பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சியில் இந்தியா
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சியில் இந்தியா

ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சியில் இந்தியாவின் நிலை குறித்த இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வளர்ச்சியை முன்னெடுக்கும் நிகழ்வுகளாக மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஸ்மார்ட் நகரங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு பல்வேறு வினாக்களை எழுப்பினாலும் பலதரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டியின் நோக்கங்கள்

ஒரு நாட்டின் தேசிய அளவிலான வளர்ச்சிக்கும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நகரங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அத்தகைய நகரங்கள் போதுமான அடிப்படை வசதிகளுடன் உள்ளதா? மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றதா? என்பதை எண்ணிப்பார்ப்பது அவசியமாகின்றது.

பண்டைய நகரங்களின் திட்டமிட்ட உருவாக்கம், முறையான பராமரிப்புடன் கூடிய பரந்து விரிந்த சாலைகள், வீடுகளில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு அவை பொதுக் குழாயுடன் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருந்தமை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் போன்றவைகளாலும், மக்கள் சுகாதாரமிக்கவர்களாக வாழ்ந்த காரணத்தாலும், நகர்ப்புறங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சிறப்புற நடத்தியதாலும் அன்றைய நாகரிகம் "நகர நாகரிகம்" என்றழைக்கப்பட்டது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நகரங்களின் பங்கு தலைசிறந்து விளங்கியதாக வரலாறு பறைசாற்றுகின்றது. அக்காலத்தில் மொகஞ் சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் மான்செஸ்டர், லங்காஷயர் போன்ற வளமிக்க நகரங்களின் அமைப்பை ஒத்திருந்ததாக சர்.சான்மார்ஷல் எனும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகின்றார். தற்காலத்தில், நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப பல்வேறு மாற்றங்களுடன் அனைத்துத் துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்தபடி மக்கள் சமுதாயம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சிகள்

நாளும் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், உயர்கல்வி மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒப்பற்ற சாதனைகளைப் புரிந்து மனித வளத்தின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதில் நகரங்கள் தங்களுக்குரிய பங்கினை அளிக்கத் தவறுவதில்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த நகரங்கள் இன்று மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை, நடைபாதை வசதி, தெருவிளக்கு, கழிப்பிடம் போன்றவைகளின்றித் தடுமாறிக் கொண்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சியினை எட்டுவதற்கும் அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதியை மேம்படுத்துவதும் முறையாகப் பராமரிப்பதும் மிக அவசியமானதாகும் என்று உலக வங்கி மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

நகரமயமாதலும், மக்களின் இடம்பெயர்வும் அதிகமாகிவரும் சூழலில் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளின் களமாக மாறிவரும் நகரங்கள் பலருக்கும் நரகமாகவே காட்சியளிப்பது வேதனையளிப்பதாக உள்ளது. இப்பிரச்சனைகளைக் களைந்து நவீன மாற்றங்களின் இருப்பிடமாக, தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்குத் தீர்வுகாண உதவிடும் வகையிலான நிம்மதியான நகரம் குறித்த கனவு மக்களிடையே எழாமல் இல்லை. அத்தகைய எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடாக "ஸ்மார்ட் சிட்டி" திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டியின் பயன்கள்

மக்கள் தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்து நகரமயமாதல் தொடங்கிய நாள் முதல் நகரங்களில் மக்கள் நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியது. அப்போதிலிருந்தே புறநகர் விரிவாக்கத் திட்டங்கள் நடைமுறைக்கு வரத்தொடங்கின. சாலைக் கட்டுப்பாடுகள் முதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வரை அனைத்தும் நவீனமயமாகத் தொடங்கின. அத்துடன் கணினி, இணையம் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஸ்மார்ட் சிட்டியின் தேவை எழுந்தது எனலாம். 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவீதம் நகரங்களில் தான் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2025ல் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தற்போதைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப அடிப்படை வசதிகள் நகரங்களில் போதுமான அளவில் கடந்த காலங்களில் மேம்படுத்தப்படவில்லை என்பதும் இருக்கும் வசதிகளும் முறையாகத் திட்டமிடாத காரணத்தால் திட்டங்களைச் சரியான வழியில் செயல்படுத்திப் பராமரிக்கத் தவறியதாலும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக 1951இல் நகரங்களில் தனிநபர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு நாளொன்றுக்குச் சராசரியாக 141லிட்டராக இருந்தது. அதுவே 2001இல் 51.20 லிட்டராகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தண்ணீரின் பற்றாக்குறையும் அதிகரிப்பதால் 2025இல் இந்த அளவு 36.73 லிட்டராகக் குறையும் என்று ஓர் அறிக்கை எச்சரிக்கின்றது. இதேபோல் சுகாதாரம், கழிப்பிடம், கழிவுநீரகற்றுதல், மழைநீர் வடிகால்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவையும் ஏமாற்றத்தைத் தருகின்றன. இதனால் நகரங்கள் மேலைநாடுகளைப் போல ஸ்மார்ட்டாக மாற்றப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி ஒரு பார்வை

போக்குவரத்து நெருக்கடி, கூட்ட நெரிசல், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமை, பராமரிப்பற்ற சாலைகள், சுகாதாரச்சீர்கேடு போன்றவற்றால் தவிக்கும் நகரவாசிகளின் ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் விடிந்து மறையும் பொழுதுகளாகவே மறைகின்றன. இச்சூழலை மாற்றியமைக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் நகரில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கமாகும். எடுத்துக்காட்டாக, சாலை வசதிகளைப் பொறுத்தளவில் நகரின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள், மேம்படுத்தப்பட்ட தானியங்கி சிக்னல்கள், நவீன தொழில்நுட்பங்களின் மூலம் சாலைக் கட்டுப்பாடுகள், போதிய பராமரிப்புகள், புள்ளி விபரங்களை முறையாகப் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் உள்ளிட்ட பிற வசதிகளையும் திறன்மிக்க நிலையில் பயன்படுத்தும் வகையில் சிட்டிகள் அமைக்கப்படும். கற்பனைக்கு எட்டாதவாறு இருப்பினும் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியப்படும் அளவிற்கு இவை உருவாக்கப்படும் என்பதில் ஐயமில்லை. நகரில் வாழும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் அளவில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்தப்பட்ட நிலையில் விரிவுபடுத்தப்பட்டு தொழில்நுட்ப வலையமைவின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கண்காணிக்கப்பட்டு அவற்றில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும். ஒரு பொதுவான மையத்தின் வாயிலாக உடனடித் தகவல் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு மேம்பட்ட சேவைகள் விரைவாக வழங்கப்படும்.

உலகளவில் ஏற்கனவே பல நாடுகளில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளன. நியூயார்க், லண்டன், டோக்கியோ, பெர்லின் எனப் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக அடையாளம் காணப்படுகின்றன. இவற்றில் கருத்தில் கொள்ளத்தக்க வகையில் சாலைக் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள், பல்வேறு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. எனவே இந்நகரங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டவைகளாகத் திகழ்கின்றன.

அந்த வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் மக்கள்தொகைப் பெருக்கம், இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை, தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் திட்டமிட்டு உருவாக்கி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டுமானால் ஸ்மார்ட் திட்டங்கள் வகுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் பட்சத்தில் மக்களின் வாழ்க்கைத் தரமும் ஸ்மார்ட்டாக மாறும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புதிய நகரை நவீன முறையில் உருவாக்குவது இலக்காக இருந்தாலும் ஏற்கனவே உள்ள நகரை தொழில்நுட்ப ரீதியில் மறுசீரமைப்பது என்ற வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் சூழலில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கமுடியும் என்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். மேலும் வெளிப்படையான நிர்வாகம், மின் ஆளுமை, கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிதி வசதியும், நிர்வாகத் திறனும் மேம்படுவதோடு ஒட்டுமொத்த நகராளுமையின் தரம் உயர்த்தப்படுவதால் மக்கள் வாழ்க்கைத் தரம் திருப்தி அளிக்கும் வகையில் மேம்படும்.

நம் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பல் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி பெற்றிருந்தாலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளால், மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதை விட சமூக வளர்ச்சியில், வாழ்க்கைத் தர மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்க இயலவில்லை. எனவே வளர்ச்சிக்கான தொலைநோக்குச் சிந்தனையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நகரங்களை நவீனப்படுத்தும் அதே சமயம் நம் சமூக அவலங்களை நீக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை ஸ்மார்ட் ஆக்குமா? என்ற நம் ஒவ்வொருவரின் கனவும் நனவாவது அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும் அரசுகளின் கையில்தான் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். "ஸ்மார்ட் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் சூழலில் அவற்றை முறையாகப் பயனுள்ள வழிகளில் சமூகப் பொறுப்புடன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை அரசு உருவாக்குமானால் நகரங்களின் நலிவு நீங்கி 'ஸ்மார்ட் நாடு’ மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.86363636364
Saithi pandiyan Jun 20, 2018 10:48 AM

20/6/2018
நாட்டில் உள்ள 87 ஸ்மார்ட் சிட்டிகளின் தர வரிசை பட்டியல்லி
சென்னை 37 வது இடத்தையும் ,கோவை மாநகராட்சி 14வது இடத்தையும் , வேலுார் 32வது இடத்தையும், சேலம் 35வது இடத்தையும், பிடித்துள்ளன.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top