অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும்.

மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

முக்கிய விதிகள்

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) –இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக (FIRST CLASS MAGISTRATE COURT) செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் (Three – Tier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான அதிகார வரம்பு :-

1).மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்   – அசல் அதிகார வரம்பு (Original (District Forum) 20 இலட்சம் Jurisdiction).

2).மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – 20 இலட்சத்திற்கும் மேல் ஒரு (State Commission) கோடி வரை.

3).தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஒரு கோடிக்கு மேல்.  (National Commission)

4).மேல் முறையீடு (APPEAL) :- உச்சநீதிமன்றம் (Supreme Court)

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(b)”

புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?

1).நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.

2).ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.

3).நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.

4.மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.

5).நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.

6).மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நட்ட ஈடு தொகை பெறமுடியும்.

நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-

பிரிவு.2(d)(i)

பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது; (Consideration) (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது; (Deferred Payment) (அ) தள்ளி (பிறகு) பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார்.

ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு’(For Resale) வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு’ (For Commercial Purpose) வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.

பிரிவு.2.(d)(ii)

சேவை (Services)

பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது) – (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும் – பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பிரிவு.2(e)

நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?(Consumer Dispute):-

நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்சனை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’  என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும்.

‘நுகர்வோர்’ பிரச்சனையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்சனைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்சனை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்சனை பற்றி தீர்மானிக்கப்படவேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).

பிரிவு.2(f)

குறைபாடு (பொருட்கள்)’(Defect):-

‘குறைபாடு’ (Defect) என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டு:-

புகார்தாரர், தனது புகாரில், வாகனத்தில் குறைபாடு (Defect) உள்ளது என்றும், அதன் அடிப்படையில் அந்த வாகனத்தை மாற்றி, வேறு வாகனம் கொடுக்க வேண்டும் என்று கோரும்பொழுது, அந்தப் புகார்தாரர் அந்த வாகனத் ’தாயாரிப்பில் குறைப்பாடு’ (Manufacturing Defect) என்று நுகர்வோர் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

சேவை குறைபாடு:-

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ‘நுகர்வோரின் நலனைப்’ பாதுகாப்புதான். அதாவது, வியாபார ரீதியாகச் சொல்லுகின்ற பொழுது, பொருட்களை வாங்குபவர் மற்றும் பெரும்பான்மையாக கருதப்படுவது, பொருட்களின் பயன்படுத்தும் ‘சேவை’(Service) என்பதாகும். ’சேவை குறை’ (Deficiency) என்பது ‘தவறான செய்கை’, ‘நேர்த்தியின்மை’, ‘சிறுகுறைபாடு’ அல்லது ‘சேவையில் பற்றாக்குறை’ மேலும் பொருட்களின் தரத்திலும் (Quality) குறைபாடு, சேவை முறையில் குறைபாடு, அந்த சேவைமுறை அமலில் உள்ள சட்டத்தினால் பின்பற்ற வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அந்தச் சேவை முறை ஒப்பந்தத்தின் தொடர்பாக அல்லது வேறு வகையிலும் செயல்படுத்த வேண்டுமென்று பொறுப்பு எடுத்துக்கொள்வது அல்லது வேறு வகையிலும் சேவைக்கு தொடர்பாக இருப்பது என்பதாகும்.

தொடர்வண்டி (Railway) சேவை குறைபாடு:-

பதிவு செய்யப்பட்ட பெட்டியில்(Compartment) பதிவு செய்துள்ள பயணிக்கு, ”தண்ணீர் வசதி” கிடைக்கவில்லை. எனவே, இத்தகைய சேவை குறைபாட்டிற்கு (Deficiency in Service) தொடர்வண்டி நிர்வாகம், பாதிக்கப்பட்ட அந்த பயணிக்கு நஷ்டஈடு பணம் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.

மேற்கூறிய சேவை குறைபாடுகளை போலவே விவசாய விதைகளின் தரத்தில் குறைபாடு, விவசாயத்தில் மின் இணைப்பு வழங்குவதில் குறைபாடு, கல்வி நிறுவனங்களில் சேவை குறைபாடு, வங்கி முகவர்கள் வாகனங்கள் கைப்பற்றுவதில் குறைபாடு, வழக்கறிஞர் தொழிலில் சேவை குறைபாடு, வீடு கட்டி தருவதில் குறைபாடு, ஆயுள் காப்பிட்டில் சேவை குறைபாடு, சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் குறைபாடு, விமான சேவையில் குறைபாடு, வங்கி சேவை குறைபாடு, அஞ்சல் சேவை குறைபாடு, குரியர் சர்வீஸ் சேவையில் குறைபாடு, போன்ற பல மக்கள் நுகர்வுகின்ற சேவைகளில் குறைபாடு இருந்தால் நட்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம்.

நுகர்வோர் சட்டத்தில் நட்ட ஈடு கோர முடியாத சேவைகள்

மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது.

இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்குரைஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

கயல் சட்ட இணைவகம் :

இ.அங்கயற்கண்ணி (வழக்குரைஞர்)

பு.எண்.26,ப.எண்.31,

மாதா கோயில் சாலை,

மந்தவெளி,

சென்னை-600028

கைபேசி: 9884380922

Kayal_advocate@yahoo.com

கயல் சட்ட இணைவகம் :  Kayal Law அஸோஸியேட்ஸ்

படம் : இந்திய ரிசர்வ் வங்கி

ஆதாரம் : சிறகு நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate