অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்

பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்

அறிமுகம்

சில ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டபின் இந்தியாவின் உயர்மட்டக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள் என்பது இன்றைய முக்கிய நிலையாகக் கருதப்படுகிறது. நிதியியலில் இந்தியா மூன்று மின்னணுசார் முன்னேற்றங்களை மேற் கொண்டுள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல் மின்னணு நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம் எல்லோரையும் உள்ளடக்கிய நிதி நிலைமையை அது வெளிப்படுத்துகிறது. அதன்படி நிதியியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்னணு முன்னேற்றங்களினால் அரசு பயன்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உதவி பெறும் பயனாளிகளை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல், போலியான பயனாளிகளை விலக்கி, தவறுகளை சரி செய்து வீணான கசிவுகளை அடைக்க முடிந்தது. இந்தியாவின் நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள் ஏற்பட்ட பிறகு ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில் மக்கள் நலப் பலன்களை அவர்களுக்கு அளிக்கும் திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிப்பாடு திட்டத்தின் கீழ் 41 சதவிகித பலன் கிடைத்திருக்கிறது. அதைப்போலவே, சமையல் எரிவாயு உதவித் திட்டமான பஹல் திட்டத்தில் 37 சதவிகிதமும் தேசிய சமூக உதவித் திட்டத்தில் 14 சதவிகிதமும் தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் 7 சதவிகிதப் பயன்பாடும் கிடைத்துள்ளன. (இந்திய பொருளாதார அறிக்கை 2015-16)

நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்

பொது நிதியியலில் மற்றொரு வெற்றிகரமான மின்னணு முன்னேற்றம் பிரதம மந்திரி ஜன்தன் திட்டம் ஆகும். பொது மக்கள் ஏராளமானோர், சேமிப்பு வங்கிக் கணக்கை துவங்கியுள்ளதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்குப் பணம் போய்ச் சேரும் வகையில் எல்லோரையும் உள்ளடக்கிய நிதி சார் நிலைமை உருவாகி உள்ளது.

மற்றொரு முயற்சியாக, ஆதார் அட்டைகளைக் கூறலாம். அதன் படி ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வலைதளம் சார் அடையாளம் அளிக்கப்பட்டு சேவைச் செயல்பாடுகள் எளிதாகும் வண்ணம் அவர்களுடைய வங்கிக் கணக்குகளும், கைப்பேசி எண்களும் இதோடு சேர்க்கப்பட்டுள்ளன. கைப்பேசி மூலம் வேகமாக பணப்பரிமாற்றம் செய்வதன் மூலம் வங்கிகளின் சேவைகளை பெருக்குவதற்கு வேண்டிய முயற்சிகளுக்கும் உற்சாகம் அளிக்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் அட்டைகள் மற்றும் கைப்பேசி மூலம் வங்கிசார் சேவைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா மின்னணுப் புரட்சியில் ஒரு படி மேலே சென்றுள்ளது.

இப்படிப்பட்ட நிதியியல்சார் மின்னணு முன்னேற்றங்கள் கென்யாவில் ஏற்பட்டுள்ளன. அங்கு, மின்னணு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த அளவுக்கு நிதி நிறுவனங்கள், முன்னேறி உள்ளன என்பதும் மேல்மட்ட அளவில் ஆராயப்பட்டுள்ளது. கென்யா நாட்டில் “நிதி கிடைக்கும் மையங்கள்” ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாகவே பெரும்பாலும் உள்ளன. கென்யாவில், கைப்பேசி மூலம், பணப்பரிவர்த்தனைகள் செய்வது பெரிதும் முன்னேறி உள்ளது - பத்தே ஆண்டுகளில் பூஜ்ஜியம் நிலைமையிலிருந்து வயது வந்தவர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய அனுபவத்தைப் பயன்படுத்திய இந்தியா வளங்களை திறம்பட பயன்படுத்த ஜன்தன், ஆதார் மற்றும் கைப்பேசிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மானியங்களை மக்களுக்கு வழங்குவதில் இந்தியச் சூழ்நிலையில் திறமற்ற நிலையில் கசிவுகளும், போலியான பயன்பாட்டாளர்களும் காணப்படுகிறார்கள் உதாரணமாக, பொது விநியோகப் பொருட்கள் வழங்குதலில் பல தவறுகள் ஏற்படுகின்றன. அங்கு போலியான பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைப் போலவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திலும் செயல்பாடுகளில் பல குறைகள் உள்ளன. சமையல் எரிவாயு மானியத்தை எடுத்துக் கொண்டால் மக்கட்தொகையில் மேல்மட்டத்தில் உள்ள 20 சதவிகித மக்களுக்கு 60 சதவிகித மானியம் நேரடியாகக் கிடைத்துள்ளது. அடித்தளத்திலுள்ள 50 சதகிவித மக்களுக்கு 8 சதவிகிதம்தான் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளை சமாளிக்க செயல்பாடுகளை மின்னணுமயமாக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

பிரதம மந்திரி ஜனதன் திட்டத்தின் கீழ் பொது மக்கள் வங்கிக் கணக்குகளை துவக்கி அதன் மூலம் உண்மையான பயனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத் தொகைகளை வங்கிக் கணக்கிலேயே நேரடியாகப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது 22 மார்ச் 2017 வரை பிரதம மந்திரி ஜனதன் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட கணக்குகளைப் பற்றிய குறிப்பாகும். இந்தத் தகவல் , ஏப்ரல் 2, 2017 வரை திருத்தப்பட்டுள்ளது. ஆதாரம் இந்திய அரசு (2017) பிரதம மந்திரி ஜனதன் திட்டம்.

பஹல் எனப்படும் சமையல் எரிவாயு பயன்பாட்டாளர்கள் நேரடி மானிய வழங்கு திட்டம் 2014இல் மீண்டும் துவக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிக சலுகை அளிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், மலேரியா நோயால் மக்கள் இறப்பதைவிட பெண்களும் குழந்தைகளும் வீட்டிற்குள் பாதுகாப்பற்ற எரிபொருள்களை சமையலுக்காக பயன்படுத்துவதால் ஏற்படும் மாசு காரணமாக இறக்கிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் இந்த எரிபொருளையும் சேகரிக்க நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட நேரமும், சிரமம் பற்றிய தகவல்கள் இந்திய புள்ளியியல் மையத்தின் ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

பஹல் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு சமையல் எரிவாயு நகர்ப்புறங்களிலும், குறிப்பாக பொருளாதார வசதி பெற்றவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இந்த ஆய்வின்படி சமையல் எரிவாயு சுத்தமான, சுகாதாரமான எரிபொருளாக இருந்தும்கூட நாட்டின் பெரும்பான்மையான குடும்பங்கள் திடவடிவ எரிபொருள்களையே பயன்படுத்துவதால் அவர்களுக்கு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன. ஆகவே, கெட்டி எரிபொருள்களைப் பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சமையல் வாயு எரிசக்தியை வழங்கும் திட்டத்திற்கு இன்னும் முழுமையான பயன்கள் கிடைக்கவில்லை .

ஆதார் இணைந்த பணம் வழங்கு முறையால், பஹல் திட்டம் இப்போது நல்ல வெற்றியடைந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் நுகர்வோருக்கு சிலிண்டர்கள் சந்தைவிலையில் அளிக்கப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மானியம் அவர்களுடைய கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத்தைப் பெறுவதற்கு நுகர்வோர் தங்களுடைய ஆதார் அட்டையை வங்கிக் கணக்கோடு இணைக்க வேண்டும் ஆதார் அட்டையில்லாதவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை 17 எண் சமையல் எரிவாயு சிலிண்டர் அடையாளத்தோடு இணைக்க வேண்டும். இது, நாட்டிலுள்ள 676 மாவட்டங்களிலுள்ள 15.3 கோடி நுகர்வோருக்கு பயன்படும் வகையில் துவக்கப்பட்டு தற்போது, நாடெங்கிலும் செயல்பட்டு வருகிறது (இந்திய அரசு 2014). இந்த பஹல் திட்டம் பெரும் வெற்றியடைந்துள்ளது என்று இந்திய அரசு கூறுகிறது. 2015-16இன் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி இப்படி பயன்களை மக்களுக்கு நேரடியாக வழங்கியதன் மூலம் சலுகை விலையில் அளிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களினால் இதுவரை ஏற்பட்ட கசிவுகள், 24 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையான சில பயனாளிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் (2015-16 இந்திய பொருளாதார ஆய்வறிக்கை) இது அல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் இருந்த கள்ளச் சந்தையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இன்று வரை பஹல் திட்டம் மூலம் ரூ.45,412 கோடி வரை பணம் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1,05,46,388 பேர் தங்களுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்."

மேற்கூறப்பட்ட ஜனதன், ஆதார் மற்றும் கைப்பேசிசார் பணப்பரிவர்த்தனைகள் மூலம் மற்ற பிற திட்டங்களில் பெருமளவு கசிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும் இதனால், நிதி சேமிப்பு மிகவும் உயரும் என்றும் கருதப்படுகிறது. மத்திய அரசின் உயர் கட்டுப்பாட்டில் உள்ள உரங்கள் வழங்குதலில் பெருமளவிலான அதாவது 40 சதகிவிகதம் வரை கசிவுகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஆகவே, உரங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் விஷயத்திலும் இந்த மூன்றும் இணைந்த திட்டம் செயல்படுத்துவதற்கு தக்க காரணங்கள் உள்ளன. இது அல்லாமல், மாநில மற்றும் உள்ளாட்சி அரசு அமைப்புகளும் மத்திய அரசோடு தொடர்பு கொண்டுள்ள சில வியாபாரப் பரிவர்த்தனைகளிலும் மத்திய அரசிலிருந்து, மானியங்கள் நிலைமையைப் போலவே, பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

வளங்களில் - திறன்மேம்பாடு

ஜனதன், ஆதார் மற்றும் கைப்பேசி மூலம் பணப்பரிவர்த்தனையால் கசிவுகளும் தாமதமும், நிர்வாக வலுவும் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதைப்பயன்படுத்தி அரசு பணப்பரிமாற்றம் செய்தால் குறைந்த செலவில் மிகுந்த திறனைப் பெற முடியும். இப்படிப்பட்ட பெரிய சீர்திருத்தங்களுக்குப் பிறகும் இந்த மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுவதில் பிரச்சினைகள் உள்ளன. மேற்கண்ட முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு, இதில் சேர்த்துக்கொள்ளப்படுபவர்கள், விலக்கப்படுபவர்கள் ஆகியவை சார்ந்த குறைபாடுகள் குறைக்கப்பட்ட பின்னும் இந்தத் திட்டங்களை நிர்வகிப்பதில் பெருமளவு மனித வளமும், பிற வளங்களும் செலவாகின்றன.

பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பாக, மின்சாரத்திற்கான மானியங்களில் ஏழைகள் அல்லாதவர்களுக்கு மானியம் அதிகமாக கிடைப்பது காணப்படுகிறது. இதுபோலவே, சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 36 சதவிகித மானியத்தொகை கிடைக்கிறது. ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் ஏழைமக்கள் 9 சதவிகிதம் பேர்தான். ஆகவே, வசதி படைத்தோரே 91 சதவிகிதம் மானியம் பெறுவது தெரிய வந்துள்ளது. முடிவாக, பொருட்களாக, வழங்கப்படும்போது, மக்களின் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப அவை அமைவதில்லை (கடக், 2016). ஆகவே, தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பை மேலும் சீர்திருத்தம் செய்வதற்கு ஒரே மாதிரியான அடிப்படை வருமானக் கொள்கை தேவை என கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கொள்கைகள் இருந்தால், அரசு ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரே மாதிரியாக பணமாற்றம் செய்ய முடியும். 2016- 17 இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி ஒரே மாதிரியான அடிப்படை வருமானக் கொள்கையை செயல்படுத்தினால் தவறானவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதும், கசிவுகளும் பெருமளவு தவிர்க்கப்படும். மானியங்கள், பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கே மாற்றப்படுவதால், நலத் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறையும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு மட்டுமே என்று செயல்படுத்த முடியாத நிலைமை உள்ளது என்று பானர்ஜி (2016) மற்றும் கடக் (2016) குறிப்பிட்டுள்ளனர்." இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே நிலையான அடிப்படை வருமான அளவு சாத்தியமானதுதான். இதனை மானியங்களைக் குறைப்பதன் மூலமாகவும், தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்து, வரி முறைகளை சீர்திருத்தம் செய்வதன் மூலமும் ஈடுகட்ட முடியும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை வருமான வரம்பை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதமாக நிர்ணயம் செய்து, இப்போது மெதுவாக இந்தியாவில் வளர்ந்து வரும் மின்னணு பணம் வழங்கு முறைகளையும் ஆதார் சார்ந்த மின்னணு அடையாளத் திட்டத்தையும் பயன்படுத்தி, இந்தக் கொள்கை மூலம் பல மட்ட அரசு அமைப்பை குறைத்து, இந்தியாவின் ஏழ்மையை நாம் சமாளிக்க முடியும் என்று ரே (2016) சுட்டிக்காட்டுகிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை வருமானக் கொள்கை, பயனீட்டாளர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உள்ள பிரச்சினையை தவிர்த்து எல்லோருக்குமாக, பணப்பரிவர்த்தனை செய்கிறது. இதை, பொருளாதார வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் ஒரு உத்தியாகவும் மேற்கொள்ளலாம்.

நிதிசார் ஒருங்கிணைப்பு மற்றும் நிதிசார் கொள்கைகளை பார்க்கும் போது இந்தியாவின் நிதிசார் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆகவே, மின்னணு பரிவர்த்தனை மூலம் மானியங்களை வழங்கும் நிர்வாகத்திலும், எல்லோரையும் உள்ளடக்கிய நிதி நிலைமையை ஏற்படுத்துவதிலும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நம்முடைய வளங்களை நாம் திறமையாக பயன்படுத்த முடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate