பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்

டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அண்மைக் காலங்களில் இத்துறையின் வரலாறு காணாத வளர்ச்சி, கடந்த காலங்களில் அதன் மூலம் கிடைத்த பயன்களையும், வருங்காலத்தில் கிடைக்கவுள்ள எல்லையில்லா வாய்ப்புகளையும் நமக்குத் தெரிய வைத்திருக்கிறது. அதே நேரத்தில், இப்பாதையில் பயணிக்கும் போது நாம் எதிர்கொண்டு வெல்லவேண்டிய சவால்கள் சாதாரணமானவை அல்ல. இன்றைய நிலையில், இந்திய அளவிலும் உலக அளவிலும் ஒருங்கிணைந்து எட்டப்பட்ட முன்னேற்றங்களின் இணைவில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.

அத்தகைய முன்னேற்றங்கள்தான் மிகவும் விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும், அதிக சமத்துவமான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் சக்தியாக இத்தகைய பெரு முயற்சியே அமையும்.

கடந்த காலங்களில் அரசின் மின்னணுமயமாக்கல் முயற்சி என்பது பெரும்பாலும் அரசு சார்ந்ததாகவே இருந்தது. அரசின் செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆவணங்களை எவ்வாறு பாதுகாப்பது, தகவல்களை எவ்வாறு சேகரித்து வைப்பது. நிதி (கருவூலம்), வரி விதித்தல் (வணிக வரிகள், வருமான வரி, கலால் வரி), புள்ளியியல் போன்ற குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்ட துறைகளின் தகவல்களைப் பராமரித்தல் ஆகியவையே மின்னணுமயமாக்கலின் நோக்கமாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை, பொதுவிநியோக அமைப்பு ஆகிய துறைகளை மின்னணு மயமாக்க பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் காரணமாக வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு முன்னேற்றங்கள் தென்பட்டன. இந்த முயற்சிகள் கடந்த 1976 முதல் 1996 வரையிலான இருபத்தாண்டுகளில் பரவலாக மேற்கொள்ளப்பட்டவையாகும். ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் தவிர ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தப் பணிகள் அனைத்தும் தேசிய தகவல் மையத்தின் ஆதரவுடன்தான் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகளை மேற்கொள்வதில் தேசிய தகவல் மையத்தின் முயற்சிகளுக்கு ஆந்திரப்பிரதேச தொழில்நுட்ப சேவை நிறுவனம் உள்ளிட்ட சில மாநில அமைப்புகள் உதவியாக இருந்தன. 1997ஆம் ஆண்டில்தான் குடிமக்கள் சார்ந்த மின் ஆளுமைத் திட்டத்திற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆந்திராவில்தான் முதன்முதலில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவும், ஆண்டுதோறும் தேசிய மின்ஆளுமை மாநாடுகள் நடத்தப்படும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டதன் பயனாகவும், மேலும் பல மாநிலங்களுக்கு மின் ஆளுமை நடவடிக்கைகள் வேகமாகப் பரவின. அடுத்த பத்தாண்டில் நில ஆவணங்கள், போக்குவரத்து, நிலப்பதிவு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொது விநியோகத் திட்டம் போன்ற மாநில அளவிலானப் பணிகளிலும் வருமான வரி, கலால் வரி, பெரு நிறுவன விவகாரங்கள் துறை போன்ற தேசிய அளவிலான பணிகளிலும் மின் ஆளுமை முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன.

அந்தப் பத்தாண்டின் நிறைவில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டத்தின் மூலம் மாநில அரசுத்துறைகளை கணினி மூலம் இணைக்கும் கட்டமைப்புகள் (State wideareanetwork) உருவாக்கப்பட்டன. சில பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை கூட்டுமுயற்சியின் மூலம் இதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பத் தொழில்துறை நாடு தழுவிய அளவில் பணிகளை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது. அதன் பயனாக, அரசுத்துறைகளில் விரிவான மின் ஆளுமைத் தீர்வுகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. நாடு முழுவதும் ஆங்காங்கே ஆனால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் வகையில், மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்கள் பரவலாக வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமின்றி, இந்திய நிர்வாக அமைப்பில், உண்மையாகவே தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சிகள் என்று பாராட்டப்பட்டன. மாநில அளவில் அரசுத் துறைகளை வலையமைப்பு மூலம் இணைப்பதற்கான ஒப்புதல், தேசிய மின்ஆளுமைத் திட்டத்தின் அமைச்சங்களுக்கு அரசின் உயர்மட்டத்தில் அனுமதி அளிப்பது குறித்த ஆலோசனைகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கின. அந்த முயற்சிகளின் பயனாக, 2016ஆம் ஆண்டில் தேசிய மின் ஆளுமைத் திட்டம், மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்ட பொது சேவை மையங்கள் திட்டம் ஆகியவற்றுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர், மின் ஆளுமை நாடு முழுவதும் நிலையான முன்னேற்றத்தை எட்டியது. சில மாநிலங்களில் மின்ஆளுமைப் பணிகளின் முன்னேற்றம் மிகவும் வேகமாகவும், வேறுசில மாநிலங்களில் மின்ஆளுமைப் பணிகள் சற்று மந்தமாகவும் இருந்தன. இந்தக் காலத்தில்தான் (2004- 2013) தனித்துவ அடையாள எண் (ஆதார்), பாஸ்போர்ட் சேவை எம்.சி.ஏ. 21 என்பன போன்ற மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில், தொலைத் தொடர்புத் துறையில், இந்திய அளவில் படிப்படியாகவும், உலக அளவில் வரலாறு காணாத வேகத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 10 கோடி என்ற அளவில் இருந்து 100 கோடி என்ற அளவை எட்டியது. அகண்ட அலைவரிசை சேவையும் அதிகவேக வளர்ச்சியை எட்டியது. இந்தக் காலத்தில்தான் பின்னாளில் பாரத் பிராட்பேண்ட் என்று அழைக்கப்பட்ட தேசிய கண்ணாடி இழைக் கட்டமைப்பு தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் செல்பேசிகளின் பயன்பாடு பயங்கர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. அதே வேகத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்தது. குறிப்பாக இளைஞர்களிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு அதுவரை இல்லாத அளவுக்கு வளர்ந்தது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா கடைபிடித்த வழிமுறையைப் பின்பற்றி இந்தியத் தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. 2014ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற இப்போதைய அரசு, டிஜிட்டல் பொருளாதாரத்தின் வலிமையை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றவகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலக அளவில் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்ற பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளின் மூலம், இந்தியாவை டிஜிட்டல் புரட்சியில் வரலாறு காணாத உயரத்திற்கு தற்போதைய அரசு கொண்டு சென்றது. தொடர் நடவடிக்கையின் மூலம் அனைவரின் பயன்பாட்டுக்கும் ஆதார் திட்டம் கொண்டு செல்லப்பட்டது. பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஆதார், செல்பேசி ஆகிய மூன்றும் இணைந்த ஜாம் திட்டத்தின் மூலம் வங்கிக்கணக்குகள், நேரடி பயன்மாற்றத் திட்டங்கள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைத்தல் ஆகிய நடவடிக்கைகளால் 20 கோடிக்கும் கூடுதலான மக்கள் நிதி உள்ளடக்கத்தின் பயன்களை அனுபவிக்கத் தொடங்கினர்.

நிதி உள்ளடக்கத்தின் பயன்களும், சலுகைகளும்

நிதி உள்ளடக்கத்தின் மூலம் மிக அதிக அளவிலான பயனாளிகளுக்கு வழங்கவேண்டிய பயன்களையும், சலுகைகளையும் அரசும், வணிக அமைப்புகளும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வழங்கும் வாய்ப்பு உருவானது. இதன் மூலம் அரசுத் திட்டங்கள் தேவையற்றவர்களுக்குச் செல்லாமல் பயனாளிகளுக்கு மட்டும் செல்வது உறுதி செய்யப்பட்டது. பொதுச்சேவை மையங்களை அமைக்கும் திட்டம் தற்போது 2.5 இலட்சம் ஊராட்சிகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சுமார் 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் நுட்பத்தின் மூலம் பொருளாதார வாய்ப்புகளும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் சமஅளவில் பகிர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே உலக அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் மிகப்பெரிய சக்தி வாய்ந்த, கட்டுப்படியாகக்கூடிய எல்லையில்லாத தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சமூக ஊடகங்கள், செல்பேசி, தகவல் பகுப்பாய்வு, செயற்கை அறிவுத்திறன், மேகக்கணினி, இணைய உலகம், முப்பரிமாண கொண்டு உருவாக்கப்பட்டவை என்றாலும்கூட, உலக அளவில் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவையாகும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வகையிலான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலம், பல்வேறு துறைகளில், குறிப்பாக சமூகத்துறைகளில் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் ஊற்றுக்கண்ணாக இந்தியா உருவெடுக்கப்போகிறது. அதற்கான திசையில் தான் இந்தியா தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.

  • மின் வணிகம்,
  • போக்குவரத்து,
  • பணம் செலுத்தும் வசதி,
  • ஹோட்டல்கள்/ தங்கும் இடங்கள் / திரையரங்க நுழைவுச்சீட்டு முன்பதிவுகள்,
  • உள்ளூர் அளவிலான உணவு வழங்கல்,
  • மளிகை சாமான்களை வீடுகளுக்குச் சென்று வழங்குதல் என செல்பேசி சேவைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள், நகர்ப்புற மக்களிடையே பிரபலமாகியுள்ளன.

சிறிய நகரங்களைச் சேர்ந்த மக்களிடையேயும் இந்தத் தொழில் நுட்பம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. ஐ.பி.எம். வாட்சன் போன்ற உலக அளவிலான தொழில்நுட்பத் தயாரிப்புகள் தற்போது நோயாளிகளின் கடந்தகால மருத்துவ வரலாற்றுக் குறிப்புகளைப் பார்த்து, அவர்களுக்கு மருத்துவப் பரிந்துரைகளை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது. இந்தியாவுக்குள் பிராக்டோ, போர்ட்டி, லைபிரைட் போன்ற சுகாதார சேவை சார்ந்த தொழில்நுட்பத் தயாரிப்புகள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் எளிதாகத் தொடர்புகொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன.

பைஜு போன்ற செல்பேசி செயலிகள் மிகவும் தரமான கல்வி உள்ளடக்கத்தையும், சேவைகளையும் குறைந்த கட்டணத்தில் மிக எளிதாகப் பெறும் வசதியை வழங்குகின்றன. இதேபோன்ற சில தொழில்நுட்பத் தயாரிப்புகள், வேளாண் துறை சார்ந்த சேவைகளையும் வழங்குகின்றன. இவை மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன என்றாலும்கூட, மிகவும் பயனுள்ளவையாகும்.

மருத்துவ கவனிப்பு, வேளாண்மை, நிதித்தொழில்நுட்பம் / நிதி உள்ளடக்கம் போன்ற துறைகளிலும் இன்னும் பல புதிய முயற்சிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவை எதிர் காலத்தில் இந்திய டிஜிட்டல் உலகம் எட்டவிருக்கும் வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பதாகவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தேவையை உறுதிபடுத்துவதாகவும் அமைந்துள்ளன. இளம் கண்டு பிடிப்பாளர்களாலும், மாற்றத்தின் தலைவர்களாலும் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும், மாற்றங்களும் எத்தகையவை என்பதை நிரூபிக்க ஒரு சில உதாரணங்களே போதுமானவையாகும். மெடிசியா தொழில்நுட்பத் தீர்வு என்ற அமைப்பு தனியார் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து விநியோக வணிகத் தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

ஆர்டு என்ற நிறுவனம்

குறுநிறுவனக் கடன் வழங்குவதற்கு ஏற்ற வகையில், நுண்ணறிவுக் கடன் அமைப்பை உருவாக்கியுள்ளது. தியன்ந்த்ரா என்ற நிறுவனம் செயற்கை அறிவுத்திறனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடன் மாநில மொழிகளில் உரையாடும் சேவையை வழங்குகிறது. இன்ஃபார்ம்டிஎஸ் தொழில்நுட்பம் என்ற நிறுவனம் டாக்ஸ்பர் என்ற தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

செயற்கை அறிவுத்திறன் மூலம் செயல்படும் இந்தத் தயாரிப்பு, டிஜிட்டல் பேனா மற்றும் குறியிடப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை டிஜிட்டல் மயமாக்கும் திறன் கொண்டது. கிரிசிஹப் என்ற நிறுவனம் செயற்கை அறிவுத்திறன் மூலம் செயல்படும் செல்பேசிச் செயலி ஆகும். இது இலவசச் சேவையை வழங்குகிறது. விவசாயிகள் தங்களிடம் உள்ள தகவல்களைத் தெரிவித்து, அவற்றின் அடிப்படையில் முடிவெடுக்க இந்த செயலி உதவுகிறது. மொத்தம் எட்டு மாநில மொழிகளில் செயல்படக்கூடிய இந்தச் செயலி, நாடுமுழுவதும் 17 மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. டீப்மைண்ட் என்ற தயாரிப்பு மருத்துவ ஆவணங்களுக்குள் சென்று அலசி ஆராய்கிறது. அதுமட்டுமின்றி, கண்களின் டிஜிட்டல் ஸ்கேன் பதிவுகளை ஆராயும் இந்தக் கருவி, கண்களில் ஏதேனும் நோய் உள்ளதா என்பதையும் கண்டுபிடிக்கும். செயற்கை அறிவுத்திறன், இணைய மருத்துவ உலகம் ஆகியவை மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

துல்லியப் பண்ணையம், பருத்தியில் பூச்சித் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிவது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளும் வேளாண்துறையில் நிகழ்ந்து வருகிறது. செயற்கை அறிவுத்திறன் மூலம் செயல்படும் இந்தத் தொழில்நுட்பங்களால் விவசாயச் செலவு குறைந்து, உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பிடத்தக்க இத்தகைய கண்டுபிடிப்புகளும், பிற கண்டுபிடிப்புகளும் உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குதல் போன்ற இலக்குகளை எட்ட பெருமளவில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் உறுதி படுத்தப்பட்டுவிட்டதாக நாம் கருதி விடக்கூடாது. மிக அதிக கவனம் செலுத்தினால், இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் 2025ஆம் ஆண்டிற்குள் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வணிகத்தை எட்டும் என்றும், வழக்கமான அணுகுமுறையைப் பின்பற்றினால் அதில் பாதி அளவை மட்டுமே எட்டமுடியும் என்றும் மெக்கின்சி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. இந்த முழுத் திறனையும் எட்டுவதற்கான அதிவேக வளர்ச்சியை உறுதி செய்யவேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், சிறப்பான ஒழுங்குமுறைக் கட்டமைப்பு ஆகியவை அவசியமாகும். இதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும்.

இந்திய அரசு மேப் வரைபடக் கொள்கை சில குறிப்பிட்ட இடங்கள் சார்ந்த வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது. ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லாத சிறிய விமானங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கை இன்னும் வகுக்கப்படாததால், ட்ரோன் சேவையின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட ட்ரோன் கொள்கையை சிலர் வரவேற்றிருந்தனர். மேலும் பலர் அது முழுமையானது அல்ல என்று விமர்சனம் செய்திருக்கின்றனர். தகவல் தனிமையுரிமை குறித்த விதிமுறைகளை வகுக்கும்போதுகூட, தேவையற்ற கட்டுப்பாடுகளில் புதுமையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தடைபடாமல் இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குடிமக்கள் ஒப்புதல் அளித்தால்கூட தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் புதுமையான, வசதியான சேவைகளை வழங்கு வதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.

இரு தரப்பு ஒப்புதலுடன் கூடிய பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். தொலை வழி மருத்துவம் மூலம் தொலை தூரப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவம் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள பழமைவாதக் கட்டுப்பாடுகள் மருத்துவத்துறையின் வணிகச்சூழல் அமைப்பு வளர்ச்சியை பாதிக்கும். டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடைபோடாமல், வழிவகுப்பதற்கு வசதியாக மாற்றங்களைச் செய்யவேண்டிய விதிமுறைகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் ஏராளமான உதாரணங்களைக் கூறமுடியும். உலகின் மற்ற நாடுகளைப் போலவே, நாமும் டிஜிட்டல் துறையில் பல புதிய விசயங்களை கற்று வருகிறோம். இந்தப் புதிய சகாப்ததத்தில் சிந்தனையிலும், செயல்பாட்டிலும், நிர்வாகத்திலும் ஒழுங்குமுறை வேகம் தேவைப்படுகிறது. இவை எளிதானவை அல்ல. ஆனால், இவை அனைத்தும் கட்டாயம் என்பதை உணர்ந்ததுடன், டிஜிட்டல் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு நமக்குக் கிடைத்திருப்பது நமது அதிர்ஷ்டமாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஊக்கமளிப்பவையாகவும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தாலும்கூட, நாம் செல்லவேண்டிய பாதை எளிதானது அல்ல.

புதிய தொழில்நுட்பங்கள் கிடைப்பது, அவற்றின் திறன், அவற்றைக் கட்டுபடியாகும் செலவில் பயன்படுத்துவது  ஆகியவற்றுக்கு இனி எந்தக் கட்டுப்பாடும், எல்லைகளும் இல்லை. அவற்றை நமது தினசரி வாழ்வின் அன்றாடப்பணிகள், வழக்கமான வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்வது நமது கற்பனை மற்றும் திறமையைப் பொருத்ததாகும். இந்தியா விடுதலை அடைந்த நாள் முதல் இன்று வரையிலான பல பத்தாண்டுகளாக அளிக்கப்பட்ட தீர்வுகளால் பயனில்லாமல் இன்னும் நீடிக்கும் வறுமை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன் வழங்கல், வேளாண்மையில் பாதிப்புகளைக் குறைத்து விளைச்சலை அதிகரித்தல், பிணையில்லாமல் கடன் பெறும் வசதி (ஒருவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்து செல்லும் போக்கின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்) உள்ளிட்ட நிதி உள்ளடக்கம் போன்ற ஏராளமான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்து இருந்தாலும் மேற்குறிப்பிட்டவை சாத்தியமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
1.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top