பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தனியுரிமைப் பொருளாதார மண்டலம்

தனியுரிமைப் பொருளாதார மண்டலம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தனியுரிமைப் பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல்களின் சுதந்திரங்கள், சுதந்திரங்கள் மீதான வரம்புகள், உயர் வளங்களை பாதுகாத்தல்,  மாசுபாட்டைத் தடுத்தல்,  நிலங்களால் சூழப்பட்ட நாடுகளின் ஆழ்கடல் உரிமை கரையோர நாட்டின் தனியுரிமைப் பொருளாதார மண்டலமாக ஒரு குறிப்பிட்ட பகுதி அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே எழத் தொடங்கியது.  அதற்கான முதல் குரல் கென்யா நாட்டில் எழுப்பப்பட்டது. 1971 ஜனவரியில் கொழும்புவில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்க சட்டக் கலந்தாய்வுக் குழுக் கூட்டத்தில் முதன் முதலாக கென்யா இக்கோரிக்கையை எழுப்பியது. அதன் பிறகு 1972 ஜனவரியில் லாகோஸில் நடைபெற்ற அக்குழுவின்  கூட்டத்தில் அதற்கான  செயல்திட்ட அறிக்கையை கென்யா சமர்ப்பித்தது.  அதன் பிறகு 1972 இல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ. நா. கடலடித்தளக் குழுவின் கூட்டத்தில் கென்யா, தனியுரிமையைப் பொருளாதார மண்டலம் பற்றிய வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.

கென்யாவின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக தனியுரிமைப் பொருளாதார மண்டலம் பற்றிய கோரிக்கை மேலும் பல நாடுகளால் எழுப்பப்பட்டது. முடிவில் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டில் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் பற்றிய கருத்தாக்கம் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் அம்மாநாடு தனியுரிமைப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட கடல் பகுதியின் மீது கரையோர நாட்டிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகளையும் வரையறுத்தது.

ஷரத்து 55 இன்படி, தனியுரிமைப் பொருளாதார மண்டலம் என்பது, எல்லையோரக் கடலை அடுத்து, அதனை ஒட்டி அமைந்திருக்கும் கடல் பகுதியாகும். ஷரத்து 57 இன்படி, தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகலம், எல்லையோரக் கடலின் அகலம் அளக்கப்படும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்களுக்கும் மேற்படக் கூடாது.

கரையோர நாட்டின் உரிமைகளும் கடமைகளும்

 • தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித்தளத்திலும் கடலடி மண்ணிலும் அதன் மேலுள்ள தண்ணீரிலும் இருக்கும் உயிருள்ள உயிரற்ற இயற்கை வளங்களை ஆராய்ந்து கண்டறிவதற்கும் சுரண்டி எடுப்பதற்கும் அவற்றைப்பாதுகாப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு.
 • அத்துடன் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் ஓடும் கடல் நீரோட்டம் மற்றும் காற்றில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்வது போன்ற பொருளாதார நடவடிக்கைகளை அம்மண்டலத்தில் மேற்கொள்ளவும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு.
 • அம்மண்டலப் பகுதியில் செயற்கைத் தீவுகளை அமைப்பது, கட்டிட அமைப்புகளை நிர்மாணிப்பது, கடல் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது,  கடல் புறச் சூழலைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கரையோர நாட்டிற்கு அதிகாரவரம்பு உண்டு.
 • ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் கரையோர நாட்டிற்கு இருக்கும் உரிமைகளைச் செயல்படுத்தும் போது, அம்மண்டலத்தில் மற்ற நாடுகளுக்கு இருக்கும் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க  வேண்டிய கடமையும் கரையோர நாட்டிற்கு உண்டு.

நாடுகளின் உரிமைகளும் கடமைகளும்

ரு நாட்டின் தனியுரிமைப்பொருளாதார மண்டலத்தில் மற்ற கரையோர நாடுகளுக்கும் நிலங்களால் சூழப்பட்ட நாடுகளுக்கும் பின்வரும் உரிமைகள் உண்டு

 • மண்டலக் கடல் பகுதி வழியான கப்பல் போக்குவரத்துக்கும் வான் வழிப் போக்குவரத்துக்கும் உள்ள உரிமை
 • கடலடித் தகவல் தொடர்பு வடங்களும் குழாய்களும் பதித்துக் கொள்ளும் உரிமை
 • மேலே கண்டவாறு கப்பல், விமானம், கடலடி வடங்களையும் குழாய்களையும் பதிப்பது போன்ற உரிமைகளைச் செயல்படுத்துவது தொடர்பாக சர்வதேசக் கடல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பிற செயல்களைச் செய்யும் உரிமைகள்
 • அதே சமயத்தில் ஒரு நாட்டின் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் தமக்கிருக்கும் உரிமைகளைச் செயல்படுத்தும் போது மற்ற நாடுகள், அதன் கரையோர நாட்டிற்கு அம்மண்டலத்தில் இருக்கும் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காமல் நடப்பதுடன், அக்கரையோர நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற நாடுகளின் கடமையாகும்.

தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலமும்

 • எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம், எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 24 கடல் மைல்களுக்கு மேற்படக் கூடாது.
 • ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகரம் மேலே கண்ட அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் வரை இருக்கலாம்.
 • எல்லையோரக் கடலை அடுத்த மண்டலமும் தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் எல்லையோரக் கடல் முடிவடையும் இடத்தில் இருந்தே தொடங்குகின்றன. ஆனால், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் அடுத்த 12 கடல் மைல்களில் அதாவது அடி எல்லைக் கோட்டில் இருந்து 24 வது கடல் மைல்களுடன் முடிந்து விடும். மாறாக தனியுரிமைப் பொருளாதார மண்டலம் அதனையும் தாண்டி 200 கடல் மைல்கள் தூரம் வரை நீளக் கூடியதாகும். எனவே தனியுரிமைப் பொருளாதார மண்டலம் என்பது எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தையும் உள்ளடக்கியதாகும்.
 • எல்லையோரக் கடலை அடுத்த மண்டத்திலும் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்திலும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் கிடையாது. ஆனால் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலப் பகுதியில், கரையோர நாட்டின் சுங்கம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்றவை தொடர்பான காவல் அதிகாரம் கரையோர நாட்டிற்கு உண்டு.  ஆனால் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித் தளத்திலும் கடலடி மண்ணிலும் மேற்பரப்பில் உள்ள நீரிலும் இருக்கும் உயிருள்ள, உயிரற்ற இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே கரையொர நாட்டிற்கு உண்டு.

தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் கண்டத்திட்டும்

தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் அகலம் எல்லையோரக் கடலை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் தூரத்துடன் முடிவடைந்து விடக் கூடியதாகும். அதாவது தனியுரிமைப் பொருளாதார மண்டலம் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படக் கூடியதாகும். இது எல்லா நாடுகளைப் பொறுத்த வரையிலும் 200 கடல் மைல்களுக்கும் மேற்படாது.

ஆனால் கண்டத்திட்டு, கரையோர நாட்டின் நிலப்பகுதியின் தொடர்ச்சி கடலுக்குள் இயற்கையாகச் சரிந்து நீண்டு செல்லும் இயற்கை அமைப்பு அமைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடக் கூடியதாகும். சில நாடுகளுக்கு 200 கடல் மைல்கள் தூரத்ததிற்கு உள்ளேயே அந்நாட்டின் கண்டத்திட்டு முடிந்து விடலாம். அப்போது அந்நாட்டின் கண்டத்திட்டு 200 கடல் மைல்கள் வரை இருப்பதாகக் கருதிக் கொள்ளப்படும். வேறு சில நாடுகளுக்கு 200 கடல் மைல்களுக்கு மேலும் கண்டத்திட்டு நீளக் கூடும். அப்போது 200 கடல் மைல்களுக்கு மேல் உள்ள கண்டத்திட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கு சர்வதேசச் சட்டம் சில  நிபந்தனைகளை விதிக்கக் கூடும்.

தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் உள்ள கடல் பகுதியில் இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை வளங்களின் மீது கரையோர நாட்டிற்கு இறையாண்மை உரிமை உண்டு. ஆனால் கண்டத்திட்டின் கடலடித்தளம் மற்றும் கடலடி மண்ணில் உள்ள உயிரற்ற இயற்கை வளங்கள் மீது மட்டுமே நாட்டிற்கு இறையாண்மை உரிமை உள்ளது.

Libyan Arab Jamaliriya –Malta Case(1985)-என்ற கண்டத்திட்டு வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தையும் கண்டத்திட்டையும் ஒப்பீடு செய்துள்ளது. கண்டத்திட்டும் தனியுரிமைப் பொருளாதார மண்டலமும் 1982 ஆம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிறுவனங்களாகக் கருதப்படும் நவீன சர்வதேசச் சட்டத்தின் ஒரு அங்கமாக ஆகியுள்ளன. ஒரு கரையோர நாடு தனது கண்டத்திட்டின் மீது கொண்டிருக்கும் உரிமைகளானது, அதன் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் கடலடித் தளம் மற்றும் கடலடி மண்ணில் உள்ள உரிமைகளையும் உள்ளடக்கியதே ஆகும். இதன் பொருள் கண்டத்திட்டு, தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தால் விழங்கப்பட்டு விட்டது என்பதல்ல. மாறாக கண்டத்திட்டுக்கும் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்திற்கும் இடையிலான பொதுவான அம்சம், கடற்கரையில் இருந்து அளக்கப்படும் தூரம் (200 கடல் மைல்கள்) ஆகும் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆதாரம் : தினமணி சட்டமணி

2.75
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top