பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்விக் கடன்

கல்விக் கடன் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

நோக்கம்

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புத் துறையைச் சார்ந்திருக்கிறது.  படிப்பை முடித்து வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டும் வரை, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நம்பியிருப்பது வங்கிகள் வழங்கும் கல்விக்கான கடனைத்தான்.

தற்போது வங்கிகளில் செயல்படுத்தப்படும் கல்விக் கடன் திட்டங்கள் இந்தியன் வங்கி சம்மேளனம் 2001ல் கொண்டுவந்த மாதிரிக் கல்விக் கடன் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. அத்திட்டத்தில் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. செப்டம்பர், 2012ல் கொண்டுவரப்பட்ட மாற்றத்துடன் தற்போதைய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தியன் வங்கி சம்மேளனத்தின் உறுப்பினராக உள்ள வங்கிகள் (பொது மற்றும் தனியார் வங்கிகள்), மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் அவை விரும்பும் மாற்றங்களுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். கடன் தொகை, செக்யூரிட்டி (ஈடு), தவணைகள் போன்றவை பெரும்பாலான வங்கிகளில் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  தகுதி மதிப்பெண், வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

யார் கடன் பெறலாம்?

 • இந்தியக் குடியுரிமை பெற்ற மாணவர்கள்,
 • 12ம் வகுப்பு முடித்துத் தகுதியின் அடிப்படையில் உயர் கல்விக்கு அனுமதி பெற்றிருத்தல் அவசியம்.

எந்தப் படிப்பிற்குப் பெறலாம்?

 • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெற்கொள்ளும் அனைத்துப் பட்டப் படிப்பு, டிப்ளமா, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றிற்குக் கடன் பெறலாம். பகுதி நேரம் மற்றும் அஞ்சல் வழிக் கல்வித் திட்டங்களுக்குப் பெரும்பாலான வங்கிகள் கடன் வழங்குவதில்லை. தகுதி நிர்ணயங்கள் தளர்த்தப் படுதலும், அத்தகைய படிப்புகளுக்கு வேலை கிடைத்தல் அரிதாக இருப்பதும் முக்கிய காரணங்களாகும்.  இருந்த போதிலும் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட சில வங்கிகள் பகுதி நேர மற்றம் அஞ்சல் வழிப்பட்டப் படிப்பிற்குக் கடன் வழங்குகின்றன.
 • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் பட்டப் படிப்புகளுக்கு மட்டுமன்றி, சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கும் கல்விக்கடன் கொடுக்கப் படுகின்றது.

எவ்வகைச் செலவினங்களுக்குக் கடன் கிடைக்கும்?

 • கல்விக் கட்டணம்
 • விடுதிக் கட்டணம் (மாணவர் வெளியே தங்க நேர்ந்தால் தங்குவதற்கும், உணவிற்கும் போதிய தொகை)
 • தேர்வு, நூலகம்
 • லேப் கட்டணங்கள்
 • போக்குவரத்துக் கட்டணம் (வெளிநாடு என்றால் விமானக் கட்டணம்);
 • இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம்
 • காஷன் டெபாசிட்
 • கட்டிட நிதி போன்றவை (மொத்தக் கல்விக் கட்டணத்தில் 10 சதவிகிதத்திற்கு மிகாமல்)
 • புத்தகம்
 • உபகரணங்கள்
 • சீருடை
 • தேவையென்றால் உரிய விலையில் கம்ப்யூட்டர்
 • படிப்பை முடிப்பதற்கான கல்விச்சுற்றுலா
 • திட்ட வேலைகள் (Project Work)
 • ஆராய்ச்சி வேலைகள் முதலியவை (கல்விக் கட்டணத்தில் சேராமலும் மொத்தக் கல்விக் கட்டணத்தில் 20 சதவிகிதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்).

கடன் அதிக பட்சம் எவ்வளவு கிடைக்கும்?

மேலே குறிப்பிட்ட செலவினங்களைக் கணக்கில் கொண்டு, உரிய பங்குத் தொகையைக் (Margin Money) கழித்த பின்னர் உள்ள தொகை, கடனாகக் கொடுக்கப்படும்.  உள்நாட்டுப் படிப்பிற்கு அதிக பட்ச வரம்பாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டுப் படிப்பென்றால் ரூ.20 லட்சமும் கடனாக மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. மாணவர் மேற்கொள்ளும் கல்விக்கு ஏற்பச் சில வங்கிகள் அதிகமாகவும் கடன் கொடுக்கின்றன.

பெறுகின்ற கடனுக்கான பங்குத் தொகை

கடன் தொகை ரூ.4 லட்சம் வரை பெறுகின்ற மாணவர்கள் தங்கள் பங்காக எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அதுவே கடன் தொகை ரூ.4 லட்சத்திற்கு மேல் என்றால், (மொத்த செலவினத்தில்) உள்நாட்டுப் படிப்பிற்கு 5 சதவிகிதமும், வெளிநாட்டுப் படிப்பிற்று 15 சதவிகிதமும் சொந்தப் பணமாகக் கொண்டுவர வேண்டும். மாணவர் பெறுகின்ற கல்வி உதவித் தொகை (Scholarship) பங்குத் தொகையாகக் கணக்கிடப்படும். மொத்தப் பங்குத் தொகையையும் முன்பணமாகக் கொண்டுவர வேண்டியதில்லை. அவ்வப்போது வழங்கப்படும் கடன்தொகைக்கு ஏற்பக் கொண்டுவந்தால் போதும்.

செக்யூரிட்டி (ஈடு)

கடன் தொகை ரூ.4 லட்சம் வரை என்றால், பெற்றோர்கள் கூட்டுக் கடன்தாரர்களாக இருந்தால் போதுமானது. அதற்கு மேல் கடன் தொகை ரூ.7.50 லட்சம் வரை என்றால் பெற்றோர்களைத் தவிரவும், தகுதிவாய்ந்த மூன்றாம் நபருடைய ஜாமீன் பெறுதல் வேண்டும். கடன் தொகை ரூ.7.50 லட்சத்திற்கு மேல் என்றால் கடன் தொகைக்கு ஏற்ப நிலையான சொத்து அடமானம், அல்லது யுடிஐ, என்ஸ்சி பத்திரங்கள், வங்கி வைப்புத் தொகை ரசீதுகள், எல்ஐசி பாலிசி போன்றவை கொடுக்க வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்த வேணடிய காலம்

கடன் விடுமுறைக் காலம் (Holiday Period) படிப்பு முடிந்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்து 6 மாதம் எது முன்னதோ அதுவரை அளிக்கப்படும். பின்னர் கடன் தவணைகளைக் கட்டத் துவங்க வேண்டும். ஒருவர் 2013 மார்ச் மாதம் படிப்பை முடித்திருந்தால் முதல் தவணை 2014 மார்ச்சில் துவங்கும்.  ஒருவேளை அவருக்கு 2013 ஏப்ரலில் வேலை கிடைத்து விட்டால், 2013 அக்டோபர் மாதம் முதல் தவணை ஆரம்பமாகும். கடன் விடுமுறை காலத்திற்கான வட்டி நேர் வட்டியாகக் கணக்கிடப்பட்டு (கூட்டுவட்டி தவணை துவங்கிய பிறகுதான் ஆரம்பிக்கும்) அசலோடு சேர்க்கப்பட்டு அதற்கு ஏற்பத் தவணைத் தொகை எவ்வளவு என்று முடிவு செய்யப்படும். ரூ.7.50 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சம் 10 வருடமும் (120 மாதங்கள்) அதற்கு மேலான கடன்களுக்கு 15 வருடமும் (180 மாதங்கள்) தவணைக் காலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் தவணைக் காலத்தைக் குறைத்துள்ளன.

வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வேறுபடலாம்.

கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் அந்த அந்த வங்கிகளின் அடிப்படை வட்டியைப் (Base Rate) பொறுத்து வேறுபடுகின்றது.  குறிப்பிட்ட சில வங்கிகளில் கல்விக் கடனுக்கு வசூலிக்கப் படும் தற்போதைய வட்டி விகிதம் பின்வருமாறு (அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது).

வங்கி

ரூ.4 லட்சம் வரை

ரூ.4 லட்சத்திற்கு மேல் ரூ.7.50 லட்சம் வரை

ரூ.7.50 லட்சத்திற்கு மேல்

ஸ்டேட் பேங்க்

13.50%

13.75%

11.75%

கனரா பேங்க்

11.70%

12.20%

11.70%

இந்தியன் வங்கி

12.50%

12.50%

12.50%

லஷ்மி விலாஸ் வங்கி

14.50%

15.50%

15.50%

ஆக்ஸிஸ் பேங்க்

17.00%

18.00%

16.00%

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்

14.25%

14.25%

13.75%

மாணவிகளுக்கு வட்டி விகிதத்தில் 0.50% சலுகை அளிக்கப்படுகின்றது. தவணை துவங்குவதற்கு முன்னர் கல்வி பயிலும் காலத்திலேயே வட்டி உடனுக்குடன் கட்டப்பட்டால் சில வங்கிகள் வட்டி விகிதத்தில் 1% சலுகை அளிக்கின்றன. சில வங்கிகளில் ரூ.20 லட்சத்திற்கு மேல் கடன் கொடுக்கப்பட்டால் அவை மத்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி முன்னுரிமையற்ற கடன்களாகக் கருதப்பட்டு ஓரிரு சதவிகிதம் அதிக வட்டி விதிக்கப்படுகின்றது.

(18.2.14 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கல்விக் கடனுக்கு முக்கியமான ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு  மார்ச் 31ம் தேதிவரை பெறப்பட்ட கல்விக் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. 31.12.13 வரை நிலுவையில் உள்ள வட்டித் தொகைக்கு இது பொருந்தும். இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒன்பது லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறுவர்).

சமர்ப்பிக்க வேண்டிய பத்திரங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் (அந்தந்த வங்கிகளின் இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்), ரேஷன் கார்டு நகல், குடும்ப வருமானத்திற்கான அத்தாட்சி அல்லது பெற்றோருடைய சம்பளப் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தின் அனுமதிக் கடிதம், மதிப்பெண் பட்டியல் போன்ற முந்தைய கல்வி தொடர்பான சர்டிபிகேட்களின் அத்தாட்சியுடன் கூடிய நகல்கள்,  புதிய கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற மேற்கொள்ளவிருக்கும் படிப்பிற்கான பாடத்திட்டங்கள், பிராஸ்பெக்டஸ், கல்வி மற்றும் அனைத்துக் கட்டண விவரங்கள், படித்த பள்ளி / கல்லூரியின் இரண்டு ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட நற்சான்றிதழ்கள், மாணவன் மற்றும் அவரது பெற்றோரின் சொத்து விவரங்கள் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டியிருந்தால் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட என்ஜினீயரின் மதிப்பீடு மற்றும் சட்ட வல்லுநரின் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாணவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தின் அனுமதி போன்றவற்றின் நகல்கள் வங்கியால் பெறப்பட்டு மூலப் பத்திரங்களுடன் சரிபார்க்கப்படும்.

மற்றைய விவரங்கள்

மாணவர் எந்த ஊரில் எந்த இடத்தில் வசிக்கிறாரோ அங்கே அருகில் உள்ள வங்கியின் கிளையைக் கடன் பெற அணுக வேண்டும். சில வங்கிகளைப் பொருத்தவரை கல்லூரிக்கு அருகில் இருக்கும் கிளை மூலம் கல்விக்கடன் தரப்படுவதும் உண்டு. மாணவர் 18 வயதுக்குட்பட்ட மைனராக இருந்தால் வங்கிப் பத்திரங்களில் பெற்றோர் கையெழுத்திட வேண்டும். மாணவர் மேஜர் ஆனவுடன் அவர் பத்திரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கவேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.4.50 லட்சத்திற்குள் இருந்தால் கல்விபயிலும் காலத்திற்கு அரசு வட்டி மான்யம் வழங்குகின்றது. கல்விக் கடன் விண்ணப்பம் பொதுவாக மாணவரின் கல்வி முடித்த பின்னர் கிடைக்கும் உத்தேச சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆகவே எதிர்கால வேலை வாய்ப்பினை நிர்ணயிக்க ஏதுவாக வங்கிகளில் (குறிப்பாகத் தனியார் வங்கிகளில்) குறைந்தபட்ச மதிப்பெண், கல்விக் கடனுக்கு அடிப்படைத் தகுதியாகக் கோரப்படுகிறது. கல்விக் கடனுக்கான விண்ணப்பம் அனைத்து விவரங்களுடன் வங்கியில் சமர்ப்பித்தவிடன் முடிவு பொதுவாக 15 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். கடன் மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணமும் கூறப்பட வேண்டும்.

வீட்டுக்கடனைப்போலக் கல்விக்கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ள வங்கிகள் விரும்புவதில்லை. ஆகவே முதல் முறையாகக் கடன் பெறும்போதே வட்டி விகிதம் போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அனுகூலமான வங்கியிடம் இருந்து கடன் பெறுதல் நல்லது.

ஆதாரம் : லஷ்சுமி விலாஸ் வங்கி

3.075
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top