பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / இந்தியச் சூழலில் ஸ்மார்ட் நகரங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியச் சூழலில் ஸ்மார்ட் நகரங்கள்

இந்தியச் சூழலில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம் மற்றும் நிலை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கிராமப்புற இந்தியாவைவிட நகர்ப்புற இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உண்மையை உணர்ந்து இப்போது இந்தியா விழித்துக் கொண்டுள்ளது. ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டம் (JNNURM) தொடங்கப்படும்வரை நகரப் பிரிவுக்கான நிதி ஒதுக்கீடு என்பதை ஊரகப் பகுதிக்கான நிதி ஒதுக்கீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை எனக் கூறி விடலாம். இந்தியாவின் ஜே.என்.என்.யு.ஆர்.எம் மிகப்பெரிய மடை மாற்றத்தைக் கொண்டு வந்தது.

சிந்தனைப் போக்கில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் நகரப் பகுதிகள் முக்கியமான மற்றும் மையமான பங்கைச் செய்கின்றன என்பது அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நகரங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தி வருகின்றன. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. நகரங்களில் சிறப்பான தரம், திறம்மிக்க உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் இல்லாமல் போனால் இந்தியாவின் பொருளாதாரம் ஜி.டி.பி.யில் 8 சதவிகிதம் என்ற விகித வளர்ச்சியை எட்ட முடியாமல் போய்விடும்.

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் அதிகாரப்பூர்வமான 4041 நகரங்களும் 3894 சென்சஸ் நகரங்களும் (இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் வரையறைப்படி நகரப்பகுதி என்று அறிவிக்கப்படும் பிராந்தியங்கள்) இந்திய நகரப்பகுதிகளின் மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேர் நகர நெருக்கடிப் பகுதிகளிலும் 100,000 மக்கள் தொகை மற்றும் அதற்கு அதிகமான மக்களைக் கொண்ட நகரங்களிலும் வசிக்கிறார்கள். இத்தகைய நகரங்கள் மிக விரைவாக வளர்ந்து வருகின்றன. அதேநேரம் பெருநகரங்கள் (5 மில்லியன் மக்கள் தொகை மற்றும் அதற்குமேல் மக்கள் வசிக்கும் நகரம்) மக்கள் தொகை நெருக்கடியால் தவிக்கின்றன. நகரங்கள், அதிலும் குறிப்பாக மிக விரைவாக வளரும் நகரங்கள், ஸ்மார்ட் தீர்வுகளால் சிறப்பாகத் திட்டமிடப்பட வேண்டும். தற்போது, இந்தியாவின் நகரப் பகுதிகள் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர் கொள்கின்றன. வறுமை, குடிசைப் பகுதிகள், குடியிருப்புகளின் போதாமை, போக்குவரத்து பிரச்சனை, ஜனநெருக்கடி, அனைத்து வகையான மாசுறுதல் முதலானவை இந்தப் பிரச்சனைகளில் அடங்கும். இதனோடு விசேஷமாக பருவநிலை மாற்றப் பிரச்சனைகளையும் மற்றும் நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் இயற்கை பேராபத்துகள் மற்றும் மனிதர் உருவாக்கும் பேராபத்துக்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்கு ஸ்மார்ட் தீர்வுகளும் சிறப்பான அரசாள்கையும் தேவை.

இந்தியாவில் பெரும்பான்மை நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்கள் இல்லை. எனவே திட்டமிடாத நகரமயமாதல்தான் ஏற்படுகின்றது. அதனால் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடைப்பட்ட பிராந்தியங்கள் (Peri-Urban) அரசாள்கைக்கு உட்படாதவை ஆகும். ஏனெனில் இவை நகரங்களாகவும் இல்லை; கிராமங்களாகவும் இல்லை. நகரங்கள் விரிவடையும் போது, திட்டமிடப்படாத பிராந்தியங்களுக்கான இடை பிராந்தியங்கள் பிறகு நகரங்களின் எல்லை ஆளுகைக்குள் கொண்டு வரப்படுகின்றன. நகரங்கள் விரிவடையும் என எதிர்பார்த்து திட்டமிட வேண்டிய தேவை உள்ளது.

விரிவாக்கம் செய்வதும் மீண்டும் அபிவிருத்தி செய்வதும் கடினமான செயல்களாகும். தற்போதைய அரசின் முன்னோடித் திட்டங்களில் 100 ஸ்மார்ட் நகரங்கள், புதுப்பித்தல் மற்றும் நகர மாற்றத்துக்கான அடல் மிஷனின் கீழ் (அம்ருத்) 500 நகரங்கள், தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரைவுபடுத்துதல் திட்டம் (HRIDAY), தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் அனைவருக்கும் வீட்டு வசதி ஆகிய திட்டங்கள் நகரங்களை வசிப்பதற்கேற்ற இடங்களாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கியதாக, துடிப்பு மிக்கதாக, தொழில்நுட்ப ரீதியில் அபிவிருத்தி பெற்றதாக, பொருளாதார ரீதியில் சிக்கனமானதாக நகரங்களை மாற்ற இத்திட்டங்கள் முன் வந்துள்ளன.

 • முதன்மை உள்கட்டமைப்பு வசதிகள்
 • போதுமான குடிநீர் விநியோகம்
 • உறுதி அளிக்கப்பட்ட மின் விநியோகம்
 • திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட துப்புரவு வசதி
 • திறன்மிகுந்த நகரப் போக்குவரத்து மற்றும் பொதுத்துறை வாகன வசதிகள்
 • வாங்கக் கூடிய விலையில் குடியிருப்புகள், அதிலும் குறிப்பாக ஏழைகள் வாங்கக் கூடிய விலையில் குடியிருப்புகள்
 • சிறப்பான அரசாள்கை, குறிப்பாக இ-அரசாள்கை மற்றும் குடிமக்கள் பங்கேற்பு

நீடித்த நிலையான சுற்றுச்சூழல்

குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை ஸ்மார்ட் நகரங்களில் உள்ளன.

பிராந்திய அடிப்படையிலான அபிவிருத்திக்கான கூறுகள்

 • நகர அபிவிருத்தி (நகரை உருவாக்கிய பிறகு விரிவாக்கம் செய்தல்)
 • நகரப் புதுப்பிப்பு (மறுமேம்பாடு),
 • நகர விரிவாக்கம் (பசுமைக்களங்கள் மேம்பாடு) மற்றும் பான்சிட்டி நடவடிக்கை.

நகரத்தின் பெரிய பகுதிகளை உள்ளடக்கி பயன்படுத்திப் பார்க்கக் கூடிய ஸ்மார்ட் தீர்வுகள் இந்த ஸ்மார்ட்சிட்டி நடவடிக்கையில் அடங்கும்.

(நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைத்தளம் ஸ்மார்ட் நகர உத்தி). ஸ்மார்ட் நகரங்கள் என்றவுடன் நமது மனக்கண்ணில் சிறப்பாகச் செயல்படுகின்ற மற்றும் அனைத்தும் சரியாக இருக்கின்ற நகரங்கள் என்பதே தோன்றும்.

அடிப்படைச் சேவைகள்

 • சேவைகள் திறம்பட வழங்கப்படுதல்;
 • நகரங்கள் தூய்மையாக இருப்பது;
 • மிகச் சிறப்பாகச் செயல்படும் போக்குவரத்து அமைப்பு;
 • சவாரிக்கு ஏற்ற தனிப்பாதைகள்;
 • நடந்து மற்றும் சைக்கிளில் செயல்பவர்களுக்கான பாதைகள்;
 • புல்வெளிகள்;
 • நீர் ஆதாரங்கள்;
 • பசுமைக் கட்டிடங்கள்,
 • சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல்,

இ-அரசாள்கை, தினசரி வாழ்வில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, சிறப்பான தகவல் மற்றும் தொடர்பியல் அமைப்பு என்று மேலும் மேலும் பல அம்சங்கள் நமக்குத் தோன்றுகின்றன.

எதிர்காலம் குறித்த பார்வையையும் எதிர்கால விரிவாக்கத்துக்கான முன்னேற்பாடுகள் ஆகியவற்றையும் ஸ்மார்ட் நகரங்கள் கொண்டிருக்க வேண்டும்.

ஸ்மார்ட் நகரங்களின் அம்சங்கள்

 1. தொழில்நுட்பம்
 2. நிதி ஆதாரம்
 3. தகவல்/தரவுகளை அணுகிப் பெறுதல்
 4. ஆற்றல்/எரிபொருள்
 5. சுற்றுச்சூழல்
 6. பருவநிலை மாறுதல்களை எதிர்நின்று சமாளித்தல்
 7. இயற்கைப் மேலாண்மை
 8. சீர்திருத்தங்கள்
 9. அரசாள்கை மற்றும் பேரழிவு கால குடிமக்கள் போன்றவையாகும்.

தொழிற்நுட்ப அம்சங்கள்

தொழில்நுட்பம் நகரங்களை நன்கு பராமரிப்பதற்கான புத்தாக்கமான மற்றும் திறனுடைய தீர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் தர முடியும்.

 • இடம் பெயர்தல்
 • குடிநீர் விநியோகம்,
 • கழிவு நீர் அகற்றுதல்,
 • திடக்கழிவு மேலாண்மை

உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குதல் போன்ற எந்த ஒரு பிரச்சனையானாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக தீர்வு காண முடியும். ஸ்மார்ட் நகரங்களின் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும். இதனால் காற்று மாசுறுவது தடுக்கப்படும். காற்று மாசுறாமல் இருப்பதால் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடனும் இருக்க முடியும். சென்சார்களைப் பயன்படுத்துவது, நிகழும் நேரத்திலேயே தகவலைத் தருவது ஆகியன சேவைகளை நிர்வகிக்கும் முறைகளிலும் அச்சேவைகளை மக்கள் பயன்படுத்தும் முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக டிஜிட்டல் மீட்டர்களை வீட்டிற்குள்ளேயே பொருத்தலாம். இதனால் குடிமக்கள் தாங்கள் பயன்படுத்தும் அளவையும் கட்டணத்தையும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளைப் புத்திசாலித்தனத்துடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம் சமுதாயப் பிரிவினர்களுக்கு உதவி செய்ய முடிவதோடு அனைவரையும் உள்ளடக்குவதாகவும் இருக்கும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை மற்றும் கல்லாதோர் ஆகிய பிரிவினர்களுக்கும் தீர்வுகளும் சேவைகளும் கிடைக்கும்படி இருக்கும்.

நிதி ஆதாரம்

பிரிவினர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கக் கூடிய பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். என்றாலும் இவற்றுக்கு நிதி தேவை. பல நகரங்களில் உள்ள நகராட்சி பல்வேறுபட்ட அமைப்புகள் நிதி நெருக்கடியில் உள்ளன. அடிப்படைச் சேவைகளைப் பராமரிப்பதிலும் தொடர்ச்சியாக ஊதியம் வழங்குவதிலும்கூட இவை நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. எனவே, ஸ்மார்ட் நகர நடவடிக்கைகளுக்கு அரசின் உயர்மட்ட அமைப்புகளில் இருந்து நிதி வழங்கப்பட வேண்டும். மேலும் நிதி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமும் நிதி திரட்டப்பட வேண்டும். மூலதன முதலீட்டை அரசும் தனியார் துறையும் செய்ய வேண்டும். நீண்டகால பராமரிப்புக்கான செலவை பயனாளிகளே பயனிட்டாளர் கட்டணம் மூலம் சமாளித்துக் கொள்ள வேண்டும்.

தகவல் / தரவை அணுகிப் பெறுதல்

உள்கட்டமைப்பு வசதி மற்றும் சேவைகள் குறித்த தகவல்/தரவை பொதுமக்கள் அணுகிப் பெற ஸ்மார்ட் நகரங்கள் உதவ வேண்டும். அதிலும் குறிப்பாக குடிமக்கள் தொடர்புடைய ஒவ்வொரு நகரத்திலும் வழங்கப்படும் சேவைகள் குறித்த தரப்படுத்தப்பட்ட தகவல்கள் உருவாக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட வேண்டும்.

வழக்கமான சூழ்நிலையில் பெறுவதற்குச் சிரமமாக உள்ள பெருந்திருள் மக்கள் தகவலை தொழில்நுட்பம் மூலம் திரட்டிவிட முடியும். நிகழும் நேரத்திலேயே தகவல்கள் கிடைக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். தகவலை அணுகிப் பெற முடியும் என்ற நிலையானது சேவை வழங்குபவர்களையும் பயன்படுத்துபவர்களையும் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றும். இது குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

ஆற்றல்/எரிபொருள்

தூய்மையான ஆற்றல் மூலங்கள் (புதுப்பிக்கப்படத்தக்கவை), ஸ்மார்ட் மின்சார விநியோக அமைப்பு, ஆற்றலை சரியான அளவில் பயன்படுத்தக்கூடிய பசுமை கட்டிடங்கள், எரிபொருளுக்கான இயற்கை ஆதாரங்கள் ஆகியன ஸ்மார்ட் நகரங்களுக்குத் தேவையான நிபந்தனைகள் ஆகும். இவை பருவகாலச் சீரழிவுகளைத் தணிவிக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும். சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா ஒத்துக் கொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுவதைக் குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும்.

சுற்றுச்சூழல்

பல்லுயிர்த் தன்மையை கார்பனை கிரகித்துக் கொள்ளும் பசுமை பிராந்தியங்கள் (பூங்காக்கள், காடுகள்), மற்றவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்ற குடிமக்களுக்கான திறந்த வெளியிடங்கள், சுத்தமான காற்று போன்றவை ஸ்மார்ட் நகரங்களின் அடையாளங்களாக இருக்க வேண்டும். மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நீர் ஆதாரங்களை உருவாக்குவதும் அவற்றைப் பராமரிப்பதும் முக்கியமானதாகும்.

பருவநிலை மாறுதல்களை எதிர் நின்று சமாளித்தல்

பருவநிலை மாறுதல்களை எதிர்நின்று சமாளிக்கும் வகையில் ஸ்மார்ட் நகரங்கள் இருக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடும் தொடக்க நிலையிலேயே பருவநிலை மாறுதல்களின் தாக்கத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் அம்சங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே ஆகும். உதாரணமாக நீர் ஆதாரம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

 • ஸ்மார்ட் நகரத்திற்கான திட்டத்தை ஏற்படுத்தும் போதே மழைநீர் சேகரிப்பு,
 • கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துதல்,
 • தண்ணிர் விநியோகத்திற்கு பலவிதமான ஆதாரங்களை அடையாளம் காணுதல்,
 • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்,

சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறைகளை மேம்பாடு செய்தல் ஆகிய அம்சங்களும் திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது பருவநிலை மாறுதலின் விளைவாக ஏற்படக் கூடிய நீர்ப் பற்றாக்குறைகளை சமாளிக்க ஸ்மார்ட் நகரத்தினால் முடியும். அதேபோன்று மின் உற்பத்தியை தயாரிக்கும் முறையை மாற்றுவதன் மூலம் மின்சாரத்திற்காக ஒரே ஆதார நிலையைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்க முடியும். உதாரணமாக மாடியில் குரிய மின் உற்பத்தியை ஆரம்பிப்பதன் மூலம் மின்சார தேவையை பெருமளவு நிறைவு செய்யலாம்.

இயற்கைப் பேரழிவு கால மேலாண்மை

பலவிதமான இயற்கைப் பேரிடர்கள் நகரத்தை வழக்கமாக அவ்வப்போது தாக்கிக் கொண்டே இருக்கின்றன. பருவநிலை மாறுதல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற நிலையில் இந்த இயற்கைப் பேரிடர்களும் அதிகரிக்கக் கூடும். அனைத்து நேரங்களிலும் பேரிடர்களை எதிர்கொண்டு சமாளித்து மேலாண்மை செய்யும் நிலையில் ஸ்மார்ட் நகரங்கள் இருக்க வேண்டும். வெள்ளம், நிலநடுக்கம், தீவிபத்து மற்றும் நிலச்சரிவு என எந்த வகையிலும் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படலாம். இத்தகைய பேரிடர் நிகழும் தருணங்களில்தான் நகரத்தின் ஸ்மார்ட் தன்மை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்து அறியலாம். இந்த அம்சம்தான் ஸ்மார்ட் நகரங்களுக்காக திட்டமிடும்போதே சேர்க்கப்பட வேண்டும்.

சீர்திருத்தங்கள்

ஜே.என்.என்.யூ, ஆர்.எம் திட்டத்தின் கீழ் மட்டுமே இந்தியா சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை இப்போதே செய்யலாம். ஜே.என்.என். யூ.ஆர்.எம் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறார்கள். மாற்றங்களை நீடித்து வைத்திருக்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளைப் பராமரிக்கவும் ஒரே வழி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதுதான்.

அரசாள்கை

நகரங்களை நன்கு நிர்வகிப்பதற்கு அரசாள்கை மிக முக்கியமான அங்கமாகும். வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையில் உள்ள முதன்மை வித்தியாசம் வெறும் தொழில்நுட்பம் மட்டும் இல்லை. அது அரசாள்கைதான். நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் விதிகளும் நெறிமுறைகளும் மற்றும் அவற்றின் செயலாக்கமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு செயற்களத்திலும் இந்தியாவில் மிகச்சிறந்த சட்டங்கள், விதிகள், நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது மோசமான நிலையில் உள்ளது.

ஸ்மார்ட் நகரங்களுக்கு வலிமையான அரசாள்கை வேண்டும். அதிலும் தொழில்நுட்ப உதவியோடு கூடிய ஆளுகை வேண்டும். உள்ளூர் அளவில் உள்ள நமது அரசாளும் அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும். அவை தனித்தனியாக செயல்படக் கூடாது. ஆனால் பெரும்பாலும் அவை இன்று தனித்தனியாகத்தான் செயல்படுகின்றன. அரசாள்கையை மேம்படுத்துவதற்காக ஏஜென்சிகள் மற்றும் துறைகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும். அமைப்புகள் ஒழுங்காகச் செயல்பட அரசாள்கையில் அரசியல்வாதிகளின் உறுதி முக்கியம் ஆகும். இந்தியா போன்ற குடியரசு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அரசாள்கையை நிர்ணயம் செய்கிறார்கள்.

ஸ்மார்ட் நகரங்கள் வெளிப்படையான பொறுப்புடைமை மிக்க அரசாள்கையைப் பெற்றிருக்க வேண்டும். நகரங்களைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய மேலிருந்து கீழாகவும் மற்றும் கிடைக்கோட்டு நிலையிலும் ஒருங்கிணைப்பு அவசியமாகும். இந்திய நகரங்களில் எந்த ஒரு மாற்றத் தைக் கொண்டு வருவதாக இருந்தாலும் அதில் உள்ள மிகப் பெரிய சிக்கல்கள் என இவற்றைக் கூறலாம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்.

Filed under:
2.86363636364
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top