অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சந்தைக் குறியீட்டு எண்கள்

சந்தைக் குறியீட்டு எண்கள்

அறிமுகம்

சந்தைக் குறியீட்டு எண்கள் ஆண்டாண்டு காலமாகச் சந்தையின் தகவல் ஆதாரமாகப் பயன்பட்டு வருகிறது. குறியீட்டு எண்களைப் பார்க்கும் பொழுது சந்தை எவ்வாறு முன்னேறியது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். குறியீட்டு எண்கள் சார்ந்த பரஸ்பர நிதி அலகுகளும், குறியீட்டு எண்கள் சார்ந்த வருவித்த பத்திர சொத்துகளும் (Derivatives) சமீப காலமாக அதிக அளவில் வியாபாரமாவதால் சந்தைக் குறியீட்டு எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. சந்தையின் போக்கு கீழிருந்து மேலாக இருக்கின்றது.

சந்தைக் குறியீட்டு எண்களை பற்றி அறிதல்

குறியீட்டு எண்கள் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பொருள்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை அளவிடக்கூடியதாகும். சந்தைக் குறியீட்டு எண் என்பது சந்தையில் வியாபாரமாகும் பங்குகளில் சில குறிப்பிட்ட பங்குகளின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிடுவதாகும். குறிப்பாகச் சொல்லப்போனால் சந்தைக் குறியீட்டு எண் என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட தொகுதி பங்குகளுடைய விலைகளின் கூட்டுச் சராசரியின் தற்போதைய மதிப்பாகும். ஒரு குறிப்பிட்ட நாளையோ ஆண்டையோ அடிப்படைக் காலமாக எடுத்துக் கொண்டு அதன் தொடர்புடைய விலைகளின் கூட்டுச் சராசரி மூலம் இது கணக்கிடப்படுவதால் இது ஒரு தொடர்புடைய மதிப்பாகும். ஆரம்ப மதிப்பு அடிப்படை மதிப்பை 100 என்றோ 1000 என்றோ எடுத்துக் கொள்வது வழக்கம். உதாரணமாக நிப்டியின் அடிப்படை மதிப்பு 1,000 மற்றும் அடிப்படை நாளாக 1995ஆம் வருட நவம்பர் மாதம் 3ஆம் தேதியும் ஆகும்.

ஒரு நல்ல சந்தைக் குறியீட்டு எண் என்பது சந்தையில் இருக்கும் அத்தனை பங்குகளின் போக்கையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இருக்கவேண்டும். அதாவது, இது சந்தையைப் பரிதிபலிக்கும், இது சந்தையைப் பல்வகைப்படுத்தும், இது சந்தையை நீர்மத்தன்மை உடையதாகும். குறியீடுகளில் ஏற்படும் இயக்கம் குறிப்பிடத்தக்க வணிக முதலீடுகளின் பட்டியல்களிலிருந்து நாட்டுக்குக் கிடைக்கும் வருமானத்தைப் பிரதிபலிக்கும்.

சந்தைக்குறியீட்டு எண்ணின் முக்கிய உபயோகங்கள்

  1. சந்தையின் போக்கை அளக்கும் அளவுகோலாக இருக்கின்றது.
  2. வணிக முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் அறிந்துகொள்ள உதவுகிறது
  3. குறியீட்டு எதிர்காலம் போன்ற வருவிக்கப்பட்ட பத்திர சொத்துகளின் அடிப்படைச் சொத்தாக இருக்க வேண்டியதாய் இருக்கின்றது.
  4. இயக்கமற்ற முதலீடுகள் (passive fund management) குறியீட்டு நிதிகளால் மேலாண்மை செய்யப்படுகிறது.

குறியிட்டு எண்களின் இயக்கத்தில் பொருளாதார முக்கியத்துவம்

குறியீட்டு எண்களின் இயக்கத்தினை எப்படி கணக்கில் கொள்வது? அந்த இயக்கம் என்ன சொல்கின்றது? என்று பார்ப்போம். குறியீட்டு எண்களில் ஏற்படும் மாறுதல்கள் எதிர்காலத்தில் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுமங்களின் பங்காதாயம் மற்றும் முதலீட்டு மதிப்புயர்வு எவ்வாறு இருக்கும்? என்பதை காட்டுவதாக இருக்கும். பங்காதயம் மற்றும் ஒவ்வொரு பங்கின் வருமான அளவீடு (EPS) கடந்த காலத்தில் இருந்ததை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு சந்தையில் இருந்தால் குறியீட்டு எண் தற்காலத்தில் அதிகரிக்கும். எதிர்காலத்தில் இவை குறையும் என்று நினைத்தால் தற்சமயம் குறியீட்டு எண் குறையும்.

ஒரு பங்கின் விலையில் மாறுதல் நிகழ கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1) நிறுமம் குறித்த செய்திகள் (புதிய தயாரிப்புகளை வெளியிடுவது, நிறுமத்தின் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் போன்றவை).

2) நாடு குறித்த செய்திகள் (உதாரணம்: அரசின் நிதிநிலை அறிக்கைகள்) இவ்விரண்டில் நாடு குறித்த செய்திகளை உள்ளடக்கி மாறுவதே குறியீட்டு எண்ணின் முக்கிய குணாதிசியமாகும். அதாவது நாடு குறித்த செய்திகளைக் கொண்டு அடையும் மாற்றங்கள் ஆகும். குறியீட்டு எண் சராசரி முறையைக் கொண்டு கணக்கிடப்படுவதால் இது சாத்தியமாகின்றது. ஒவ்வொரு பங்கும் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதில் ஒன்று பங்கு செய்திகள் மற்றொன்று குறியீட்டுச் செய்திகள் ஆகும். பல பங்குகளின் வருமான சராசரியை எடுத்துக் கொள்வேயானால், ஒரு பங்கின் வருமான செய்தி நீக்கப்பட்டுவிடும். எனவே எஞ்சி இருப்பது அனைத்துப் பங்குகளுக்கும் பொதுவான செய்தியாகும். இதுவே நாட்டின் பொருளாதாரம் குறித்த செய்திகளாகத்தான் இருக்கும். இதுதான் ஒரு நல்ல குறியீட்டுக்கு அடையாளம் ஆகும்.

உதாரணம்: ஒரு குறியீட்டில் 'அ' மற்றும் 'ஆ' என்ற இரண்டு பங்குகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். 'அ' பங்கின் சந்தை முதலீட்டு மதிப்பு ரூபாய் 1,000 கோடி என்றும் மற்றும் 'ஆ பங்கின் சந்தை முதலீட்டு மதிப்பு ரூபாய் 3,000 கோடி என்றும் வைத்துக்கொள்வோம். இந்தக் குறியீட்டின் மாறுதல்களில் பங்கு 'அ' வின் விலை மாறுதல்கள் 1/4 பங்கு வீதமும், பங்கு 'ஆ'வின் விலை மாறுதல்கள் 3/4 பங்கு வீதமும் பங்களிப்பை அளிப்பதாய் இருக்கும்.

குறியீட்டு எண் கணக்கீட்டில் இருக்கும் நடைமுறைகள்

ஒரு தரமான குறியீட்டு எண் என்பது பல்வகைப்படுத்துதலுக்கும் நீர்மைத்தன்மைக்கும் இடையே நடக்கும் பரிமாற்றம் எனலாம். நன்கு பல்வகைப்படுத்தப்பட்ட குறியீட்டு எண் என்பது சந்தை / பொருளாதாரத்தின் பிரதிநிதியாகச் செயல்படும்.

குறியீட்டு எண்ணின் வகைகள்

பொதுவாகப் பின்பற்றப்படும் பங்குச் சந்தை குறியீடுகளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். அவை சந்தை முதலீட்டுக் கூட்டு மதிப்பு குறியீடு (market capitalization) முறை மற்றும் எளிதாக விற்கக்கூடிய பங்குகளின் கூட்டுக்குறியீடு வைத்துக் கணக்கிடும் குறியீட்டு முறை என இரண்டு முறைகளில் குறியீட்டு எண்கள் கணக்கிடப்படுகின்றது. சந்தை முதலீட்டுக் கூட்டு மதிப்பு குறியீட்டு முறையில் கணக்கிடப்படும் குறியீட்டு எண்களில் இருக்கும் நிறுமங்களின் பங்குகளின் விலையில் ஏற்படும் மாறுதல்கள் அந்த நிறுமத்தில் எத்தனை பங்குகள் வெளியிடப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு குறியீட்டு எண்ணைப் பாதிக்கும். விலை கூட்டுக் குறியீட்டு எண்ணில் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு தனி மதிப்புக் கொடுக்கப்பட்டு, அந்தப் பங்கின் விலையில் எந்த விகிதத்தில் அது உள்ளது? என்று கண்டறியப்படும். குறியீடுகளுக்கும் கூட சமமான தனி மதிப்பு அளிக்கப்படும். சமீபத்தில் உலகத்தின் மிகச் சிறந்த குறியீடுகளான CNX - 500 மற்றும் FTSE -100 ஆகிய இரண்டு குறியீட்டு எண்களும் இந்த புதிய குறியீட்டு முறைக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதற்கு எளிதாக மிதக்கும் (free foa) என்று அழைக்கப்பட்டது.

விலை கூட்டுக் குறியீடு

இந்த முறையில் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு தனி மதிப்பு கொடுக்கப்பட்டு விலைக்கு ஏற்றாற்போல் ஒரு தனி மதிப்பு அந்தப் பங்கின் விலையில் எந்த விகிதத்தில் அது உள்ளது என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

2. சந்தை முதலீட்டுக் கூட்டு மதிப்புக் குறியீடு

இந்த முறையில் ஒரு பங்கின் விலை அந்த நிறுமத்தின் சந்தை முதலீட்டை வைத்து கணக்கிடப்படுகிறது (நிறுமத்தின் பங்கின் விலை நிறுமத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை). இதனால் இந்தக் குறியீட்டில் உள்ள ஒவ்வொரு பங்குகளும், அனைத்துப் பங்குகளின் சந்தை மதிப்பில் உள்ள விகிதப்படி குறியீட்டு மதிப்பைப் பாதிக்கும். இந்த வித குறியீடுகள் பல்வேறுவிதமான குறியீட்டு எண் சார்ந்த பரஸ்பர நிதி அலகுகள் வழங்குவதிலும், வருவிக்கப்பட்ட பத்திரச் சொத்துக்களில் அடிப்படைச் சொத்தாகவும் அமைகின்றது.

இன்றைய சந்தை முதலீட்டு மதிப்பு = ஒவ்வொரு பங்கிற்கும் (பங்கின் இன்றைய சந்தை விலை * இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும் பங்குகள்) உண்டான கூடுதல் தொகை

அடிப்படை நாளன்று சந்தை முதலீட்டு மதிப்பு = ஒவ்வொரு பங்கிற்கும் (பங்கின் அடிப்படை நாளன்று இருந்த சந்தை விலை * அன்றைக்கு வெளியிடப்பட்டிருந்த பங்குகள்) உண்டான கூடுதல் தொகை

எளிதாக விற்கக்கூடிய பங்குகளின் கூட்டுக்குறியீடு

இந்த முறைக் கணக்கீடு என்பது சந்தைக் கூட்டு முதலீட்டு கணக்கீட்டு முறையைப் போன்றே கணக்கிடப்படுவதாகும்.இந்த முறையில் ஒரேயொரு வித்தியாசம்தான் இருக்கின்றது. நிறுமங்கள் வெளியிட்ட ஒட்டு மொத்தப் பங்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நிறுமங்கள் தோற்றுவிப்பாளர் அல்லாதவர்கள் பங்குகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளளப்படும். இதுவும் தவிர பின் வரும் பிரிவினருடைய பங்குகளும் இந்தவகைக் குறியீட்டு எண் கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

  • அரசாங்கம் அந்த நிறுமத்தில் முதலீட்டாளர் என்ற முறையில் செயல்திற முக்கியத்துவத்துடன் முதலீடு செய்துள்ள பங்குகள்
  • அமெரிக்கன் வைப்பக ரசீது (ADR) குளோபல் வைப்பக ரசீது (GDR) மூலம் தோற்றுவிப்பாளர் வைத்திருக்கும் பங்குகள்
  • நிறுமங்கள் மற்றொரு நிறுமத்தில் முதலீட்டாளர் என்ற முறையில் செயல்திற முக்கியத்துவத்துடன் முதலீடு செய்துள்ள பங்குகள்
  • அந்நிய நாட்டிலிருந்து பெறப்படும் நேரடி முதலீடுகள் (FD) என்ற வகையில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள்
  • நிறுமங்கள் அல்லது குழுநிறுமங்கள் வைத்திருக்கும் நேர்மைப்பங்குகள் (பிடிப்பு மற்றும் துணை நிறுமங்கள்)

மேற்கண்ட இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் பங்குகளின் எண்ணிக்கையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நிறுமமும் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் பங்கு மாற்றகங்களுக்குச் சமர்ப்பிக்கும் பங்குதாரர்கள் குறித்த தகவலின் அடிப்படையில் குறியீட்டு எண் கணக்கீடுகள் மாற்றியமைக்கப்படும்.

உதாரணமாக, அஆ.இ என்ற நிறுமம் 1 லட்சம் பங்குகளை வெளியிட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த 1 லட்சம் பங்குகளில் 25,000 பங்குகள் மேற்குறிப்பிட்ட வகையில் அடங்கும் பங்குகள் என்றால் இந்த 25,000 பங்குகளைக் கழித்துவிட்டு மீதமிருக்கும் 75,000 பங்குகள் மட்டுமே கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தேசிய பங்கு மாற்றகத்தின் முக்கிய குறியீடான நிப்டி இந்த முறையைக் கடைபிடித்தே கணக்கிடப்படுகின்றது.

குறியீட்டு எண்களுக்கு இருக்க வேண்டிய விரும்பத்தக்க பண்புகள்

ஒரு நல்ல குறியீட்டு எண்களுக்குக் கீழ்க்கண்ட மூன்று பண்புகள் இருக்க வேண்டும்.

  1. குறியீட்டு எண் சந்தையில் இருக்கும் பல்வேறுவிதமான குறிப்பிடத்தக்க வணிக முதலீடுகளின் பட்டியலில் உள்ள குணாதிசியத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
  2. குறியீட்டைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும் பங்குகள் அதிக நீர்மத்தன்மையை (liquidity) உடையனவாய் இருக்கவேண்டும்.
  3. இது தொழில் முறையில் பராமரிக்க வேண்டும்
  4. பல்வேறு விதமான பங்குகளின் குணாதிசியத்தைப் பிரதிபலிப்பது ஒரு நல்ல சந்தைக் குறியீட்டு எண் என்பது ஒட்டுமொத்த சந்தையின் போக்கையும், சந்தைக்குள் இருக்கும் பல்வேறுவிதமான பங்குகளின் குணாதிசியத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
  5. அதிக நீர்மத்தன்மையுடையதாய் இருக்க வேண்டும் நீர்மத்தன்மை என்பது அடிக்கடி நிகழும் வியாபாரத் தன்மையை விட சிறந்ததாகும். ஒரு பங்கின் சந்தை விலைக்கு நிகரான ஒரு விலையை அறியும் திறனாகும். உதாரணத்திற்கு ஒரு பங்கிற்கு நீர்மத்தன்மை உள்ளதாகக் கொள்வோம். தற்சமயம், ரூபாய் 32000க்கு வியாபாரம் ஆகும் பங்கு ஒன்றினை ஒருவர் விற்க முற்படும் போது அவரால் 31995க்குள் விற்கவும் வாங்க முற்படும் போது 32005க்குள்ளும் வாங்கவும் முடியவேண்டும். குறிப்பாகச் சொன்னால் நீர்மத்தன்மை அதிகமுள்ள ஒரு பங்குகளில் வாங்குபவர்-மற்றும் விற்பவர்கள் எதிர்பார்க்கும் விலைகளுக்கு நடுவே அதிக வித்தியாசம் இருக்கக்கூடாது.

தொழில் முறையில் பராமரித்தல்

  • இதன் மூலம் நாம் அறிவது, ஒரு குறியீடு என்பது பல்வேறு பங்குகளைக் கொண்டிருந்தாலும், முடிந்தவரை குறைவான செலவுகள் உடையதாக இருக்க வேண்டும். குறியீட்டுத் தொகுப்புகளை அதே சமயத்தில் தொடர்ச்சியாகப் புதுப்பிக்க பரிசீலனை செய்து அவற்றைத் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்றதாகக் கொண்டுவர வேண்டும்.
  • எந்தெந்தப் பண்புகள் நல்ல குறியீட்டை உருவாக்குகின்றது? எந்தெந்த விஷயங்கள் நல்லதொரு குறியீட்டு எண்ணை முதலீட்டாளர் தேர்ந்தெடுக்க தூண்டுகின்றது? என்று பார்த்தோம். எஸ்அண்ட்பி சிஎன் எக்ஸ் நிப்டி எந்தெந்த விதமான நற்பண்புகளைக் கொண்டிருக்கின்றது என்பதையும், எப்படி அந்தப்பண்புகள் முதலீட்டாளர்களுக்கு அது உதவுகின்றது என்றும் பார்ப்போம்.
  • ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்குச் சந்தை குறியீட்டு எண் என்பது பல்நோக்கு கொண்டதாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பதால்தான் இடர்தவிர்ப்பதற்காக வியாபாரம் செய்பவர்களும், ஊக வணிகம் செய்பவர்களும் தனி ஒரு நிறுமத்திற்கோ பொதுவான தொழில் துறைக்கோ இடர் ஏற்படுத்த மாட்டார்கள்.
  • குறியீட்டு எண்ணின் நீர்மத்தன்மை (liquidity) இந்தக் குறியீட்டு எண் பங்குகளை ரொக்கச் சந்தையில் எளிதாக வணிகம் செய்ய வசதியாக இருக்கிறது.
  • நடைமுறை செயல்பாடுகள் இந்த குறியீட்டு எண்கள் தொழில் முறையில் பராமரிக்கப்படுவதால், பத்திரங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து வழிநடத்திச் செல்கிறது. இதில் பயன்படுத்தப்படும் கணக்கீட்டு முறைகள் மிகவும் துல்லியமானதாகவும் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate