பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வாகனக் கடன்

வாகனக் கடன் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

இன்றைய கால கட்டத்தில் வங்கிகளில் தனிநபர் கடன் திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. வீட்டுக்கடன், வீட்டு மனைக்கடன், கல்விக் கடன், வாகனக் கடன், பல்வேறு நுகர் பொருட்கள் வாங்குவதற்கான கடன்கள், சம்பளக் கடன், ஓய்வூதியக் கடன், மற்றும் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் போன்ற தொழில் வல்லுனர்களுக்கான சிறப்புக் கடன் திட்டங்கள் என்று பல்வேறு வரையறுக்கப்பட்ட தனி நபர் கடன் திட்டங்கள் (Tailor Made Personal Loan Products) ஒவ்வொரு வங்கியிலும் மிகப் பரவலாகச் சந்தைப் படுத்தப்படுகின்றன. (உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கான கடன் திட்டங்கள் தனி). சந்தையில் புதிதாக ஏற்பட்டுள்ள தேவைகளை ஆராய்ந்து பல புதிய கடன் திட்டங்கள் உருவாக்கப்படுவதோடு, இயங்குகின்ற திட்டங்களில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாறுதல்களும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

அத்தகைய தனி நபர் கடன் திட்டங்களில் வாகனக் கடன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், உபயோகப்படுத்தப்பட்ட கார்கள், சில வங்கிகளில் டாடா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களோடு இணைந்து அவர்களது வாகனங்கள் வாங்குவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் கடன் திட்டங்கள் என்று பல்வேறு வாகனக் கடன் திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏறுமுகமாக இருந்தாலும் வாகனங்கள் விற்பனையில் நீடித்த வீழ்ச்சி இருப்பதாகக் கருத முடியாது. வாகனக் கடன் திட்டங்களின் மூலம் தங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான போட்டி, வங்கிகளுக்கிடையே நித்தம் உயிர்ப்புடன் உள்ளது.

வாகனக் கடன் திட்டங்களில் வங்கிக்கு வங்கி மாறுபட்ட நிபந்தனைகள் இருந்த போதிலும், பொதுவான சில அம்சங்களை நாம் பார்க்கலாம். (நிலவும் வட்டி விகிதம், பங்குத் தொகை, தவணைக் காலம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சில நிபந்தனைகள் வங்கி வாரியாகத் தனியாக அட்டவணையில் தரப்பட்டுள்ளன).

வாகனக் கடன் வாங்கத் தகுதியானவர்கள்

 • அரசு, பொது மற்றும் தகுதிபெற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்
 • வியாபாரிகள்
 • சுயதொழில் புரிவோர்
 • டாக்டர், என்ஜீனீயர்
 • வழக்கறிஞர் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் போன்ற தொழில் வல்லுனர்கள்;
 • தனி உரிமையுள்ள அல்லது பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள்;
 • தவணை செலுத்தும் திறனுடைய ஓய்வூதியதாரர்கள்;
 • விவசாயிகள்

சில வங்கிகளில் வயது வரம்பு 21 தொடங்கி 60 அல்லது 65 வரைக்குள் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வருட வருமானம் ரூ. 75000 ஆகவும், கார் வாங்குவதற்கான குறைந்த பட்ச வருட வருமானம் ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சம் வரை என்று வரையறுத்துள்ள வங்கிகளும் உண்டு.

எவ்வகை வாகனங்களுக்காகக் கடன் கொடுக்கப்படுகின்றது?

புதிய இருசக்கர வாகனங்கள், புதிய மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட கார்களுக்கு வாகனக் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. பழைய கார்களாக இருந்தால் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும். வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட என்ஜினீயருடைய மதிப்புச் சான்றிதழ் பெற்றோ அல்லது அங்கீகாரம் பெற்ற ட்ரூ வேல்யூ, டாடா மோட்டார்ஸ் அஷ்யூர்டு (TMA) போன்ற நிறுவனங்களிலிருந்தோ வாங்க வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட பழைய இருசக்கர வாகனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை.

அதிக பட்சக் கடன் தொகை எவ்வளவு கிடைக்கும்?

 • புதிய இருசக்கர வாகனங்களுக்கு அதிக பட்சமாக ரூ.50000 முதல் ரூ.75000 வரை என்று சில வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. சம்பளதாரர்கள் எனில் 6 மாத நிகர மாத வருமானமும் மற்றோருக்கு நிறைவடைந்த வருட வருமானத்தில் பாதியும் கிடைக்கும். அப்படிக் கணக்கிடும் தொகை வங்கி நிர்ணயித்த வரம்புக்கு அதிகமானால் கடன் தொகை குறிப்பிட்ட வரம்பிற்கு மட்டுப்படுத்தப்படும்.
 • புதிய கார்களுக்குப் பெரும்பாலான வங்கிகளில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப் படவில்லை. ஆனாலும் கடன் விண்ணப்பித்தவரின் வருமானத்திற்கும் தவணை செலுத்தக்கூடிய திறனுக்கும் ஏற்ப உச்சபட்சக் கடன் தொகை முடிவு செய்யப்படுகின்றது. ஓரிரு வங்கிகளில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவை போதுமான அளவிற்கும் அதிகமாகவே உள்ளது.
 • புதிய கார்களுக்கு நிகர மாத வருமானத்தைப் போல (Net Monthly Income) 48 மடங்கு அல்லது வருட வருமானத்தைப் போல நான்கு மடங்கு அதிக பட்சக் கடன் தொகையாகக் கணக்கிடப்படுகிறது. சில வங்கிகளில் மொத்த மாத வருமானத்தைப் போல (Gross Monthly Income) இருபது மடங்கு என்றோ அல்லது சற்றே வேறுபட்ட அளவு கோல்களாலோ அதிகபட்சக் கடன் தொகை கணக்கிடப்படுகின்றது.
 • பழைய கார்களுக்கு உச்ச வரம்பும் தவணைக் காலமும் குறைக்கப்பட்டு வட்டி விகிதம் சற்றே அதிகமாக இருக்கும்.
 • கடன் தவணையைக் கட்டிய பிறகு உள்ள மாத வருமானம் குடும்பச் செலவிற்குப் போதுமானது என்று வங்கிகள் உறுதிப் படுத்திக் கொள்ள விரும்புகின்றன. ஆகவே வாகனக் கடன் பிடித்தம் உள்ளிட்ட அனைத்துப் பிடித்தங்களும் போக, கடன்தாரர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத் தொகை (Net Take Home Pay), அனைத்துப் பிடித்தங்களுக்கும் முன்னர் உள்ள மொத்த வருமானத்தில் குறைந்த பட்சம் 25 முதல் 40 சதவிகிதமாவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகின்றது. உதாரணமாக மொத்த மாத வருமானம் ரூ.50000 வாங்குபவருக்கு வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்துப் பிடித்தங்களும் போக அவரது நிகர மாத வருமானம் (குறைந்த பட்சம் 25 சதவிகிதம் என்றால்) ரூ.12500 க்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
 • ஆகவே அதிகபட்சக் கடன் தொகை என்பது பொதுவாக நான்கு விஷயங்களைப் பொறுத்தது. 1. குறிப்பிட்ட வாகனத்திற்காக வங்கியால் உச்ச வரம்பு நிர்ணயிக்கப் பட்டிருந்தால் அந்தத் தொகை. 2. வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு (மாத அல்லது வருட வருமானத்தின் மடங்கில்). 3. வாகனத்தின் விலையில் பங்குப் பணம் (Margin Money) கழித்த பின்னர் உள்ள தொகை. 4. வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத் தொகை அனுமதிக்கும் தவணை வரம்பு – ஆகிய நான்கிலும் எது குறைவோ அதுவே உச்ச பட்சக் கடன் தொகையாக எடுத்துக் கொள்ளப்படும்.

எந்தச் செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்?

வாகன விலை, ரெஜிஸ்ட்ரேஷன் செலவுகள், வண்டிக்கான காப்பீடு (Insurance), ஒரு முறை செலுத்தக்கூடிய சாலை வரி, குறிப்பிட்ட தொகைக்குள்ளாக உதிரி பாகங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த விலை (On Road Price) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பங்குத் தொகையைக் கழித்த பின்னர் மீதம் கடனுக்குக் கணக்கிடப்படும்

சொந்தப் பணம் (Margin Money) எவ்வளவு செலுத்த வேண்டும்?

 • புதிய இருசக்கர வாகனங்களுக்கு 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் சொந்தப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய கார்களுக்குப் பங்குத் தொகை 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. உபயோகப் படுத்தப்பட்ட பழைய கார்களுக்குப் பங்குத் தொகை 15 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகின்றது.
 • பெரும்பாலான வங்கிகள் பிராசசிங் கட்டணம் வசூலிக்கின்றன.
 • வாகனக் கடனைப் பொறுத்தவரை வங்கிகள் ஒரு முறைக் கட்டணமாகச் சிறிய அளவில் பிராசசிங் கட்டணம் வசூல் செய்கின்றன. அவை கடன் தொகையில் 0.1 சதவிகிதத்திலிருந்து 2.0 சதவிகிதம் வரை வேறுபடுகின்றன. குறைந்த பட்சத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தவணைக் காலம் எவ்வளவு?

 • இருசக்கர வாகனங்களுக்கு 35 மாதம் முதல் 60 மாதங்கள் வரை வங்கித் திட்டத்திற்கு ஏற்றவாறு கடனைத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். புதிய கார்களுக்கான கடனை 60 முதல் 84 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்த வங்கிகள் வழி வகுக்கின்றன. உபயோகப்படுத்திய பழைய கார்கள் என்றால் 36 மாதம் முதல் 84 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்த அவகாசம் கிடைக்கும்.
 • வீட்டுக்கடன், கல்விக் கடன் போன்றவற்றிற்கு வழங்கப்படும் கடன் விடுமுறைக்காலம் (Holiday Period), தனி நபர் வாகனக்கடனுக்குப் பொருந்தாது. கடன் வாங்கிய அடுத்த மாதத்திலேயே முதல் தவணை கட்டப்பட வேண்டும்.
 • கடன் ரூ.1 லட்சத்திற்கு 12% வட்டி விகிதத்தில் தவணை காலம் 60 மாதம் என்றால் ஒரு மாதத்திற்கான தவணைத் தொகை ரூ. 2202/- என்ற அளவிலே அமையும். (தவணைத் தொகை எவ்வளவு என்பதைப் பெரும்பாலான வங்கிகளின் இணைய தளத்தில் அவற்றுக்காக உள்ள கேல்குலேட்டர் மூலம் அல்லது கிளைகளில் கேட்டு அறிய முடியும்).
 • தவணைக் காலத்திற்கான மொத்த வட்டியையும் கணக்கிட்டு அவை பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரே அளவிலான மாதத் தவணைகள் கணக்கிடப்படுகின்றன. அவற்றை ஈ.எம்.ஐ (EMI – Equated Monthly Instalment) என்று குறிப்பிடுகின்றார்கள். கடன் கணக்கில் தினம் நிலுவையில் உள்ள தொகைக்கே (டிமினிஷிங் பேலன்ஸ்) வங்கிகளில் வட்டி கணக்கிடப்படுகின்றது. ஆகவே பெருந்தொகையை முன்னதாகக் கடனில் கட்டினால் அந்த அளவிற்கு ஏற்ப அசலும் வட்டியும் குறைந்து தவணைகளின் எண்ணிக்கையும் குறையும். ஆனாலும் சில வங்கிகள், பெருந்தொகை முன்னதாகச் செலுத்தப்பட்டால் (நிதி நிர்வாகத்தின் எதிர் விளைவைக் கருத்தில் கொண்டு) ஓரிரு சதவிகிதம் அபராத வட்டியாக வசூல் செய்கின்றன.

கடன் வாங்குவதற்கு வங்கிக்குக் கொடுக்க வேண்டிய பத்திரங்கள் எவை?

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
 • பாஸ்போர்ட் அளவு போட்டோ 2
 • தற்போது கணக்கு வைத்துள்ள வங்கியிலிருந்து பெற்ற 6 மாதத்திற்கான அக்கௌண்ட் ஸ்டேட்மென்ட்
 • சம்பளதாரர் என்றால் இறுதியாக வாங்கிய சம்பளப்பட்டியல்,
 • சம்பளதாரர் அல்லாதோர் என்றால் அவர்கள் வருமானத்திற்கு அத்தாட்சியாக வருமான வரி செலுத்திய 3 வருடங்களுக்கான அறிக்கை நகல்கள்
 • விண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் முகவரி அத்தாட்சிக்காக பாஸ்போர்ட்
 • வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி / மின்கட்டணம் / வீட்டு வரி ரசீது போன்றவற்றின் நகல்;
 • ஓட்டுனர் உரிமம் நகல்,
 • அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட வாகனத்தின் விலை விவரங்கள், சாலை வரி போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரி விலைப்பட்டியல் (Proforma Invoice); பழைய கார் என்றால் குறிப்பிட்ட வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட என்ஜினீயரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்புச் சான்றிதழ் முதலியன கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி வாரியாக முக்கிய நிபந்தனை விவரங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

இருசக்கர வாகனத்திற்கான கடன்கள்

 

வங்கிஅதிகபட்சக் கடன் ரூ.வட்டி விகிதம் %பங்குத் தொகை %தவணை (மாதங்களில்)
ஸ்டேட் பேங்க் வருமானத்தைப் பொறுத்தது 18.25 15 36
இந்தியன் வங்கி 75000 12.95 15 60
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி வருமானத்தைப் பொறுத்தது 10.75 10 72
கனரா வங்கி வருமானத்தைப் பொறுத்தது 13.20 30 48
கரூர் வைசியா வங்கி 75000 16.00 25 36
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 50000 16.25 25 35
லஷ்மி விலாஸ் வங்கி வருமானத்தைப் பொறுத்தது 13.25 25 60

புதிய கார்கள் வாங்குவதற்கான கடன்கள்

வங்கிஅதிகபட்சக் கடன் ரூ.வட்டி விகிதம் % பங்குத் தொகை %அதிக பட்ச தவணை (மாதங்களில்)
ஸ்டேட் பேங்க் வருமானத்தைப் பொறுத்தது 10.95 15 84
இந்தியன் வங்கி 15,00,000 10.70 15 84
இந்தியந் ஓவர்ஸீஸ் வங்கி வருமானத்தைப் பொறுத்தது 10.75 10 84
கனரா வங்கி வருமானத்தைப் பொறுத்தது 10.70 10 72
ஐடிபிஐ வங்கி வருமானத்தைப் பொறுத்தது 10.25 (நிலையான வட்டி) 10 84
கரூர் வைசியா வங்கி 75,00,000 12.00 15 84
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1,50,00,000

12.25 – 36 மாதம் வரை

12.75 – 36க்கு மேல்

15 60
லஷ்மி விலாஸ் வங்கி 25,00,000 13.25 20 60
ஆக்ஸிஸ் வங்கி வருமானத்தைப் பொறுத்தது 11.50 10 84

* நிறுவனங்கள் சார்ந்த சில திட்டங்களுக்கும், சில குறிப்பிட்ட வாகனங்களுக்கும் பங்குத் தொகை சில வங்கிகளில் குறைக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கிகளைத் தவிர்த்த மற்றைய மேலே குறிப்பிட்ட வங்கிகளின் வட்டி விகிதம் அந்த அந்த வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதத்தைச் (Base Rate) சார்ந்தவை. ஆகவே மாறுதலுக்கு உட்பட்டவை.

மற்றைய விவரங்கள்

வாகனத்தின் ஒரு சாவி வங்கியில் ஒப்படைக்கப்படவேண்டும். இலவச விபத்துக் காப்பீடு சில வங்கிகள் தரலாம். கடன் பெற்று வாங்கிய வாகனத்தின் ஆர்சி புக் (RC Book) மற்றும் இன்ஷுரன்ஸ் பாலிசியில் வங்கியின் பற்று உரிமை (Lien) பதிவு செய்யப்படும். கடன் நிலுவையில் இருக்கும்போது வாகனத்தை மற்றொருவருக்கு விற்க இயலாது. கடன் கட்டியபின்னர் வங்கியின் ஒப்புதல் பெற்றுப் பதிவை நீக்கவேண்டும்.

படம் : இந்திய ரிசர்வ் வங்கி

ஆதாரம் : லஷ்மி விலாஸ் வங்கி

3.08823529412
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top