பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / குழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்

தொடக்கக் கல்வியின் ஆரம்பத்தில் குழந்தையின் பண்புகள் உடல் மற்றும் அறிதல் திறன் சார்ந்தவை

அறிமுகம்

மாணவ ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சிக்கு பள்ளிகளுக்குச் சென்றபோது உற்றுநோக்கல் படிவத்தில் குழந்தைகளின் எடை உயரம் போன்ற விவரங்களைக் கொண்டுவருவர். அந்த விவரங்களின் அடிப்படையில் பின்வரும் வழிகாட்டுதலின்படி அவர்கள் பதிவேடு தயாரிக்க வேண்டும்.

ஐந்து குழுக்களும் கொண்டுவந்த உற்றுநோக்கல் படிவங்களில் உள்ள விவரங்களிலிருந்து வயது வாரியான உயரம் எடை ஆகியவற்றை தொகுத்து ஒரு அட்டவணையில் குறிக்க வேண்டும். அதிலிருந்து 1 முதல் 5 வகுப்புகள் வரையுள்ள குழந்தைகளின் வயது வாரியான உயரம் தொடர்பான வளர்ச்சியின் போக்கு எவ்வாறு இருக்கின்றது. அதில் ஆண்கள் பெண்கள் வேறுபாடு காணப்படுகின்றதா? என்னும் வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து தேவையான விளக்கங்கள் எழுதவேண்டும். வயது வாரியான ஆண்கள் பெண்களுக்கான சராசரி உயரங்களை ஒரு வரைபடத் தாளில் குறிக்கவும். வயது வாரியான ஆண்கள் பெண்களுக்கான சராசரி எடைகளை மற்றொரு வரைபடத் தாளில் குறிக்கவும். அதில் கிடைத்த முடிவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடல் செய்து அதன் அடிப்படையில் இப்பாடப் பகுதியை தொடங்கவும்.

கற்கும் குழந்தையை ஆசிரியர் நன்கு புரிந்து கொண்டால் வகுப்பறையில் கற்றல் செயலும் கற்பித்தல் செயலும் செம்மையாக நடைபெறும் என்பது திண்ணம். ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்குபுரிந்து கொள்ளவேண்டுமென்றால் அவர்களின் உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக மனப்பான்மை ஆகியவற்றின் வளர்ச்சியைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் அவர்கள் வளர்ச்சி நிலையில் எந்த இடத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஏற்றபடி ஆசிரியர் கற்றல் கற்பித்தல் செயல்களைத் திட்டமிட முடியும். முதலில் தொடக்கப் பள்ளியில் கல்வியை தொடங்க வரும் குழந்தைகளின் உடல் மற்றும் அறிதல் திறன் வளர்ச்சியைப் பற்றி இங்கு காண்போம்.

உடல் வளர்ச்சி

உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தைக் குறிக்கின்றது. மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பின்வரும் 8 பருவங்களாக பிரிக்கலாம்.

 1. சிசுப் பருவம் (0-1ஆண்டுகள்)
 2. குறுநடைப் பருவம் (1-3 ஆண்டுகள்)
 3. பள்ளி முன் பருவம் (3-6 ஆண்டுகள்)
 4. பள்ளிப் பருவம் (6-10 ஆண்டுகள்)
 5. குமரப் பருவம் (10-20 ஆண்டுகள்)
 6. வாலிபப் பருவம் (20-40 ஆண்டுகள்)
 7. வாலிபப் பருவத்திற்கும் முதுமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம் (40-60 ஆண்டுகள்)
 8. முதுமைப் பருவம் (60 ஆண்டுகளுக்கு மேல்)

இப்பருவங்களில் 3-6 ஆண்டுகளில் குழந்தைகள் முன் மழலையர் பள்ளியிலும் 6-10 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளியிலும் கல்வி கற்கின்றனர். நடுவண் அரசும் மாநில அரசும் 14 ஆண்டுகள் வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வியின் ஆரம்பத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி

பிறந்த குழந்தை சராசரியாக 50 செ.மீ உயரமும் 3 கிகி எடையும் இருக்கிறது. நாளடைவில் குழந்தை உயரத்திலும் எடையிலும் வளர்ச்சியடைகின்றது. குழந்தையின் உடல் வளர்ச்சி ஒரு திட்டமிட்ட போக்கை கொண்டுள்ளது. உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வருகின்றது. பின்னர் உடலின் மைய அச்சிலிருந்து இரு ஓரங்களையும் நோக்கி வருகின்றது. உடல் வளர்ச்சியில் எலும்புகளின் வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் முக்கிய காரணிகளாகும். குழந்தைகளின் எலும்புகள் உறுதியற்றதாக காணப்படுகின்றது. எனவே குழந்தைகளின் எலும்பு மண்டலம் நெகிழ்வு தன்மை உடையதாக இருக்கின்றது. தசை வளர்ச்சியைப் பொறுத்தவரை குழந்தைகள் பிறக்கும்போதே எல்லா தசை நாண்களும் இருக்கின்றன. வளர்ச்சியின்போது தசை நாண்கள் நீளத்திலும், பருமனிலும் அதிகரிக்கின்றன.

உடலின் எல்லா பாகங்களும் ஒரே வீதத்தில் வளர்ச்சி அடைவதில்லை. வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு வீதத்தில் வளர்ச்சி அடைகின்றன. நரம்புமண்டலம், உடல் உறுப்புகள், இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் காட்டும்

குழந்தையின் நரம்பு மண்டலம் மிக வேகமாகவும் உடல் உறுப்புகள் மெதுவாகவும் வளர்ச்சி அடைகின்றன என்று தெரிகின்றது. தொடக்கக் கல்வி பயில பள்ளிக்கு வரும்போது குழந்தையின் நரம்புமண்டலம் 90 சதம் வளர்ச்சி அடைந்து விடுகின்றது. உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பொருத்தவரை குழந்தை பள்ளிக்கு வரும்வரை உடல் உறுப்புகள் வேகமாக வளர்ச்சி அடைந்து 40% வளர்ச்சி நிறைவு பெற்றிருக்கின்றது. அதன்பின் பள்ளிப்பருவம் முதல் குமரப்பருவம் தொடங்கும் வரை குழந்தையின் உடல் வளர்ச்சி தேக்க நிலையை அடைகின்றது. அதனைத்தொடர்ந்து குமரப்பருவத்தில் உடல் வளர்ச்சியில் அதிக வேகம் காணப்படுகிறது.

உடல் வளர்ச்சியின்போது குழந்தைகளின் இயக்கங்களும் வளர்ச்சி (Motor Development) அடைகின்றன. பள்ளி முன் பருவத்தில் அதாவது குழந்தை தொடக்கக் கல்வி கற்க பள்ளிக்கு வரும்முன் அடிப்படையான உணவு உண்ணுதல், பேசுதல், பல்துலக்குதல், ஆடை அணிதல், பென்சிலை பிடித்து எழுதுதல், பந்து விளையாடுதல் போன்ற உடலியக்கங்களை அடைந்து விடுகின்றனர். பள்ளிப் பருவத்தில் இவ்வியக்கங்கள் கூர்மையாக்கப்படுகின்றன.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா? என்னும் பழமொழிக்கு ஏற்ப பெற்றோர்களின் உடற்பண்புகள் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்கள் வளரும் சமூக, பொருளாதாரப்பின்னணியைப் பொறுத்து வேறுபடுகின்றது. பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தில் வளரும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தினைப் பெறுவதால் அவர்களின் உடல் வளர்ச்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சியைவிட சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே வளர்ந்து முதிர்ச்சி அடையும் தகுதிகளை எல்லா குழந்தைகளும் பெற்றிருந்தாலும், வளர்ச்சியானது குழந்தைகள் பெற்றுள்ள மரபுப் பண்பு மற்றும் சூழ்நிலையின் தாக்கம் இவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

உடல் வளர்ச்சியை பாதிக்கும் அடிப்படை காரணிகள்

அடிப்படையில் தனிமனித உடலின் கட்டமைப்பும், சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவனது வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளாகும். உடலின் கட்டமைப்பு என்பதில் மனித உடலின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தும் மிக முக்கியமான இருபெரும் அமைப்புகளான நாளமில்லாச் சுரப்பிகள் மண்டலமும் நரம்பு மண்டலமும் அடங்கும். இவை இரண்டும் இணைந்து செயல்பட்டு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன. இதனால் உடலின் உள்ளமைப்புகள் சமநிலையில் இருப்பதோடு உடலில் செல்களும் தொடர்ந்து நல்ல நிலையில் செயல்பட முடிகிறது. இது உடல் வளர்ச்சிக்கும், இயக்கங்களுக்கும் காரணமாகின்றது.

உடல்வளர்ச்சியில் நாளமில்லாச் சுரப்பிகளின் பங்கு

நாளமில்லா சுரப்பிகள் மனித உடலில் பல்வேறு இடங்களில் அமைந்து ஹார்மோன்கள் என்னும் வேதிப்பொருளைச் சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்புமண்டலத்துடன் துணை நிற்கின்றது. எடுத்துக்காட்டாக பிட்யூட்ரியின் முன்பகுதியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் எலும்பு மற்றும் தசை திசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது. இப்பகுதியில் சுரக்கும் பிற ஹார்மோன்கள் மற்ற நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துகின்றன.

பரிவு நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டால் அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி (Medu11a) அட்ரினலின் என்னும் ஹார்மோனை சுரந்து உடலானது அவசர காலங்களை சமாளிக்க உதவுகின்றது. அட்ரினலின் இதயத்தின் செயல்பாட்டையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதுடன் இரத்தக்குழாய்களும், தசைகளும் சுருங்கி விரிவதற்கு உதவுகின்றது. அட்ரினலின் கார்போஹைட்ரேட், புரோட்டின் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

தைராய்டு சுரப்பியில் சுரக்கும் தைராக்ஸின் ஆக்ஸிஜன் உட்கிரகித்தலை அதிகப்படுத்துவதுடன் வளர்சிதைமாற்றச் செயலைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் எலும்புகள் மற்றும் நரம்புமண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டுகின்றது. பாரா தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகின்றது.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மற்றத்திற்கும் குளுக்கோஸ் உட்கிரகிக்கும் அளவைக்கட்டுப்படுத்தி புரோட்டீன் உருவாவதற்கும் கொழுப்பு சேகரிக்கவும் பயன்படுகின்றது.

உடல் வளர்ச்சியில் காணப்படும் குறைபாடுகள்

நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன் தேவையான அளவுக்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரக்கும்போது, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக குழந்தைப் பருவத்தில் பிட்யூட்ரியில் முன்பகுதியில் சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்குமானால் அசாதாரண உடல் பருமன் (Gigantism) உண்டாகும். அசாதாரண உடல் பருமன் உள்ள குழந்தைகள் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் உயரம், பருமன், எடை ஆகியவற்றில் அதிகமான வளர்ச்சியைப் பெற்றிருப்பர். வளர்ச்சி ஹார்மோன் தேவையான அளவுக்குக் குறைவாக சுரக்குமானால் குள்ளத்தன்மை (Dwarfism) ஏற்படுகின்றது. குள்ளத்தன்மை குறைபாடுடைய குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி எவ்வளவு வயது ஆனாலும் உடல் வளர்ச்சி அடையாமல் இருப்பர். குழந்தைகளிடத்தில் தைராக்ஸின் குறைவாக சுரக்குமானால் கிரிடினிசம் (Cretinism) ஏற்படும். இக்குறைபாடுடைய குழந்தைகளின் மைய நரம்புமண்டலத்தின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டு குழந்தைகள் உடல் மற்றும் உள்ள செயல்பாடுகளில் மந்தமாக காணப்படுவர்.

தைராக்ஸின் அதிகமாக சுரக்குமானால் முன் கழுத்து கழலை (Goitre) என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஏற்பட்ட குழந்தையின் தைராய்டு சுரப்பி பருத்து முன்கழுத்து பகுதி வீக்கம் அடைந்து காணப்படும். கண் பிதுக்கம், உடல் நடுக்கம், வியர்த்தல், நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு அதிகமாதல், நரம்புகளில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். இவ்வாறு நாளமில்லாச் சுரப்பிகள் குழந்தையின் வளர்ச்சியைக் கட்டுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நரம்பு செல்லின் வளர்ச்சி

நரம்பு மண்டலம், மூளை, தண்டுவடம் ஆகியவற்றைக் கொண்ட மையநரம்பு மண்டலம், இவற்றிற்கு வெளியில் உள்ள நரம்பு திசுக்களைக் கொண்ட வெளி நரம்புமண்டலம் என்னும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டு இயங்குகின்றது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் மற்றொரு அடிப்படை அமைப்பு நரம்புமண்டலம் ஆகும். நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நரம்புசெல் அல்லது நியூரான் எனப்படும். நியூரான்கள் வெளியுலக தூண்டல்களை மைய நரம்புமண்டலத்துக்கு எடுத்துச் செல்லவும் மைய நரம்பு மண்டலத்திலிருந்து கட்டளைகளை உடலின் பல உறுப்புகளுக்கு கொண்டு சென்று உடலியக்கங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றன. இவ்வாறு நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் இணைப்புகளாக விளங்குகின்றன.

நியூரான்கள் 1 மிமீ க்கு குறைவான நீளம் முதல் சில அடி நீளம் வரை நீண்டு இருக்கின்றன. தண்டுவடத்தையும், குதிக்காலினையும் இணைக்கும் நியூரான்களில் ஆக்ஸான் சில அடி நீளமும் மூளையில் 1 மிமீ.க்கு குறைவாகவும் இருக்கும்.

நியுரான்களின் செயல்பாட்டினைப் பொறுத்து அவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

 1. புலணுர்ச்சி நியுரான்
 2. இயக்க நியுரான்
 3. இணைப்பு நியுரான்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் புலன்களில் அமைந்து வெளியுலத்திலிருந்து புலன் உறுப்புகளின் வாயிலாக மைய நரம்புமண்டலத்திற்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் நியூரான்கள் புலனுணர்ச்சி நியூரான்கள் எனப்படும். மையநரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்குக் கட்டளைகளை கொண்டு செல்லும் நியூரான்கள் இயக்க நியூரான்கள் எனப்படும். புலன் உணர்ச்சி நியூரான்களையும் இயக்க நியூரான்களையும் இணைப்பது இணைப்பு நியூரான்கள் எனப்படும். சிலவகை மறிவினை செயல்களைத் (Reflex adion) தவிர பிறசமயங்களில் புலனுணர்ச்சி நியுரான்கள் நேரடியாக இயக்க நியுரான்களுடன் தொடர்பு கொள்வதில்லை. மாறாக மூளை மற்றும் தண்டு வடத்தில் உள்ள இணைப்பு நியூரான்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன. மைய நரம்புமண்டலத்திலுள்ள 99.98% நியூரான்கள் இத்தகைய இணைப்பு நியூரான்களே.

இணைப்புகியூரான், தண்டுவடம், திசை (இயக்குவாய்) உணவுக் கடத்துதலின் பாதை நியூரானின் அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. தூண்டல்களைப் பெரும் நியூரானின் பாகம் டென்டிரைட் (Dendrite) எனப்படும். இவை நியூரானின் உடல் பகுதியிலிருந்து பல நீட்சிகளாக காணப்படுகின்றன. நியூரானின் உடல் பகுதிக்கு சோமா (Soma) என்று பெயர். இதனுள் உட்கருவும் சைட்டோபிளாஸமும் உள்ளன.சோமா டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒருங்கிணைத்து அதனை ஒரு தனித்த நீட்சியான இழைக்குக் கடத்துகின்றது. இந்த நீட்சியான இழைக்கு ஆக்ஸான் (Axon) என்று பெயர். இந்த ஆக்ஸான் எந்த நீளத்திற்கு நீண்டுள்ளதோ அந்த நீளத்திற்கு செய்திகளைக் கடத்துகின்றது. ஆக்ஸானின் நுனியில் குமிழ் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இதற்கு முனைய குமிழ்கள் (Teminal Button) என்று பெயர். இதன் மூலமே நியூரான் தன் அருகில் உள்ள வேறு நியூரான்களையோ, சுரப்பிகளையோ, தசைநாண்களையோ தூண்டுகின்றது.

இரு நியூரான்கள் எப்பொழுதும் இணைந்திருப்பதில்லை. உண்மையில் இரண்டு நியூரான்களுக்கு இடையில் ஒரு மிகச் சிறிய இடைவெளி காணப்படுகின்றது. நரம்பு செல்லின் வேதி மற்றும் மின் சமிக்கைகளின் மூலம் இந்த இடைவெளி கடக்கப்படுகிறது. ஆக்ஸானைச் சுற்றிலும் மையலின் ஷித் (Myelin Sheath) ஒரு போர்வை போல மூடியுள்ளது. இது புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது. இது நரம்பு துடிப்புகளின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு உதவுகின்றது. ஒரே திசையிலேயே நியூரான்கள் செய்திகளைக் கடத்துகின்றன. டென்டிரைட்களிலிருந்து சோமா மூலம் ஆக்ஸானுக்கும் முனைய குமிழுக்கும் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இத்தகைய ஒரு வழிப் பாதையில் செய்திகள் செல்வதனால் மூளை அல்லது தண்டுவடத்திற்கு உடலின் பல பாகங்களிலிருந்து செய்திகள் ஒரே சமயத்தில் உட்செல்லவும் அங்கிருந்து வெளிவரவும் முடிகின்றது.

குழந்தை வளர்ச்சி அடையும்போது நியூரான்கள் அளவில் பெருக்கமடைகின்றன. பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷித் படலம் இருப்பதில்லை. குழந்தை வளர வளர மையலின் ஷித் உருவாகின்றது. இந்நிகழ்ச்சிக்கு மையலினேஷன் (Myelination) என்று பெயர். மையலின் ஷித் வளர்ச்சியடைந்த பின்னரே புலன் உணர்ச்சி நரம்புகளும், இயக்க நரம்புகளும் செயல்பட தொடங்குகின்றன. அப்போது கட்டுப்பாடு இல்லாமல் இருந்த குழந்தையின் உடல் இயக்கம் குழந்தையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது.

குழந்தை அம்மாவின் வாய் அசைவுகளைப் பார்க்கின்றது. கண்ணிலுள்ள புலன் உணர்ச்சி நியூரான்கள் வழியாக செய்திகள் மூளைக்குச் செல்கின்றன. பின்னர் மூளை தன் விருப்பப்படி அதேபோன்ற அசைவுகளை ஏற்படுத்த வாயிலுள்ள தசைகளுக்கு இயக்க நியூரான்கள் மூலம் கட்டளை பிறப்பிக்கின்றது. அதனால் உதடுகள் அசைந்து அம்மா என்னும் ஒலியை எழுப்புகின்றன. அம்மா என்னும் சொல்லை திரும்பத் திரும்ப சொல்லவைத்து அம்மா பயிற்சி அளிக்கிறார். இப்பயிற்சியினால் நியூரான்களின் இணைப்புகள் அதிகப்படுத்தப்படுகின்றன. மேலும் புலன் உணர்ச்சி நரம்புகளும், இயக்க நரம்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கின்றன. இதன் விளைவாக அம்மா என்னும் சொல்லை குழந்தை திருத்தமாகவும் எளிதாகவும் கூறுகின்றது. இதனை உடலியக்கச் செயல்பாடு என்கிறோம். இதற்கு ஏறக்குறைய ஒர் ஆண்டு காலம் ஆகின்றது.

இவ்வாறே குழந்தைக்கு நடக்க, உட்கார, எழுந்திருக்க, பொருள்களைக் கையாள நாம் பயிற்சி கொடுக்கின்றோம். இதனால் குழந்தையின் உடலியக்கச் செயல்கள் சிறிது சிறிதாக கூர்மை அடைகின்றன. நியூரான்களில் முதிர்ச்சியும் உடல் உறுப்புகளுக்கு போதிய பயிற்சியும் இல்லை என்றால் தூண்டல்களை மூளைக்குச் கொண்டுச் செல்லும் புலன் உணர்ச்சி நியூரான்களுக்கும் மூளையின் கட்டளைகளை செயல்படுத்தும் இயக்க நியூரான்களுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இருப்பதில்லை. அப்போது ஆசிரியர் கரும்பலகையில் வரைந்த நேர் கோட்டுத்துண்டை பார்த்து குழந்தை தான் ஒரு நேர் கோடு வரையவேண்டும் என்று விரும்பினாலும் குழந்தை வரையும் கோடு நேராக வருவதில்லை. அம்மா என்ற சொல்லை அம்மா திரும்பத் திரும்ப குழந்தையைச் சொல்லவைத்து பயிற்சி கொடுப்பது போல ஆசிரியர் திரும்பத் திரும்ப எழுதவைத்து பயிற்சி கொடுக்கும்போது நன்றாக குழந்தை எழுதக் கற்றுக் கொள்கிறது.

பள்ளியில் கற்கும் குழந்தையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையவேண்டுமானால் குழந்தைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்டல், பார்த்தல், தொட்டு உணர்தல், நுகர்ந்து பார்த்தல் சுவைத்துப் பார்த்தல் ஆகிய புலன்உணர்வுகளும் பேசுதல், படித்தல், எழுதுதல், விளையாடுதல் போன்ற உடலியக்கச் செயல்களும் சிறப்பாக நடைபெற வேண்டும். இதற்கு பள்ளியில் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு புலப் பயிற்சி அளிக்க கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளின்போது ஆசிரியர்கள் பல வண்ணங்கள், வடிவங்கள் கொண்ட பொருட்கள், படங்கள் போன்ற துணைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் விளையாட்டு கருவிகளைப் பயன்படுத்துதல், கை கால்களை மடக்குதல், நீட்டுதல், ஒடுதல், தாண்டுதல், குதித்தல் போன்ற உடற்பயிற்சிகள் நிறைந்த பல விதமான உடல் இயக்கச் செயல்களைக் கொடுத்து அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள உடல் இயக்கச் செயல்களைக் கூர்மைப்படுத்த வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முதுமொழிகள் உடலைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகின்றன. நல்ல உடல் நலம் இருந்தால் தான் குழந்தைகள் நன்கு கல்வி கற்க முடியும். நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கு அறிகுறியாகும். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உடலைப் பாதுகாக்கும் நல்ல உணவுப் பழக்கங்களையும் உடைதூய்மை, உடல் தூய்மை, பல் தூய்மை போன்ற அன்றாட பழக்க வழக்கங்களையும் தவறாமல் கற்பித்து குழந்தைகளின் நல்ல உடல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியோடு இணைந்து நடைபெறும் குழந்தையின் உடல் வளர்ச்சியானது குழந்தையின் உற்று நோக்கல், தொடர்புபடுத்துதல், சிந்தித்தல் போன்ற மனச்செயல்பாடுகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றது.

உற்றுநோக்கல் படிவத்தில் மாணவ ஆசிரியர்கள் கொண்டு வந்த விவரங்களிலிருந்து குழந்தைகள் தர்க்க முறையில் என்னென்ன பேசுகின்றனர்? எழுதுகின்றனர்? அவை இடைவெளி, காரண காரியம், எண்ணியல் ஆகியவற்றுள் எந்த வகையில் அடங்குகின்றன? இந்த தர்க்க சிந்தனைக்கும், குழந்தைகளின் வயதிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? எந்த வகையான தர்க்க சிந்தனை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகள் கண்டுபிடித்து ஆசிரிய மாணவர்கள் பதிவேடு தயாரிக்க வேண்டும். அப்பதிவேட்டில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் வகுப்பில் கலந்துரையாடல் செய்து இப்பாடப் பகுதியைத் தொடங்க வேண்டும்.

குறியீட்டுச் சிந்தனையும் தர்க்கமுறை சிந்தனையின் எல்லையும்

அ. குறியீட்டுச் சிந்தனை

சில சமயங்களில் நமது வீட்டில் குழந்தைகள் சிறிய காகித துண்டைக் கொடுத்து இது தான் பயணச்சீட்டு; வைத்துக் கொள்ளுங்கள், என்றும் வெறும் குவளையைக் கொடுத்து இது தான் தேனீர்; குடியுங்கள், என்றும் விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். இங்கு குழந்தை பயணச்சீட்டிற்கு காகிதத்தையும் தேனிருக்கு வெறும் குவளையையும் பிரதியீடு அதாவது குறியீடு (Symbol) செய்கின்றது. குழந்தையின் இத்தகைய சிந்தனையைக் குறியீட்டுச் சிந்தனை என்கிறோம். குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.

ஆ. குறியீட்டுச் சிந்தனையின் தன்மை

குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைபாடு செய்தல் மற்றும் எண்ணுருக்கள் இவற்றை புரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி அடைகிறது. குழந்தைகள் சிலவற்றை சிசு பருவத்திலிருந்தே புரிந்துகொள்ளத் தொடங்கி விடுகின்றனர். மற்றவை முன் குழந்தைப் பருவத்தில் வளர ஆரம்பிக்கின்றன. எனினும் பின் குழந்தை பருவம் வரை இந்த வளர்ச்சி முழுமையடைவதில்லை.

குறியீடுகளை புரிந்துக்கொள்வது என்பது படிப்படியான வளர்ச்சி. சின்னஞ்சிறு குழந்தைகள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அவை பிம்பங்கள் என்று புரிவதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியைக் கவிழ்த்து வைத்தால் அதில் காண்பிக்கப்படும் குவளையில் உள்ள நீர் கீழே கொட்டிவிடுமா என்ற கேள்விற்கு மூன்று வயது குழந்தைகள் ஆம் என்று பதில் அளித்தனர்.

எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்று வீட்டில் இருக்கும் நான்கு வயது குழந்தை கேட்கின்றது எனக் கொள்வோம். அந்த குழந்தை ஐஸ்கிரீம் ஆர்வத்தைத் தூண்டும் குளிர்சாதனப் பெட்டி திறப்பதையோ தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தையோ எதையும் பார்க்கவில்லை. ஒரு பொருளைப்பற்றி நினைப்பதற்கு இவைபோன்ற குறிப்புகள் எதுவும் அந்த குழந்தைக்குத் தேவைப்படுவதில்லை. ஆனால் அக்குழந்தை ஐஸ்கிரீம் அதன் குளிர்ச்சி, சுவை ஆகியவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து அதனைக் கேட்கின்றது.

இவ்வாறான புலன் உணர்ச்சி அல்லது செயல் குறிப்பு இல்லாமல் மனத்தளவில் நடைபெறுவது குறியீட்டுச் சிந்தனையின் தன்மையாகும். குறியீடுகளைப் பயன்படுத்துதல் உலகில் அனைவருக்கும் உள்ள பொதுவான திறமை. பொருள்களுக்குக் குறியீடு கொடுப்பதன் மூலம் பொருள்கள் கண்முன் இல்லாமலேயே குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தி சிந்திக்க முடிகின்றது; நினைவில் கொண்டுவர முடிகின்றது. எடுத்துக்காட்டாக ஆசிரியர் மலர் (குறியீடு) ஒன்றை வரைக என்றதும் குழந்தையின் முன் ஒரு மலர் இல்லாமலேயே குழந்தை ஒரு மலரை வரைகின்றது.

குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழியால் கருத்துப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் குறியீட்டுச் சிந்தனையின் வெளிப்பாடுகளே ஆகும். பின்பற்றிச் செய்தலில் குழந்தைகள் தாங்கள் உற்றுநோக்கிய பிறரது செயல்களை மனத்தில் படம் பிடித்து வைத்துக்கொண்டு அதனை மீட்டுக்கொணர்ந்து செய்து காட்டுகின்றனர். பாவனை விளையாட்டில் குழந்தைகள் மருத்துவர் போல, பேருந்து ஒட்டுநர் போல தங்களை உருவகப்படுத்திகொண்டு விளையாடுகின்றனர்.

குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு எண்ணுருக்களும் எழுத்துகளும் அவசியம். மொழியைப் பயன்படுத்தி குழந்தைகள் வார்த்தைகளைப் பேசுகின்றனர்; கேட்கின்றனர். அந்த வார்த்தைகளுக்கு பொருள் கொடுக்கும்போது அவை கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. இவ்வாறு குழந்தைகள் பள்ளிக்கு வருமுன் குறியீட்டுச் சிந்தனையில் தேர்ச்சி பெற்று விடுவதால் முதல் வகுப்பில் செயல் வழிக் கற்றல் (ABL) முறையில் குழந்தைகளுக்குக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கற்பிக்கமுடிகின்றது.

இ. தர்க்கமுறை சிந்தனை

குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சி தர்க்கமுறை சிந்தனையாகும். தர்க்கமுறை சிந்தனை என்பது குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி ஒரு முடிவையெடுத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். ஒரு குழந்தை 7,8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிரமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று பியாஜே குறிப்பிடுகின்றார். பியாஜே மற்றும் அவரது சகாக்கள் குழந்தைகள் தர்க்கச் சிந்தனை வளர்ச்சியை அனுமானம் செய்வதன் மூலம் ஆரம்பிக்கின்றனர் என்று கருதுகின்றனர். அனுமானம் செய்வது என்பது பின்வரும் தர்க்கச் சிந்தனை முறையாகும்.

A என்பவன் B -யை விட உயரமானவன்.1 மற்றும் B என்பவன் C-யை விட உயரமானவன். 2 என்றால் A என்பவன் C-யை விட உயரமானவன்.3 என்று அனுமானிக்கிறோம்

சிறு குழந்தைகள் 1 மற்றும் 2 கருத்துகளை தனித்தனியே புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் அவற்றை தர்க்க முறையில் சிந்தித்து ஒருங்கிணைக்க முடியவில்லை. எனவே அவர்கள் மூன்றாவது முடிவுக்கு வர முடியவில்லை

i) இடைவெளி தர்க்கச் சிந்தனை

குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி குழந்தைகள் பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளி தொடர்பு பற்றி சரிவர தெரிந்துகொள்ள உதவுகின்றது. 19 மாதங்களில் குழந்தை ஒரு படம் என்பது ஒரு பொருளின் குறியீடு என்று புரிந்து கொள்கின்றது. அதில் இடைவெளி தொடர்புப் பற்றியும் சிந்திக்கிறது. உடலின் பாகங்களைக் காட்டும் படத்தில் காதைக் காட்டி உனக்கு இந்தக் காது எங்கே இருக்கின்றது என்று காட்டு என்றால் குழந்தை தன் காதுகளை தொட்டுக் காட்டுகிறது. அதுபோலவே உனக்கு பொட்டு எங்கே வைக்க வேண்டும்? பொம்மைக்கு பொட்டு எங்கே வைக்கவேண்டும்? என்று கேட்டால், குழந்தை நெற்றியைக் காட்டுகின்றது. மூன்று வயது அல்லது அதற்குப் பிறகு வரையிலும் குழந்தைகள் படங்கள், மாதிரிகள் ஆகியவற்றில் உள்ள இடைவெளியினை நம்பகமான முறையில் புரிந்துகொள்வதில்லை. சில குழந்தைகள் 10 என்று எழுத கற்பித்தால் அவர்கள் 01 என்று எழுதுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு இன்னும் இடைவெளி தர்க்கச் சிந்தனை முற்றிலும் வளர்ச்சி பெறவில்லை என்று கருதலாம்.

(ii) காரண காரிய தர்க்கச் சிந்தனை

வினைக்கும் பயனுக்கும் இடையேயுள்ள காரண காரிய தொடர்பை சிறு குழந்தைகள் அறிந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை இந்த தர்க்க முறை சிந்தனை வளர்ச்சிபெறவில்லை. காரண காரிய தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அவர்கள் ஒரே சமயத்தில் நடக்கும் இரு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி விடுகின்றனர். ஒன்று நிகழ்ந்ததன் அடிப்படையில்தான் மற்றொன்றும் நிகழ்ந்தது என்று எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, தன்னுடைய தவறான எண்ணத்தினால் தான் வீட்டில் உள்ள மற்றொரு குழந்தைக்கு உடல் நலம் கெட்டது என்று எண்ணுவர். இருப்பினும் குழந்தைகள் பற்பசை ஏன் வெண்மையாக இருக்கிறது? என்பதுபோல ஏன்? எதற்கு எனப் பல வினாக்களைத் தொடுப்பர். இது அவர்களின் காரண காரிய சிந்தனை வளர்சியைக் காட்டுகின்றது.

(iii) அடையாளம் கண்டுகொள்ளுதலும் வகைபாடு செய்தலுமான தர்க்க சிந்தனை

மனிதர்களும் மற்றும் பொருள்களும் (எ.கா. வாகனங்கள்) வடிவத்திலும் அளவிலும் தோற்றத்திலும் மாறுபட்டாலும் எல்லாம் மனிதர்கள்தான் அல்லது பொருள்கள்தான் என்று பொருள்களையும் மனிதர்களையும் குழந்தைகள் தர்க்க முறையில் சிந்தித்து அடையாளம் கண்டுகொள்ளுகின்றனர். குழந்தைகள் மணல் பரப்பில் காணப்படும் கூழாங்கற்களில் இது குரங்கின் முகம் போன்று இருக்கின்றது அது குரங்கின் முகம் போன்று இல்லை என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர் அல்லது வகைப்படுத்துகின்றனர். இதற்கு தர்க்கச்சிந்தனை உதவுகின்றது.

ஆய்வாளர்கள் 3,4 வயது குழந்தைகள் அவர்களுக்குப் பழக்கமான பொருளாகிய மனிதர்கள், கல் பொம்மை போன்ற பொருள்களிடத்தில் உள்ள வேறுபாட்டைக் கேட்டனர். அதற்கு குழந்தைகள் மனிதர்கள் உயிருள்ளவர்கள், கல், பொம்மை உயிரற்றவை என்றனர். காரணம் கல்லும் பொம்மையும் இடம் பெயர்வதில்லை சில பொம்மைகள் இடம் பெயர்ந்தாலும் அவை தானாக இடம் பெயர்வதில்லை

நான்கு வயது குழந்தைகள் பொருள்களை இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வகைப்படுத்த முடியும். எ.கா. வண்ணங்கள், வடிவங்கள். இத்திறமையைக் கொண்டு குழந்தைகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பல சமயங்களில் நல்லது - கெட்டது, உயிருள்ளவை - உயிரற்றவை, உண்ணக்கூடியவை உண்ணக்கூடாதவை போன்ற வகைபாடுகளைச் செய்ய முடியும்.

(iv) எண்ணியல் தர்க்கச் சிந்தனை

பள்ளிமுன் பருவத்தில் (3-6 ஆண்டுகள்) குழந்தைகள் எண்களைப்பற்றிய 5 விதிகளை ஒரளவு புரிந்துக்கொள்கின்றனர்.

 1. ஒரு பொருளுக்கு ஒர் எண்ணைத் தொடர்புபடுத்துவது.
 2. நிலையான எண்வரிசை 1,2,3,4,5.
 3. எந்த பொருளிலிருந்து எண்ணத் தொடங்கினாலும் மொத்த எண்ணிக்கை சமம்.
 4. பொருள்களின் மொத்த எண்ணிக்கை கடைசிப் பொருளின் எண்ணாகும்.
 5. இந்த நான்கு விதிகளும் எந்தப் பொருளுக்கும் பொருந்தும். குழந்தைகள் முதலில் இந்த விதிகளைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் எண்ணத் தொடங்குகின்றனர் என்று முன்பு ஆராய்ச்சியாளர்களால் நம்பப்பட்டது. ஆனால் தற்போது குழந்தைகள் எண்ணக் கற்றுக்கொண்ட பின்னரே இந்த விதிகளைப் புரிந்துக்கொள்கின்றனர்

மூன்றரை வயது குழந்தைகளை கொடுக்கப்பட்டப் பொருள்களை (9 எண்ணிக்கைக்குள்) எண்ணி மொத்த எண்ணிக்கையைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டபோது அவர்களால் எல்லாப் பொருள்களையும் எண்ண முடிந்தது. ஆனால் அங்கு எத்தனை பொருள்கள் இருக்கின்றன என்று மொத்த எண்ணிக்கையை கூற இயலவில்லை. அதாவது குழந்தைகள் எண்ணல் விதியைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அதை புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருக்கின்றது என்று தெரிகின்றது. ஐந்து வயதில் குழந்தைகள் இருபது மற்றும் அதற்கு மேலும் எண்ண முடிகின்றது. ஒன்று முதல் பத்து வரை எண்களின் அளவை அதாவது பெரியது, சிறியது எனத் தெரிந்துகொள்ள முடிகின்றது. 4, 5 ஆண்டுகளில் ஒரு மிட்டாய் வைத்திருந்த குழந்தைக்கு இன்னொன்று கொடுத்தால் தான் இப்போது அதிகம் வைத்திருக்கிறோம் என்று நினைக்கின்றது.

அதில் ஒன்றை மற்றொரு குழந்தைக்குக் கொடுத்து விட்டால் இப்போது குறைந்து விடுகின்றது என்றும் நினைக்கின்றது. 4, 5 வயதுகளில் குழந்தைகள் 9 வரை பொருள்களை ஒப்பீடு செய்து பெரியது, சிறியது என கூறமுடியும். எண்வரிசை அறியும் திறமை எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது ஆனால் அது குழந்தையின் குடும்பச் சூழ்நிலை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரும் பயிற்சிகள் (மழலையர் கல்வி), தொலைக்காட்சி ஆகியவற்றின் தாக்கத்தைப் பொறுத்து வெவ்வேறு வீதங்களின் வளர்ச்சி அடைகின்றது. பள்ளியில் பாடங்களைக் குழந்தைகள் தர்க்கமுறையில் சிந்தித்து கற்றுக்கொள்ளும்போது அவர்கள் தாங்களாகவே செயல்பட்டுக் கற்கின்றனர். அதனால் அவர்கள் எளிதாக கற்கமுடியும். அவ்வாறு கற்றப் பாடம் மனதில் நிலைத்து நிற்கும். எப்போது தேவையோ அப்போது அவர்களுக்கு அது பயன்படும். குழந்தைகளிடம் தர்க்கச் சிந்தனையை வளர்க்க விரும்பும் ஆசிரியர்களும் “அதுபோல”, “அதுமாதிரி” என்னும் சொற்களைத் தங்கள் வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்த தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

பொருள்களை ஒப்பிடுதல், உவமைகள், புதிய பாடங்களை முன்னறிவோடு இணைத்தல் போன்ற சூழ்நிலைகளில் இச்சொற்களைப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பால் விற்பவரைப் பால்காரர் என்கிறோம். அதுபோல மிட்டாய் விற்பவரை மிட்டாய்காரர் என்கிறோம். நேற்று இரண்டு இலக்க எண்களில் கூட்டல் கணக்குகளைச் செய்தீர்கள் அதுபோலவே இன்று மூன்று இலக்க என்களில் கூட்டல் கணக்குகளைச் செய்யுங்கள் என்று கூறலாம். ஆகவே குழந்தைகள் தொடக்கப்பள்ளிக்கு வரும்போது அவர்களின் குறியீட்டுச் சிந்தனையும் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சி தொடங்கப் பெற்று இருந்தாலும் அவை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பது தெரிகின்றது. அதாவது குழந்தைகள் வளர்ந்தவர்களைப் போல சிந்திக்கவில்லை. குழந்தைகளில் சிந்தனையில் சில குறைபடுகள் இருக்கின்றன. அதற்கு காரணம் குழந்தைகள் அறிதல் திறன் வளர்ச்சியில் முழுமையடையவில்லை.

அறிதல் திறன் வளர்ச்சி

தன்னையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் மனத்திறனை அறிதல் திறன்

அறிதல் திறனில் சிந்தித்தல், நினைவுகூர்தல், மொழியைப் பயன்படுத்துதல், படைப்பாற்றல், நுண்ணறிவு, புரிந்துகொள்ளுதல், பிரச்சனையைத் தீர்த்தல், முடிவு செய்தல் போன்ற பல திறன்கள் அடங்கியுள்ளன. இத்திறன்களின் வளர்ச்சியையே அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம். அறிதல் திறன் வளர்ச்சி சிசுப் பருவத்திலிருந்து ஒரு திட்டமிட்ட வரிசைக் கிரமமான படி நிலைகளில் நடைபெறுகின்றது. இந்தப்படி நிலைகள் முன்பின்னாக மாறாமல் அல்லது மறையாமல் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு வரிசைக்கிரமப்படியே நடைபெறுகின்றன. ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அதற்கு முன் உள்ள படிநிலையைவிட தரத்தில் முன்னேற்றமான வளர்ச்சி தோன்றுகிறது. அறிதல் திறன் வளர்ச்சி பின்வரும் நான்கு படி நிலைகளில் நடைபெறுகின்றது என்று பியாஜே என்னும் உளவியலறிஞர் கருதுகின்றார்.

(i) புலன் இயக்கப் பருவம் (0-2 ஆண்டுகள்)

அறிதல் திறன் வளர்ச்சியில் குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகள் வரை உள்ள பருவம் புலன் இயக்கப் பருவம் எனப்படும். ஆரம்ப நாட்களில் குழந்தையின் செயல்கள் பார்த்தல், கேட்டல் என்ற புலன் உணர்வுகளுடன் பால் குடித்தல், உறங்குதல், அழுதல், பொருள்களைப் பிடுங்குதல் போன்ற இயக்கங்களுடன் நின்றுவிடுகின்றது. இவையாவும் மறிவினைச் செயல்களாக உள்ளன. நாளடைவில் நரம்பு மண்டலம் வளர வளர குழந்தை புலன் உணர்வுகளையும், உடல் இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் உலகத்தைப் பற்றி புரிந்துகொள்கிறது.

இப்பருவத்தின் தொடக்கத்தில் அதாவது பிறந்து நான்கு மாதங்கள் வரை குழந்தைகள் பொருளின் நிலைப்புத்தன்மையை (Object Permanence) உணர்வதில்லை. ஒரு பொருள் கண்முன் இல்லையென்றாலும் அப்பொருள் எங்கோ ஒர் இடத்தில் இருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளுதல் பொருளின் நிலைப்புத்தன்மையை உணர்தல் ஆகும். ஆனால் நான்கு மாதக் குழந்தைகளிடத்தில் ஒரு பொம்மையைக் காட்டி, பின்னர் அதனை ஒரு தலையணையின் கீழ் மறைத்துவிட்டால் குழந்தை அந்தப் பொம்மையைத் தேட முயற்சிப்பதில்லை காரணம் பொம்மை தலையணையின் கீழ் உள்ளது என்று குழந்தை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

நாளடைவில் பாதியளவு மறைக்கப்பட்ட பொம்மையை அல்லது பொருள்களைக் குழந்தை பார்க்கும்போதும் பொருள்கள் ஒரு சமயம் கண் முன் தோன்றி பின்னர் மறைந்து, மீண்டும் தோன்றும் அனுபவத்தைப் பெறும்போதும் அப்பொருள் இப்போது கண்முன் இல்லையென்றாலும் எங்கோ இருக்கின்றது பின்னர் வரும் என்று குழந்தை கருதுகிறது. அப்போது அந்தப் பொருளின் உருவம் குழந்தையின் மனதில் தோன்றுகிறது. இதுவே குழந்தையின் அறிதல் திறனின் முதல் வளர்ச்சி ஆகும். இதற்கான அறிகுறி 4-8 மாதங்களில் முதன்முதல் தோன்றுகிறது. இவ்வளர்ச்சி ஒரே இரவில் நடந்துவிடுவதில்லை. மிகவும் மெதுவாக நாளுக்குநாள் பல பரிசோதனைகளின் அடிப்படையில் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 18 மாதங்கள் ஆன பின்பு குழந்தை பொருளின் நிலைப்புத் தன்மையை முற்றிலும் உணர்ந்து கொள்கிறது. இவ்வாறு பொருளின் நிலைப்புத்தன்மையை உணர்தலும், பொருளின் உருவம் மனதில் தோன்றுதலும் புலன் இயக்கப் பருவத்தின் முக்கிய வளர்ச்சியாகும்.

உற்றுநோக்கல் படிவத்தில் ஆசிரிய மாணவர்கள் கொண்டு வந்த தகவல்களை வயது வாரியாக எத்தனை குழந்தைகள் மணிச் சோதனைப் பொறுத்தவரையில் முதல் வினாவிற்கு ஆம் என்று பதில் அளித்தார்கள்? எத்தனை பேர் இல்லை என்று பதில் அளித்தார்கள்? எத்தனை பேர் குவியல் அதிகம் என்றனர்? எத்தனை பேர் வரிசை அதிகம் என்றனர்? இதே போல களிமண் சோதனையைப் பொறுத்த வரை முதல் வினாவிற்கு எத்தனை பேர் ஆம் என்று பதில் அளித்தனர்? எத்தனை பேர் உருண்டை அதிகம் என்றனர்? எத்தனை பேர் உருளை அதிகம் என்றனர்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து பதிவேடு தயாரிக்கவேண்டும். அதில் கிடைத்த முடிவுகளை பற்றிய கலந்துரையாடலுக்குப் பின் இப்பாடப்பகுதியைத் தொடங்க வேண்டும்.

(ii) மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் : (2-7 ஆண்டுகள்)

இப்பருவத்தில் குழந்தைகள் மன உருவங்களை பயன்படுத்துவதில் படிப்படியாக முன்னேறுகின்றனர். அதே சமயத்தில் குழந்தையின் மொழியும் வளர்ச்சி அடைகின்றது. இதனால் குழந்தை இந்த உலகை வார்த்தைகள் மூலம் வருணிக்கத் தொடங்குகிறது. இந்த வார்த்தைகளையும் மனஉருவங்களையும் பயன்படுத்தும் திறன் வளர்ச்சி அடைந்த குறியீட்டுச் சிந்தனையை பிரதிபலிப்பதோடு புலன் உணர்ச்சிகளுக்கும், செயல்களுக்கும் அப்பாற்பட்ட தொடர்புகளையும் பிரதிபலிக்கின்றது.

மனஉருவங்களைக் கொண்டு சிந்தனைகளைத் தொடர்ந்தாலும் இப்பருவத்தில் குழந்தையின் அறிதல் திறன் முழுவளர்ச்சி அடைவதில்லை. இப்பருவத்தில் குழந்தைகளின் சிந்தனைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்குப் பொருள்களின் மாறாத்தன்மை (Conservation) புரிவதில்லை. பொருள்களின் மாறாத்தன்மை புரியாத நிலை என்பது பொருள்களின் வடிவமும் தோற்றமும் வேறுபட்டாலும் அளவில் மாறுவதில்லை என்பதை அறிந்துகொள்ள இயலாத நிலை. இதற்கு காரணம் குழந்தைகளின் சிந்தனையில் காணப்படும் ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தும் தன்மை, நடந்து முடிந்த ஒர் நிகழ்ச்சியை மனத்தளவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாத தன்மை, தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை, உயிரற்ற பொருள்களையும் உயிருள்ளவைகளாக பாவிக்கும் தன்மை ஆகும்.

ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தும் தன்மை, என்பது குழந்தைகள் ஒரு பிரச்சனையின் ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற முக்கிய கூறுகளைப் புறக்கணிக்கும் பண்பாகும். ஒரு பரிசோதனையில் பியாஜே ஒத்த கண்ணாடி குவளைகள் இரண்டினை எடுத்துக்கொண்டு அவற்றில் சம அளவு நீரை நிரப்பினார். குழந்தைகள் அவற்றில் உள்ள நீர் இரண்டும் சம அளவு உடையது என்று ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஒரு குவளையில் இருந்த நீரை குறுகிய ஆனால் உயரமான குவளையில் ஊற்றினார். இப்போது உள்ள இரண்டு குவளைகளிலும் சமமான நீர் உள்ளனவா என்று கேட்டார். இந்தச் சூழ்நிலையில் மனச்செயல்பாட்டுக்கு முந்தையபருவத்தில் (Preoperational Stage) உள்ள குழந்தைகள் பெரும்பாலானவர்கள் இல்லை என்று பதில் அளித்தனர். குறுகிய - உயரமான குவளையில் உள்ள நீர் அதிகமானது என்றனர். அக்குழந்தைகள் குறுகிய - உயரமான குவளையின் குறுக்குவெட்டுப் பரப்பை புறக்கணித்து உயரத்தில் மட்டும் கவனம் செலுத்தி அக்குவளையில்தான் அதிக நீர் உள்ளது என்று வலியுறுத்தினர். இதிலிருந்து குழந்தைகள் ஒரு சமயத்தில் உயரம், அகலம், எண்ணிக்கை, வண்ணம் போன்ற ஏதேனும் ஒரேஒரு தன்மையை மட்டும் கவனிக்கின்றனர் என்று தெரிகிறது.

பொருளின் எந்தத் தன்மையைக் குழந்தை பிராதானமாகப் பார்க்கின்றதோ அது குழந்தையின் கவன மையமாக மாறிவிடுகின்றது. இப்பரிசோதனையில் குழந்தைகள் குவளையின் உயரத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். ஆனால் அக்குவளையின் குறுக்குவெட்டுப் பரப்பைப் புறக்கணித்தார்கள். இவ்வாறு இப்பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனையின் ஒன்றிற்கு மேற்பட்ட கூறுகளில் கருத்தைச் செலுத்தி சிந்திக்க இயலவில்லை.

குழந்தைகள் இப்பருவத்தில் நடந்து முடிந்த ஒரு செயலை மனத்தளவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர இயலாத நிலையில் உள்ளனர். குவளைகள் பரிசோதனையில் அகன்ற குவளையிலிருந்து நீரை குறுகிய - நீண்ட குவளைக்கு மாற்றும் செயலை மனத்தளவில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தால் அதாவது குறுகிய-உயரமான குவளையில் உள்ள நீரை திரும்பவும் அகன்ற குவளையில் ஊற்றினால் என்ன ஆகும் என்பதைச் சிந்திக்க முடியவில்லை.

மேலும் இவர்கள் உலகம் தன்னை மையமாகக் கொண்டே இயங்குகிறது என்று நினைக்கின்றனர். அதனால் இவ்வுலகை தனக்கே உரிய முறையில் பார்க்கின்றனர். எடுத்துக்காட்டாக தன்னுடைய அம்மா மற்ற அனைவருக்குமே அம்மாதான் என நினைக்கின்றனர். இப்பருவத்தில் உள்ள குழந்தைகள் ஒரு நிகழ்ச்சியை வேறு ஒருவரின் பார்வையிலிருந்து காணும் திறமையற்றவர்களாய் தன் பார்வையில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடியவர்களாய் (Egocentrism) உள்ளனர். எடுத்துக்காட்டாக 4 வயதுள்ள ஒரு பெண் குழந்தையை உனக்கு ஒரு சகோதரி உண்டா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் அளிப்பதாகக் கொள்வோம். பின்னர் அக்குழந்தையிடம் உன் சகோதரிக்கு ஒரு சகோதரி உண்டா என்றால் இல்லை என்று பதில் அளிக்கும் அக்குழந்தை தன்னுடைய சகோதரியின் பார்வையிலிருந்து தன்னைப் பார்க்க இயலவில்லை என்பதை இது காட்டுகிறது. உண்மையில் குழந்தைகள் ஒரு பிரச்சனையைத் தாங்கள் பார்க்கும் விதத்தைவிட வேறுபல விதங்களும் உண்டு என்பதை கண்டுபிடிக்கத் தவறுகிறார்கள்.

எல்லாப் பொருள்களும் தங்களைப்போலவே உயிருள்ளவை என்று குழந்தைகள் நம்புகின்றனர் (aimism). குழந்தைகள் உயிரற்றப்பொருள் மீது உயிருள்ள பொருளின் குணங்களை ஏற்றி சிந்திக்கிறார்கள். இவர்கள் கடலே பொங்காதே, நில்! நில்! என்றும், அம்மா இந்த மேசை என்னை அடித்துவிட்டது. அதனை அடி என்றும் பேசுவார்கள். அம்மாவும் ஏன் என் குழந்தையை அடித்தாய் என்று மேசையை கோலால் தட்டுவார் அல்லது கையால் அடிப்பார்.

இப்பருவத்தில் அறிதல் திறனில் ஒரளவு மன உருவங்களைப் பயன்படுத்தும் திறன் வளர்ந்திருந்தும் அது முழுமையாக வளர்ச்சி அடையாமல் ஆனால் வளர்ச்சி நோக்கிச் செல்வதால் பியாஜே இதனை மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் எனப்பெயரிட்டார். இத்தனை குறைபாடுகள் காணப்பட்டாலும் இப்பருவத்தின் முடிவில் அதாவது 7 ஆண்டுகளில் இக்குறைபாடுகள் மறைந்து விடுகின்றன. கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் சிந்தனையும் முறையான மனச்செயல்பாடு உள்ளார்ந்த மாற்றங்கள், மன உருவங்களைக் கையாளுதல், மன அமைப்புகளை மாற்றியமைத்தல் ஆகிய மேம்பட்ட மனச்செயல்பாடுகளும் அடுத்து வரும் பருவங்களில் தோன்றுகின்றன.

முதல் வகுப்பில் தொடக்கக் கல்வியைத் தொடங்கும் குழந்தை இன்னும் மனசெயல்பாட்டிற்கு முந்திய பருவத்திலேயே இருப்பதால் அவர்களின் அறிதல் திறன் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அதனால் பெரிய சாலையில் பள்ளிகள் இருந்தால் அங்கு வாகன ஒட்டுநருக்கு பள்ளி உள்ள இடம் என்பதைக் காட்ட சாலைக் குறியீடு நிறுத்தப்பட்டிருக்கும். சில வகை பொம்மைகளில் குழந்தைகளுக்கான எச்சரிக்கை எழுதப்பட்டிருக்கும். எனவே அவர்களை வளர்ந்தவர்களைப் போல பாவிக்காமல் சிறுகுழந்தைகளாக அவர்களை மதிக்கவும் வேண்டும். இத்தகைய குழந்தைகள் செய்யும் பல தவறுகளுக்குக் காரணம் அவர்களுடைய அறியாமையே என்று இப்போது உணர்ந்திருப்பீர்கள். எடுத்துக்காட்டாக முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் சற்று உயரமான மாணவன் முன் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு பின்னால் உள்ள குழந்தைகளுக்குக் கரும்பலகையை மறைப்பான். மற்ற குழந்தையின் விளையாட்டுப் பொருளை தான் பிடுங்கி வைத்துக் கொள்வான். அத்தகைய குழந்தைகள் இன்னும் ஒரு நிகழ்ச்சியைத் தன் பார்வையிலிருந்து மட்டும் பார்க்கும். ஆனால் வேறு ஒருவரின் பார்வையிலிருந்து காணும் திறமையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். எனவே அத்தகைய குழந்தைகளுக்கு அவர்களது செயலால் ஏற்படும் விளைவுகளை பொறுமையாக எடுத்துக் கூறி, விளைவுகளை உணரச்செய்து அறிதல் திறன் வளர்ச்சிக்கு உதவுவது ஆசிரியர்களின் கடமையாகும்.

நரம்புமண்டலத்தின் முதிர்ச்சி மற்றும் குழந்தை சூழ்நிலையோடு கொள்ளும் பொருத்தப்பாடு ஆகிய இரண்டும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பொருள்களின் மாறாத்தன்மை (Conservation) போன்ற அறிதல் திறன் வளர்ச்சி பெறுகின்றது. இவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி இயற்கையான வளர்ச்சி என்றாலும் தொடக்கப்பள்ளிக்கு வரும்போது குழந்தைகளின் அறிதல் திறனில் ஒரளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் தேவையான பயிற்சி அளித்து அந்த வளர்ச்சியை தூண்டுபவரும் செம்மைபடுத்துபவரும் ஆசிரியரே. அதனால் அறிவுக் கண்ணைத் திறப்பவன் ஆசான் என்னும் முதுமொழி எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கின்றது என்று பாருங்கள்.

ஆசிரியர்கள் விளையாட்டு, செய்து கற்றல், நடிப்பிசைப்பாட்டு, கதை போன்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கற்பித்தால் கற்றலானது குழந்தைகளுக்கு எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் அது குழந்தையின் அறிதல் திறன் வளர்ச்சிக்கும் உதவும். கணித பாடத்தில் மிகுதயாக குறியீடுகளும் கருத்தியல்களும் பயன்படுத்தப்படுவதாலும், ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் கருத்தியல் சிந்தனையில் வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும் ஆசிரியர் கணித பாடத்தினை பொருள்களைக் கொண்டு கற்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 2+3 = 5 என்று குறியீடுகளில் கரும்பலகையில் எழுதுவதைவிட 2 புத்தகங்களுடன் 3 புத்தகங்களைச் சேர்த்தால் மொத்தம் 5 புத்தகங்கள் என்றும் புத்தகங்கள் மற்றும் மாணவர்கள், மணிகள் போன்ற பல பொருள்களை வைத்து 2+3-5 என்று குறியீடுகளால் எழுதினால் குழந்தைகள் சிரமமில்லாமல் புரிந்துகொள்வார்கள். அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர் பொருத்தமான செய்து கற்கும் துணைக்கருவிகள் கொண்டு செயல்கள் மூலம் கற்பிக்க வேண்டும். சமூக அறிவியல் கற்பிக்கும்போது மாணவர்களைக்கொண்டு மாதிரி சமூதாய செயல்பாட்டிற்கும் நேரடி அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் கருத்துப்பொருள்களான இலக்கண விதிகளைக் கற்பிக்காமல் பயன்பாட்டு மொழியை (Spoken Language) பொருத்தமான வகுப்பறை சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம் கற்பிக்க வேண்டும். மனிதனை நாகரீக வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டுசெல்ல மேம்பட்ட சிந்தனைக்குப் பெரிதும் துணைபுரிவது இப்பருவத்தில் குழந்தைகளிடம் ஏற்படும் மொழிவளர்ச்சி ஆகும்.

உற்று நோக்கல் படிவத்தில் ஆசிரிய மாணவர்கள் கொண்டுவந்து தகவல்களைக் கொண்டு ஆரம்பப்பள்ளியில் கல்வி பயில வரும் குழந்தைகளிடம் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த சொற்கள், குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தும் வாக்கியங்கள், அவற்றோடு தொடர்புடைய குடும்பத்தின் சமூக பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளையொட்டி வகுப்பில் கலந்துரையாடல் செய்து அதன் அடிப்படையில் குழந்தையின் மொழி வளர்ச்சி என்ற இப்பாடப் பகுதியினைத் தொடங்க வேண்டும்.

குழந்தைகளின் மொழி வளர்ச்சி

பிறந்த குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி அடைந்ததும் தனது முதலாவது பிறந்த நாளில் (10-14 மாதங்களில்) அடையாளம் காணக்கூடிய் தெளிவான உச்சரிப்புடன் கூடிய முதல் சொல்லைப் பேசுகின்றது. அம்மா, தாத்தா, அத்தை போன்ற சொற்கள் குழந்தையின் முதல் சொற்களாக இருக்கின்றன. எந்தச் சொல்லாக இருந்தாலும் அதனை ஒலிக்க அம்மா அல்லது மற்றவர்களைப் பின்பற்றுவதால் கற்றுக்கொள்கிறது. அம்மா என்ற சொல்லை ஒலிக்கக் கற்றுக்கொண்டதும் அதனை குழந்தை தன் மனதில் ஏற்படும் அம்மாவின் உருவத்துடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறது. அம்மா அல்லது காப்பாளருக்குப் பிறகு குழந்தை குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்தும் பின்பற்றுவதன் மூலம் பல சொற்களைப் பேசக் கற்றுக்கொள்கிறது.

18 மாதங்கள் வரை குழந்தை ஒரு தனியான சொல்லைப் பேசிதம் கருத்தைத் தெரிவிக்கிறது. அம்மா எனக்கு பலூன் வேண்டும்; அம்மா இங்கே வா; அம்மா எங்கே போன்ற எல்லாவற்றிற்கும் குழந்தை அம்மா என்ற ஒரு சொல்லை மட்டும் பேசுகின்றது. நாமும் குறிப்பால் உணர்ந்து கொள்கிறோம். 18-24 மாதங்களில் குழந்தை சிறு வாக்கியங்களை பேசத் தொடங்குகிறது. முதலில் முக்கியமான இருசொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசுகிறது. அம்மாவிடம் தண்ணிர் வேண்டும் என்று கேட்பதற்கு அம்மா தண்ணிர் என்று நிறுத்திக்கொள்கிறது. குழந்தைகள் இவ்வாறு மொழி அமைப்பைப் புரிந்துகொண்டு இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை வாக்கியத்தில் அமைத்து தங்கள் இரண்டாவது பிறந்த நாளில் (20-30 மாதங்களில்) பேசுகின்றனர்.

அவர்கள் முன்மழலைப்பள்ளிக்குச் செல்லும்போது அம்மா, அப்பா, பொம்மை, பந்து போன்ற பெயர்ச் சொற்களையும், வா, போ, நட, உட்கார் போன்ற வினைச்சொற்களையும், உள்ளே, வெளியே, பெரியது, சிறியது, இனிப்பு, கசப்பு போன்று ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் சொற்களையும் கற்றுக்கொண்டு தங்கள் சொற் களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். அப்போது அவர்கள், நீண்ட சிக்கலான வாக்கியங்களைப் பேச முடிகின்றது. 5,6 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது பல வழிகளிலும் வளர்ந்தவர்களைப்போல மொழி ஆட்சி செய்ய முடிகின்றது. இருந்தபோதிலும் குழந்தைகளின் மொழித் திறன் வளர்ச்சி பள்ளிப்பருவம் முழுவதும் வளர்ந்து முதிர்ச்சி பெறுகின்றது.

குழந்தைப்பருவத்தில் மொழி வளர்ச்சியைவிட வேறு எந்த மாற்றமும் வேகமாக நிகழ்வதில்லை. உடல் இயக்கங்கள் போலவும் புலக்காட்சியைப் போலவும் மொழி வளர்ச்சி உதடுகள், நாக்கு இவற்றின் அசைவுகளுக்கு காரணமான தசைகளின்மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முதிர்ச்சி மற்றும் அனுபவம் ஆகியவற்றை சார்ந்து அமைகின்றது. குடும்பப் பின்னணியில் குழந்தையின் மொழி வளர்ச்சி குழந்தைகள் பள்ளிக்கு ஒரளவு மொழி வளர்ச்சியைத் தங்கள் குடும்பப் பின்னணியிலிருந்து பெற்று வருகின்றனர். குழந்தையின் மொழியில் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பேசும் மொழியின் தாக்கம் இருக்கிறது. குடும்பப் பின்னணியை பொறுத்து குழந்தை பயன்படுத்தும் ஒலிப்பு முறை, வாக்கியத்தில் அழுத்தம் கொடுக்கும் இடம் ஆகியவற்றில் வேறுபடுகிறது. குடும்பப் பின்னணியில் பூவா, ஆம், மம்மு உணவைக் குறிக்கும் சொற்கள் என்னும் சொற்களைக் குழந்தை தன் தாயிடமிருந்து கற்றுக் கொள்கின்றது. இதனை குழந்தையின் தாயார் மொழி (Home Langauge) என்கிறோம். குழந்தைகள் பயன்படுத்தும் சொற்கள் குழந்தைகளின் வட்டார வழக்குகளுக்கு ஏற்றபடி மாறுபடுகிறது. மொழி வளர்ச்சியில் குழந்தைகள் தங்கள் வட்டாரங்களில் வழங்கப்படும் மொழியையே முதலில் கற்றுக் கொள்கின்றனர். அதனால் இந்த மொழியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிப்பருவத்தில் இது சிறிதுசிறிதாக மறைந்து விடுகின்றது. குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தும் குழந்தையின் மொழி வளர்ச்சி வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு குறைவான அனுபவங்களே இருப்பதால் அவர்களின் சொல்லாட்சி திறன் பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளின் சொல்லாட்சி திறனைவிட குறைவாகவே இருக்கும்.

அதாவது பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு வகை வகையான பொம்மைகள், ஆடைகள், உணவு வகைகள், வெளி அனுபவங்கள் கிடைக்கின்றன. மேலும் வீட்டில் பலவகையான வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளன. இவற்றைக் காணுவதால் குழந்தையின் சொற்களஞ்சியம் விரைவாக வளர்ச்சி அடைகின்றது.

குழந்தையின் வட்டார மொழிவழக்கு

சில வட்டாரங்களில் இடது கை பக்கமாகச் செல் என்பதை பீச்சாங் கை பக்கமாகச் செல் என்றும் வேறு சில வட்டாரங்களில் ஒரட்டு கை பக்கமாக செல் என்றும் வழங்கப்படுகின்றது. சில இடங்களில் தவளையை தவக்களை என்றும் கூறுகின்றனர். இவ்வாறே சொற்களின் உச்சரிப்பிலும் வட்டார அளவில் வேறுபாடு காணப்படுகின்றது. பழம் என்பதை சில வட்டாரங்களில் பயம் என்றும் சில வட்டாரங்களில் பளம் என்றும் கூறுகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் வட்டாரத்தில் குழந்தைகளின் பேச்சுகளை உற்றுநோக்கி அவர்களின் தாயார் மொழியை அறிந்து அவற்றிற்கு இணையான தாய்மொழியினை சரியான தமிழ் சொற்களில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தையின் மொழி வளர்ச்சியில் தொலைக்காட்சியின் தாக்கம்

தற்காலத்தில் தொலைக்காட்சி பெட்டி ஒரு முதன்மையான தகவல் தொடர்புசாதனமாக மாறிவிட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் நிகழ்சிகளை பார்க்கத் தொடங்கிவிட்டனர். மொழி வளர்ச்சியில் வேகத்தை பெற்றிருக்கும் குழந்தை தொலைக்காட்சியில் பேசப்படும் மொழியை எளிதாக உள்வாங்கி கொள்கின்றது. மேலும் அதில் வரும் வண்ண வண்ண விளம்பரங்கள், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொண்டு அதனைப் பேசிக்காட்டுகின்றது. இவ்வாறு குழந்தையின் மொழிவளர்ச்சிக்கு தொலைக்காட்சி உதவினாலும் தொலைக்காட்சியில் எந்த வகையான அல்லது எவ்வளவு சரியான மொழி அமைப்புகள் பேசப்படுகின்றன என்பது சிந்தனைக்குரியது. குழந்தையின் மொழியில் காணப்படும் குறைபாடுகள் பேசும் மொழியில் சில சமயங்களில் குழந்தைகள் குறைபட பொதுமைப் படைத்தல், மிகைபட பொதுமைப்படைத்தல் என்னும் சில வகை பிழைகளை செய்கின்றனர்.

குறைபடப் பொதுமைப் படைத்தல்

விலங்கு என்றால் என்ன? என்று ஆறு வயதுக் குழந்தையைக் கேட்டால் அதற்கு ஒரு தலையிருக்கும் வால் இருக்கும் கால், பாதம், கண் மூக்கு அடர்ந்த முடி கொண்டிருக்கும் என்று பதில் கூறுகிறது. இக்குழந்தை விலங்கு என்னும் பொதுமைக் கருத்தின் எல்லையை குறுகலாக்கி குதிரை, நாய் போன்ற பாலூட்டிகள் மட்டுமே விலங்குகள், மீன், பூச்சி போன்றவை பறவையினங்கள்; விலங்குகள் அல்ல என்று நினைத்து விடுகின்றனர். இவ்வாறு சொற்களுடன் இணையும் பொருளைக் குறுகலாக்கி அச்சொல் பயன்படும் பல சூழ்நிலைகளை விலக்கிவிடுகின்றனர். இதற்கு குறைபடப் பொதுமைப் படைத்தல் என்று பெயர்.

மிகைபடப் பொதுமைப்படைத்தல்

சொல்லின் பொருளை மிகவும் பெரிதாக்கி அது பொருந்தாத இடங்களிலும் பயன்படுத்துமாறு செய்துவிடுகின்றனர். பூச்சிகளுக்கு சில உதாரணம் கொடு என்றால் கறுப்புச் சிலந்தியையும் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் அது எட்டுக்கால்கள் உள்ள உயிரினம் எனவே அது பூச்சியினத்தைச் சேராது. இதற்கு மிகைபட பொதுமைப்படைத்தல் என்று பெயர். இவ்வாறே இலக்கண விதியின் பயன்பாட்டை மிகவும் பெரிதாக்கி அது பொருந்தாத இடத்திலும் பயன்படுத்துவர் எடுத்துக்காட்டாக அம்மாவுக்கு, அப்பாவுக்கு என்பது போலவே குழந்தைகள் எனக்கு என்பதை நானுக்கு என்று மிகைபட பொதுமை படைத்தல் பிழையைச் செய்வார்கள். நாளடைவில் குழந்தைகள் பெறும் அனுபவத்தின் வாயிலாகவும் பிறர் பேசுவதைக் கவனிக்கும்போதும், பெற்றோர்கள் சரியான மொழியைக் கற்பிக்கும்போதும் இக்குறைபாடுகள் நீங்கிவிடுகின்றன.

இவ்வாறு குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்கு வரும்போது கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்னும் நான்கு மொழித்திறன்களுள் முதல் இரண்டு திறன்களில் ஒரளவு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த அடித்தளத்தின் மீது நாம் பள்ளியில் மேலும் கேட்டல், பேசுதலில் பயிற்சியைத் தொடரவேண்டும். பின்னர் படித்தலிலும் எழுதுலிலும் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

மொழி வளர்ச்சிக்கும், அறிதல் திறன் வளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு

 • குழந்தைகளின் மொழி வளர்ச்சிக்கும் அறிதல் திறன் வளர்ச்சிக்கும் இடையே உள்ள அறிதல் திறன் வளர்ச்சி மொழி வளர்ச்சிக்கு உதவும் சூழ்நிலைகள் படத்திலிருந்து மொழி வளர்ச்சி, அறிதல் திறன் வளர்ச்சி ஆகிய இரண்டுமே உடல் முதிர்ச்சி மற்றும் சூழ்நிலைகள் என்னும் ஒரே அடித்தளத்திலேயே அமைந்துள்ளன.
 • மொழி வளர்ச்சி, அறிதல் திறன் வளர்ச்சிக்குக் குறியீடுகளைத் தந்து உதவுகின்றது. அறிதல் திறன் வளர்ச்சி மொழியை வளர்க்கும் நெருங்கிய தொடர்பை விளக்குகிறது.
 • சூழ்நிலைகளை அறிந்துகொள்ள உதவுகின்றது. மொழி வளர்சசியடையும்போது (அதிகமான சொற்களுக்கு பொருள் விளங்கும்போது) அறிதல் திறன் வளர்ச்சிடையகின்றது (சிந்தனை விரிவடைகின்றது).
 • திறன் வளர்ச்சியடைவதால் இன்னும் எவ்வாறு எளிதாகவும், அதிகமாகவும் சொற்களுக்குப் பொருள் அறிந்து கொள்ளலாம்; புதிய புதிய வாக்கியங்களை உருவாக்கலாம் எனச் சிந்திப்பதால் மொழி வளர்ச்சியடைகின்றது.

குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியில் குடும்பச்சூழல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையின் தாக்கம்

குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கின்றது. உயர்ந்த பொருளாதாரப்ஒண பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளுக்கு பல வகையான வண்ணங்கள், வடிவங்கள், செயல் பாடுகள் கொண்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கி கொடுக்க முடிகின்றது. அதனால் குழந்தைகள் பல வகையான விலங்குகள், பொருள்கள், வண்ணங்கள் வடிவங்கள் ஆகியவற்றின் பெயர்களை அறிந்து கொள்ள முடிகின்றது. இதனால் குழந்தைகளின் சொல்லாட்சி (Vocabulary) உயருகின்றது. மேலும் அவர்கள் அவ்விளையாட்டுப் பொருள்களுடன் பாவனை விளையாட்டுகளில் ஈடுபடும்போது குழந்தைகளின் சிந்தனை திறன் வளர்கின்றது. இதைப் போலவே வசதி படைத்த வீட்டில் உள்ள தொலைக்காட்சி, குளிர்சாதனம் போன்ற வசதிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாறாக மிகவும் குறைவான பொருளாதாரப் பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இவ்வசதிகளை செய்து தர இயலவில்லை. எனவே அக்குழந்தைகள் அறிதல் திறன் வளர்ச்சியில் பின்தங்கி காணப்படுகின்றனர்.

குழந்தையின் பெற்றோர்கள் உயர் கல்வி பெற்று உயர் பணியில் இருக்கும் போது அவர்கள் உரையாடும் சிக்கலான மொழியமைப்பு, வெளிப்படுத்தும் மனவெழுச்சிகள் ஆகியவற்றை குழந்தைகள் கவனித்து கற்றுக் கொள்ளும்போது அவர்களின் அறிதல் திறன் வேகமாக வளர்ச்சி அடைகின்றது.

குழந்தைகள் மீது குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையும் குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியை பாதிக்கின்றது. சில வீடுகளில் பெற்றோர்கள் அல்லது மற்றவர்கள் குழந்தைகளை வெளியுலகிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்கள் குழந்தைகளைப் பூங்காக்கள், விளையாட்டு மைதானம், கடைத்தெரு, திருவிழாக்கள், திருமணங்கள், உறவினர் வீடுகள் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவர். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல்வேறுபட்ட காட்சிகளை காணும்போது அவர்களுக்குப் பரந்த அனுபவம் கிடைக்கிறது. அதனால் அவர்களின் மொழியும் சிந்தனையும் வளர்ச்சி அடைகின்றது. ஒட்டுமொத்தத்தில் அவர்களின் அறிதல் திறன் வளர்ச்சி அடைகின்றது.

இத்தகைய அனுபவங்கள் எல்லாக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. எனவே பள்ளிகளிலாவது ஆசிரியர் அத்தகைய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்தால் குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சிக்கு அது உதவும். வகுப்பறை கற்பித்தலின் போது பல வண்ணங்கள், வடிவங்கள் செயல்பாடுகள் கொண்ட பொம்மைகளை குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். இம்முறையில் கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகளும் அமைய வேண்டும். குழந்தைகளுக்கு வெளியுலக அனுபவங்களை ஏற்படுத்த அவர்களைக் கல்விச் சுற்றுலா, களப்பயணம், விலங்கு காட்சி சாலை போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வரவேண்டும்.

தன்னடையாளமும், மன கலமும்

அறிதல் திறன் வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் குழந்தை இந்த உலகினைப் புரிந்து கொள்ளவும், உலகத்தோடு இணைந்து செயல்படவும் தேவையான அடித்தளத்தை அமைக்கின்றன.

குழந்தை வளர வளர சிறிது சிறிதாக ஒரு அகன்ற உலகில் பிரவேசிக்கத் தொடங்கும்போது அந்த உலகத்தோடு தன்னையும் தொடர்புபடுத்துகின்றது. வெளியுலகிற்கும், தனக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று உணரும்போது தான் - பிறர் தன்னுடையது - பிறருடையது என்னும் வேறுபாடுகள் தோன்றி இந்த உலகில் தான் யார் என்னும் கருத்து வளர்ச்சி அடைந்து தன்னடையாளம் தோன்றுகிறது. குழந்தை வெளியுலகத்திலிருந்து பிரித்து தன்னை அடையாளம் கண்டுகொள்வதை தன்னடையாளம் என்கிறோம்.

குழந்தை இவ்வுலகத்துடன் இடைவினை ஆற்றுதல் மற்றும் அதன் உள்ளத்து முதிர்ச்சியின் விளைவாக இவ்வுலகத்தை புரிந்து கொள்கின்றது. குழந்தை பலவேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு அனுபவங்களைப் பெறுவதன் மூலம் தன்னை தன்னடையாள உணர்வு குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் பல பருவங்களில் பல மாற்றங்கள் அடைந்துகொண்டே இருக்கின்றது.

குழந்தை உலகத்தோடு இணைந்து செயலாற்றுவதால் ஏற்படும் தனது வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் தனக்கு ஏற்படும் சோதனைகளில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுகின்றது என்கிறார் எரிக்சன் என்னும் உளவியலார்.

மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் இந்த உலகத்துடன் இணைந்து செயலாற்றுவதால் ஏற்படும் அனைத்து வளர்ச்சியை 8 படி நிலைகளில் விவரிக்கின்றார் எரிக்சன். அவற்றுள் முதல் 3 படிநிலைகளை கடந்து 4ஆம் படி நிலையின்போது குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர். ஒவ்வொரு படிநிலையிலும் குழந்தைகளிடத்தில் தன்னடையாள உணர்வு எவ்வாறு உருவாகின்றது என்று காண்போம்.

நம்பிக்கையும், அவநம்பிக்கையும் (முதல் ஆண்டு)

பிறந்த குழந்தை உணவு, உடை. பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான தேவைகளுக்கு பெற்றோரைச் சார்ந்து இருக்கின்றது. பெற்றோர்கள் அன்பும், அரவணைப்பும் கொடுத்து இந்தத் தேவைகளை குழந்தை விரும்பும் முறையில் பூர்த்தி செய்வார்களானால் குழந்தை பெற்றோரிடம் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. இதனால் குழந்தை வெளியுலகில் பிறர் மீதும் நம்பிக்கை, நல்லெண்ணம் கொள்கிறது. மாறாகப் பெற்றோர்கள் இத்தேவைகளைக் குழந்தைக்கு சரிவர பூர்த்தி செய்யவில்லை என்றால் குழந்தை இந்த உலகின் மீது அவநம்பிக்கை கொள்கிறது. இந்தப் படிநிலையில் குழந்தை இவ்வுலகில் தான் பெறும் அனுபவத்திலிருந்து தான் ஒரு நம்பத்தகுந்த உலகில் இருக்கின்றேனா அல்லது நம்பத்தகாத உலகில் இருக்கின்றேனா என்பதில் ஏதேனும் ஒரு தன்னடையாள உணர்வினைப் பெறுகின்றது. தான் ஒரு நம்பத்தகுந்த உலகில் இருக்கிறேன் என்னும் தன்னடையள உணர்வினைப் பெறும் குழந்தை மகிழ்ச்சியாகவும் மனநலத்துடனும் இருக்கின்றது.

சுதந்திரமும் அவமானம் மற்றும் சந்தேகமும் (2,3 ஆண்டுகள்)

குழந்தை சற்று வளர்ந்ததும் பெற்றோர்கள் அதற்கு குளிக்க பல் துலக்க, ஆடை அணிய, காலைக்கடன் கழிக்கப் பயிற்சி அளிக்கின்றனர். நாளடைவில் குழந்தை தானே இவற்றைச் செய்யத் தொடங்குகிறது. பெற்றோர்களும் அம்முயற்சியை ஊக்கப்படுத்துகின்றனர். இம்முயற்சியில் குழந்தை வெற்றி பெறுகின்றது. அப்போது குழந்தைக்குத் தன் வேலையைத் தானே செய்து கொள்ளும் சுதந்திர உணர்வு கிடைக்கிறது. ஆனால் குழந்தைக்கு இப்பயிற்சியினை மிகவும் முன்னதாகத் தொடங்கிவிட்டால் அல்லது பெற்றோர்களிடம் இருந்து ஊக்கம் கிடைக்காவிட்டால் குழந்தை மனம் முறிந்து தோல்வி அடைகின்றது. அப்போது மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாகிறோம் என்று எண்ணும்போது குழந்தை அவமானமும் தன் சொந்த திறமையில் சந்தேகமும், அடைகிறது.

தானே தொடங்கும் திறமும், குற்ற உணர்வும் (4 - 6 ஆண்டுகள்)

குழந்தை ஒரளவு வளர்ச்சி அடைந்ததும் ஒரு வேலையைத் தானே குழந்தை தொடங்கி செய்ய முயற்சி செய்கிறது. குழந்தைகளின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் - குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களா அல்லது ஏளனம் செய்கிறார்களா என்பதனைப் பொறுத்து குழந்தையின் தன் அடையாளம் உருவாகின்றது. குழந்தையின் சுதந்திர உணர்வை ஊக்கப்படுத்தும் போது அதனுடைய தன்னம்பிக்கை உயருகின்றது. அதனால் ஒரு வேலையைத் தொடங்கவும், தொடர்ந்து செய்யவும் முற்படுகிறது. ஏளனம் செய்யும்போது குழந்தை குற்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றது.

செயல் திறனும் தாழ்வுணர்வும் (6ஆண்டுகள் முதல் குமரப்பருவம் தொடங்கும் வரை)

குழந்தையின் உலகம் தன் வீட்டிலிருந்து அண்டை வீடு, தெரு, பள்ளி என்று விரிவடையும் போது உடல், உள்ள, சமூக திறமைகளைக் கொண்டு எந்த குழந்தை திறம்பட செயல்படுகிறதோ அக்குழந்தை பிறருக்கும் தனக்கும் பயனுள்ளதாகவும் (Productive) அதனால் மற்றவர்கள் மதிக்க தக்கதாகவும் வளர்கின்றது. தொடக்க வளர்ச்சி நிலைகளில் சூழ்நிலைகளை திறமையாக சமாளித்து இருந்தால் அக்குழந்தைக்கு தான் ஒரு செயல்திறன் மிக்க திறமைசாலி என்னும் உணர்வு கிடைக்கிறது. திறமையற்ற குழந்தைகள் தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்று உணரும்போது அவர்கள் செயல்படுபவர்களாக இல்லாமல் பார்வையாளர்களாக மட்டும் இருந்துவிடுகின்றனர். அல்லது எப்பொழுதும் தோல்வியை தழுவுபவர்களாக இருந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையை அடைந்துவிடுகின்றனர்.

இவற்றுள் ஒவ்வொரு பருவத்திலும் உடன்பாடான தன்னடையாள உணர்வைப் பெறும்போது குழந்தை நல்ல மனநலத்துடன் வளருகின்றது. எதிர்மறையான தன்னடையாள உணர்வைப் பெறும்போது குழந்தைக்கு மனநலக் குறைவு ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கு பிறர்மீது நம்பிக்கை ஏற்படும் வாய்ப்புகள் அமையும் போது அவர்கள் சுதந்திர உணர்வினைப் பெற்று தனது செயல் பாடுகளை தானே தொடங்கும் திறமையுடன் தொடங்கி தன் செயலில் வெற்றி பெறுகின்றனர் அதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்; மனநிறைவு அடைகின்றனர். ஆனால் குழந்தைகள் பிறர்மீது அவநம்பிக்கை மற்றும் தன் மீது அவமானம், சந்தேகம், குற்றவுணர்வு ஆகிய அனுபவங்களுடன் வளரும்போது பள்ளியில் அவர்கள் தாழ்வு மனபாண்மையுடன் ஆசிரியர் தரும் எந்த செயலிலும் ஈடுபடாமல் அமைதியாக தனிமையில் இருந்து விடுவர் இத்தகைய குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகின்றது. அத்தகைய குழந்தைகளுக்கு தேவையான கவனம் செலுத்தி அக்குழந்தையை வெற்றி பெறும் குழந்தையாக மாற்ற வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.

தொடக்கப் பள்ளிக்கு வரும் குழந்தை எந்த தன்னடையாள உணர்வுடனும் வரலாம். உடன்பாட்டு தன்னடையாள உணர்வைப் பெற்று நல்ல மன நலத்துடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் மனநலம் பாதிக்கப்படாமல் அதைப் பேணிக்காக்கவும் எதிர்மறை தன்னடையாளம் பெற்று மனநல குறைவுடன் வரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் நல்ல அனுபவங்களை ஏற்படுத்தி அவர்களிடம் உடன்பாடான தன்னடையாள உணர்வினை ஏற்படுத்தவும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்தல், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து கொள்ளுதல், அவர்கள் மீது அக்கறைக் கொண்டு ஊக்கப்படுத்துதல், குழந்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் காட்டுதல் போன்ற செயல்கள் குழந்தைகளின் உடன்பாடான தன்னடையாள உணர்வுக்கும் நல்ல மனநலத்திற்கும் வழி வகுக்கும். இதனால் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் உடன்பாட்டு தன்னடையாள உணர்வைப் பெற்று நல்ல மனநலத்துடன் எதிர்காலத்தில் நல்ல குடிமகனாக வாழ்வர்.

தொகுப்புரை

தொடக்கக் கல்வியின் ஆரம்பத்தில் குழந்தைகளிடம் காணப்படும் உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பிகள் மண்டலமும் நன்கு செயல்படுவதால் குழந்தையின் உடல் உறுப்புகள் திட்டமிட்டபடி வளர்ச்சியடைகின்றன. குழந்தைகளின் உடல் வளர்ச்சியுடன் சிந்தனைத் திறனும் (குறியீட்டுச் சிந்தனை, தர்க்க சிந்தனை) வளர்ச்சியடைகின்றது. சிந்தனைத் திறன் வளர்ச்சியடைவதால் குழந்தைகளின் அறிதல் திறனும் வளர்ச்சியடைகின்றது. அறிதல் திறன், வளர்ச்சியடைவதால் அதன் ஒரு உட்கூறான மொழித் திறனும் வளர்ச்சியடைகின்றது. அறிதல் திறனும் மொழித் திறனும் தங்கள் வளர்ச்சிக்கு ஒன்றுக் கொன்று தத்தமது பங்களிப்பைக் கொடுத்துக் கொள்கின்றன. மொழித்திறன் வளர்ச்சியடைவதால் சமுதாயத்தில் பிறருடன் கூடிவாழ முடிகின்றது. கூடிவாழும் சமுதாயத்தில் தன்னைப் பிறருடன் ஒப்பிடும் போது தன்னைப் பற்றிய தன்னடையாள உணர்வு தோன்றுகின்றது. தன்னடையாளம் எதிர்மறையாக இருக்கும் போது குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகின்றது. தன்னடையாள உணர்வு உடன்பாடாக இருக்கும்போது குழந்தைகள் நல்ல மனநலம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

3.35714285714
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top