অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அரசு - அரசாங்கம் வேறுபாடு

அரசு - அரசாங்கம் வேறுபாடு

முன்னுரை

பேச்சுவழக்கில் அரசு என்பதும், அரசாங்கம் என்பதும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் அரசு என்பதும், அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை. பின்வரும் அட்டவணையிலிருந்து அரசுக்கும், அரசாங்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அறியலாம்.

அரசு

அரசாங்கம்

அரசு என்பது, மக்கள் கூட்டம், நிலப் பரப்பு, அரசாங்கம் மற்றும் இறைமை ஆகிய நான்கு கூறுகளை கொண்டதாகும்.

அரசாங்கம் என்பது அரசின் நான்கு கூறுகளில் ஒன்றாகும்.

அரசு மூல அதிகாரங்களை பெற்றதாகும்.

அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவை ஆகும்.

அரசு என்பது நிரந்தரமான என்றும் தொடரும் ஒரு அமைப்பாகும்.

அரசாங்கமானது தற்காலிக தன்மை உடையதாகும்.

அரசு என்பது கருத்தை ஒட்டியதாகும். காண முடியாததும் ஆகும்

அரசாங்கம் என்பது காணக்கூடிய ஒரு திட அமைப்பாகும்.

அரசாங்கத்தின் பிரிவுகள்

செயலாட்சிக்குழு

அரசாங்கத்தின் ஒரு அங்கம் செயலாட்சிக்குழு ஆகும். அரசு செயலாட்சிக்குழு என்பது அரசாங்கத்தின் மூலம் செயல்படுகிறது. சட்டப்பேரவை இயற்றிய சட்டத்தை அமல்படுத்துவதுதான் செயலாட்சிக்குழுவின் பணியாகும்.

பெயரளவில் செயலாட்சிக்குழு மற்றும் உண்மையான செயலாட்சிக்குழு என்று குறிப்பிடும் போது இந்தியாவின் குடியரசுத்தலைவர் பெயரளவிலான செயலாட்சிக்குழு எனவும், பிரதமரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை உண்மையான செயலாட்சிக்குழு எனவும் கூறலாம்.

நாடாளுமன்ற செயலாட்சிக்குழுத் தலைவர் சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு பொறுப்புடையவரும் ஆவார். இந்திய செயலாட்சிக்குழு நாடாளுமன்ற முறையினைச் சேர்ந்ததாகும்.

செயலாட்சிக்குழுவின் அதிகாரங்களும் பணிகளும்

  1. சட்டங்களை அமல்படுத்துதல்.
  2. அமைதி, ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டுதல்.
  3. ஆக்கிரமிப்பைத் தடுத்தல்.
  4. பிறநாடுகளுடன் நேசக் கூட்டுறவு கொள்ளுதல்.
  5. தேவை ஏற்பட்டால் போர் செய்து நாட்டை பாதுகாத்தல்.
  6. பெரிய பதவிகளுக்கு நியமனங்கள் செய்தல்.
  7. நிதி திரட்டுவது மற்றும் செலவிடுவது.
  8. சட்டப்பேரவை மற்றும் இதர அலுவல்களைக் கவனித்தல்.
  9. சட்டப்பேரவை செயல்படாத நாட்களில் அவசரச்சட்டம் பிறப்பித்தல்.
  10. மக்களின் சமூக, பொருளாதார நிலையைச் சீர்செய்யும் திட்டங்களை நிறைவேற்றுதல்.
  11. குற்றவாளிகளை மன்னிக்கவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ அதிகாரத்தை பயன்படுத்துதல்.

சட்டப்பேரவை

சட்டப்பேரவை, சட்டம் இயற்றும் கடமையைச் செய்கிறது. அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வருவதிலும் சட்டப்பேரவைக்கு முக்கிய பங்கு உண்டு. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் ஆலோசனை நடத்தி, விவாதம் செய்து, தீர்மானம் செய்யப்படுகிறது.

நாடாளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுவது இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆகும். ஏனென்றால் இதுதான் உலகிலேயே பழமையானது ஆகும்.

லாஸ்கியின் கருத்துப்படி “சட்டமியற்றுதல் ஒன்று தான் சட்டப்பேரவையின் பணி என்பதல்ல, அதன் முக்கிய பணி நாட்டின் நிர்வாகம், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையாக, சீராக நடக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்வதும் ஆகும்.

இந்தியாவில் மத்திய சட்டப்பேரவையைத் தான் நாம் நாடாளுமன்றம் என்று அழைக்கிறோம். நாடாளுமன்றம் இரு அவைகளை உடையது.

  1. மக்கள் அவை அல்லது லோக்சபை (கீழவை)
  2. மாநிலங்கள் அவை அல்லது ராஜ்யசபை (மேலவை)

சட்டப்பேரவையின் பணிகள்

  1. சட்டம் இயற்றுதல்.
  2. நிர்வாக மேற்பார்வை.
  3. வரவு செலவு அறிக்கை நிறைவேற்றுதல்.
  4. பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து போக்குதல்.
  5. மற்ற பணிகள் குறித்து விவரிப்பது. அவை: முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், தேசிய கொள்கைகள், பன்னாட்டு உறவுகளை பராமரித்தல்

நீதித்துறை

நீதித்துறை என்பது அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய அங்கமாகும். சட்டத்துக்கு விளக்கமளித்தல் மற்றும் நிர்வாகம் செய்தல் நீதித்துறையின் முக்கியப் பணியாகும்.

ஒரு சிறந்த அரசாங்கத்தின் ஆதாரமே அதன் திறமையான நீதித்துறை அமைப்புத்தான் என்று பிரைஸ்பிரபு குறிப்பிடுகிறார். குடிமக்களின் நலம் நீதித்துறையை பொருத்துதான் உள்ளது. நீதித்துறை மக்களாட்சியின் ஒரு தூண். நீதித்துறையின் விளக்கம் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியன மக்களுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்கிறது என்றார்.

நீதித்துறையின் சுதந்திரத் தன்மையும், நடுநிலைத் தன்மையும் மக்களாட்சியில் முக்கியமான சிறப்பியல்கள் ஆகும். இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தலைமையிடம் தில்லியில் உள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஹுயூக்ஸ் (JUSTICE HUGHES) குறிப்பிட்டதைப் போன்று “நாம் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால், அரசியலமைப்பு என்பது நீதிபதிகள் என்ன கூறுகிறார்களோ அதுதான்” என்றார்.

நீதித்துறையின் பணிகள்

  1. நிர்வாகம் செய்தல்.
  2. சட்டம் என்றால் என்ன, அதன் பொருள், அதன் எல்லைகள் எவை என்று முடிவு செய்தல்.
  3. கேட்கப்படும் விளக்கங்கள் குறித்து ஆலோசனை கூறுதல்.
  4. சட்டங்களும், உரிமைகளும் பறிக்கப்படும் போது நீதிப் பேராணைகள் மூலம் தடுத்தல்.
  5. அரசியலமைப்பு சட்டப் பாதுகாவலனாக இருத்தல்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate