অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்

தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்

தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம்

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (Payment of Bonus Act - 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (Bonus) வழங்கப்பட்டு வருகிறது.

நோக்கம்

இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.

மீதூதிய வகைகள்

மீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்ல.

உற்பத்தி மீதூதியம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது.

லாபத்தில் மீதூதியம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிறது.

வழக்காறு மீதூதியம்

தீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது.

ஒப்பந்த மீதூதியம்

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இது.

மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்

  1. இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
  2. இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.
  3. இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  4. லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
  5. இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

வரையறைகள்

  1. ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.
  2. பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி,பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் நஷ்டத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது.)
  3. ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலாம்.
  4. 4. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்.
  5. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்கள்.

மீதூதியம் கணக்கிடும் விதி

மீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது.

கழிவுகள்

  1. ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.
  2. செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.
  3. தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
  4. நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம்.
  5. அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.
  6. மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் என்பதே கிடையாது.

ஆதாரம் : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate