অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சர்வதேச சட்டம் - பாகம் 1

சர்வதேச சட்டம் - பாகம் 1

அறிமுகம்

உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுவதற்கு அந்தந்த நாடுகளில் அரசும் அதன் சட்டமியற்றும் மன்றங்களும் இருப்பதுபோல், சர்வதேசச் சட்டங்களை இயற்றுவதற்கு உலக அரசாங்கமோ, உலக சட்டமியற்றும் மன்றமோ கிடையாது. அதுபோல உலகளவிலான ஒற்றை நீதி அமைப்பு முறை (Single Judicial System) யும் கிடையாது. எனவே சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் எவை என்பதை தீர்மானிப்பது பலகாலம் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்த வந்தது. மூலாதாரங்கள் என்ற வார்த்தையின் பொருளே வெவ்வேறு அறிஞர்களால் வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டது. உதாரணத்திற்கு ஓப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் வேறு அதன் காரணங்கள் (Causes) வேறு என்று வேறுபடுத்தி காட்டினார்.

ஓப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். அவை:-

  1. நாடுகளின் அரசுகளின் வெளிப்படையான சம்மதம் (Express Consent)
  2. நாடுகளின் அரசுகளின் முறைமுகமான சம்மதம் (Tacit consent) - ஆகியனவாகும்.

ஆனால் ஃப்ரோஃப்.பிரெயர்லி (Prof.Brierly) வழக்காறு (Custom)களும் அவற்றை வலியுறுத்தும் ஆதாரங்களுமே (Reasons) சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் என்கிறார்.

ஸ்டார்க் (Starke) சர்வதேசச் சட்ட வழக்கறிஞர்கள், தங்கள் முன் உள்ள குறிப்பிட்ட வழக்கின் சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய சர்வதேசச் சட்ட விதிகளை கண்டறிவதற்கு நடைமுறையில் பயன்படுத்தும் உண்மையான சாதனங்களே (materials) சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் என்கிறார்.

ஸ்டார்க்கின் நடைமுறைவாத அணுகுமுறையின்படி பின்வருவனவற்றை சர்வதேசச் சட்ட வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் மூலாதாரங்களாவன:-

  • வழக்காறு (Custom)
  • உடன்படிக்கைகள் (Treaties)
  • நீதிமுறை தீர்ப்பாயங்கள் (Judicial Tribunals) அல்லது இசைவுத் தீர்ப்பாயங்கள் (Arbitral Tribunals) வழங்கும் முடிவுகள்
  • சர்வதேச நிறுவனங்களின் உறுப்பு அமைப்புகளின் அறிக்கைகள் அல்லது தீர்மானிப்புகள் (Writings and determinations)
  • சர்வதேச நிறுவனங்களின் உறுப்பு அமைப்புகளின் முடிவுகள் (decisions) அல்லது தீர்மானிப்புகள்.

சர்வதேச நீதிமன்றச் சட்டவிதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மூலாதாரங்கள்

சர்வதேசச் சட்ட அமைப்புமுறை மையப்படுத்தப்படாததும் சர்வதேச அரசியல், பொருளாதார சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறக்கூடியதும் ஆகும். எனவே, சர்வதேச நீதிமன்றச் சட்டவிதிகள் ஷரத்து 38-இல் பின்வருவன சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை:

  • சர்வதேச உடனபடிக்கைகள் (International treaties)
  • சர்வதேச வழக்காறு (International Custom)
  • நாகரீக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கோட்பாடுகள் (General Principle)

துணை மூலாதாரங்கள் (Subsidiary Sources)

மேலே கண்ட மூன்று பிரதான மூலாதாரங்களுடன் பின்வருவன துணை மூலாதாரங்களாக சர்வதேச நீதிமன்ற சட்ட விதிகள், ஷரத்து 38-இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

  • நீதிமன்ற தீர்ப்பாயங்கள் (Judicial Tribunals) மற்றும் இசைவுத் தீர்ப்பாயங்கள் (Arbitral Tribunals வழங்கும் முடிவுகள் (Decisions)
  • உள்நாட்டு நீதிமன்றங்களின் சர்வதேசச் சட்டத் தீர்ப்புகள் (Decisions of Domestic Courts)
  • சட்ட அறிஞர்களின் சட்டவியல் படைப்புகள் (Juristic Works)

துணை மூலாதாரங்கள் என்பவை உண்மையில் மூலாதாரங்கள் அல்ல. மாறாக அவை பிரதான மூலாதாரங்களான உடன்படிக்கைகள், வழக்காறுகள் மற்றும் பொதுக்கோட்பாடுகள் இருக்கிறது என்ற உண்மையை நிரூபிக்க உதவும் ஆதார சாட்சியங்களே ஆகும்.

சர்வதேச உடன்படிக்கைகள் (International Treaties)

நவீன கால சர்வதேசச் சட்டத்தில், சர்வதேச உடன்படிக்கைகள் மிக முக்கியமான மூலாதாரமாக விளங்குகின்றன. ஏனெனில் சர்வதேச உடன் படிக்கைகளின் மூலம் உருவாக்கப்படும் சர்வதேசச் சட்ட விதிகள் வெளிப்படையானதாகவும் குழப்பத்திற்கு இடமில்லாததாகவும் இருக்கின்றன. அவை சம்மந்தப்பட்ட அரசுகளை கட்டுபடுத்துவதில் சர்வதேச வழக்காறுகளைக் காட்டிலும் அதிக சட்ட வலிமை பெற்றவையாக இருக்கின்றன.

அதனால் தான் சர்வதேச நீதிமன்றச் சட்ட விதிகள், ஷரத்து 38 சர்வதேச உடன்படிக்கைகளை முதல் மூலாதாரமாக பட்டியலிட்டுள்ளது. இதன்படி சம்மந்தப்பட்ட அரசுகளால் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட விதிகளை உருக்குகின்ற பொது அல்லது குறிப்பான சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தின் முதல் மூலாதாரமாகும்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாயிருந்த மேனலி ஓட்மர்.ஹட்சன் (Manely Ottmer Hudson) சர்வதேச உடன்படிக்கை என்பது ஓர் சர்வதேச ஆவணத்தின் வடிவம் அல்லது தலைப்பு எதுவாக இருந்தாலும் (i) உடன்படிக்கை (Treaty) (ii) பொது ஒப்பந்தம் (Convention) (iii) உடன்படிக்கை வரைவுக் குறிப்பு (Protocol) அல்லது (iv) உடன்பாடு (agreement) உள்ளிட்ட எதனையும் உள்ளடக்கியதாகும் என்கிறார்.

ஒரு சர்வதேச தீர்ப்பாயம், சர்வதேசப் பிரச்சனை ஒன்றை தீர்மானிக்கும் போது, அப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அம்சம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஏதேனும் இருக்கிறதா என்பதையெ முதலில் பார்க்க வேண்டும். அவ்வாறு ஏதேனுமொரு சர்வதேச உடன்படிக்கை இருக்கும் பட்சத்தில் அத்தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் முடிவு அவ்வுடன்படிக்கையில் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். எனவே தான் ஸ்டார்க் சர்வதேச உடன்படிக்கைகளை சர்வதேச சட்டமியற்றல் (International Legislation) என்கிறார்.

வகைகள் (Kinds)

சர்வதேச உடன்படிக்கைகளின் மூலாதார மதிப்பைப் பொறுத்து அவற்றை இருவகையாக பிரிக்கலாம். அவை:

  • சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள்
  • ஒப்பந்த உடன்படிக்கைகள்

சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள்

19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை, சர்வதேச வழக்காறே சர்வதேசச் சட்டத்தின் பிரதான மூலாதாரமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து சர்வதேச உடன்படிக்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. சமீப காலங்களில் உடன்படிக்கைகளே மிக முக்கியமான மூலாதாரமாக வளர்ச்சியடைந்துள்ளன. ஏனெனில் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலக சமுதாயத்தின் சர்வதேசத் தேவைகளை உருவாகி வளரக்கூடிய வழக்காறுகளால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேச சட்டமியற்றலாக உருவெடுத்தது.

சட்டவியலாளர்களில் சிலர், சர்வதேச உடன்படிக்கைகளை சட்டமியற்றும் உடன்படிக்கைகள் என அழைப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் ‘சர்வதேச உடன்படிக்கைகள் அதிகமாக சர்வதேசச் சட்ட விதிகளை உருவாக்குவதில்லை. அவை பெரும்பாலும் அவற்றில் ஒப்பமிட்ட நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த கடப்பாடுகளையே உருவாக்குகின்றன” என்கின்றனர். ஆனால் ஸ்டார்க் போன்ற சட்டவியலாளர்கள் இவ்விமர்சனத்தை மறுக்கின்றனர். அவர், எண்ணற்ற சர்வதேச உடன்படிக்கைகள் மற்றம் பொது ஒப்பந்தங்கள் சர்வதேச அமைப்புகளின் பல்வேறு உறுப்புகளால் ஏற்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டும் ஸ்டார்க் அதன் காரணமாகவே சர்வதேச உடன்படிக்கைகள் நடைமுறையில் சட்டத்தை உருவாக்குபவையாகவே இருக்கின்றன என்கிறார்.

சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் முக்கியமாக இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. அவை:

(a)சட்ட விதிகளை உருவாக்கும் சட்டமியற்றும் செயல்பாடு

(b)அவ்வாறு உருவாக்கப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக நாடுகள் வழங்கும் உறுதி மொழியை பதிவு செய்கின்ற செயல்பாடு.

பொதுவாக சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள், இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான பன்னாட்டு உடன்படிக்கைகளாகவே இருக்கும். மாறாக ஒப்பந்த உடன்படிக்கைகள் பொதுவாக இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உடன்படிக்கைகளாகவே இருக்கும்.

பேராசிரியர் பிரெய்லி, பெரும் எண்ணிக்கையிலான நாடுகள், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து தங்களது புரிதல் என்ன என்பதை அறிவிப்பதற்காகவோ அல்லது தங்களது வருங்கால நடத்தைகளுக்கான புதிய பொது விதிகளை வகுப்பதற்காகவோ அல்லது சில சர்வதேச அமைப்புகளை உருவாக்குவதற்காகவோ தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கைகள் எதுவும் சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகளே ஆகும் என்று வரையறுக்கிறார்.

சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகளுக்கு உதாரணங்ககளாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச நீர்வழி - வான்வழிப் போக்குவரத்து, அடிமை வியாபாரத்தை ஒழித்தல், சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள், சர்வதேச பிரச்சனைகளை அமைதி முறையில் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளைக் கூறலாம்.

ஒப்பந்த உடன்படிக்கைகள்(Treaty Contracts)

சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகளுக்கு மாறாக, ஒப்பந்த உடன்படிக்கைகள் இரண்டு நாடுகள் அல்லது ஒரு சில நாடுகளுக்குள் ஏற்படுத்திக் கொள்ளப்படும் உடன்படிக்கைகள் ஆகும். அவ்வுடன்படிக்கையின் வகை முறைகள் அதில் ஒப்பிட்டுள்ள தரப்பு அரசுகளை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

பொதுவாக ஒப்பந்த உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாகக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் விதிவிலக்காக பின் வரும் நேர்வுகளில் அவை மூலாதாரமாகக் கருதப்படுகின்றன. அவை:-

(a) ஒரு ஒப்பந்த உடன்படிக்கையின் அதே விதி வெவ்வேறு நாடுகளுக்கிடையே அடுத்தடுத்து எட்டப்படும் ஒப்பந்த உடன்படிக்கைகளிலும் ஏற்கப்பட்டு, தொடர்ந்து சர்வதேச அரங்கில் செயலில் இருந்து வருமானால் அவ்விதி வழக்காற்றுச் சட்டம் என்ற அடிப்படையில் சர்வதேசச் சட்டத்தின் பொது விதியாக ஏற்று கொள்ளப்படலாம். உதாரணத்திற்கு, 19ஆம் நூற்றாண்டில் வெவ்வேறு நாடுகளுக்கிடையே தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட மீட்டொப்படைப்பு தொடர்பான ஒப்பந்த உடன்படிக்கைகள் காலப்போக்கில் மீட்டொப்படைப்பு தொடர்பான சர்வதேசச் சட்டப் பொது விதிகளாக மாறியிருப்பதைக் கூறலாம்.

(b) ஆரம்பத்தில் வெகு சில நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையாக இருப்பினும், பின்வந்த காலங்களில் அதே உடன்படிக்கையை பல நாடுகளும் ஏற்று பின்பற்றத் தொடங்கியதாலோ அல்லது அதே போன்ற உடன்படிக்கையை தனியே மேற்கொண்டு பின்பற்றத் தொடங்கியதாலோ காலப்போக்கில் சர்வதேச வழக்காறாக மாறியதன் மூலம் பொது விதியாக ஏற்றுக் கொள்ளப்படலாம்.

மேலும் ஒப்பந்த உடன்படிக்கைகள் நேரடியாக சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரமாகக் கொள்ளப்படவில்லையென்றாலும், சர்வதேச வழக்காறு ஒன்றை நிரூபிப்பதற்கான சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படலாம். எனவே தான் தொடர்ச்சியான ஒப்பந்த உடன்படிக்கைகள் எனும் தனித்த நடைமுறையின் மூலம் உருப்பெற்று நடைமுறையில் இருக்கும் சர்வதேசச் சட்ட விதி ஒன்றை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சிய மதிப்பை ஒப்பந்த உடன்படிக்கைகள் கொண்டுள்ளன என்று ஸ்டார்க் கூறுகின்றார்.

சர்வதேச வழக்காறு(International Custom)

நாடுகளுக்கு இடையிலான சர்வதேச வழக்காறுகள், சர்வதேசச் சட்டதத்தின் ஓர் மூலாதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நீதிமன்றச் சட்ட விதிகள் ஷரத்து 38, சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நடைமுறை (General Practice) ஒன்றின் சாட்சியமாக” சர்வதேச வழக்காறை இரண்டாவது மூலாதாரமாக வகைப்படுத்துகிறது. அதாவது நாடுகளின் உண்மையான நடைமுறை (General Practice)-யினை மூலாதாரமாக வலியுறுத்துகிறது. சர்வதேச உடன்படிக்கைகள் உருவாவதற்கு முந்தய காலங்களில் சர்வதேச வழக்காறு மட்டுமே சர்வதேசச் சட்டத்தின் ஒரே மூலாதாரமாக விளங்கியது. ஆனால் அவை உடன்படிக்கைகளைப் போல் எழுதப்பட்டவையல்ல. பன்னெடுங்காலமாக நாடுகள் தங்களுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதில் நடைமுறையில் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களாகவே (Actual Practice) அவை இருந்தன. எனவே, சர்வதேச வழக்காறுகள் நீண்ட நெடியதொரு வரலாற்று நடைமுறையின் மூலம் உருவாக்கப்பட்டு சர்வதேசச் சமுதாயத்தால் அங்கீகரீக்கப்பட்ட சர்வதேச சட்ட விதிகளாகும்.

வழக்காறும் பழக்க மரபும் (Custom and Usage)

வழக்காறும் பழக்க மரபும் பல சமயங்களில் ஒரே பொருளில் பயனபடுத்தப்பட்டாலும் இரண்டும் வேறு வேறானவையாகும். சமூகத்தில் பன்னெடுங்கால பழக்க வழக்கத்தில் தொடர்ந்து இருந்து வரும் ஒரு நடைமுறையே பழக்க மரபு (usage) ஆகும். அதே பழக்கமரபு கட்டாயம் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டிய சட்ட வலிவு பெற்றதாக ஆகும் போது வழக்காறு (custom) எனப்படுகிறது. அதாவது சட்ட வலிமை பெற்ற பழக்க மரபே (legally enforceable usage) வழக்காறு (custom) ஆகின்றது. சர்வதேசச் சட்டத்தில் பழக்கமரபு என்பது, இது வரையிலும் முழுமையான சட்ட ஒப்புதலைப் பெறாத சர்வதேச நடைமுறைப் பழக்க வழக்கம் ஆகும் என்று ஸ்டார்க் கூறுகின்றார். பொதுவாக வழக்க மரபுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் இருக்கலாம். இத்தகைய மரபுகளின் முரண்பாடுகள் களையப்பட்டு ஒன்றுக்கொன்று இயைபுடையதாக ஒன்றுபடுத்தப்படும் போது அப்பழக்க மரபுகள் வழக்காறு ஆகின்றன. பழக்க மரபு முடிவடையும் இடத்திலேயே வழக்காறு தொடங்குகிறது எனலாம்.

பழக்க மரபு ஒன்று வழக்காறு ஆவது எப்போது?

ஒரு பழக்க மரபு, வழக்காறாக மாறக்கூடிய இயல்புடையது எனில், அது எப்போது, எப்படி மாறுகின்றது என்பது இயல்பாக எழக்கூடிய கேள்வியாகும். இக்கேள்வி, பொருண்மை பற்றியதேயொழிய சட்டக் கொள்கை பற்றியதல்ல என்று கூறும் ஒப்பன்ஹீய்ம், தெளிவானதும் தொடர்ச்சியானதுமான சில செயல்களைச் செய்யும் பழக்க வழக்கம் ஒன்று, அச்செயல்கள் சர்வதேசச் சட்டத்தின் படியான கடப்பாடு அல்லது உரிமை என்று நம்பப்படும் அளவிற்கு வளர்ச்சியடையும் போது அப்பழக்க வழக்கத்தை சர்வதேசச் சட்டவியலாளர்கள் வழக்காறு என்று அழைக்கின்றனர் என்கிறார்.

எனவே, சர்வதேச பழக்க மரபு ஒன்று சர்வதேச வழக்காறாக ஆவதற்கு அம்மரபில் இரண்டு கூறுகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவை

(i)ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஆதரவாக அல்லது அதனை தடை செய்யும் வகையில் சில விதிகளை நாடுகள் பன்னெடுங்காலமாக பொதுவாக கடைபிடித்து வந்திருக்க வேண்டும்.

(ii)அத்தகைய விதிகள் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்று நாடுகளிடையே பொதுவான நம்பிக்கை நிலவ வேண்டும்.

பழக்க மரபு ஒன்று சட்ட வலிமை பெற்ற சர்வதேச வழக்காறாக கருதப்படுவதற்கு அம்மரபு பின்வரும் இரண்டு சோதனைகளில் வெற்றி பெற வேண்டும் என்கிறார் ஸ்டார்க். அவை:

வரலாற்றுப் பொருட் கூறுச் சோதனை

பழக்க மரபு ஒன்று சர்வதேச வழக்காற்று விதியாக மாறியுள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு முதலில் அப்பழக்க மரபு நடைமுறையில் செயல்பட்டு வந்த வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். அதாவது, அம்மரபு நீண்ட நெடுங்காலமாக (long Duration) நிலையாகவும் (Consistency) தொடர்ச்சியாகவும் (Continuity) நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்ற அதன் வரலாற்றுப் பொருட்கூறு நிரூபிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றம், ஒரு நடைமுறைப் பழக்க மரபு நிலையாகவும் ஒரே சீராகவும் பொதுமைத் தன்மையுடன் கடைபிடிக்கப்பட்டு வருவது அவசியமாகும் என்று கூறுகிறது.

அரசுகளின் மனக்கருத்து சோதனை (Opinio Juris Test)

பழக்க மரபு ஒன்று தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்து வருவது மட்டும் சர்வதேச வழக்காற்று விதியை உருவாக்கி விடாது. மாறாக அத்தகைய பழக்க மரபின் நடைமுறை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற அவசிய விதி உள்ளது என்ற நம்பிக்கை அரசுகளின் மனக்கருத்தில் இருக்க வேண்டும். இதனையே ‘ஒரு செயல் சட்ட விதியின் காரணமாக செய்யப்பட வேண்டியது அவசியம் எனும் மனக்கருத்து” (Opinio juris nessitatis-opinion that an act is necessary by rules of Law) எனும் சட்ட முதுமொழி விளக்குகிறது.

ஒரு பழக்க மரபை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று கருதும் அரசுகளின் மனக்கருத்தை கண்டறிவது மிக எளிமையான சோதனையாகும். ஏனெனில் அரசுகளின் இம்மனக்கருத்து ஒவ்வொரு வழக்காற்று விதியிலும் உட்பொதிந்தே இருக்கும். அதனை சம்மந்தப்பட்ட வழக்காற்று விதியின் உட்கூறுகளில் மட்டுமல்லாது அனைத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இருந்தும் உய்த்துணர (infer) முடியும்.

பழக்க மரபு அல்லது நடைமுறையில் பொதிந்துள்ள பொதுமையான வழக்காற்று விதிகளை உய்த்துணரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு பின்வருனவற்றை உதாரணமானக் கூறலாம்.

  • அயல்நாட்டுத் தூதர்களுக்கு (Foreign diplomats) உள்நாட்டின் குற்றவியல் சட்டத்திலிருந்து காப்பளித்தல் (Immunity)
  • அயல்நாட்டுத் தூதரக வளாகங்களுக்கு உரிய மதிப்பளித்தல்.
  • ஒரு நாட்டில் கடல் எல்லைக்குள் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு இருக்கும் தீங்கின்றி கடந்து செல்வதற்கான உரிமை (Rights if innocent passage).
  • ஆழ்கடலில் செல்லும் கப்பலில் பறக்கும் தேசிய கொடிக்குரிய நாட்டிற்கு அக்கப்பல் மீது இருக்கும் தனி அதிகார வரம்பை அங்கீகரித்தல்:
  • அண்டை நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்குமாறு இராணுவ அதிகாரத்திற்கு உத்தரவிடல்.
  • சர்வதேச அளவிலான ஆயுதச் சண்டைகளின் போது போராளிகள் அல்லாத சாதாரண குடிமக்கள் (Civilians) மற்றும் நோயுற்றோர் அல்லது காயமடைந்த போர் வீரர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை.

சர்வதேச வழக்காறு உருவாதல் (Creation of International Custom)

சர்வதேச பழக்க மரபு ஒன்று சர்வதேச வழக்காறாக ஆவதற்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அம்மரபை கடைபிடித்து வந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சில நாடுகள் கடைபிடித்த வந்தாலும் கூட அது சர்வதேச வழக்காறாக உருவாகலாம். உதாரணத்திற்கு கடல் வணிக கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கும் கடலோர நாடுகள் உருவாக்கும் வழக்காறுகள், கடற்கரையே இல்லாத உட்பகுதி நாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியதாகும். அந்நாடுகள் பின்னாளில் கடல் வணிகத்தில் ஈடுபட்டாலும் முன்னர் ஏற்பட்ட வழக்காறுகளை மதித்து நடக்க வேண்டியது கட்டாயமாகும் .அதுபோல, விண்வெளி ஓடங்களை அனுப்பும் திறன் பெற்ற நாடுகளாக முன்னாள் சோவியத் யூனியனும் (USSR) அமெரிக்காவும் (USA) மட்டுமே இருந்த போது இவ்விரு நாடுகளும் உருவாக்கிய வழக்காறுகளையே அதன் பின்னர் விண்வெளித்துறையில் கால் பதித்த இந்தியா போன்ற நாடுகளும் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, சர்வதேச வழக்காறுகளை உருவாக்குவதில் சிறிய நாடுகளை விட பொருளாதார - இராணுவ வலிமை மிக்க பெரிய நாடுகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரிய நாடுகள் தங்கள் வசதிக்கும் நலனுக்கும் உகந்த விதத்தில் உருவாக்கி வளர்க்கும் சர்வதேச வழக்காறுகளை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டிய நிலையிலேயே சிறிய நாடுகள் உள்ளன.

இருப்பினும், ஒரு புதிய வழக்காற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு அரசு கருதினால் அவ்வழக்காறு உருவாகத் துவங்கும் காலத்தில் இருந்தே அந்த அரசு தனது ஆட்சேபணையை தொடர்ந்து இடைவிடாமல் சர்வதேச அரங்கில் பதிவு செய்து கொண்டே வர வேண்டும். அவ்வழக்காறு சர்வதேசச் சட்டமாக முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு நாடும் அவ்வழக்காற்றுச் சட்டத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து வரும் நாட்டின் நிலை என்ன என்பது குறித்து சர்வதேசச் சட்டவியலாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு முடிவு உட்பட சில சட்டவியலாளர்கள், ஒரு புதிய வழக்காறு உருவாகும் போதே தனது ஆட்சேபனை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நாட்டிற்கு அவ்வழக்காறு பொருந்தாது என்று கருதுகின்றனர். மற்ற சட்டவியலாளர்கள், சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் பொதுவான தன்மையின் படி, வழக்காற்று சட்டமாக ஆகிவிட்டால் அது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். எனவே அதனை ஆட்சேபணை செய்த நாட்டிற்கும் அது பொருந்தக் கூடியதே என வாதிடுகின்றனர்.

வழக்காற்றுச் சட்டத்தின் சட்ட வலிமை (Legal Effect of Customary Law)

ஒரு பழக்க மரபு, வழக்காற்றுச் சட்டமாக ஆகிவிட்ட பின்னர் அது உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்ததும் சட்ட வலிமை பெற்றதாகும். ஏதேனும் சில நாடுகளுக்கு இடையிலான சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் சாராம்சத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தால் அவ்வழக்காற்றுச் சட்டம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

சர்வதேச நீதிமன்றங்களில் அடிக்கடி சர்வதேச வழக்காற்றுச் சட்ட விதிகளின் சட்ட வலிமை விவாதப் பொருளாவது வழக்கம், ஒரு குறிப்பிட்ட விதி, செல்லத்தக்க சர்வதேச வழக்காற்று விதியாக நிலை நாட்டப்பட்டுள்ளதாக என்பதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுகின்றன. அவ்வாறு ஆய்வு செய்யும் போது நீதிமன்றம், பின்வருவனவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியே சட்ட நிலையை தீர்மானிக்கின்றன. அவை:-

  • உடன்படிக்கைகள்
  • நாடுகளின் நடைமுறைகள்
  • தூதரக கடிதத் தொடர்புகள்
  • உள்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
  • சட்டவியல் அறிஞர்களின் சட்டவியல் படைப்புகள்

உதாரணமாக பாக்யுட் ஹவானா வழக்கில் மெரிக்க ஜக்கிய நாடுகளின் உச்ச நீதிமன்றமும் லொட்டஸ் வழக்கில் சர்வதேச நிரந்தர நீதிமன்றமும் இந் நடைமுறையினையே பின்பற்றின.

ஸ்கோசியா கப்பல் வழக்கு (The Scotia Ship case,1871)

ஸ்கோசியா கப்பல் வழக்கில், ஓர் இரவு நேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த பெர்க்ஷைர் என்ற அமெரிக்க கப்பல் மீது ஸ்கோசியா எனும் இங்கிலாந்துக் கப்பல் மோதியது. சர்வதெச வழக்காற்று விதியின்படி கப்பலில் ஒளிரவிட வேண்டியது குறித்த வழக்காற்று விதி பிரிட்டஷ் கடல் பயணச் சட்டத்தில் இடம் பெற்றதுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் வணிகம் செய்யும் 30க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே பெர்க்ஷைர் கப்பல் சர்வதேச வழக்காற்று விதியை மீறியுள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.

பாக்யுட் ஹவானா வழக்கு (Paquete Habana Case, 175 U.S.677(1990)

பாக்யுட் ஹவானா வழக்கில், அமெரிக்க உயர்நீதிமன்றம் சர்வதேச வழக்காறு என்பது சட்ட வலிமை பெற்ற சட்டமே என்று தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்த போது, ஸ்பெயின் நாட்டு மீன்பிடிப் படகான பாக்யுட் ஹவானா எனும் படகை அமெரிக்க கப்பற்படை கடற்போர்க் கொள்பொருளாக (Prize) கைப்பற்றியது. அப்படகை மீட்பதற்காக அதன் உரிமையாளர் அமெரிக்க நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார். சர்வதேச வழக்காற்றுச் சட்டப்படி, போரில் சம்மந்தப்படாத குடிமக்களின் மீன்பிடிப் படகுகளை கைப்பற்ற கூடாது. எனவே, மீன்பிடிப் படகான பாக்யுட் ஹவானா அமெரிக்க கடற்படை கைப்பற்றியது சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை மீறிய செயல் என்று கூறிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதனை விடுவிக்கவும் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

சட்டம் பற்றிய பொதுக்கோட்பாடுகள் (General Principle of Law)

சர்வதேச பிரச்சனைகள் அல்லது வழக்குகளைத் தீர்ப்பதற்கான சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாக சர்வதேச உடன்படிக்கைகளும் சர்வதேச வழக்காறுகளும் பயன்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து உடன்படிக்கைகளோ வழக்காறுகளோ இல்லை எனில், நீதிமன்றங்கள் எனதடிப்படையில் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எனும் கேள்வி எழுவது இயற்கையே. இத்தகையே சூழ்நிலையில் நீதிமன்றங்களுக்கு உதவுவதற்காகவே சர்வதேச நீதிமன்றம் சட்டவிதிகள், நாகரீக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கோட்பாடுகளை மூன்றாவது மூலாதாரமாக வகைப்படுத்தியுள்ளது. அதாவது, உலகில் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தின் சட்ட அமைப்புமுறை (Legal system) களுக்கும் இடையிலான பொதுவான சட்டக் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளே பொது கோட்பாடுகளாகும். அத்தகைய பொதுவான சட்டக் கோட்பாடுகளே சர்வதேசச் சட்டத்தின் மூன்றாவது மூலாதாரமாகும்.

உதராணத்திற்கு உலகிலுள்ள பெரும்பான்மையான நாடுகளின் சட்ட அமைப்பு முறையில் ‘நல்லெண்ணம்” (Good faith) என்பது தீர்மானமான காரணியாக கடைபிடிக்கப்பட்படுகிறது. பல நாடுகளின் நீதிமன்றங்கள், வழக்கைத் தீர்மானிப்பதற்கு வழக்கின் தரப்பினர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டுள்ளனரா என்பதை ஒரு காரணியாகக் கணக்கில் கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள் தங்களது உள்நாட்டு நீதி அமைப்பு முறையில் நல்லெண்ணத்தை கணக்கில் கொள்கின்றன எனும் உண்மை நடப்பானது, நல்லெண்ணத்தை சர்வதேசச் சட்டத்தின் ஓர் அளவுகோலாக கணக்கில் கொள்ளலாம் என்பதை நமக்கு உணர்த்துக்கிறது. எனவே சர்வதேசச் சட்டம் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளும் எந்தவொரு நாடும் அவ்வுடன்படிக்கை அல்லது ஒப்பந்தப்படி நடக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்பதை கணக்கில் கொள்கிறது.

மியூஸ் நதி நீரை திருப்பிவிட்ட வழக்கு (Diversion of Water from Muese, 1937 PVJJ , series A.B.case no.70) மியூஸ் நதி நீரை திருப்பிவிட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நிரந்தர நீதிமன்றம், உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் பொதுக்கோட்பாடுகளாகிய முன்தீர்ப்புத்தடை (Res Judicata) மற்றும் முரண்தடை (Estopel) கோட்பாடுகளை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது. அதுபோல Chorzow factory (indemnity case, (Pub.PCI,1928] - என்ற வழக்கிலும் முன்தீர்ப்புத் தடைக் கோட்டை அங்கீகரித்த சர்வதேச நிரந்தர நீதிமன்றம், விதியை மீறியவரே அவ்விதி மீறலால் ஏற்பட்ட இழப்பையும் ஈடுசெய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

R.V.Keyn, (1876) Ex.D.63 வழக்கில் சர்வதேசச் சட்டம் என்பது பன்னெடுங்காலமாக உள்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நீதி, நேர்மைநெறி, நன் மனச்சான்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வளர்க்கப்பட்டதாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Furkina faso-Vs-Mali(Frontier Dispute (IC) Reports (1985)P.6] என்ற வழக்கில் ஃபர்கினா ஃபாசோவும் மாலியும் எல்லை தகராறு தொடர்பான வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மேற்கோள் செய்தன. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருநாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நேர்மைநெறிக் கோட்பாட்டின் (Principle of Equity) உதவியுடன் எல்லைத் தகராறை தீர்க்க முடிவு செய்தது.

பொதுக் கோட்பாடுகள் பற்றிய பொதுவான விளக்கங்கள்

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச வழக்காறுகளில் வகை செய்யப்படாத சட்ட விதிகள் அல்லது நடைமுறை விதிகளில் ஏற்படும் இடைவெளி மூன்றாவது மூலாதரமாகிய நாகரீக நாடுகளின் சட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கோட்பாடுகளைக் கொண்டு நிரப்பப்படுவதால் இதனை சர்வதேசச் சட்டத்தின் பொதுச் சட்டம் (Common law) என்று சில சட்டவியலாளர்கள் கருதுகின்றனர்.

வேறு சிலர், இப்பொதுக் கோட்பாடுகள், இயற்கை சட்டம் (natural Justice) சார்ந்தவை என்று விளக்குகின்றனர். நிகழ்நிலை வாதம் (Positivism) பேசும் நிகழ்நிலைச் சட்டவியலாளர்கள் (Positivist) உடன்படிக்கைகளும், வழக்காறுகளும் மட்டுமே சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாகும் என்றனர். இதற்கு மாறாக சர்வதேச நீதிமன்றச் சட்ட விதிகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சட்டம் பற்றிய பொதுக்கோட்பாடுகளை மூன்றாவது மூலாதாரமாக அங்கீகரித்துள்ளது. எனவே பொதுக் கோட்பாடுகளை மூலாதாரமாக ஏற்றுக் கொண்டிருப்பது, சர்வதேசச் சட்டத்தில் நிகழ்நிலைச் சட்டவியலாளர்களுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்கிறார் ஸ்டார்க்.

பொதுவாக நாகரீக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் பொதுக்கோட்பாடுகள் என்பதற்கு பின்வரும் எட்டு வழிகளில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அவை:-

  • நீதியின் பொதுக்கோட்பாடுகள் (General Principles of Judiciary)
  • இயற்கைச் சட்டம் (Natural law)
  • சர்வதேசச் சட்டத்தின் பொதுச்சட்டம் (Common Law of International Law)
  • உள்நாட்டுச் சட்டங்களில் இருந்து பெறப்பட்ட ஒப்புமைகள் (Analogies derived from Domestic Law)
  • ஒப்புமைச் சட்டத்தின் பொதுக்கோட்பாடுகள் (General principles of Comparativer Law)
  • சர்வதேசச் சட்டத்தின் பொது கோட்பாடுகள் (General Principles of International Law)
  • சட்டம் பற்றிய பொதுக் கொள்கைகள் (General theories of Law)
  • பொதுவான சட்டக் கருத்தாக்கங்கள்(General legal Concepts)

துணை மூலாதாரங்கள் (Subsidiary Sources)

சர்வதேச நீதிமன்ற சட்ட விதிகள், ஷரத்து 38ன்படி பின்வருவன சர்வதேசச் சட்டத்தின் துணை மூலாதாரங்களாகும். அவை:-

  • சர்வதேசத் தீர்ப்பாயங்களின் தீர்ப்பு முடிவுகள்
  • உள்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
  • சட்டவியல் படைப்புகள்

இவை நேரடியான மூலாதாரங்களாக இல்லை என்றாலும் நேரடி மூலாதாரங்களான உடன்படிக்கைகள், வழக்காறுகள் மற்றும் சட்டத்தின் பொதுக்கோட்பாடுகளை நிரூபிக்க உதவும் ஆதாரங்களாக சர்வதேசச் சட்டத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

சர்வதேச தீர்ப்பாயங்களின் தீர்ப்பு முடிவுகள் (Decisions of International Tribunals)

நாடுகளுக்கு இடையிலான சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்புக்கு இரண்டு வகையான சர்வதேசத் தீர்பாயங்கள் இருக்கின்றன. அவை(a) நீதிமன்ற தீர்ப்பாயங்கள் (Judicial Tribunals) (b) இசைவுத் தீர்ப்பாயங்கள் (Arbitral Tribunal ) ஆகியனவாகும். இவற்றின் தீர்ப்பு முடிவுகள் சர்வதேசச் சட்டத்தின் துணை மூலாதாரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நீதிமுறைத் தீர்ப்பாயங்களின் தீர்ப்பு முடிவுகள் (Decicions of Domestic Courts)

சர்வதேச நீதிமுறைத் தீர்ப்பாயமாக இன்று இருப்பது சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) மட்டுமே. இது இதற்கு முன்பிருந்த சர்வதேச நிரந்தர நீதிமன்றத்திற்குப் (Permanent Court of Justice) பதிலாக உருவாக்கப்பட்டதாகும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவுகள், பொதுச் சட்ட நாடுகளின் முன் தீர்ப்பு (Procedents) போல் கட்டாயம் பின்பற்றியாக வேண்டிய சட்ட வலிமை உடையவையல்ல. இருப்பினும் சர்வதேசச் சட்டத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ற முறையில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவு ஓர் துணை மூலாதாரமாக முக்கியத்துவம் பெறுகின்றன. சர்வதேசச் சட்டம் இறுக்கமான சட்டமல்ல. நெகிழ்வுத் தன்மையுடன் வளரும் சட்டமாகும் என்பதால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவுகளை பின்னர் வரும் வழக்குகளில் அந்நீதிமன்றமே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருப்பினும் முந்தய தீர்ப்பு முடிவுகள் பின்னர் வரும் வழக்குகளைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டுதல் வழங்குபவையாக இருக்கின்றன.

சர்வதேச இசைவுத் தீர்ப்பாயங்களின் தீர்ப்பு முடிவுகள்

நாடுகள் தங்களுக்கிடையில் எழும் தகராறுகள் அல்லது பிரச்சனைகளை இசைவுத் தீர்வு காண்பதற்காக பரஸ்பரம் ஒப்புதலுடன் சர்வதேச இசைவுத் தீர்ப்பாயங்கள் முன் தங்கள் வழக்கை சமர்ப்பிக்கலாம். அந்த தீர்ப்பாயத்தின் இசைவுத் தீர்வாளர் வழங்கும் தீர்ப்பு முடிவு அதில் சம்மந்தப்பட்ட நாடுகளை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியதாகும். எனவே, இசைவுத் தீர்ப்பாயங்களின் தீர்ப்பு முடிவுகளை சர்வதேச் சட்டத்தின் மூலாதாரங்களாகக் கொள்ள முடியாது என்று ஒரு சாரர் கடுமையாக வாதிடுகின்றனர். சில சட்டவியலாளர்கள் இசைவுத் தீர்வாளர்கள் நீதிபதியாகக் செயல்படுவதில்லை, மாறாக அவர்கள் சமரசப் பேச்சு வார்த்தை நடத்துபவராக (Negotiator) அல்லது தூதரக முகவராகவே (Diplomatic Agent) செயல்படுகின்றார் எனக் கருதுகின்றனர். இசைவுத் தீர்ப்பாய தீர்ப்பு முடிவுகளில் சட்ட விதிகளை விட சமரசக் கூறுகளே மேலோங்கி இருக்கின்றன என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

இந்த வாதங்களில் ஓரளவிற்கு உண்மை இருப்பினும், நடைமுறையில் இசைவுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முடிவுகள் பின்பற்றத்தக்க சட்ட விதிகளை வழங்குவதாகவும் இருக்கின்றன. உதாரணமாக,

(அ) அல்பேனியா இசைவுத் தீர்வு கோருரிமை வழக்கு (Albania Claims Arbitration Case)

(ஆ) பெஹரிங் கடல் மீன்பிடி இசைவுத் தீர்வு வழக்கு (The Behring Sea Fisheries Arbitration Case) (இ) வட அட்லாண்டிக் மீன்பிடி வழக்கு (The North Atlantic Fisheries Case) ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இசைவுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் சம்பந்தப்பட்ட நாடுகளின் நடைமுறைகளின் வழியாக சர்வதேச வழக்காற்று விதிகள் உருவாகலாம். அந்த வகையிலும் தீர்ப்பு முடிவுகள் சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரமாகக் கருதப்படலாம்.

உள்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள்

உள்நாட்டு நீதிமன்றங்கள், தங்கள் அதிகார வரம்பிற்குள் எழும் சர்வதேசச் சட்டம் சார்ந்த வழக்குகளில் வழங்கும் தீர்ப்புகள் சர்வதேச அரங்கில் கட்டுப்படுத்தும் தீர்ப்புகளாகச் செயல்படுகின்றன. உள்நாட்டு நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக ஒரு சர்வதேச சட்ட விதிக்கு பொருள் விளக்கம் கண்டு, வழக்கின் சூழலுக்குப் பொருத்தி வழங்கும் தீர்ப்பின் வழியாக தெளிவுறுத்தப்படும் சர்வதேசச் சட்டவிதி, அந்நாட்டின் சர்வதேசச் சட்ட விதிகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படுவதன் மூலம் வழக்காற்று விதியாக உருப்பெறவும் வாய்ப்புகள் உள்ன. இந்த வழிகளில் உள்நாட்டு நீதிமன்றங்கள் சர்வதேசச் சட்ட விதி குறித்து வழங்கும் தீர்ப்புகள் சர்வதேசச் சட்டத்தின் துணை மூலாதாரமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சட்டவியல் படைப்புகள் (Judicial Work)

சட்டவியல் வல்லுனர்கள், சட்டப் பேராசிரியர்கள் போன்றோரின் சர்வதேசச் சட்டம் குறித்த நூற்படைப்புகளும் துணை மூலாதாரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அத்தகைய சட்டவியல் படைப்புகள், நாடுகளையோ சர்வதேச நீதிமன்றங்களையோ கட்டுப்படுத்தும் வலிமை உள்ளவை அல்ல. இருந்த போதிலும் அப்படைப்புகளில் உலக அளவில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் சர்வதேசச் சட்ட விதிகள், வழக்காறுகள் பற்றிய பதிவுகளும் விளக்கங்களும் இடம் பெற்றிருக்கும். அது மட்டுமின்றி சர்வதேசச் சட்ட விதிகளின் போதாமைகள், வெற்றிடங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை போக்குவதற்குரிய நூலாசிரியரின் கருத்துரைகளும் நூலில் காணக் கிடைக்கும். எனவே நாடுகள், நாடுகளின் தூதாண்மை முகவர்கள், சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள், ஒரு பொருள் குறித்த சட்ட விதிகள் என்ன என்பதை அறிவதற்கு சட்டவியல் படைப்புகள் துணைக் கருவிகளாகப் பயன்படுகின்றன என்றால் மிகையில்லை.

ஆதாரம் : சரவணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

வெளியிடு : திணமனி

கடைசியாக மாற்றப்பட்டது : 6/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate