பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்ந்த திட்டங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மகளிர் திட்டம்

மகளிரை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.

ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மகளிர் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தினால் மகளிரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பின்வரும் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கீழ்க்கண்ட மூன்று முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகளை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து அவர்களில் மகளிர் சுய உதவிக் குழுவில் இதுவரை இணையாதவர்களை குழுக்களாக அல்லது குழுக்களில் ஒருங்கிணைத்தல். கிராமப்புற ஏழைகளுக்கான வலுவான உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி அவற்றை நிலைத்த தன்மையுடன் செயல்பட வைத்தல். இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி வறுமையிலிருந்து விடுபடச் செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக பாளையங்கோட்டை, நான்குநேரி, வள்ளியூர், இராதாபுரம், கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரங்களிலும் மூன்றாம் கட்டமாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம், சேரன்மகாதேவி, களக்காடு, பாப்பாகுடி, தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் புதுவாழ்வு திட்டம் செயல்பாட்டில் இருந்த சங்கரன்கோவில் மானூர், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய வட்டாரங்களில் ஜுலை 2017 முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகளின் துவக்கமாக ஊரக பகுதிகளில் உள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள இலக்கு மக்கள் குடும்பங்களை கண்டறியும் நோக்கத்துடன் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நிலை ஆய்வு பணி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து 425 ஊராட்சிகளிலும் முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி மக்கள் நிலை ஆய்வு மூலம் 114706 குடும்பங்கள் சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய அல்லது இலக்கு மக்கள் குடும்பங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நிலை ஆய்வின் மூலம் இலக்கு மக்கள் குடும்பங்கள் என கண்டறியப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டு 2728 புதிய இலக்கு மக்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 951 எண்ணிக்கையிலான சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே ஊரக பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த 2687 சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

சுழல்நிதி / ஆதார நிதி

இலக்கு மக்கள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இலக்கு மக்கள் சுய உதவிக் குழுக்களின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்திடவும் எளிய முறையில் வங்கி கடன் கிடைக்க செய்திட ஏதுவாகவும் புதிதாக அமைக்கப்பட்ட 2158 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.415.00 இலட்சம் சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

சுய உதவிக் குழுக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தற்சார்பு அடையச் செய்திடும் நோக்கத்துடனும் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தி சுய உதவிக் குழுக்களின் நிதிசார்ந்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்திடும் விதமாகவும் ஒரு ஊராட்சியில் செயல்பாட்டில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களையும் ஒருங்கிணைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மக்கள் அமைப்பானது அனைத்து 425 ஊராட்சிகளிலும் மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 425 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் ஊக்கநிதியாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.425.00 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 156 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சுய உதவிக் குழுக்களின் நிதி தேவையினை பூர்த்தி செய்திடும் முகமாக அமுத சுரபி நிதியாக 1868.67 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான தனிநபர் கடன்

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உறுப்பினர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்திடவும் அவர்களை சுய தொழில் முனைவோராக மாற்றிடும் விதமாக தனிநபர் கடனாக 8657 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு ரூ.1298.55 இலட்சமும் நலிவுற்ற குடும்பங்களை சார்ந்த 8943 உறுப்பினர்களுக்கு ரூ.1341.45 நிதியும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக தணிக்கை குழு

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார இயக்க நிதியின் பயன்பாடு மற்றும் மக்கள் அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்திடும் விதமாக சமூக தணிக்கை குழு என்ற சுய சார்புடைய மக்கள் அமைப்பானது அனைத்து 425 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் இணைப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க நிதி தவிர சுய உதவிக் குழுக்களின் பொருளாதார கடன் தேவைகளை பெறுமளவில் பூர்த்தி செய்திடும் பொருட்டு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான சுய உதவிக் குழுக்களுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ.1351.49 கோடி வங்கி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

வட்டி மானியத் திட்டம்

தவணை தவறாமல் குறித்த காலத்தில் வாங்கிய கடனை திரும்பச்செலுத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் கிடைக்க செய்திடும் விதமாக “வட்டி மானிய திட்டம்” தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுக்கள் பெறும் ரூ.3.00 இலட்சம் வரையிலான வங்கி கடன்களுக்கு வங்கிகளால் விதிக்கப்படும் வட்டி விகித்தில் 7% வட்டி தவிர மீதமுள்ள வட்டி தொகையானது வட்டி மானியமாக விடுவிக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3637 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.39 இலட்சம் வட்டி மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒத்த தொழில் குழுக்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில் முனைவோராக உருவாக்கிடும் பொருட்டு ஊராட்சி பகுதிகளிலும் ஓரே தொழிலில் ஈடுபட்டு வரும் 20 முதல் 30 உறுப்பினர்களை கொண்ட ஒத்த தொழில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 251 தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்கட்டமைப்பு நிதியாக ரூ.199.38 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வட்டார அளவிலான கூட்டமைப்பு

அனைத்து வட்டாரங்களிலும் வட்டார அளவில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்திடவும் மக்கள் அமைப்புகளை மேலும் வலுவுள்ளதாக மாற்றிடும் விதமாக வட்டார அளவில் சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளையோர்களுக்கு தனியார்துறையில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் வருமானத்தை உயர்த்திடும் நோக்கத்துடனும் கிராமபுறங்களில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு எந்த துறைகளில் பணிவாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிந்து கொள்ள செய்திடவும் பணியாளர்கள் தேவைப்படும் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை எளிதில் தெரிவு செய்யும் விதமாகவும் வேலைவாய்ப்பு முகாம்கள் தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளையோர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் முகமாக 530 இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு இதுவரை 295 எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 27 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் 4876 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2014-15 மற்றும் 2015-16-ல் 100 நாட்கள் பணி முடித்த பயனாளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்குதல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2014-15 மற்றும் 2015-16-ல் 100 நாட்கள் பணி முடித்த பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்கி அவர்களுடைய வாழ்தாரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ் ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ஊதிய வேலைவாய்ப்பு பிரிவின்கீழ் 34 நபர்களுக்கும் சுய வேலைவாய்ப்பு பிரிவின்கீழ் 236 நபர்களுக்கும் பல்வேறு வகையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்

மாவட்ட வணிக வளாகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை மாவட்ட வழங்கல் (ம) விற்பனை சங்கத்தின்கீழ் மாவட்ட அளவில் மாவட்ட வணிக வளாகம் மற்றும் மாவட்டத்தின் பிற 16 இடங்களில் கிராம வணிக வளாகங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் 3 மதி விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் (உள் மற்றும் வெளி மாவட்டங்களில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 146 சுய உதவிக் குழுக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அம்மா இருசக்கர வாகனம்

இத்திட்டம் உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் பணியிடங்கள் வங்கி மற்றும் சமுதாய அமைப்புப் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அதிகபட்ச மானியமாக வாகன விலையில் 50% அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம்

நகர்ப்புற ஏழைகள் ஒருங்கிணைக்கப்படாத (unorganized) தொழில்புரிவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. தற்பொழுது கிராமப்புற வறுமையைக்காட்டிலும் நகர்ப்புறத்தில் வறுமையானது அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே நகர்ப்புற பகுதிகளிலுள்ள பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்திடும் முகமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60% : 40% நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்க செயல்பாடுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் தமிழ்நாடு தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் தொடங்கப்பட்டு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் 7 நகராட்சி பகுதிகளிலும் மற்றும் 36 பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 37488 குடும்பங்களும் நகராட்சி பகுதிகளில் உள்ள 39838 குடும்பங்களும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 30166 குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின்கீழ் கீழ்க்காணும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நிர்வாக மேம்பாடு

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப உறுப்பினர்களை கொண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இதுவரை 1153 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் 13 பகுதிவாரியான கூட்டமைப்புகளும் 2 நகர்புற அளவிலான கூட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டுள்ள அனைத்து வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப மகளிரை சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்பட்ட 1153 சுய உதவிக் குழுக்களுக்கும் 13 பகுதிவாரியான கூட்டமைப்புகளுக்கும் ஊக்குநர் பிரதிநிதி / உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் பொருட்டு அக்குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்கள் சுய தொழில் துவங்குவதை ஊக்கப்படுத்திடும் முகமாக 796 நபர்களுக்கு இதுவரை முத்ரா திட்டத்தின்கீழ் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து நபர்களுக்கும் சுய தொழில் வங்கி கடன் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்பங்களை சார்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தொழில் கடன் தேவையினை பூர்த்தி செய்திடும் முகமாக பல்வேறு உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ள 202 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.858 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சுழல்நிதி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்பட்ட 1153 சுய உதவிக் குழுக்களில் 881 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10000 சுழல்நிதி மானிய தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : https://tirunelveli.nic.in/

2.71428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top