பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / சொற்கூறுகளும் விளக்கங்களும் / நிறுமத்தில் பயன்படுத்தப்பெறும் ஆவணங்கள் அமைப்பு முறையேடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிறுமத்தில் பயன்படுத்தப்பெறும் ஆவணங்கள் அமைப்பு முறையேடு

ஒரு நிறுமத்தில் பயன்படுத்தப்பெறும் சில அடிப்படை ஆவணங்கள் அமைப்பு முறையேடு (Memorandum of Association) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எந்த அடிப்படை நிபந்தனைகளுடன் ஒரு நிறுமம் உருவாக்கப்பட்டுள்ளதோ அவற்றை உள்ளடக்கியது, அமைப்பு முறையேடாகும். எந்தெந்த நடவடிக்கைகளில் நிறுமம் ஈடுபடலாம் என்பதை இது வரையறை செய்கிறது. இந்த ஆவணத்தின் எல்லைக்கு மீறிய எச்செயலும் நிறுமத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. (Ultra vires beyound the powers of the company) எனவே, அத்தகைய எல்லை மீறிய செயல் நிறுமத்தைக் கட்டுப்படுத்தாது.

அமைப்பு முறை ஏட்டில் காணப்பெறுபவை

அமைப்பு முறை ஏட்டில் பல உட்பிரிவுகள் (Clauses) உள்ளன.

பெயர் குறித்த உட்பிரிவு (Name cluause)

இப்பிரிவு நிறுமத்தனித்தன்மையை பிறருக்கு அடையாளம் காட்டுகிறது. நிறுமம் செயல்படுவதற்கான அறிகுறியை காட்டுகிறது. விரும்பத்தகாத பெயர் வைப்பதை தவிர்த்தல் வேண்டும். பிற நிறுமத்தின் பெயருடன் ஒத்திருத்தல் கூடாது. பொதுவரை நிறுமமாக இருந்தால் அதன் பெயர் முடியும் போது “வரையறுக்கப்பட்டது” என்ற வார்த்தை இருத்தல் வேண்டும். தனி வரையறு நிறுமமாக இருந்தால் அதன் பெயர் முடியும்போது “தனி வரையறுக்கப்பட்டது” என்ற வார்த்தை இருத்தல் வேண்டும்.

இடங்குறித்த உட்பிரிவு (Situation clause)

இப்பிரிவில் நிறுமத்தின் பதிவு அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயரை குறிப்பிடுதல் வேண்டும். ஆனால் மாநிலத்திற்குள் அமைந்திருந்தால் நிறுமத்தின் உண்மை முகவரி குறிப்பிட தேவையில்லை. இப்பிரிவு நிறுமப்பதிவளார் அல்லது நீதிமன்றத்தின் அதிகார எல்லையை தீர்மானிக்கிறது.

நோக்கம் குறித்த உட்பிரிவு (Objects clause)

நிறுமத்தின் நடவடிக்கைகள் இதில் குறிப்பிடுவதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த உட்பிரிவாகும். நிறுமத்தின் அதிக பட்ச செயல்பாட்டு எல்லையை இப்பிரிவு வகுக்கிறது. ஒரு நிறுமம் இதில் குறிப்பிட்ட வணிக நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள இயலும். அதிகார எல்லையை மீறி செயல்படும் நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வ பலன் ஏதுமில்லை.

பொறுப்பு குறித்த உட்பிரிவு (Liability Clauses)

இங்குதான் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பொறுப்புறுதி நிறுமமாயின், அது கலைப்புக்குள்ளாக நேரிடும்பொழுது, நிறுமச் சொத்துக்கள், அதன் கடன்களை அடைக்கப் போதுமானதாக இல்லா நிலையில், ஒவ்வொரு உறுப்பினரும் கொண்டு வருவதாக உறுதியெடுத்துக் கொண்ட தொகை இங்குக் குறிப்பிடப்படும்.

முதல் குறித்த உட்பிரிவு (Capital Clause)

எப்பங்கு முதலுடன் நிறுமம் பதிவு செய்யப்படுகிறது என்ற விவரமும் முதல் தொகை குறிப்பிட்ட மதிப்புடைய பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ள விவரமும் இங்குக் கொடுக்கப்படுகின்றன. பங்குகளின் வகைகளையும் அவற்றின் உரிமைகளையும் இதில் வெளிப்படுத்த வேண்டியதில்லை.

அமைப்பு அல்லது உடன்பட ஒப்பும் உட்பிரிவு (Association or subscription clause)

தனி வரையறு நிறுமமாயின் குறைந்தது இரு நபர்களும், பொது வரையறு நிறுமமாயின் குறைந்தது ஏழு பேரும் அமைப்பு முறையேட்டில், தங்கள் தங்கள் பெயர்கட்கு எதிரே குறிப்பிடப் பட்டுள்ள பங்குகளை வாங்கிக்கொள்ள உடன்பட்டுக் கையொப்பம் இடுகின்றனர். அமைப்பு முறை ஏட்டினையொட்டி, தாங்கள் ஒன்றிணைந்து நிறுமமாக அமைத்துக் கொள்ளும் விருப்பத்தையும் இங்கு வெளியிடுகின்றனர்.

செயல்முறை விதிகள் (Articles of Association)

இது அடுத்த முக்கியம் வாய்ந்த ஆவணமாகும். நிறுமத்தின் ஆக்கச் செயல்பாடு குறித்த விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும் இது உள்ளடக்குகிறது. இதில் அடங்கியுள்ள செயல்முறை விதிகளுள் முக்கியமானவை கீழே தரப்பட்டுள்ளன.

 • தொடக்க ஒப்பந்தங்கள்(preliminary Contracts) ஏதேனும் இருப்பின், அவற்றை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிறைவேற்றுதல் குறித்து.
 • பங்கு முதல், பங்குகளின் பல்வேறு வகைகள், ஒவ்வொரு வகைக்கும் உள்ள உரிமைகள்.
 • பங்குகள் ஒதுக்கீடு (Allotment), பங்குகள் மீது அழைப்பு கோரல் (Calls on shares) தொடர்பானவை.
 • பங்குகள் ஒறுப்பிழப்பு (Forfeiture) அல்லது பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்யப்பட்ட பங்குகளை மறுவெளியீடு செய்தல்.
 • பங்குச் சான்றிதழ்கள், பங்காணைகள் (Share warrants) அனுப்புதல் குறித்து.
 • பங்குகள் மாற்றுதல் அல்லது வாரிசுமுறை மாற்றம் (வாரிசுக்கு மாற்றித்தருதல்) குறித்த வழிமுறைகள்.
 • பங்குகளைப் பங்கிருப்பாக (stocks) மாற்றுதல்
 • பங்கு அல்லது கடன் பத்திர வெளியீட்டில் ஒப்புறுதியாளர்கட்கு (Underwriters) கொடுக்க வேண்டிய தரகுத் தொகை.
 • பங்கு முதலை மாற்றி அமைத்தல்
 • இயக்குநர்களை நியமித்தல், அவர்களின் தகுதிகள், ஊதியம் குறித்தவை.
 • இயக்குநர்களின் கடன் வாங்கும் அளவு
 • மேலாண்மை இயக்குநர், மேலாளர் (Manager) செயலர் போன்றோரை நியமித்தல்,
 • அவர்கட்கு இருக்க வேண்டிய தகுதிகள், உரிமைகள், கடமைகள், அவர்கட்குரிய ஊதியம் போன்றவை.
 • நிறுமத்தின் பொது இலச்சினையை (Common Seal) பயன்படுத்துதல் குறித்த விதிமுறைகள்
 • இயக்குநர் அவைக் கூட்டங்கள்
 • பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் வாக்குரிமைகள், பகராள்கள் (proxies) , வாக்கெடுப்பு குறித்த விதிமுறைகள்
 • பங்குநர்களின் பல்வேறு வகையான கூட்டங்களைக் கூட்டி நடத்துதல் குறித்த விதிமுறைகள்
 • பங்காதாயம்(dividends) வழங்குதல், காப்பு (Reserves) ஏற்படுத்துதல் போன்றவை.

மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் (Redeemable preference shares) வெளியிடுதல் குறித்த விதிமுறைகள்

 • நிறுமக் கலைப்பு (winding up) ஒப்புறுதி நிறுமமாயின் (Guarantee companies) எத்துணை உறுப்பினர்களுடன் நிறுமம் பதிவு செய்யப்பட இருக்கிறது என்ற விவரத்தையும் செயல்முறை விதிகள் தரவேண்டும். தனி வரையறு நிறுமங்கள் கீழ்க்கண்டவை குறித்து முக்கியமாக குறிப்பிடவேண்டும்.
 • அ. பங்குகள் மாற்றுகையில் உள்ள கட்டுப்பாடுகள் (Restrictions)
 • ஆ. உச்சளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 50க்கு மிகக் கூடாது என்ற வரம்பு. இந்த 50 என்ற எண்ணிக்கையில் தற்பொழுதைய அல்லது முந்தைய பணியாளர் பங்கு வைத்திருப்பின் அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 • இ. பொதுமக்களைத் தனது நிறுமத்தில் பங்குகளையோ, கடனீட்டுப் பத்திரங்களையோ (debentures) வாங்குமாறு, பங்கு அல்லது கடன் பத்திர வெளியீட்டின் போது தகவலறிக்கை மூலம் அழைப்பு விடுதல் தடை செய்யப்படுதல் குறித்த விதிமுறை.
 • ஈ. இயக்குநர்கள், உறுப்பினர்கள் அல்லது இவர்களின் உறுப்பினகளன்றி பிறரிடமிருந்து வைப்புத்தொகை (Deposits) பெறுவதற்குத் தடை செய்தல் குறித்த விதிமுறைகள்.

தகவலறிக்கை (Prospectus)

தனது பங்குகளையோ, கடனீட்டுப் பத்திரங்களையோ வாங்க பொதுமக்களை அழைக்க நிறுமம் வெளியிடும் எந்த ஒரு ஆவணமும் தகவலறிக்கை என்றே கொள்ளப்படும். நிறுமத் தொழில் ஆதாயமிக்கதாக இருக்குமா என்பதை முதலீட்டாளர் நோக்கும் சாளரமாக (Window) இது அமைகிறது. இதில் காணப்பெறும் தகவல்கள், புள்ளி விவரங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, இந்நிறுமத்தில் பங்குகள் வாங்கக் கவர்ந்திழுக்கப் படுகின்றனர்.

இத்தகைய தகவலறிக்கையை வெளியிடத் தனி வரையறை நிறுமத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிக்கையில் காணப்பெற வேண்டிய தகவல்

முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க தகவலறிக்கை கீழ்க்கண்டவற்றை குறிப்பிடுதல் வேண்டும்.

 • நிறுமத்தின் முதன்மை நோக்கங்கள்
 • அமைப்புமுறையேட்டில் கையொப்பமிட்டவர்களின் பெயர், முகவரி மற்றும் தொழில் ஆகியவற்றை பற்றியும் ஒவ்வொருவரும் வாங்கிய பங்குகள் விபரம்.
 • பங்குகளின் ஒவ்வொரு வகைக்கான உரிமைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை.
 • உறுப்பினர்கள் இயக்குநர் தேர்தலில் போட்டியிட தேவையான தகுதிப்பங்குகள் பற்றிய விபரம். இதனை நிறுமத்தின் செயல்முறை விதிகள் நிர்ணயம் செய்கிறது.
 • இயக்குநர்கள், மேலாண்மை இயக்குநர் மற்றும் செயலர்கள் ஆகியோரின் பெயர், விளக்கங்கள், உரிமைகள், ஊதியம் ஆகியவற்றை குறிப்பிடுதல்.
 • பங்கு ஒதுக்கீட்டிற்கான குறைந்த அளவு பங்கெடுப்பு
 • வெளியிடப்பட்ட ஒவ்வொருவகை பங்குகளுக்கும் செலுத்த வேண்டிய விண்ணப்பத்தொகை மற்றும் ஒதுக்கீட்டு தொகை.
 • பங்கெடுப்பு பட்டியல் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கும் கால அவகாசம்.
 • பங்குதாரர்கள், கடன் பத்திரதாரர்கள் ஆகியோருக்கான சலுகைகள் மற்றும் உரிமைகள் பற்றிய ஈடுபட்ட ஒப்பந்தம் மற்றும் ஈடுபடப் போகும் ஒப்பந்த விபரங்கள்.
 • பங்குகள் மீதான முனைமத்தொகை அல்லது தள்ளுபடி தொகை
 • ஒப்புறுதியாளர்களின் ஒப்பந்தம் ஏதேனும் இருப்பின்
 • காப்பு மற்றும் மிகை தொகையின் விபரம்
 • தொடக்க செலவினத் தொகை
 • தணிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி
 • நிறுமக்கூட்டங்களில் பங்குதாரர்களின் வாக்குரிமை பற்றிய விபரம்
 • நிறுமத்தின் இலாபம் மற்றும் நட்டத்தைப் பற்றிய தணிக்கையாளரின் அறிக்கை.

பங்குகள் (Shares)

நிறுமச் சட்டத்தின்படி, நிறுமப் பங்கு முதலில் ஒரு பங்குதான் பங்கு எனப்படும். பங்கிற்கும், பங்கிருப்புக்கும் (Stock) வேறுபாடு. வெளிப்படையாகவோ தெரிவிக்கப்படா நிலையில் பங்கு என்பது பங்கிருப்பையும் குறிக்கும். பங்கு ஒன்று அதன் உரிமையாளர்க்கு உள்ள சில உரிமைகளையும், பொறுப்புகளையும் உணர்த்தும்.

குறிப்பிட்ட மதிப்புள்ள கூறுகளாக நிறுமத்தின் பங்குகள் பகுக்கப்படுகின்றன. அத்தகைய கூறுகளைத் தான் பங்குகள் என்கிறோம். ஆக, நிறுமத்தின் பங்கு முதலின் ஒரு சிறு பாகமே பங்கு என்பதை நாம் உணரலாம்.

பங்குகளின் வகைகள் (Kinds of shares)

நிறுமங்கள் சட்டம் 1956-ன்படி ஒரு நிறுமம் இருவகையான பங்குகளைத்தான் வெளியிட முடியும். அவை,

1) முன்னுரிமைப் பங்குகள் (Preference shares)

2) நேர்மைப் பங்குகள் (Equity Shares)

பங்குகளின் வகைகள்

 • முன்னுரிமைப்பங்குகள் ( Preference Shares)
 • நேர்மைப்பங்குகள் (Equity Shares)
 • குவி முன்னுரிமைப் பங்குகள்
 • குவியா முன்னுரிமைப் பங்குகள்
 • எஞ்சியதில் பங்கேற்கும் முன்னுரிமைப் பங்குகள்
 • எஞ்சியதில் பங்கேற்கா முன்னுரிமைப் பங்குகள்
 • மாற்றிக் கொள்ளக்கூடிய முன்னுரிமைப் பங்குகள்
 • மாற்றிக் கொள்ள முடியா முன்னுரிமைப் பங்குகள்
 • மீளதகு முன்னுரிமைப்பங்குகள்
 • மீட்கமுடியா முன்னுரிமைப் பங்குகள்

முன்னுரிமைப் பங்குகள் (Perference shares)

பிறவகையான பங்குகள் பெற்றிருக்கும் உரிமைகளைவிட, சிலவற்றில் முன்னுரிமைப் பெற்றிருக்கும் பங்குகள் முன்னுரிமைப் பங்குகள் எனப்படுகின்றன.

அவை:

அ. நிறுமம் செயல்படும் வரை ஒரு குறிப்பிட்ட (நிலையான) பங்காதாயத்தை (Dividend) பெறுவதில், இவ்வகை பங்குநர்கள் முன்னுரிமை பெற்றுள்ளனர். அதாவது, ஓராண்டில் ஈட்டிய இலாபத்தில் முதலில் முன்னுரிமைப் பங்குநர்கட்குக் குறிப்பிட்ட வீதப் பங்காதாயத்தைக் கொடுத்த பின்னரே, மீதி இலாபம் இருப்பின், அதனை நேர்மைப் பங்குநர்கட்குப் பங்காதாயம் வழங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆ. நிறுமம் கலைக்கப்படும்பொழுது, பிற புறக்கடன்கள் அனைத்தையும் அடைத்த பின்னர், சொத்துக்கள் மிகுதியிருப்பின் முதலில் முன்னுரிமைப் பங்குநர்கட்கு முழு முதலையும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பின்னர் உள்ள மிகுதியையே நேர்மைப் பங்குநர்கட்குத் திருப்பித்தரப் பயன்படுத்த வேண்டும். அதாவது, கலைப்பின்போது நிறுமம் பங்கு முதலைத் திருப்பித் தரும்பொழுது, முன்னுரிமைப் பங்குகட்கு முதல் உரிமை உண்டு. ஆக, முன்னுரிமைப் பங்குகட்கு இரு நிலைகளிலும் முன்னுரிமை இருக்க வேண்டும். அதாவது நிறுமத்தின் வாழ்நாளில் பங்காதாயம் பெறுவதிலும், கலைப்பின்போது, போட்ட பங்கு முதல் பணத்தைத் திரும்பப் பெறுவதிலும் நேர்மைப் பங்குகளைவிட முன்னுரிமை பெற்றவர்கள். ஆயினும், முன்னுரிமைப் பங்குகட்குச் சில குறைபாடுகளும் உண்டு.

சூழ்நிலைகளில் வாக்கு செலுத்தும் உரிமை

தங்கள் உரிமைகளைப் பாதிக்கும் எத்தீர்மானத்தின்மீதும் (அதாவது பிற தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது புலப்படும்) சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆண்டுகட்குப் பங்காதாயம் வழங்கப்படாமலிருந்தால், குறிப்பிட்ட அக்காலக்கெடுவிற்குப் பின் அனைத்துத் தீர்மானங்கள் மீதும் வாக்களிக்கும் உரிமை பெறுகின்றனர்.

முன்னுரிமைப் பங்குகளின் வகைகள்

உரிமைகளைப் பொறுத்து, அவை சுருக்கமாகக் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

குவி முன்னுரிமைப் பங்குகள் (Cumulative Preference Shares)

போதிய ஆதாயம் ஈட்டாவிடில், பங்காதாயம் வழங்கப்படாது. எனினும் அந்தாண்டில் பங்காதாயம் பெறும் உரிமை இவ்வகைப் பங்குநர்கட்குக் காலாவதி ஆவதில்லை. அவர்கட்குச் செலுத்தப்பெறாத பங்காதாயம் சேர்ந்து நிலுவையில் இருந்துகொண்டேயிருக்கும். இலாபம் ஈட்டும் பின்வரும் ஆண்டுகளில், பிற பங்குநர்கட்குப் பங்காதாயம் வழங்குமுன்னர், குவிப் பங்குநர்கட்கு நிலுவையில் உள்ள முந்தைய ஆண்டுகளின் பங்காதாயத்தை வழங்க வேண்டும். வழங்கப்படாப் பங்காதாயத்தை நிலுவையாகப் பெறும் உரிமை படைத்த பங்குதான் குவி முன்னுரிமைப் பங்கு என்று கூறப்படுகிறது. வேறு எதிர்மறையாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லையெனில், முன்னுரிமைப் பங்குகள் அனைத்தும் குவி முன்னுரிமைப் பங்குகளே ஆகும்.

குவியா முன்னுரிமைப் பங்குகள் (Non Cumulative Preference Shares)

குவியா முன்னுரிமைப் பங்குகளைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு ஆண்டில் இலாபம் இல்லாக் காரணத்தால் பங்காதாயம் வழங்கவில்லையாயின், பங்காதாயம் காலாவதியாகிவிடுகிறது. செலுத்தப்பெறாப் பங்காதாயம் சேர்ந்து வருவதில்லை. பின்வரும் ஆண்டுகளில் நிரம்ப லாபம் ஈட்டியிருப்பின், முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பெறாப் பங்காதாயத்தை நிலுவையில் உள்ளதாகக் கருதி கொடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் பங்காதாயம் குவிந்து வருவதில்லை. எனவே இத்தகைய பங்குகள் குவியா முன்னுரிமைப் பங்குகள் எனப்படும்.

எஞ்சிய இலாபத்தில் பங்கேற்கும் முன்னுரிமைப் பங்குகள் (Participating Preference Shares)

இலாபத்தில் குறிப்பிட்ட நிலையான சதவிகிதம் முன்னுரிமைப் பங்குநர்கட்குப் பங்காதாயமாக வழங்கப்பெறும். குறிப்பிட்ட விழுக்காடு பங்காதாயத்தை முன்னுரிமைப்  பங்குநர்கட்கு வழங்கிய பின்னர், நேர்மைப் பங்குநர்கட்கு இயக்குநர் அவை பரிந்துரைக்கும் வீதத்தில் பங்காதாயம் வழங்கும். இவ்விகிதம் ஆண்டுக்காண்டு மாறக்கூடியது. நிலையான விகிதத்தில் முன்னுரிமைப் பங்குகட்கும், இயக்குநர் அவை பரிந்துரைத்த விகிதத்தில் நேர்மைப் பங்குநர்கட்கும் பங்காதாயம் வழங்கிய பின்னரும் இலாபம் மிஞ்சியிருப்பின், ஒப்புக்கொண்டவாறு, மீண்டும் குறிப்பிட்ட சதவிகிதப் பங்காதாயம் முன்னுரிமைப் பங்குகள் மீது வழங்கப்படும். இத்தகைய பங்குகள் எஞ்சிய இலாபத்தில் பங்கேற்கும் முன்னுரிமைப் பங்குகள் எனப்படும். எனவே இவ்வகையினர் இருவகையில் பங்காதாயம் பெறுகின்றனர். ஒன்று குறிப்பிட்ட நிலை விகிதத்தில் பங்காதாயம். மற்றொன்று. மிஞ்சிய இலாபத்தை ஒட்டி மீண்டும் ஒரு பங்காதாயம். இவ்விழுக்காடு ஆண்டுதோறும் மாறக்கூடியது.

இவ்வாறே, இத்தகைய பங்குகட்கு இன்னொரு சலுகையும் உண்டு. அதாவது நிறுமம் கலைக்கப்படும்பொழுது, வெளிக்கடன்களை அடைத்த பின்னர், முன்னுரிமைப் பங்குகட்கும், நேர்மைப் பங்குகட்கும் பங்கு முதலைத் திருப்பிக் கொடுத்த பின்னர், சொத்துக்கள் எஞ்சியிருப்பின், அம்மிகுதிச் சொத்திலும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்குபெறும் உரிமை உண்டு.

நிறுமச் செயல் முறை விதிகளில் குறிப்பிட்டிருந்தாலொழிய, முன்னுரிமைப் பங்குகட்கு எஞ்சிய இலாபத்தில் பங்கேற்கும் உரிமை இல்லை. அதாவது, வேறாக செயல்முறை விதிகளில் சொல்லப்படா நிலையில் முன்னுரிமைப் பங்குகள் எஞ்சிய இலாபத்தில் பங்கேற்க முடியாதவையாகவேக் கருதப்படும்.

எஞ்சிய இலாபத்தில் பங்கேற்கா முன்னுரிமைப் பங்குகள் (Non-participating Preference Shares)

இத்தகைய பங்குகட்கு குறிப்பிட்ட நிலையான பங்காதாயம் பெறுவதற்கு முன்னுரிமை உண்டு. அவ்வாறே நிறுமக் கலைப்பின்போதும் புறக்கடன்களை அடைத்தபின்னர் பங்கு முதலைத் திரும்பப் பெறுவதிலும் முன்னுரிமை உண்டு. எஞ்சிய இலாபத்திலோ, கலைப்பின்போது எஞ்சியிருக்கும் சொத்துக்களிலோ மீண்டும் உரிமை கோர முடியாது. இறுதியில் எஞ்சியது முழுவதும் நேர்மைப் பங்குகட்கே வழங்கப்படும். முன்னரே குறிப்பிட்டவாறு நிறுமத்தின் செயல்முறை விதிகள் குறிப்பிட்டுக் கூறவில்லையாயின் முன்னுரிமைப் பங்குகள் எஞ்சிய இலாபத்தில் பங்கேற்கா முன்னுரிமைப் பங்குகள் வகையைச் சார்ந்தவை என்றே கருதப்படும்.

மாற்றற்குரிய (Convertible) முன்னுரிமைப் பங்குகள்

குறிப்பிட்டக் காலக் கெடுவுக்குள் முன்னுரிமைப் பங்குகளை நேர்மைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றால், இவை இவ்வாறு அழைக்கப்பெறும். நேர்மைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உடையவை இவை.

மாற்ற இயலா முன்னுரிமைப் பங்குகள் (Non-convertible preference shares)

முன்னுரிமைப் பங்குகளை நேர்மைப் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாதெனில், அவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. முன்னுரிமைப் பங்குகள் என வெளியிடப்பட்ட பின், நிறுமத்தின் வாழ்வுக் காலத்தில் முன்னுரிமைப் பங்குகளாகவே இருக்கும்.

நிறுமத்தின் செயல்முறை விதிகள் இவ்வகையான மாற்றும் உரிமை குறித்து ஏதும் கூறவில்லையென்றால், முன்னுரிமைப் பங்குகள் மாற்ற இயலா முன்னுரிமைப் பங்குகளாகவே கருதப்படும்.

மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் (Redeemable preference shares)

நிறுமச் செயல்முறை விதிகள் அதிகாரம் வழங்குமாயின், நிறுமம் ஒன்று மீள் தகு முன்னுரிமைப் பங்குகளை வெளியிடலாம். அதாவது இவ்வகைப் பங்குகளைக் குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குப் பின், அல்லது அப்பங்கு வெளியீட்டு நிபந்தனைகட்கேற்ப தன் விருப்பப்படி அறிவிப்பு கொடுத்து விட்டு, இவ்வகைப் பங்குநர்கட்கு பங்குப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். இலாபத்திலிருந்தோ அல்லது இதற்கெனப் புதுப் பங்குகளை வெளியிட்டுத் திரட்டிய பணத்திலிருந்தோ இவ்வகைப் பங்குகளை நிறுமம் மீட்டுக்கொள்ளலாம்.

மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் முழுதும் செலுத்தப் பெற்றதாக (Fully paid up shares) இருந்தால் மட்டுமே நிறுமம் அவற்றை மீட்க முடியும். தற்பொழுதுள்ள முன்னுரிமைப் பங்குகளை மீள்தகு பங்குகளாக மாற்றிட முடியாது. அதாவது பங்குகளை வெளியிடும்பொழுதே அவை மீள்தகு பங்குகளாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

மீட்க இயலா முன்னுரிமைப் பங்குகள் (Irrdeemable Preference Shares)

மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் எனக் குறிப்பிட்டு வெளியிடப்படாத எம்முன்னுரிமைப் பங்குகளும் மீட்க முடியா முன்னுரிமைப் பங்குகளாகும். நிறுமம் தன் வாழ்நாளில் இவற்றை மீட்க இயலாது.

நேர்மைப் பங்குகள் (equity Shares)

முன்னுரிமைப் பங்குகளல்லாப் பிற பங்குகள் நேர்மைப் பங்குகளே. முன்னர் இவை சாதாரண பங்குகள் (Ordinary Shares) என அழைக்கப்பெற்றன. இவற்றின் சிறப்புத் தன்மைகள் முன்னுரிமைப் பங்குகள் மீது வழங்கவேண்டிய பங்காதாயத்தை வழங்கிய பிறகே இலாபம் எஞ்சியிருப்பின், நேர்மைப் பங்குகட்குப் பங்காதாயம் கிடைக்கும். முன்னுரிமைப் பங்குகள் போலன்றி, குறிப்பிட்ட நிலையான சதவிகிதப் பங்காதாயம் இவர்கட்குக் கிடைக்காது. அதன் வீதம் ஈட்டிய இலாபத்திற்கு ஏற்ப ஆண்டுதோறும் மாறக்கூடியது. இது ஒரு குறைபாடு அன்று. நல்ல நிறுமங்களில் இவர்கட்கு கிடைக்கும் பங்காதாய விகிதம் முன்னுரிமைப்பங்குநர்கட்கு வழங்கப்படும் குறிப்பிட்ட விழுக்காடு பங்காதாயத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும்.

அவ்வாறே நிறுமம் கலைப்பிற்குள்ளாகும்பொழுது, முன்னுரிமைப் பங்குகட்கு முழுத்தொகையையும் திருப்பிக் கொடுத்தபின்னரே, மிகுதி இருப்பின் இவர்கள் முதலீடு செய்த பங்கு முதல் திருப்பித்தர முடியும். ஆனால் இலாபம் ஈட்டாக் காலத்தில் பங்காதாயம் எதுவும் இவர்கட்கு வழங்கப்பட மாட்டாது. பின்வரும் ஆண்டுகளில், மிகவும் கூடுதலான ஆதாயம் கிட்டியிருப்பினும், வழங்கப்படா ஆண்டுகட்கான நிலுவைப் பங்காதாயம் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அனைத்துத் தீர்மானங்கள் மீதும் வாக்களிக்கும் உரிமை நேர்மைப் பங்குநர்கட்கு உண்டு.

பங்கு ஒதுக்கீடு (Allotment of shares)

பங்கு வெளியீட்டில் பங்கு வாங்க விண்ணப்பித்த ஒருவர் கொடுக்கும் அளிப்பை அல்லது முனைவை (Offer) நிறுமம் ஏற்பது (Acceptance) பங்கு ஒதுக்கீடு எனப்படும். பங்கு வேண்டுமெனக் கேட்டவர்க்கு இத்துணைப் பங்குகள் ஒதுக்கலாம் என்று இயக்குநர் அவை தீர்மானம் நிறைவேற்றி இதனைச் செய்கிறது. பங்குகளை ஒதுக்கிய பின்னர் பங்கு விண்ணப்பதாரர் ஒதுக்கப்பெற்ற பங்குகளை உடையவர் (Holder) ஆகிறார். பங்கு விண்ணப்பத்தை ஒட்டி, இயக்குநரவை தீர்மானத்தின் மூலம் பங்குகளைப் பகிர்வு செய்தலைப் பங்கு ஒதுக்கீடு என்கிறோம் என்று பாமர்(Palmer) என்பார் கூறுகிறார்.

பங்கு ஒதுக்கீட்டில் பொதுவாகக் கவனிக்க வேண்டியவை

அ. பொதுவாக இயக்குநர் அவைதான் பங்குகளை ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், வழக்கமாக, நிறுமத்தின் செயல்முறை விதிகளின்படி இவ்வதிகாரம் ஒதுக்கீட்டுக் குழுவிடம் (Allotment Committee) ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தியப் பங்கு மாற்றிய அவை (Securities Exchange Board of India) (செபி. SEBI) வகுத்துள்ள நெறிமுறைகட்கேற்ப இக்குழு பங்குகளை ஒதுக்கீடு செய்கிறது.

ஆ. இயக்குநர் அவை தீர்மானம் நிறைவேற்றிய மூன்று தினங்களுக்குள் ஒதுக்கீட்டினை முடிக்க வேண்டும்.

இ. ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கீடு குறித்த விவரத்தை உரிய முறையில் அறிவிக்க வேண்டும். இதனை ஒதுக்கீடு கடிதம் (letter of Allotment) எனக்கூறுவர்

ஒதுக்கீட்டின்போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை.

 • பொதுமக்களிடம் தகவலறிக்கையை வெளியிடும் முன்பாக, அதன் நகலொன்றைப் பதிவாளரிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
 • தகவலறிக்கையில் குறிப்பிட்டிருந்த குறைந்தளவு பங்கெடுப்புத் தொகை பெறப்பட்டிருந்தாலொழிய ஒதுக்கீடு செய்ய முனைதல் கூடாது. அப்பங்குகள் மீதான விண்ண ப்பப் பணம்(application money) பெறப்பட்டிருக்க வேண்டும். தகவலறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் குறைந்தளவு பங்கெடுப்புப் பெறவேண்டும்.
 • அட்டவணை வங்கி (scheduled Bank) ஒன்றில், விண்ணப்பப் பணத்தைப் போட்டு வைத்திருக்க வேண்டும்.
 • தகவலறிக்கை வெளியிட்ட 90 நாட்களுக்குள் குறைந்தளவு பங்கெடுப்புப் பெறாவிடின், விண்ணப்பத்தின் மீது பெற்ற பணம் முழுவதையும் திருப்பித் தருதல் வேண்டும்.
 • தகவலறிக்கை வெளியிட்ட 5-ஆவது நாள் தொடக்கத்திற்கு முன்னர் நிறுமம் ஒதுக்கீடு செய்யக் கூடாது.

முறைகேடான ஒதுக்கீடு (Irregular Allotment)

கீழ்க்கண்ட நிலைகளில் ஒதுக்கீடு, முறைகேடான ஒதுக்கீடு என்று கருதப்படுகிறது.

அ. பங்கொன்றின் இயல்மதிப்பில் (Nominal value or face value) குறைந்தது 5 சதவிகிதம் அளவிற்காவது விண்ணப்பபணம் பெறாமல் பங்குகளை ஒதுக்கீடு செய்தல் அல்லது

ஆ. தகவலறிக்கை வெளியிட்ட 90 நாட்களுக்குள் குறைந்தளவு பங்கெடுப்பு பெறாதபோதும் பங்குகளை ஒதுக்கீடு செய்தல் அல்லது

இ. பங்கு விண்ணப்பப் பணத்தை அட்டவணை வங்கியில் போட்டு வைத்திருக்காமல் ஒதுக்கீடு செய்தல் அல்லது

ஈ. தனி ஏற்பாட்டின் மூலம் பங்கு முதல் திரட்டிட ஏற்பாடு செய்து விட்ட நிலையில் தகவலறிக்கை ஒன்றை நிறுமம் வெளியிடாது. ஆயினும், அச்சூழ்நிலையிலும், பங்கு ஒதுக்கீட்டிற்குக் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னர் தகவலறிக்கைக்கு மாற்றறிக்கை (Statement in Lieu of prospectus) என்ற ஒன்றைப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு இவ்வறிக்கையைத் தாக்கல் செய்யாமலேயே செய்யப்படும் ஒதுக்கீடும் முறைகேடான ஒதுக்கீடாகக் கருதப்படும்.

பங்குச் சான்றிதழ் (Share Certificate)

நிறுமம் ஒன்று தனது பொது இலச்சினையைப் பொறித்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர்களாலும், அதன் செயலரும் கையொப்பமிட்டு, அதில் பெயர் குறிப்பிட்ட உறுப்பினர் அதில் குறிப்பிட்ட பங்குகட்கு உரியவர் என்று வழங்கும் சான்றிதழ் பங்குச் சான்றிதழாகும். பங்குகளின் தனி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பங்குகள் மீதான உரிமைக்கு இது சான்றாக விளங்குகிறது. பகுதி செலுத்தப் பெற்றிருப்பினும், பங்குச் சான்றிதழை நிறுமம் வழங்கும்.

பங்குச் சான்றிதழை வைத்திருப்பவர் (அதற்குரியவர்) நிறுமத்தின் உறுப்பினராவார். உறுப்பினர்க்குண்டான அனைத்து உரிமைகளையும் அவர் பெறுகிறார். பங்குச் சான்றிதழில்

 1. பங்குநரின் பெயர்
 2. பங்குகளின் எண்ணிக்கை
 3. பங்குகளின் தனிப்பட்ட எண்கள் (Distinctive Numbers)
 4. பங்குகளின் செலுத்தப்பெற்ற தொகை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பங்கு ஒதுக்கீட்டு நாளிலிருந்து மூன்று தினங்களுக்குள் பங்குச் சான்றிதழை நிறுமம் வழங்க வேண்டும்.

பங்கழைப்பு (calls on Shares)

பங்கின் மீது பெற வேண்டிய தொகையைப் பல தவணைகளில் விண்ணப்பத்துடன், ஒதுக்கீடு பெற்ற பின், இரண்டு அல்லது மூன்று அழைப்புகளில் பெறுவது சில ஆண்டுகட்கு முன்வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. ஆனால் தற்பொழுது குறிப்பாக பங்குகள் வெளியீடு நிறுமங்கள் புகழ் வாய்ந்த நிறுமங்களாக இருக்குமாயின், முனைமத் தொகை (Premium) உட்பட பங்கின் முழு மதிப்பையும் பங்கு விண்ணப்பத்துடனேயே வசூலித்து விடுவது வழக்கமாகி விட்டது. ஆயினும் அழைப்பு (Call) குறித்த தன்மைகளை அறிந்துகொள்வோம்.

அழைப்பு (Call) பொருள்

அழைப்பு எனும் சொல் நிறுமம் தனது வாழ்நாளில், செயல் முறை விதிகளைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுக்குப் பின் ஒவ்வொரு பங்கின்மீதும் செலுத்தப் பெறாதிருக்கும் நிலுவைத் தொகை முழுவதையுமோ, அதன் ஒரு பகுதியையோ செலுத்தக் கோருவதை உணர்த்தும் சொல் ஆகும்.

அதாவது பங்கு ஒதுக்கீடு செய்த பின்னர் ஒதுக்கீட்டுத் தொகையைச் செலுத்துமாறு நிறுமம் கோரினால், அது அழைப்பு ஆகாது. ஒதுக்கீட்டுப் பணத்திற்குப் பின் செலுத்த வேண்டியுள்ள தொகையைக் கொடுக்குமாறு நிறுமம் வேண்டுதலே அழைப்பு எனப்படும்.

அழைப்பின்போது கவனிக்கப்பட வேண்டியவை

 • இயக்குநர் அவையின் தீர்மானத்தினை ஒட்டியே அழைப்பு கோரப்பட வேண்டும்.
 • தீர்மானத்தில் பங்கொன்றுக்கு அழைப்புப் பணம் எவ்வளவு என்பதையும், எந்நாளுக்குள் அது செலுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 • அழைப்புப் பணத்தைச் செலுத்த, குறைந்தது 14 நாள் அறிவிக்கை (notice) தரப்பட வேண்டும்.
 • அழைப்புப் பணத்தை நிறுமம், தன் வாழ்நாளில் எப்போது வேண்டுமாயினும் கோரலாம். நிறுமம் கலைப்பிற்குள்ளாகும்போதுகூட அழைப்புப் பணம் செலுத்துமாறு கோரப்படலாம்.
 • கலைப்பின்போது அழைப்புப் பணம் செலுத்துமாறு நிறுமத்தின் கலைப்பு அதிகாரிதான் (Official Liquidator) கோர முடியும். அழைப்பு கோரியவுடன், அது பங்குநரிடமிருந்து பெறவேண்டிய கடன் தொகை ஆகிறது.
 • அழைப்புப் பணத்தைச் செலுத்தத் தவறின் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கும் உரிமையும் நிறுமத்திற்கு உண்டு.

முன்கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்பு (Calls in Advance)

நிறுமம் அழைப்புப் பணம் கோரும் முன்னரே, பங்குமீது செலுத்தப் பெறாதிருக்கும் தொகை முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ பங்குநர் ஒருவர் செலுத்தலாம். இவ்வாறு தானே முன்வந்து செலுத்தும் தொகை முன்கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்பு (Calls in Advance) எனப்படும்.

பின்னர் நிறுமம் அழைப்புப் பணம் செலுத்தக் கோரும் பொழுது, முன்கூட்டிச் செலுத்திய அழைப்புப் பணத்தில் சரிக்கட்டிக் கொள்ளலாம்.

நிறுமத்தின் செயல்முறை விதிகள் அதிகாரம் அளிக்குமாயின், முன்கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்புப் பணத்தின்மீது வட்டி தரப்படலாம்.

ஆதாரம் – தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top