অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டம்

தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டம்

அறிமுகம்

மத்திய அரசு, தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டமானது இந்தியாவில் 271 மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 01.03.2000 முதல் 2500 குழந்தைகளுக்காக 50 சிறப்பு பள்ளிகள் துவங்கப்பட்டது. சிறப்பு பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு, செலவினங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டது. இதற்கு முன்பணம் வழங்கப்படுவதில்லை. முதல் கட்டமாக 31.05.2003-ல் சிறப்பு பள்ளிகள் அமைந்துள்ள இடங்கள், குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி வருடந்தோறும் பள்ளிகளின் இடங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஊட்டி இரண்டு வருடம் கழித்து முறையான பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். வளர் இளம் பருவத்தினருக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 5586 குழந்தைகள் முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 5514 குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தையல் இயந்திரங்கள் ஊக்கத்தொகை மூலம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு

1995ம் ஆண்டு அரசாங்கத்தின் மூலம் நடத்திய கணக்கெடுப்பில் 63316 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கீழ்க்கண்டவாறு குழந்தை தொழிலாளர்கள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டார்கள்.

குழந்தை தொழிலாளர்கள் விபரங்கள்
வருடம்குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை
1995 63316 (அறிவொளி தன்னார்வலர்கள்)
2003 4453 (அங்கன்வாடி பணியாளர்கள்)
2004 2011 (எஸ்.எஸ்.ஏ)
2005 719 (எஸ்.எஸ்.ஏ)
2009 498 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2010 1822 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2011-12 2023 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2013-14 2184 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2014-15 1464 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2015-16 1625 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2016-17 1669 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)
2017-18 1593 (ஒ.எஸ்.சி- எஸ்.எஸ்.ஏ. கணக்கெடுப்பு)

விழிப்புணர்வு முகாம்

  • அரசாங்க விழாக்களிலும், கிராம கமிட்டி கூட்டங்களிலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு பள்ளி குழந்தைகளால் நடத்தப்பட்டு வருகிறது.
  • தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
  • அரசாங்க அலுவலகங்களிலும், பஞ்சாயத்து அலுவலகங்களிலும் சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
  • ஆண்டு தோறும் ஜுன் மாதம் 12ம் நாள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் முறையான பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
  • தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்கள் தவிர முறையான பள்ளியில் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்களிலும், கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் முகாம்களிலும், அரசு விழாக்களிலும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • மேற்கண்ட விழிப்புணர்வு முகாம்களால் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தை தொழிலாளர் நிலை பற்றிய விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
  • முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனர்கள் மற்றும் பதாதைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • ரேடியோ மற்றும் டி.வி சேனல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • கலைக்குழுக்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் குழந்தை தொழிலாளர் நிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • கிராமங்களில் நடக்கும் அரசு விழாக்கள் மற்றும் கிராம விழாக்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • சமூக நலத்துறை, கல்வித் துறை, தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைத் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து கூட்டாய்வுகள் நடத்தப்படுகிறது.
  • முறை சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கிடையே குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
  • அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முறை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சைல்டு லைன் ஆகியோர்களுடன் இணைந்து அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஊக்கத்தொகை

சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு மாதம் ரூ.400 ஊக்கதொகையாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மதிய உணவு

முறை சார்ந்த பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் மதிய உணவு அட்டவணைப் படியே சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

சீருடை

தமிழக அரசின் மூலம் சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு 2004ம் ஆண்டு முதல் இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது.

இலவச பஸ் பாஸ்

தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச பஸ் பாஸ் மூலமாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து சிறப்பு பயிற்சி மையத்திற்கு குழந்தைகள் வருவதற்கு உதவியாக உள்ளது. தகுதியான குழந்தைகளுக்கு போக்குவரத்து கழகத்தின் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

பாடப் புத்தகங்கள்

கல்வித் துறையின் மூலமாக இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

சிறப்பு பயிற்சி மையம் அமைந்துள்ள கிராமங்களில் குறைந்த பட்ச 12ம் வகுப்பு முடித்த தகுதியான நபர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மைய கருத்தாளர்கள், எஸ்.எஸ்.ஏ கருத்தாளர்களை கொண்டு கற்றலில் இனிமை மற்றும் கல்வி உபகரணங்கள் தயார் செய்வது, கற்றலின் இனிமை, இன்பமாய் கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் கற்று கொடுக்கப்படுகிறது. சென்னை தொழிலாளர் ஆணையகத்தின் மூலம் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வி பயிற்சி

மூன்று சிறப்பு பயிற்சி மையங்களுக்கு, ஒரு தொழிற்கல்வி பயிற்றுநர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் மூலம் வளர் இளம் பருவத்தினருக்கு கூடை பின்னுதல், தையல் பயிற்சி, ஆபரணங்கள் தயாரித்தல், நாப்கின் தயாரித்தல், சிம்பிள் கெமிக்கல், பொம்மை தயாரித்தல், புடவைகளில் வண்ணம் தீட்டுதல் மற்றும் அச்சு பதித்தல், புக் பைண்டிங் போன்ற தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2000ம் ஆண்டு முதல் இதுவரை 5496 குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை

சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவரை கொண்டு சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மருத்துவ அட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களால் மேல் சிகிச்சைக்கு பரிதுரைக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு இரு முறை சிறப்பு மருத்துவ அலுவலர்களை கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களால் மேல் சிகிச்சைக்கு பரிதுரைக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கண் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி தணிக்கைகள்

அனைத்து சிறப்பு பயிற்சி பள்ளிகளை மாதம் ஒரு முறை திட்ட இயக்குநராலும் மாதம் இரண்டு முறை கள அலுவலர்களாலும், வாரம் மூன்று முறை களப்பணியாளர்களாலும் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தொழிலாளர் துறை மற்றும் மருத்துவ அலுவலர்களால் சிறப்பு பள்ளி அவ்வப்போது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

ஆய்வுக் கூட்டம்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித் துறை, தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து திட்டம், மகளிர் திட்டம், மக்கள் செய்தி தொடர்பு துறை, பஞ்சாயத்து அபிவிருத்தி, மாநகராட்சி மற்றும் சிறப்பு பயிற்சி மைய தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் முறைசார்ந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மற்றும் கூட்டாய்வு, அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து நடத்தப்படுகிறது.

இதர செயல்பாடுகள்

சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு பொது அறிவு வளர்க்கும் விதமாக தினசரி நாளிதழ் பள்ளிகளில் வாங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி சுற்றுலாவாக குழந்தைகளை அருகிலுள்ள கன்னியாகுமரி, கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மேலும் அறிவியல் அறிவை வளர்ப்பதற்காக மாவட்ட அறிவியல் மையத்திற்கு அவ்வப்போது குழந்தைகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

ஆதாரம் : https://tirunelveli.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate