையவில்லை என்றாலோ உழவர்கள் கண்மாய்கள் நிரம்பிய பிறகு சேற்று வயல் அடித்து நாற்று விட்டு நடவு செய்கின்றனர். இவ்வாறு செய்யும் போது ஆரம்பம் முதல் கடைசி வரை இறவைப் பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும், இம்மாவட்டத்தில் நான்கு பெரிய கண்மாய்கள் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் சுமார் 25000 ஏக்கர் அளவிற்கு நெல் நடவு செய்யப்படுகின்றது.

நெல் சாகுபடி சவால்கள்

இவ்வாறு இரண்டு வகையாக நெல் சாகுபடி செய்தாலும் மிகக் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. புழுதி நெல் விதைப்பு சாகுபடி செய்யப்படும் போது முதல் மழை தாமதமானால், விதையின் முளைப்புத்திறன் எதிர்ப்பார்க்கப்படும் அளவை விட மிகவும் குறைந்துவிடுகின்றது, சில சமயம் பொய்ந்தும் விடுகிறது அல்லது முதல் மழையினால் முளைப்பு வந்த பிறகு அடுத்த மழை தாமதப்படும் போது முளைத்தவை அனைத்தும் கருகும் வாய்ப்பு அமைந்து விடுகின்றது. நடவு செய்யப்படும் வயல்களைப் பொருத்த வரை காலம் தாழ்த்த செய்யப்படுவதால் பின் மழை எதுவும் பெறப்படுவதில்லை. மேலும், கண்மாயில் உள்ள நீர் போதுமானதாக இல்லாத கட்டத்தில் பால் பிடிக்கும் அல்லது கதிர் முற்றும் தருணங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது.

மாற்று வழிகள்

நேரடியாக புழுதி விதைப்பு செய்யப்படும் போது பெரும்பான்மையான உழவர்கள் கை விதைப்பாக விதைக்கின்றனர். அவ்வாறு கை விதைப்பாக செய்யப்படும் போது விதைகள் மிகுந்த அடர்த்தியாகவோ, மிகவும் பரவலாகவோ விழ வாய்ப்புள்ளதால் சரிசமமான முளைப்புத் திறனும், வளர்ச்சியும் இல்லாமல் போய் விடுகின்றது. மேலும், மிக நெருக்கமான விதைப்பு பயிர்களுக்கு இடையேயான பயிர் இடைவெளியைக் குறைப்பதனால் போதியநீர், காற்று, சூரிய ஒளி, சத்துக்கள் கிடைப்பதில் இடர்பாடு ஏற்படுகின்றது. மேலும், பூச்சி நோய்த் தாக்குதலுக்கு எளிதாக ஆட்பட்டு இழப்பை சந்திக்கின்றது.

இச்சிக்கலை சரி செய்ய டிராக்டரினால் இயக்கப்படும் விதைப்புக் கருவியைப் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது போதுமான பயிர் இடைவெளி பின்பற்றப்படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது. பூச்சி நோய்த் தாக்குதல் தவிர்க்கப்படுகின்றது.

நடவு செய்யப்படும் போது 30 லிருந்து 35 நாள்கள் வயதுள்ள நாற்றுக்களை நடுகின்றனர். குறுகிய காலப் பயிர்களுக்கு பதிலாக மத்திய, நீண்ட வயதுடைய இரகங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் பயிர் சாகுபடிக் காலம் அதிகரிப்பதால் பின் பருவ வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. மேலும், நடவில் மிக நெருக்கமாகவும், ஒரு குத்திக்கு சுமார் 4 முதல் 5 நாற்றுக்களை வைப்பதாலும் மேற்சொன்ன அதே காரணங்களால் விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றது. இதற்குத் தீர்வாக இயந்திர நடவு செய்யலாம். அவ்வாறு செய்யப்படும் போது 15 நாள் நாற்றுக்கள், குத்திற்கு 1 அல்லது 2 வீதம் நடப்படுகின்றது. எனவே, போதுமான, சரியான பயிர் இடைவெளி, இயந்திரக்களையெடுப்பு, குறைவான ஆட் செலவு போன்ற காரணங்களால் இடுபொருள் செலவு குறைக்கப்பட்டு அதிக கிளைகள் வெடித்து தானியங்கள் நன்கு திரண்டு கூடுதல் விளைச்சலைப் பெறலாம். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இக்கருத்தை மெய்ப்பிக்க துணைபுரிகின்றன.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை.

2.95575221239
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top