অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்

நோக்கம்

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.

மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.

இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.

சட்டங்கள்

பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.

  • இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”
  • மேற்கூறிய சட்ட வாசகத்தில் “இயற்கை முறை” என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.
  • குறி்ப்பாக திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.
  • மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.
  • இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.

திருநங்கைகள்

இந்நிலையில் திருநங்கைகள் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

  • திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.
  • ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.
  • திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.
  • இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

  • அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.
  • சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.
  • இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் “மெக்காலே” என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.
  • மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.
  • ஆனால், “தன்பாலின இச்சை” இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.
  • அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)
  • இந்த சட்டப்பிரிவின்படி, “இயற்கைக்கு மாறான காம இச்சை”யுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக “கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம்” என்பதாகவே கருதப்படும்.
  • எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.
  • இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.
  • அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.

ஆதாரம் : லாயர்ஸ் லைன் – மக்கள் சட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate