பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 1. ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.
 2. மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.
 3. கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 4. கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உயர்நீதிமன்றமே ஆர்வம் காட்டாத நிலையில், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கைது செய்யப்படுபவரின் உரிமைகளை பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே!

எனினும் மனித உரிமை என்பதே அதை பயன்படுத்தும் விழிப்புணர்வுடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் முழுமை அடையும். எனவே கைது செய்யப்படுவோரின் உரிமைகள் குறித்த முழுமையான விழிப்புணர்வும், இதை வலியுறுத்தும் செயல்பாடுகளுமே நீதிமன்றத்தையும் சட்டத்தின்பாதையில் செலுத்தும்.

கைது செய்யப்படும் நபர்களின் உரிமைகள் இது மட்டுமல்ல. சட்டரீதியாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இன்னும் ஏராளமான உரிமைகள் (கருத்தளவில்  மட்டுமே) உள்ளன.

கைது – ஏன்? எதற்கு? எப்படி?

 • குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.
 • நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைது”தான்.
 • குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது” ஆகும்.
 • ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.
 • கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.
 • இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது
 • இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்”.
 • இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”.
 • ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.
 • எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்

ஆதாரம் : லாயர்ஸ் லைன் மக்கள் சட்டம்

3.11111111111
ரஞ்சித் Apr 12, 2017 11:27 PM

அருமையான தகவல்கள் நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top