অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கொடுப்பு மற்றும் தீர்வு

கொடுப்பு மற்றும் தீர்வு

தேசியக் கொடுப்பு முறைக்கு மைய வங்கி உந்து சக்தியாகத் திகழ்கிறது. நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி, நல்ல, பாதுகாப்பான, திறமையான கொடுப்பு முறைக்கு பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் வருமாறு.

1. கொடுப்பு முறை என்றால் என்ன?

கொடுப்பவருக்கும் பயனடைவோருக்கும் இடையே நடக்கும் மதிப்பு மாற்றங்களுக்கு வசதி செய்து கொடுத்து, கொடுப்பவர் கொடுப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பயனடைபவருக்குப் போய்ச் சேருவதுதான் கொடுப்புமுறை எனப்படும். இருவகைக் கொடுப்பான பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் மாற்றாகக் கொடுப்பது உறுதி செய்யப்படுகிறது.

2. கொடுப்புமுறையின் அம்சங்கள் யாவை?

கொடுப்புமுறையில் கொடுக்கப் பயன்படும் உபகரணங்கள், விதிகள், ஒழுங்கு முறைகள், நடைமுறைகள், கொடுக்கும் நிறுவனங்கள், சட்டமுறைகள் போன்ற நடவடிக்கைகளைக் கொண்டு பல்வேறு பங்கேற்பாளர்களுக்கிடையில் நிதிமாற்றங்கள் ஏற்படுகின்றன.

3. கொடுப்பு முறையைப் பயன்படுத்தி யார் கொடுக்கலாம்?

தனிநபர்கள், வங்கிகள், கம்பெனிகள், அரசுகள் போன்றவை ஒருவருக்கொருவர் பணம் கொடுக்கின்றனர். யாருக்குக் கொடுப்பதற்கும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

4. வாடிக்கையாளர் வங்கி மூலமாக எப்படியெல்லாம் கொடுக்கலாம்?

ரொக்கம், காசோலை, கேட்புக் காசோலை, கடன் அட்டை, மின் அணு வழி உத்தரவுகள் மூலம் வாடிக்கையாளர் வங்கியத் தனக்காகக் கொடுக்கச் சொல்லலாம். மின் அணுக் கொடுப்பு, மின் அணு நிதி மாற்றம் (EFT) மின் அணு பரிவர்த்தனை முறை (ECS), உடனுக்குடனான மொத்த ஒப்பந்த தீர்வு முறை (RTGS) என்று பல்வகைப்படும். நிதி மாற்றமும் பரிவர்த்தனை முறைகளும் சிறிய அளவிலான நிதி மாற்றத்திற்கும் மொத்த ஒப்பந்தமுறை பெரிய அளவிலான நிதி மாற்றத்திற்கும் பயன்படுகின்றன. இணைய தளம் மூலமாகவும் நிதி மாற்றங்களைச் சில வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.

5. கொடுப்பாளர் காசோலையைக் கொடுக்கும் போது எங்கனம் கொடுப்பு நடைபெறுகிறது?

காசோலைக் கொடுப்பு என்பது காசோலையைக் கொடுப்பாளர் பயன்பெறுவோருக்குக் கொடுக்கும்போது துவங்குகிறது. அப்பணத்தைப் பெறுவதற்காக பயன்பெறுபவர் தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்க அக்காசோலையை தனது வங்கியில் சமர்ப்பிக்கிறார். பயன் பெறுபவர் அதே ஊரில் அதே வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அந்த வங்கியின் உள்ளக அமைப்பின் மூலம் பயன்பெறுபவர் கணக்கில் அது வரவு வைக்கப்படுகிறது. பயன் பெறுபவர் அதே ஊரிலோ அல்லது வெளியூரிலோ, வேறு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அவரது வங்கி காசோலை பரிவர்த்தனை மூலம் அவரது கணக்கில் வரவு வைப்பதை உறுதி செய்கிறது.

6. காசோலைப் பரிவர்த்தனை மையம் (Clearing House) என்றாலென்ன?

ஒரே நகருக்குள் அல்லது இடத்துக்குள் பல்வேறு வங்கிக் கிளைகளின் காசோலைகளுக்கான கொடுப்பை எளிதாக வசதியாகச் செய்துகொள்ள வங்கிகளின் சங்கமாக இம்மையம் விளங்குகிறது. இம்மையத்தில் பல்வேறு வங்கிகளும் வந்து, ஒருவருகொருவர் அவரவர் வங்கிக் காசோலைகளைப் பெற்றுக் கொண்டு, கொடுப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தச் செயலாக்கம் பரிவர்த்தனை எனப்படும். இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களிலும் மற்ற சில நகரங்களிலும் ரிசர்வ் வங்கி இப்பரிவர்த்தனையைக் கவனித்துக் கொள்கிறது. ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் ஒவ்வொரு மையமும் பின்பற்றுகிறது. நாடெங்கிலும் 1000க்கும் அதிகமான மையங்கள் செயல்படுகின்றன. ரிசர்வ வங்கி, ஸ்டேட் வங்கி, மற்ற பொதுத் துறை வங்கிகள் இவற்றை நிர்வகிக்கின்றன.

7. பரிவர்த்தனைக்காகும் கால அவகாசமென்ன?

அதே ஊரில் கொடுபட வேண்டிய காசோலை என்றால் 2-3 நாட்களுள் வரவு வைக்கப்படும். பெரிய நகரங்களில் உயர் மதிப்புப் பரிவர்த்தனை முறையில் அதே நாளில் பரிவர்த்தனை நிறைவுற்று அன்றே வாடிக்கையாளர் கணக்கில் வரவும் வைக்கப் படுகிறது. வாடிக்கையாளர் அடுத்த நாள் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மும்பையில் ‘கோட்டை’, ‘நரிமன் பாயின்ட்’, புதுதில்லியில் ‘கனாட் பிளேஸ்’ போன்ற முக்கியப் பெரு வணிக இடங்களிலுள்ள கிளைகளுக்கு மட்டுமே இவ்வுயர் மதிப்புப் பரிவர்த்தனை பொருந்தும்.

வெளியூரில் கொடுபட வேண்டிய காசோலை என்றால் 3 லிருந்து 10 நாட்கள் வரை ஆகலாம். வங்கிகள், காசோலை பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்டு வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க ஆகும் கால அவகாசம் பற்றித் தெளிவாகத் தங்கள் கொள்கைகளை வெளியிட வேண்டுமென்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. அப்படி குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மேலும் வரவு வைப்பதில் காலதாமதம் ஆனால் வாடிக்கையாளர் கேட்காமலேயே, அக்காலத்திற்கு வட்டியும் கூடுதலாக வழங்க வேண்டும்.

8. கொடுப்பிற்குக் காசோலையைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர் கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா?

காசோலை மூலம் கொடுப்பை வாங்குபவர், பணம் பெறுகையில் சில கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். உள்ளூர் காசோலைகள் என்றால் கட்டணமேதும் கிடையாது. வெளியூர் காசோலைகள் என்றால் இடத்தின் தூரம், தொகை ஆகியவற்றைப் பொருத்துக் கட்டணம் வசூலிக்கலாம். வங்கிகளின் சங்கம் அல்லது வங்கிகளே இதைத் தீர்மானிக்கும். இத்தகைய சேவைக் கட்டணங்களை வங்கி முன்னரே வாடிக்கையாளர் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.

9. ரொக்கம், காசோலை இரண்டும் தவிர கொடுப்பதெப்படி?

இரண்டு அல்லது கூடுதலான நபர்களுக்குக் காசோலை இல்லாமல் மின் அணு உத்தரவுகள் மூலம் கொடுப்பு நடைபெறுகிறது. மின்னணு நிதி மாற்றம் EFT, மின்னணுத் தீர்வுமுறை ECS, கடன் / பற்று அட்டை (Credit/debit cards) போன்றவை இதிலடங்கும்.

11. பணம் எடுக்க மட்டுந்தான் தானியங்கு பணம் வழங்கு இயந்திரம் (ATM) பயனாகிறதா?

பணம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், சேவைக் கட்டணங்கள் செலுத்த, நிதி மாற்றங்கள் செய்ய, காசோலை சமர்ப்பிக்க, பணம் செலுத்த, இருப்பு அறிய என்று பல சேவைகளுக்காக இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

12. கடன் / பற்று அட்டைகளின் பங்கு என்ன?

பொருட்களை வாங்கவும் சேவைகளைப் பெறவும் ரொக்கத்தையோ காசோலையையோ கொடுக்காமல் கடன் / பற்று அட்டைகள் மூலம் எளிதாக பயன்பெற முடிகிறது. வங்கிகள் கடன் அட்டைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வணிக நிறுனங்கள் கடன் / பற்று அட்டை மூலம் கொடுப்பதை ஏற்று தங்கள் வங்கிகள் மூலம் பணத்தைப் பெறுகின்றன.

13. பற்று அட்டை கடன் அட்டையிலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது?

பற்று அட்டை வைத்திருக்கும் கணக்கோடு நேரடித் தொடர்புடையது. பற்று அட்டையை உபயோகித்தவுடன் கணக்கில் அந்தத் தொகை கழிக்கப்பட்டுவிடும். கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவு வரை பற்று அட்டையைப் பயன்படுத்தலாம். கடன் அட்டை, மாறாக, கடனை ஏற்படுத்துகிறது. கடன் அட்டையைப் பயன்படுத்தியவர் அறிக்கை வந்த பின்னர் மொத்தமாகவோ தவணை முறையிலோ கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

14. மின் அணு நிதி மாற்றம் (EFT) என்றாலென்ன?

யார் வேண்டுமானாலும், மற்ற ஒரு தனிநபருக்கோ, கம்பெனிக்கோ பணம் கொடுக்க விரும்பினால், அவரது வங்கிக்குச் சென்று ரொக்கமாகவோ அல்லது தனது கணக்கிலிருந்து மாற்றுவதற்குரிய உத்தரவையோ அளித்து, பெறக்கூடியவர் பெயர், வங்கிக் கணக்கு எண், வகை, கிளை, வங்கி, அதன் இருப்பிடம் போன்ற அனைத்து விபரங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பித்தால் நிதி மாற்றங்கள் துரிதமாகவும் துல்லியமாகவும் நடைபெறும். ரிசர்வ் வங்கி இந்த மாற்றங்களைச் செய்துதவுகிறது.

15. மின் அணு நிதி மாற்றத்தின் மூலம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப இயலுமா?

இப்போது, நம் நாட்டிலுள்ள 15 நகரங்களில் இம்முறையில் பணமாற்றம் செய்யலாம். சிறப்பு மின் அணு நிதி மாற்றத்தின் கீழ் 200 நகரங்கள் பல கிளைகள் இம்முறையில் இணைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இணைய தளத்திலும், அந்தந்த வங்கிகளிலும் எந்தெந்த ஊர்களில் எந்தெந்தக் கிளைகளில் இது சாத்தியமாகும் என்ற விபரம் தெரியும்.

16. இம்முறையில் மாற்ற எவ்வளவு கால அவகாசமாகிறது?

நிதி மாற்றக் கோரும் நேரத்தைப் பொறுத்து அன்றோ அல்லது அடுத்த வேலைநாளிலோ பணமாற்றங்கள் உறுதி செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது இதை உறுதி செய்து கொள்ளலாம்.

17. கட்டணம் ஏதேனுமுண்டா?

கேட்பு வரைவுக் காசோலை, பணவழங்கு ஆணை போன்றவற்றுக்குக் கட்டணம் வகுப்பதைப் போலவே இம்முறைக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். தொகையைப் பொறுத்தும், வங்கி-வாடிக்கையாளர் உறவைப் பொறுத்தும் இக்கட்டணம் அமைகிறது. வங்கிகளுக்கு விதிக்கும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளது. வங்கிகள் வசூலிக்கும் பரிசீலனைத் தொகையும் இதனால் குறைந்துள்ளது.

18. மின் அணு தீர்வு முறையை பயன்படுத்தி நான் கொடுப்பதும் வாங்குவதும் எப்படி?

ஒரே மாதிரியான, அடிக்கடி நிகழக்கூடிய வகையிலான, ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சிறிய தொகையாக இருக்குமாயின் அவைகளின் மொத்த கொடுத்தல்/ வாங்கலை எளிதாகத் தீர்த்துவைக்கும் முறைதான் இது. தனி நபர்களை விட, பெரிய கம்பெனிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் நிறைய எண்ணிக்கையில் கொடுக்கல் / வாங்கலை முடிக்க இம்முறை உதவுகிறது. இந்தியாவில் 47 இடங்களில் இம்முறையை ரிசர்வ வங்கி நடத்துகிறது. மற்ற இடங்களில் ஸ்டேட் வங்கியும் அதன் இணை வங்கிகளும் நடத்துகின்றன. நிறைய பேருக்கு மொத்தக் கட்டணங்களை மொத்தமாக பெற்றுக் கொள்ளவும் இப் பரிவர்த்தனை முறை பெரிதும் உதவுகிறது.

19. மின் அணு தீர்வு (வரவு) என்றாலென்ன?

ஓர் அமைப்பு / ஒரு கம்பெனி தனது கணக்கிலிருந்து எண்ணற்ற பயன் பெறுவோருக்குஅவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகாக வரவுவைக்கப் பயன்படும் முறை ‘வரவு’ முறை. குறிப்பிட்ட கால அவகாசங்களில் வட்டி வழங்குதல், பங்கு வீதங்கள் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் இம்முறையில் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெறுகின்றன. அடிக்கடி நிகழ்கிற கொடுப்புகளைச் செய்ய சிறந்த வழி இதுதான். இதற்காக கொடுப்பினை வழங்கும் கம்பெனிகள் ஒவ்வொரு பயன் பெறுவோரின் வங்கி விபரங்களையும் சேகரித்தளிக்க வேண்டும். கம்பெனிக்குப் போதுமான பணம் கணக்கிலிருக்க வேண்டும். ஒப்பந்தத் தீர்பு நாளன்று அதன் கணக்கிலிருந்து மொத்தமாகக் கழிக்கப்பட்டு, அது தரும் விபரங்களின்படி பயன்பெறுவோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

20. மின் அணு பரிவர்த்தனை (பற்று) என்றாலென்ன?

வாடிக்கையாளர் சேவைகளுக்கான கட்டணங்களை பல வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களது வங்கிக் கணக்குக்குத் துல்லியமாகத் துரிதமாக மாற்றிக் கொள்ளும் முறை பணப் பரிவர்த்தனை (பற்று) எனப்படும். இந்தச் சேவைக் கம்பெனிகளின் அலுவலகத்திற்குச் சென்று ரொக்கமாகவோ காசோலையாகவோ கட்டணத்தைச் செலுத்தாமல், வாடிக்கையாளரும் கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டு நேரடியாக வாடிக்கையாளர் கணக்கிலிருந்து கம்பெனியின் கணக்குக்கு பணமாற்றம் செய்யப்படும். இம்முறையிலும் வாடிக்கையாளர் உரிய படிவத்தில் வங்கியின் விபரங்கள் தனது கணக்கு விபரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு வங்கியின் ஒப்புதலோடு சேவைக் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். கம்பெனிக்கு இந்தப் பரிவர்த்தனை (பற்று) வசதி இருந்தால் தனது வங்கி மூலமாக எந்தெந்த வாடிக்கையாளரின் எந்தெந்த வங்கிக் கணக்கைக் கழிக்க வேண்டும் என்ற பட்டியலை அளிக்கும். அதன்படி வாடிக்கையாளர் கணக்குகள் கழிக்கப்பட்டு கம்பெனி கணக்கு வரவு வைக்கப்படும். சேவைக் கட்டண விபரங்களின் பற்றுச் சீட்டை வழக்கம் போல் வாடிக்கையாளருக்கு கம்பெனி அனுப்பும்.

21. மின் அணு பரிவர்த்தனை முறையை உபயோகிக்கக் கட்டணமுண்டா?

மின் அணு நிதிமாற்றக்கைப் போலவே இதற்கும் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆயினும் தங்களது பெரிய நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு.

22. இந்தியாவில் குடியிருப்போர் அல்லாதவர்கள் எப்படி இந்தியாவுக்கு பணத்தை அனுப்ப முடியும்?

அயல்நாட்டிலுள்ள வங்கியின் சேவைகளைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு பணம் அனுப்ப முடியும். மாறாக அங்கீகரிக்கப்பட்ட பணமாற்றும் முகவர்கள் மூலமாகவும் அனுப்பலாம். சமீப காலத்தில் நிறைய வங்கிகள், உள்நாட்டுக்குப் பணம் வருவதில் அநேக வசதிகள் செய்து, சில மணி நேரங்களில் இந்தியாவில் பணம் கிடைக்கச் செய்கின்றன.

23. தங்களுடைய நடவடிக்கைகளுக்கு வங்கிகள் எங்ஙனம் பணம் கொடுக்கின்றன?

வாடிக்கையாளர் நடவடிக்கைகள் நீங்கலாக உள்ள நடவடிக்கைகள் வங்கிகளுக்கிடையில் அதிகமான மதிப்புடையனவாக இருக்கும். எனவே இவை உயர்-மதிப்பு நிதி மாற்றங்கள் எனப்படும். ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்கும் கணக்குகளிடையே இந்த மாற்றங்கள் ரிசர்வ் வங்கியால் செய்யப்படுகின்றன. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் தாங்கள் வைத்துள்ள கணக்குகளுக்கான காசோலையை ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ள, பரிவர்த்தனை மையத்தில் அவற்றை உரிய வங்கிகளுக்கு மாற்றம் செய்துவிடலாம் அல்லது உடனுக்குடனான மொத்த ஒப்பந்தத் தீர்வு முறையில் உடனேயே நிதி மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

24. உடனுக்குடனான மொத்த ஒப்பந்தத் தீர்வு என்றாலென்ன?

2004 மார்ச்சில் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. வங்கிகளுக்கிடையே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குப் பண மாற்றம், மின் அணு உத்தரவுகள் மூலம் நடைபெறுகிறது. ரிசர்வ் வங்கி இதை நிர்வகித்து செயலாக்கி வருகிறது. வங்கிகளுக்கிடையே துரிதமான திறமையான பாணமாற்றங்கள் நடைபெறுவதே இம்முறையின் நோக்கமும் செயல்பாடுமாகும். பயன் பெறுவோருக்கு உடனே பண மாற்றம் செய்யப்பட வேண்டும். பயன் பெறுவோரின் வங்கிக்கணக்கு 2 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்.

25. தனி நபர்கள் இம்முறையில் பணம் அனுப்பலாமா?

ஆம். தங்கள் வங்கிகள் மூலமாக அவர்கள் பணமாற்றம் செய்யலாம். பெரிய தொகைகளுக்கான மாற்றங்களை வங்கிகளுக்கிடையே உடனுக்குடன் செய்து கொள்வதற்காக இம்முறை அமல் செய்யப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர் சிறு தொகைகளை அனுப்பவும் தடையேதுமில்லை. சிறு / பெரிய தொகை என்பதற்கு அளவேதும் வைக்கவில்லை. 2005 ஜூலை 31 ஆம் தேதிப்படி 41 நகரங்களில் 7500 வங்கிக் கிளைகளில் இம்முறை செயல்படுகிறது. 2006 மார்ச்சில் 10000 கிளைகளாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் இதைப் பயன்படுத்த விரும்பினால் அவரது வங்கியும் பயன்பெறுபவர் வங்கியும், அதாவது இரண்டு கிளைகளும் இம்முறையில் இணைந்திருக்க வேண்டும். இத்தகைய நிதி மாற்றங்களுக்கு வங்கிகள் கட்டணமும் வசூலிக்கலாம். காலதாமதத்திற்கு வாடிக்கையாளர் வங்கியிடமிருந்து வட்டியும் கோரலாம்.

26. கொடுப்புமுறையில் புகார் ஏதேனும் இருந்தால், நான் யாரிடம் முறையிட வேண்டும்?

முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுக வேண்டும். அந்த வங்கி குறை தீர்க்க முன்வரவில்லையென்றாலும் அல்லது அதன் தீர்வு திருப்தி அளிக்காவிட்டாலும், வாடிக்கையாளர் ரிசர்வ் வங்கியின் வட்டார அலுவலகத்திலுள்ள குறை தீர்க்கும் பிரிவில் முறையிடலாம். வங்கிக் குறை தீர்ப்பாணையத்தையும் அணுகலாம்.

27. காசோலை அனுப்பாமல் பரிவர்த்தனை (cheque truncation) என்றால் என்ன?

காசோலையைப் பரிவர்த்தனைக்கு அனுப்பாமல், காசோலைப் பரிவர்த்தனை ஒப்பந்தத் தீர்வு காணும் முறை இது.

28. வாடிக்கையாளருக்கு இம்முறை எங்ஙனம் பயன்படுகிறது?

துரிதமாகத் தாங்கள் கொடுக்கும் காசோலைக்குரிய பணத்தைப் பெற இம்முறை உதவுகிறது. உள்ளூர் காசோலைகளுக்கு T+0, நகரங்களுக்கிடையே T+1 நாளும் ஆகிறது. நேரடியான பரிசீலனையும், தானியங்கிக் கொடுப்பு முறையும் இம்முறையில் இருப்பதால் வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் சாதாரணப் பரிவர்த்தனையில் ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகிறது. புதிய சேவைகளையும் வசதிகளையும் இம்முறையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். முரண் நீக்க வேலைகள், பரிவர்த்தனை மோசடிகள் ஆகியவை குறைய வாய்ப்புண்டு.

29. கொடுப்பு முறையில் ரிசர்வ் வங்கியின் பங்கென்ன?

ஒழுங்கீட்டாளர், மேற்பார்வையாளர் தவிர ரிசர்வ் வங்கி கிரியா ஊக்கியாக, செயலாக்குபவராக, உபயோகிப்பாளராக, ஒப்பந்தத் தீர்வு செய்யும் வங்கியாகச் செயல்படுகிறது. தொடர்ச்சியாக புதிய புதிய முறைகளை கொடுப்பு முறையில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து வருகிறது. இவை யாவும் பாதுகாப்பானதும் திறமையானதுமான வழிகளாகஇருக்கின்றன. 1980களில் நான்கு பெருநகரங்களில் காந்தமை காசோலைகளை அறிமுகம் செய்தது. இப்புதிய முறைகளோடு ஏற்கனவே நடைமுறையிலுள்ள திட்டங்களை மேம்படுத்தி, சீரமைத்து வாடிக்கையாளர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயலாற்றி வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியின் நன்மைகளைப் பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தி இத்தகைய கொடுப்பு நடவடிக்கைகளை இணைத்திருக்கிறது.

இம்முறைகளைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி தானும் ஒரு உபயோகிப்பாளராகச் செயல்படுகிறது. இம்முறை பலப்பட்டுவிட்டால் நிர்வாகத்தைக் கூட மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும். ஒழுங்கீட்டாளராகவும், மேற்பார்வையாளராகவும் மற்ற கொடுத்தல் முறைகளைக் கண்கானித்து வருகிறது.

30. கொடுப்பு முறையை ரிசர்வ் வங்கி எங்ஙனம் ஒழுங்குபடுத்துகிறது?

கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறையின் ஒழுங்கு முறைகளும் மேற்பார்வையும் மத்தியக் குழுவின் துணைக் குழுவான “கொடுப்பு மற்றும் ஒப்பந்தத்த் தீர்வு”  குழுமம் என்ற புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தக் குழுமம் தான் கொடுப்பு முறையில் கொள்கைகளை உருவாக்கும் உயர் அமைப்பு. ஒரு தொழில் நுட்பக் குழு , இக்குழுமத்திற்கு உதவி செய்கிறது. தேசிய கொடுப்புக் குழு என்று இதற்குப் பெயர். பல துறைகளில் வல்லுநர்களாய் இருப்பவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இந்த அமைப்பு. கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வுத்துறை என்ற புதிய மைய அலுவலகத்தின் துறை குழுமத்திற்கும் குழுவிற்கும் உதவி செய்கிறது. நடைமுறையில் இருக்கும்மற்றும் பின்னால் வரவிருக்கும் கொடுப்பு முறைகள் பற்றிய கொள்கைகளையும் தரநிர்ணயங்களையும் வரையறுக்க குழுமத்திற்குத் தான் முழுப் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இம்முறைக்கும் இது சம்பந்தமான கொள்கைகளுக்கும் உறுப்பினர் சேர்ப்பது என்ற வரைமுறை வகுக்கும் அதிகாரமும் இக் குழுமத்திற்குத் தான் உண்டு.

31. கடந்த 10 வருடங்களில் கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வுமுறையில் அடைந்துள்ள முக்கிய நிகழ்வுகள் என்ன?

சாதாரண மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வங்கிகள் அளித்த கொடுப்பு முறைகள் கணிசமான அளவு முன்னேறி இருக்கிறது. இந்த மாற்றங்கள் கீழ் வருமாறு.

முதலாவதாக காசோலைப் பரிவர்த்தனை முறை வெகுவாக முன்னேறி இருகிறது. உள்ளூர் காசோலைகள் காசாக தற்போது 2 அல்லது 3 நாட்கள்தானாகிறது. முன்னர் 4-5 நாட்கள் ஆகும் என்ற நிலை இருந்தது. 42 நகரங்களில் தானியங்கி காசோலைப் பரிவர்த்தனை மையங்கள் இரவிலும் காசோலைப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. வெளியூர் காசோலைகள் கூட 4-10 தினங்களுக்குள் வரவு வைக்கப்படுகின்றன. முன்னர் 10-30 நாட்கள் என்று இருந்தது.

இரண்டாவதாக 90களில் மின் அணுப் பொருட்கள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பெரிய நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் வட்டி, பங்கு வீதங்களை உரிய தேதியில் அனைவருக்கும் வழங்கிட மின் அணுத் தீர்வு முறை (ECS) பெரிதும் உதவுகிறது. முதலீட்டாளர்கள் குறித்த தேதியில் தங்கள் முதலீட்டிற்குரிய வருமானத்தை ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், நிறுவனங்கள் வட்டி, பங்கு வீதங்களை அளிக்க பல்லாயிரக்கணக்கான காகித உபகரணங்களை அச்சிடத் தேவையில்லை. 2005-06 ஆம் ஆண்டில் 36 மில்லியன் நடவடிக்கைகள் மின் அணுத் தீர்வு முறை மூலம் நடந்தேறியிருக்கின்றன என்பதை வைத்து எந்த அளவு சேமிப்பு இம்முறையில் ஏற்ப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மூன்றாவதாக மின் அணு நிதி மாற்றம், பணம் அனுப்பும் முறையையே மாற்றி இருகிறது. ரிசர்வ் வங்கியின் இம்முறையைப் பயன்படுத்தி வணிக வங்கிகள் அதே நாளில் பணமாற்றங்களைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்து தருகின்றன. 15 பெரிய நகரங்களில் இம்முறை தற்போது அமலில் இருக்கிறது. சிறப்பு மின் அணு நிதி மாற்றம், வலையமைப்பில் இணைக்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளுடன் நாட்டில் எங்கிருந்தாலும் நடைபெற உதவுகிறது. இணைய தள வழியாக வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படும் வசதியுள்ள வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் அப்படிக் கோரும்போது நேரடியாகவே மின் அணு நிதி மாற்றத்தை மேற்கொள்கின்றன.

நான்காவதாக உடனுக்குடனான மொத்த ஒப்பந்த தீர்வு முறையை அமல் படுத்தியிருப்பது. இது மின் அணு நிதி மாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியிருக்கிறது. பெரிய நிறுவனங்களும், மற்ற வாடிக்கையாளர்களும், தற்போது சுமார் 9600 குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் உடனுக்குடன் பணம் மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இம்முறையின் விதிகளின்படி எந்த வரவு ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதோ, அது 2 மணிநேரத்திற்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும், அதாவது காலதாமதம் என்பது 2 மணி நேரத்திற்கு மேல் போகக் கூடாது என்பது பொருளாகும்.

ஐந்தாவதாக தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், இருப்பு அறிதல், காசோலை விண்ணப்பங்கள், பணம் கொடுப்பு நிறுத்தம் போன்ற காரியங்களை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் (24 x 7) செய்து கொள்ளலாம். தற்போது 16000 பேர் தானியங்கி பணம் வழங்கு அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மாதா மாதம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

ஆறாவதாக கடந்த 3 அல்லது 4 வருடங்களாக கடன் / பற்று அட்டைகள் பயன்பாடு மிகப்பிரம்மாண்டமான அளவு உயர்ந்திருக்கிறது. 2004 நவம்பர் முடிவில் 4.33 கோடி அட்டைகள் இருந்தன. பாதுகாப்பு, வசதியோடு சில்லறை வணிக வியாபாரத்தின் பெருக்கம், இதன் அதிக அளவு உபயோகிப்புக்குக் காரணம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/27/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate