பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மின்னணு பணப்பரிமாற்றம் / கடன் / பற்று அட்டைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கடன் / பற்று அட்டைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவித்தல்

கடன் / பற்று அட்டைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் என்பது, மின்னணு முறையில் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு நேரிடியாக பணம் மாறுவதைக்குறிக்கும். வாடிக்கையாளரின் அனுமதியுடன் நடைபெறும் இந்தப்பரிமாற்றம், கடன் அட்டை (Debit Card), பற்றுஅட்டை (Credit Card), மொபைல் வாலட் (Wallets), மொபைல் செயலி (Mobile app), இணையவழி வங்கிமுறை (Networking) மின்னணு செலுத்த தேவை (ECS), தேசிய மின்னணு நிதிப்பரிமாற்றம் (NEFT) உடனடி பணம் செலுத்த சேவை (IMPS) போன்ற முறைகளில் நடைபெறுகிறது.

நோக்கங்கள்

 • ரொக்கப் பணத்தை கையாளுவதில் உள்ள அபாயங்களையும், அதற்கு ஆகின்ற செலவையும் குறைப்பது.
 • மொத்த பொருளாதார அமைப்பில் ரொக்கப் பணமேலாண்மைச் செலவுகளைக் குறைப்பது.
 • எல்லாவிதமான பணப்பரிமாற்றங்களையும் ஆவணப்படுத்தி, அதன்மூலம் நிதிநிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதை எளிதாக்குகிறது.
 • வரித்தவிர்ப்பை குறைப்பது
 • கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தவிர்ப்பது

பயன்பாடுகள்

 • ஒவ்வொருவருக்கும் அட்டைகள் / மின்னணு மூலமாகத் தமது நிதிச்செலவுகளை மேற்கொள்ள எளிதாக வழியமைத்துத் தருவது
 • அரசுத்துறைகளின் எல்லா பணம் வசூல் மையங்களிலும் அட்டைகள் / டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏற்பாடு செய்வது.
 • ரொக்கப்பணம் மூலமாகப் பரிமாற்றம் செய்வதற்குக் கூடுதல் கட்டணம் விதித்தும், அட்டைகள் / டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்வதற்கு சலுகைகள் அளித்தும் ரொக்கம் இல்லாத பரிமாற்ற முறைக்கு மாறுதல்.
 • டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றத்திற்கான சட்டமைப்புகளை ஏற்கச் செய்வது,
 • கார்ப்ரேட்டுகள், நிறுவனங்கள், வாணிகமுகமைகள், கடைகள், போன்றவற்றை அட்டை/ டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக்கொள்வதை ஊக்குவித்தல்.

குறுகிய கால படிநிலைகள்

இதற்கான ஓராண்டு காலத்திற்குள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அட்டை / டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கலாம்.

(அ) அரசுத்துறைகளின் செலவு / வசூல்களை டிஜிட்டல் மயமாக்குவது

 • அரசுத்துறைகள், மத்திய – மாநில பொதுத்துறை நிறுவனங்கள், எரிவாயு வினியோக அலுவலங்கள், ரயில் பயணச்சீட்டு வழங்குமிடங்கள், வரிசெலுத்துமிடம், அருங்காட்சியங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றுக்கு அட்டைகள் / டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த விரும்பும் மக்களிடம் மிகைக்கட்டணம் / சேவைக்கட்டணம் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
 • டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கான பிற மறைமுகக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
 • அட்டை மூலம் பணம் செலுத்தும் கருவிகளை (POSI Mobile Swipe Machine) அந்தந்த இடங்களில் வைக்கவேண்டும்.
 • சாலைப்போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் தற்போது வங்கிகள் வழங்கியுள்ள ஓபன் வசதிகளைக்கொண்டு பிரத்யோகமான கைப்பேசி செயலி மூலமாக சுங்கக்கட்டணம், மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்துக்கட்டணம் போன்றவற்றைச் செலுத்தும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • பிரதமரின் ஐன்தன் வங்கிக்கணக்குகள் வைத்துள்ள தகுதியான நபர்கள் அனைவருக்கும் ரூபே அட்டையைத்தவிர மற்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதிகளையும் ரிசர்வ் வங்கி செய்து தர வேண்டும்.
 • அரசுத்துறைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கான அனைத்து விதமான கட்டணங்கள், அபராதங்கள் போன்றவற்றை அட்டைகள் / டிஜிட்டல் மூலமாகச் செலுத்த ஏதுவாக (ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்டு) “Pay goindia” அல்லது அதுபோன்ற பிற ஏற்பாடுகள் செய்வதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.
 • “Pay GooIndia” என்பது மத்திய, மாநில அரசுகள், அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த ஒற்றை செலுத்ததளமாக வடிவமைக்கப்படவேண்டும்.

(ஆ) அட்டை / டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை பரவலாக ஏற்றுக்கொள்ள செய்யும் நடவடிக்கைகள்

 • அட்டைகள் மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளுக்கான கழிவுத்தொகையைச் சீரமைக்க நிதிச்சேவைகள்துறை / ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலவிதமான பயன்பாட்டுக்கட்டணங்கள், ரயில்வே பயணச்சீட்டுக் கட்டணங்கள் போன்றவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து கழிவுத்தொகையை மாறுபட்டுக்குறைந்த விகிதத்தில் நிர்ணயிக்கலாம்.
 • எல்லாவிதமான பணம் செலுத்தும் / பெறும் ஏற்பாடுகளிலும் இயங்க கூடிய ஒருங்கிணைந்த USSD தளத்தை ஏற்படுத்தவேண்டும். தற்போது பெரும்பலான மக்களிடம் உள்ள கைப்பேசி வசதியைச் சிறப்பாகப் பயன்படுத்தி கைப்பேசி மூலமான வங்கிச்சேவையைப் (Mobile Banking) பரவலாக்க ரிசர்வ் வங்கி முனைய வேண்டும். கைப்பேசி மூலமான வங்கிச்சேவைக்குப் பதிந்துகொள்ளல், செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல் போன்றவற்றை எளிமையாக்கி, டிஜிட்டல் வாலட்கள், ப்ரீபெய்டு ஏற்பாடுகள் போன்றவற்றுக்கான நுழைவுத்தடைகளை குறைக்க வேண்டும்.

இ) டிஜிட்டல் / அட்டை மூலம் பணம் ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்

 • பற்று / கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அவற்றின் மூலம் பணம் பெற்றுக் கொள்வதற்கான POS கருவிகள் / மொபைல் POS கருவிகளை நிறுவுவதற்கு நிதிச்சேவைகள் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். சில விதமான அட்டைகளில் பிரத்யேக சலுகைகள் அல்லது திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நிதி ஏற்றுக்கொள்ளல் அல்லது அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைகள் என்பதற்காக பிரத்யேகமாக ஒரு நிதியத்தை உருவாக்குவது பற்றியும் ஆராயலாம்.
 • தற்போது ஒரு குறிப்பிட்ட தொகை வரையில் மட்டுமே அட்டைகள் மூலம் செலுத்தலாம் என்றுள்ள உச்ச வரம்பை நிதிச்சேவைகள் துறை அதிகரிக்க வேண்டும்.

ஈ) மொபைல் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான வழிகளை ஊக்குவித்தல்

 • வாடிக்கையாளருக்கும் வாணிக நிறுவனத்திற்கும் (merchants) இடையேயான பணப்பரிமாற்றங்கள் முழுமை அடைந்தால் மட்டுமே USSD கட்டணங்களை விதிக்க வேண்டும். முழுமை அடையாத, அதாவது பணம் பரிமாற்றம் ஆகாத செயல்பாடுகளுக்கு USSD கட்டணத்தைக் குறைக்க தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • எல்லா விதமான அட்டைகளின் வழியான பரிமாற்றங்களையும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களையும் வரிசையாகப் பதிந்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தி, அந்தப் பதிவுகளைக்காட்டி வாணிகர்கள் உடனடியாக சிறு-குறு கடன் வசதிகளைப் பெற உதவலாம்.
 • கடன் / பற்று அட்டைகள் அல்லது டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க, ஒரு குறிப்பிட்ட தொகையை மீண்டும் செலவிட்டவர் கணக்கிலேயே வரவு வைக்கும் (Cash back office) திட்டத்தைச் செயல்படுத்தலாம். அல்லது, அதுமாதிரியான பணப்பரிவர்த்தனை செய்தவர்களிடையே குலுக்கல் நடத்தி ஊக்கப்பரிசுகள் அளிக்கலாம். அல்லது அவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கலாம்.
 • மிக அதிக அளவிலான / உயர் மதிப்பிலான (சொத்துக்கள் வாங்குவது போன்ற) பணப்பரிமாற்றத்திற்கும் கடன் / பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் நிதிச்சேவைகள் துறை செய்ய வேண்டும்.

(உ) விழிப்புணர்வு மற்றும் குறைதீர் ஏற்பாடுகள்

 • நிதிச்சேவைகள் துறை / ரிசர்வ் வங்கி கீழக்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 • மோசடியான பரிவர்த்தனைகளால் ஒருவருடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் வந்தால், உடனடியாக அந்தப்பணத்தை அவருடைய கணக்கில் மீண்டும் வரவு வைத்து, ஆனால் அதைப்பற்றி விசாரித்து முடிக்கும் வரை அந்தப்பணத்தை எடுக்க முடியாதபடி தடுத்துவிடும் ஏற்பாடு. மிகச் சீக்கரத்திலேயே (2-3 மாதங்களில்) அந்த மோசடிபற்றி விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
 • வாடிக்கையாளர்களுக்கு வங்கிச்சேவைகள் / டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகளில் அதிக அளவு நம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு, வங்கித்தீர்ப்பாய நடுவர் அமைப்பை (Banking Ombudsman) வலுப்படுத்த வேண்டும்.
 • அட்டைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாக்கும் ஓருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படவேண்டும்.
 • முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்தில் உள்ள நிதியை, டிஜிட்டல் / அட்டை பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை விரிவாக்குவது பற்றியும் ரொக்கம் இல்லாத சமூக அமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தித் தக்கவாறு செலவிட வேண்டும்.

நடுத்தர கால படிநிலைகள்

இரண்டாண்டு காலத்திற்குள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அட்டைகள் / டிஜிட்டல் முறையில் எல்லாப் பணப்பரிமாற்றத்தையும் நடத்துவதை மேலும் ஊக்குவிக்கலாம்.

 • தொலைத்தொடர்பு, இண்டர்நெட், பிரீபெய்டு ஏற்பாடுகளை வழங்குபவர்கள், பேமெண்ட் பேங்க் என்ற பணம் பட்டுவாடா செய்யும் வங்கிகள் ஆகிய அனைத்து பணம் செலுத்தும் அமைப்புகளையும் பெற்றுக் கொள்ளும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தரப்பில் இருந்து அடுத்த தரப்பிற்குப் பணம் தங்குதடையின்றி பரிமாற்ற ஏதுவாக மெர்ச்செண்ட் பேமெண்ட் தர நிர்ணயித்திற்கான வழிகாட்டி நெறிகளை ரிசர்வ் வங்கி வகுக்க வேண்டும்.
 • டிஜிட்டல் பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட எல்லா துறையினரையும், ரிசர்வ் வங்கியையும் சேர்த்து, பொருளாதார விவகாரங்கள் துறை ஒரு குழு அல்லது சில குழுக்களை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவினர் கீழ்க்காணும் விஷயங்களுக்கு தீர்வு / வழிகாண வேண்டும்.
 1. பணம் (ரொக்கமாக அன்றி) செலுத்துவதற்கான / பெறுவதற்கான சூழ்நிலைகளைப் பாதிக்கின்ற பேமெண்ட்ஸ் அண்டு செட்டில்மெண்ட் (PSS) சட்டம் 2007 மற்றும் பிற சட்டங்களின் நெறிமுறைகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்று ஆராய வேண்டும்.
 2. வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் KYC ஏற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தமான மையப்பதிவகம் ஏற்படுத்துதல் மற்றும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பிரத்யேக அடையாளமான ஆதார் எண்ணை அடையாளமாகக் கொண்டு / அல்லது வேறு அடையாளம் மூலமாக பரிமாற்றம் செய்வோரின் அடையாள நிரூபணம் செய்தல்.
 3. எல்லா விதமான அட்டைகளையும் ஏற்றுக்கொள்ள ஒற்றைச்சாளரமாக ஒரே ஒரு வாயில் வழியை (Gateway) உருவாக்குதல்.
 • அட்டைகளை நேரிடையாகத் தருகின்ற அல்லது தராமலும் பரிவர்த்தனை செய்கின்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இருகாரணி உறுதி செய்தல் (Two factor authentication) என்ற நியதியை ரிசர்வ் வங்கி தளர்த்தலாம். குறிந்த தொகை, ஓரளவு அதிக தொகை, மிக அதிகமான தொகை என்று வரம்புகள் நிர்ணயித்து ஒவ்வொன்றுக்குமான தனித்தனியான உறுதி செய்யும் ஏற்பாடுகளையும் ரிசர்வ் வங்கி வரையறுக்க வேண்டும்.
 • ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கி மூலமாகப் பணம் செலுத்தும் போது MDR மூலமாகப் பெறுவதற்கு வசூலிக்கப்படும் சேவைவரிகளில், இரட்டை வரிவிதிப்பு இருந்தால் அதனைப் போக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் ஏற்கனவே வெளியிட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளில் அட்டை / டிஜிட்டல் மூலமாகப் பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்யும் திருத்தங்களை வெளியிட வேண்டும். எந்த ஒரு அரசுத் துறையிலாவது ரொக்கமாகப் பணப்பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்றால் அதற்கான காரணங்கள் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
 • ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகள் யாவும் அட்டை / டிஜிட்டல் / ரொக்கமற்ற முறையில்தான் நடைபெற வேண்டும் என்று மத்திய நிதிச்சேவைகள் துறை அறிவிக்க வேண்டும்.

ஆதாரம் : பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்

3.21875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top