অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தபால் நிலைய சேமிப்பு

தபால் நிலைய சேமிப்பு

சேமிப்பு

வீட்டுச் செலவுக்கென கணவர் கொடுக்கும் பணத்தில் ஒரு ரூபாயையாவது மிச்சப்படுத்திவைப்பது நம்மூர் இல்லத்தரசிகளின் குணம் மட்டுமல்ல, அவர்களது நிர்வாகத் திறமையின் வெளிப்பாடும் கூட. என்னதான் பார்த்துப் பார்த்து பட்ஜெட் போட்டாலும் ஒவ்வொரு மாதமும் நிச்சயம் வரவுக்கு மீறிய செலவு ஒன்றாவது இருக்கும்.அதுபோன்ற நேரத்திலும் அவசர மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கும் கைகொடுப்பது இல்லத்தரசிகளின் இந்த சேமிப்புதான்.

இப்படி சிறுகச் சிறுகச் சேமிப்பதை கிராமப்புறங்களில் சிறுவாட்டுப் பணம் என்பார்கள். சேமிக்கிற பணத்தை சமையலறையில் மட்டுமே வைப்பதைவிட ஏதாவது சேமிப்பு கணக்கில் போட்டுவைத்தால் அசலுடன் வட்டியும் சேர்ந்து உங்களது தேவைக்கு கைகொடுக்குமே. அப்படி பணத்தை எந்த வகையில் சேமிக்கலாம்.

இன்று எத்தனையோ சேமிப்பு முறைகள் வந்தாலும் எல்லா வகையிலும் பாதுகாப்பானது போஸ்டல் சேவிங்ஸ் எனப்படும் அஞ்சலக சேமிப்பு முறைதான். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தன் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இது. இந்த சேமிப்பில் குறைவான வட்டி விகிதம் என்பதுடன் இது ஏழை மக்களுக்கான சேமிப்பு எனப் பலர் தவறான நினைக்கிறார்கள். உண்மையை சொல்வதென்றால் இல்லத்தரசிகளுக்கு ஏற்றது அஞ்சல சேமிப்புதான். பெண்கள் தைரியமாக நம்பிக்கையுடன் போகக்கூடிய இடங்களில் போஸ்ட் ஆபிஸும் ஒன்று.

இங்கு ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசமோ, பெரிய கடைகள் அல்லது நிறுவனங்களில் உள்ளது போன்ற பகட்டான தோற்றமோ கிடையாது. சிலருக்கு வங்கியில் நுழைவதற்கு தயக்கமோ, எப்படி உதவி கேட்பது என்கிற கூச்சமோ இருக்கும். ஆனால் போஸ்ட் ஆபிஸ் அப்படி அல்ல. இங்கு 10 ரூபாயைக்கூட கவுரவமாக சேமிக்க முடியும். மற்ற முதலீட்டு சாதனங்களான ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்றவற்றில் உள்ளது போன்ற கடுமையான மற்றும் சிக்கலான நிபந்தனைகள் இங்கு கிடையாது. அஞ்சலக முதலீடுகளின் பிளஸ் பாயின்ட்டே இங்கு 100% பாதுகாப்பு உண்டு என்பதுதான். இவை எல்லாவற்றையும் விட ஆண் துணை இல்லாமல் தைரியமாக அஞ்சலகத்தில் சேமிக்க முடியும். பெண்களுக்கு இதைத்தவிர வேறென்ன வேண்டும்! என்றவர், பலவிதமான அஞ்சலக சேமிப்பு முறைகள் குறித்தும் சொல்கிறார்.

பெண்களுக்கான திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office Savings Account),

தொடர் வைப்புக்கணக்கு ((Rezcurring Deposit Account),

அஞ்சலக மாந்தாந்திர வருமான கணக்கு (PostOffice Monthly Income Account),

வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund Account),

கிசான் விகாஸ் பத்திரம் (KisanVikas Patra),

தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificate),

அஞ்சலக வைப்பு கணக்கு (Post Office Time Deposit Account).

அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது ஒரு வங்கி சேமிப்பு கணக்கு  போன்றது. அதற்கு இருப்பதுபோல செக் வசதியும் உண்டு. இதற்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் இருந்தாலே போதும்.

தொடர் வைப்புக் கணக்கு

இது மிகவும் பிரபலமான திட்டம். இன்று  வங்கிகளில் காணப்படுகின்ற தொடர்வைப்புக் கணக்கு திட்டங்களுக்கு இதுவே  முன்னோடி. இந்தத் திட்டத்தில் மாதம் 10 ரூபாய்கூட சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு மாதத்துக்கு வெறும் 50 ரூபாய் செலுத்தி வந்தால், 5 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு வட்டியுடன் சேர்த்து 3644.50 ரூபாய் கிடைக்கும். மாதம் 100 ரூபாய் செலுத்தினால்  5 வருடங்களுக்குப் பிறகு 7289.50 ரூபாய் கிடைக்கும். மாதம் 150 ரூபாய் செலுத்தினால் 5 வருடங்களுக்குப் பிறகு 10933.50 ரூபாய் கிடைக்கும்.

அஞ்சலக மாந்தாந்திர வருமான கணக்கு.

இதற்கு குறைந்தபட்ச தொகை 1,500 ரூபாய்.

வருங்கால வைப்பு நிதி.

இந்தத் திட்டம் தொழிலாளர்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்தினரின் எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யவும் உருவாக்கப் பட்டது. இதில், குடும்பப் பெண்களும் முதலீடு செய்து சேமிக்கலாம். அடுத்ததாக, கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம். ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த பத்திரம் ஒன்றை வாங்கிவிடுவார்கள். இந்தப் பத்திரங்கள் முதிர்வு காலம் வந்தவுடன், அவை மீண்டும் புதுப்பிக்கப்படும். பலருக்கு பொருளாதார ஆலோசனை கூறும் ஆடிட்டர்கள்கூட இவற்றை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். எனவே, அஞ்சலகத்திலோ அல்லது அஞ்சலக முகவர்களிடம் நேரடியாகச் சென்று தங்களது சேமிப்பைத் தொடங்கலாம் .

பாதுகாப்பு

அஞ்சலக சேமிப்புக்கு 100% பாதுகாப்பு உண்டு. ஏனென்றால், அஞ்சலக துறை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகின்றது. இதன் செயல்பாடுகளும், முதலீடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அஞ்சலகத் துறை நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றது. வங்கிக்கிளை இல்லாத ஊர்களில்கூட அஞ்சலகக் கிளை இருக்கும். இப்படி மக்களோடு பின்னிப் பிணைந்து நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நிறைந்திருக்கிற அஞ்சலகத் துறையை நாம் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

ஆதாரம் : எஃப்.சி.எம் செண்ட்ரம் பைனான்ஸ் நிறுவனம்

கடைசியாக மாற்றப்பட்டது : 11/23/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate