பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல் பெறுதல்

இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலைப் பெறுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

இந்திய அரசு 2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது (http://www.persmin.nic.in). 2005 அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வந்துள்ளது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல், பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும்.

நூலக அனுமதி

மைய அலுவலகத்திலுள்ள நூலக வேலை நேரம் காலை 9.45 மணியிலிருந்து மாலை 5.45 மணி வரை. நூலகம் பொதுவாக ரிசர்வ் வங்கிப்பணியாளர்களுக்கு மட்டுமென்றாலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கு அனுமதி உண்டு.

ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல் பெறுதல்

இந்திய ரிசர்வ் வங்கி தனது தகவல் தொடர்புக் கொள்கையை ஏற்படுத்தி அமல் செய்து வருகிறது. இதன் கீழ் இந்தியப்பொருளாதாரம், வங்கியியல், நிதியியல் பற்றிய பல புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. தினம், வாரம், மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என்ற கால அளவில் பல புள்ளி விவரங்கள், அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இவைகளுடன், எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், “அறிதலும் அறிக்கை வழங்கலும்“ (Studies and reports) வெளியிடப்படுகிறது. வங்கியியல், நிதியியல், அந்நியச்செலாவணி பற்றிய தனது அறிவுரைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரகடனப்படுத்தியுள்ளது. பத்திரிகை வெளியீடுகள் மூலமாகத் தகவல்களை மக்களுக்கும் அளிக்கிறது.

வழக்கமாக வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகள் www.rbi.org.in என்ற வங்கியின் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கொள்கை அறிக்கைகள்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கொள்கை அறிக்கைகள், மொத்தப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் வளர்ச்சி கொள்கைகள் சம்பந்தமான மதிப்பீட்டு பின்னணியில் நிதி கட்டமைப்பு மற்றும் விவேக நடவடிக்கைகள் அவ்வப்போது செயல்முறை அடிப்படையில் வழங்கப்படும். நிதியியல் கொள்கை மற்றும் வளர்ச்சி கொள்கைகளில் தனித்தனியே கவனம் செலுத்தும் பொருட்டு, கொள்கை அறிக்கையின் வடிவம் ஏப்ரல் 2005 ல் திருத்தி அளிக்கப்பட்டது. வருடாந்திர கொள்கை அறிக்கை அறிக்கை தற்பொழுது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவு 1 - நிதியியல் கொள்கையின் வருடாந்திர அறிக்கை பிரிவு 2 – வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளுக்கான வருடாந்திர அறிக்கை. இடைக்கால மறு ஆய்வு வருடாந்திரக் கொள்கை அறிக்கை பிரிவு 1, 2 ஐ உள்ளடக்கி கடந்த காலத்தில் அக்டோபரில் வெளியிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், பிரிவு 1 க்கான முதல் காலாண்டு ‘மறு ஆய்வு அறிக்கை;’ ஜூலையிலும் மற்றும் மூன்றாவது காலாண்டு மறு ஆய்வு அறிக்கை ஜனவரியிலும் வெளியிடப்படும். நிதியியல் கொள்கைக்கான காலாண்டு மறு ஆய்வுகள் சந்தைகளுக்கான அடிப்படை கட்டமைப்பு தொடர்பை அதிக அளவிற்கு ஏற்படுத்தியும், மாறி வரும் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி அமைக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஆண்டு வெளியீடுகள்

ஆண்டறிக்கைகள்

ஆகஸ்ட் இறுதியில் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, அதன் நிதிநிலை அறிக்கை பற்றிய விவரங்கள் அதன் மைய இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு அளிக்கப்படுகிறது. இந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிய கணக்கீட்டையும், எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியது.

ஆகஸ்டில் வெளியிடப்படும் இந்த அறிக்கை சட்டரீதியானது, ரிசர்வ் வங்கியின் நிதியாண்டான (ஜூலை – ஜுன்) ஆண்டுக்குரியது.

இந்திய வங்கியியல் நடைமுறையும் வளர்ச்சியும்

இதுவும் சட்டரீதியான வெளியீடு. ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. முந்தைய ஆண்டில் நிதித்துறைக் கொள்கைகளின் மறுஆய்வுச் செயல்பாடுகளையும் இவ்வறிக்கை பறைசாற்றுகிறது. ஏப்ரல் முதல் மார்ச் முடிய உள்ள ஆண்டிற்கான அறிக்கை நவம்பர் / டிசம்பரில் வெளியிடப்படுகிறது.

பணநாணய நிதி அறிக்கை

மைய வங்கியின் பணியாளர்களால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை இது. 1998-99 தொடங்கி ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு, அது சம்பந்தமான அனைத்துப் பொருளாதார விஷயங்களையும் பற்றி விரிவான மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும். எக்கொள்கை பற்றி அறிக்கையில் முக்கியத்துவம் உள்ளதோ, அதோடு மட்டுமல்லாமல், இந்தியாவுக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சவால்கள் என்று பல்வேறு விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். இது டிசம்பரில் வெளியிடப்படுவதால், இடைக்காலப் பொருளாதார ஆய்வினை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கின்றது.

இந்தியப்பொருளாதார புள்ளி விவரப்புத்தகம்

இந்தியப்பொருளாதாரம் பற்றிய அனைத்து புள்ளி விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உதவும் வகையில் இவ்வெளியீடு அமைகிறது. ஆண்டு, காலாண்டு, மாத, இருவார, தினசரி கால அளவில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளிவிவரக் கொள்கலனாக இது விளங்குகிறது. தேசிய வருமானம், உற்பத்தி, பணம், வங்கியியல், நிதிச்சந்தை, பொதுநிதி, பன்னாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி நிலுவை சம்பந்தமான புள்ளி விவரங்களைப் புத்தகமாகவும், குறுந்தகடாகவும் தருகிறது.

இந்தியப் பொருளாதாரத்திற்கான புள்ளிவிவர அடிப்படை

இந்தியப்பொருளாதாரம் பற்றிய புள்ளி விவரங்களின் அடிப்படையாக, கொள்கலனாக ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் இவற்றை வெளியிடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இத்தளத்தை அணுகவும் தேவைப்படும் விவரங்களை எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது.

மாநில நிதிகள்

மாநில அரசுகளின் நிதி மதிப்பீடுகளை அவைகளின் நிதிநிலை அறிக்கை மூலம் ஆராய்ந்து ஒருங்கிணைந்த ஆய்வினை அளிக்கிறது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை அளிக்க இது உதவுகிறது.

இந்திய வங்கிகள் சம்பந்தமான புள்ளிவிவரப் பட்டியல்கள்

இது வணிக வங்கிகளைப் பற்றிய புள்ளி விவரங்கள் அடங்கிய ஆண்டு வெளியீடு. ஒவ்வொரு வங்கி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்பாடு பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். வங்கிக்குழு வாரியாகவும், மாநில வாரியாகவும் இந்த விவரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அடிப்படைப் புள்ளிவிவர அறிக்கைகள்

இதுவும் ஒரு ஆண்டு வெளியீடு. பட்டியலிடப்பட்ட வங்கி வாரியாக, அலுவலகங்கள், அலுவலர்கள, வைப்புகள், கடன்கள் பற்றிய விவரங்கள் திரட்டப்படுகின்றன. வட்டார, மாநில, மாவட்ட ரீதியாக புள்ளி விவரங்கள் அளிக்கப்படுகினறன.

காலாண்டு வெளியீடுகள்

மொத்தப் பொருளாதார பண நிகழ்வுகள்

ஆளுநர் அளிக்கும் ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னரும், இடைக்கால / காலாண்டு மறுஆய்வுக்கு ஒரு நாள் முன்னரும் இது வெளியிடப்படுகிறது. தேவையான விவரங்களையும், தொழில் நுட்ப அணுகுமுறைகளையும் எடுத்துரைக்கிறது.

காலாண்டு வைப்பு தொகைக்கான புள்ளியியல் மற்றும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன்

ஒவ்வொரு காலாண்டும், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வைப்பு மற்றும் கடன் தொகையின் புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது.. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து மைய வாரியான, மாநில வாரியான, மக்கள் குழு வாரியாக மற்றும் வங்கி குழு வாரியாக வழங்கப்படுகிறது.

இந்த வெளியீடு மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் வரையிலான காலாண்டுகளின் அடுத்த மாதத்தில் கிடைக்கிறது.

மாதாந்திர வெளியீடு

ரிசர்வ் வங்கி அறிக்கை

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காகச் சேர்க்கப்படும் புள்ளி விவரங்களைத் தொகுத்தாராய்ந்து இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. ஆளுநர், துணை ஆளுநர், நிர்வாக இயக்குநர்களின உரைகளை/ சொற்பொழிவுகளை வெளியிடுகிறது. இதன் மூலம் மையவங்கியின் கொள்கைகளை உணர்ந்து கொள்ளலாம். முக்கியமான பத்திரிக்கை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நிதி, வங்கி பற்றிய கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆண்டுக் கொள்கை அறிவிப்பு, இந்திய வங்கிகளின் நடைமுறை வளர்ச்சி இவைபற்றி சிறப்புக் கட்டுரைகள் அவ்வப்போது பிரசுரமாகின்றன.

பணவியல் மற்றும் கடன் தகவல்கள் மறுஆய்வு

நான்குபக்க மாத வெளியீடு வங்கிகளுக்கு பெரிதும் உதவும். இது மையவங்கியின் முக்கியமான சுற்றறிக்கைகளை பிரசுரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படுகிறது.

வாரவெளியீடு

புள்ளி விவர துணை வெளியீடு

இது ரிசர்வ் வங்கியின் வாராந்திர நிதி நிலை அறிக்கையாகும். நிதி, பொருள், தங்கச்சந்தைகளின் முக்கிய நிகழ்வுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பகல் 12 மணிக்கு இது வெளியிடப்படுகிறது.

தினசரி வெளியீடு

பத்திரிகை வெளியீடு

பணச்சந்தை நிலவரங்கள் பற்றியும், நான்கு பெரிய அந்நிய நாணயங்களுக்கான (டாலர், யூரோ, பவுன்ட், ஸ்டர்லிங், யென்) குறிக்கப்பட்ட மாற்று வீதங்கள் பற்றியும், முக்கிய வங்கியியல் ஒழுங்கு முறைகள் பற்றியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் பற்றியும் தினமும் பத்திரிகைச்செய்தி வெளியிடுகிறது.

அவ்வப்போது வெளியீடு

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இது வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு. கட்டுரை ஆசிரியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளே ஆகும். 1999லிருந்து ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.

மேம்பாட்டு ஆராய்ச்சி குழுமத்தின்ஆய்வுகள்

ரிசர்வ் வங்கிப் பணியாளர்களுடன் கலந்து வெளி வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படுகின்றன. உள்ளக ஆராய்ச்சிகளில் வெளி வல்லுநர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பாக இக்குழுமம் உதவுகிறது.

அறிக்கை

ரிசர்வ் வங்கி தான் நியமித்த குழுக்களின் அறிக்கைகள், கருத்துக்கேட்பு இவைகளை வெளியிடுகிறது.

கையேடுகள்

பொதுமக்களுக்குண்டான வசதிகள் (குறிப்பாக அன்னியச் செலாவணி குறித்த) பற்றி அவர்கள் நன்கு அறிந்து பழகிக் கொள்ள வசதியாக சிறுகையேடுகளை பிரசுரித்து அளிக்கிறது.

சொற்பொழிவுகள்

ஆண்டு தோறும் மூன்று சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. முந்தைய இரு ஆளுநர்கள் நினைவாகவும் மற்றது புகழ்மிக்க பணப்பொருளாதார மேதை ஒருவரின் நினைவாகவும் நடத்தப்படுகிறது.

ரிசர்வ் வங்கி இணைய தளம்

ரிசர்வ் வங்கியின் செயல் திறன் மிக்க இணைய தளத் (URL: http://www.rbi.org.in) தில் எல்லா விபரங்களும் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது. மற்றும் இதில் தினமும் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

முடிவுகள் எடுக்கப்படும் வழிகளில், மிகுந்த தெள்ளத் தெளிவாக பல விவரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.

வெளிப்படுத்துதல் கொள்கை

வெளிப்படுத்துதல் பதிவு

இந்திய ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் வரும் கோரிக்கைகளுக்கு அளிக்கப்படும் தகவல்களில், பொது மக்களுக்குப் பயன்படக்கூடிய தகவல் என அது கருதும்பட்சத்தில், அந்தத் தகவல்கள் அனைத்தையும் தனது இணைய தளத்தில் வெளியிடுகிறது. அத்தகைய தகவல்கள் இந்த பதிவில் வெளியிடப்படுகிறது.

கேட்புக்கு வெளியிடுதல்

ரிசர்வ் வங்கி வெளியிடும் அனைத்துத் தகவல்களையும், 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், அத்தகவல்கள் பொதுமக்களுக்கு நன்மை அளிக்குமாயின், ரிசர்வ் வங்கி தனது இணைய தளத்தில் பதிக்கிறது.

உங்கள் கருத்துக்கள்

ஏற்கனவே வெளியிடுவதைக் காட்டிலும் கூடுதலாக தகவல்கள் ஏதேனையும் ரிசர்வ் வங்கி வெளியிடவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் helpprd@rbi.org.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட தகவல் ஏதேனும் தனிப்பட்ட முறையில் தேவைப்பட்டால், 2005 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இது புகார் அளிப்பதற்கு அல்ல, தகவல் கேட்டறியத் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். தனது துறைகள் பற்றியும் மற்ற வங்கிகள் பற்றியும் உள்ள புகார்களுக்கென அவைகளைத் தீர்த்திட தனி வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

வங்கிச் சேவைகள் தொடர்பான புகார்கள்

வங்கிகளின் தரமற்ற சேவை பற்றிய குறைகளைப் பதிவு செய்ய தனி வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப் படுத்தி உள்ளது. எந்த ஒரு வங்கி / கிளை அளிக்கும் தரமற்ற சேவைபற்றிய குறை தெரிவிக்க, முதலில் அந்த வங்கியின் குறிப்பிட்ட குறை தீர்ப்பு அலுவலரை அணுகவும். அவரின் தீர்வு உங்களுக்கு திருப்தி அளிக்காவிடில், அந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் குறை தீரப்பாணையத்தை அணுகலாம். வங்கிக்குறை தீர்ப்பாணையம், ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய ஓர் அமைப்பு. வங்கிச் சேவைகள் மீது மக்களின் குறைகளைத் துரிதமாகவும் குறைந்த செலவிலும் தீர்த்து வைப்பதே இந்த தீர்ப்பாளரின் வேலையாகும். வங்கிக் குறை தீர்ப்பாளர் திட்டம் குறித்து மேலும் அறியவும் அவர்களின் தொடர்பு விபரங்களுக்கு Complaints against RBI Services என்ற இணைய தளத்திற்கும் செல்லலாம்.

ரிசர்வ் வங்கியின் ஏதாவது துறையினால் அளிக்கப்பட்ட தரமற்ற சேவையின் பேரில் உங்களுக்குப் புகார் இருக்குமானால் உங்கள் புகார்களை அவற்றிற்குரிய மண்டல அலுவலகத்தின் குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு இந்த இணைய தளத்தை அணுகவும். (https://www.rbi.org.in/scripts/Regionaloffices.aspx)

2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் செய்ய

இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ, அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் நகலனுப்பி எண் (பேக்ஸ் எண்), மின்னஞ்சல் முகவரி) குறிப்பிடப்படவேண்டும். விவரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in/ என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

மனுவை அனுப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 6(i)-ன்கீழ் தகவல் பெறுவதற்கான் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது/ கேட்புவரைவோலை/வங்கிக் காசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.

உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

எனது கோரிக்கையை எங்கு அனுப்ப வேண்டும்

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, மத்திய பொதுத் தகவல் அதிகாரி, இந்திய ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, அமர் கட்டடம் முதல் தளம், சர் P.M. ரோடு, மும்பை-1 என்ற முகவரிக்கோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு முகவரிக்கோ அனுப்பலாம். ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in/ என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே, கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். கோரிக்கையை அனுப்பும்போது, விண்ணப்பதாரருக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அதைக் கொணடு அவர் தனது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளமுடியும்.

மத்திய பொதுத் தகவல் அதிகாரி / மாற்று மத்திய பொதுத் தகவல் அதிகாரி, மேல்முறையீட்டு அதிகாரி

இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அளிக்க ஆகும் காலம்

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.

தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஒழுங்கு முறைக்கட்டணம் செலவு) விதிகள் 2005 இன் கீழ் பொது அதிகாரி.

ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.

பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை, மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை, ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணம் ஏதுமில்லை, அதற்கு அதிகமனால் குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்

சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-

அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-

எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.

தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

  • இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
  • நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
  • பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
  • வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்
  • அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்
  • ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விவரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்
  • அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்
  • தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்
  • ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்

மேல் முறையீடு செய்ய உரிமை உண்டா ?

ரிசர்வ் வங்கி அளித்த தகவல் மீது உங்களுக்கு திருப்தி இல்லையெனில் அல்லது ரிசர்வ் வங்கி தகவல் தர மறுத்த முடிவின் மேலோ, மேல் முறையீடு செய்ய தகவல் அறியும் உரிமைச்சட்டம் வழி வகுக்கிறது.

யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

மேல்முறையீடு அனுப்ப வேண்டிய முகவரி :-

(மேல் முறையீட்டு அதிகாரி)

நிர்வாக இயக்குநர்

இந்திய ரிசர்வ் வங்கி

மத்திய அலுவலகக் கட்டிடம்

சாஹித் பகத் சிங் மார்க்

மும்பை – 400 001

மின் அஞ்சல் : aaria@rbi.org.in

Tel : 022 - 22611083

Fax : 022 – 22632052

மேல் முறையீட்டிலும் திருப்தி இல்லையெனில் :

ரிசர்வ் வங்கிக்குள்ளேயே மேல் முறையீட்டிலும் திருப்தி இல்லையெனில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் அதிகாரம் 3 இன் கீழ், மத்திய தகவல் ஆணையாளரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top