முன்னுரை
தலைமை ஆசிரியர் பள்ளியின் நிர்வாகி, ஒரு பண்முகப் பணியாளர், கிராமக் கல்வி நல அலுவலர், பள்ளியின் தரக் காவலர், மாணவர் நலப்பொறுப்பாளர், கிராம சமுதாயத்தின் நண்பன், சக ஆசிரியர்களின் தலைவர், கல்வி ஆர்வலர், என்றும் கற்க விரும்பும் மாணவன், பள்ளிக்கும் கல்வித்துறைக்கும் இணைக்குநர், வழிகாட்டும் ஆர்வம் மிக்க முன்மாதிரி ஆசிரியர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தலைமையாசிரியர் - பொருள்
“கடிகாரத்திற்குக் கம்பிச் சுருள் போல், இயந்திரத்திற்கு இயக்கச் சக்கரம் போல், விசைப்படகுக்குத் எந்திரம் போலப் பள்ளிக்குத் தலைமையாசிரியர் ஆவார்” எனப் பி.சி.ரென் கூறுகிறார்.
“பள்ளி நிர்வாகம் என்ற கட்டமைப்புக்கு அடித்தளம் போன்றவர் தலைமையாசிரியர்” - என்பார் எஸ்.என்.முகர்ஜி.
“தலைமையாசிரியரைச் சார்ந்தே பள்ளியின் பணிகள், அமைந்துள்ளன” – என்பது இடைநிலைக் கல்விக்குழு.
தன்னுடைய அலுவல் காரணமாக, அரசிற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும், நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும், ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தன்னுடைய நடத்தை, நுண் நயம் மற்றும் இரக்க குணங்களின் வழியாக உறவை மேம்படுத்துபவர் தலைமையாசிரியர் என்று எஸ். பாலகிருஷ்ண ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
தலைமையாசிரியரின் பண்பு நலன்கள்
தலைமையாசிரியர் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்ய, நல்ல பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்தல் நல்ல மனிதர், நல்ல கொள்கைகள், அறிவு, சமூகப்பணி, தலைமைப் பண்பு, நடுநிலையாளர் எனும் குணநலன்களைப் பெற்றுத் திகழ வேண்டும். நிர்வாகி என்ற முறையில் திறமையான நிர்வாகப் பொறுப்பையும், கல்வியாளர் என்ற அடிப்படையில் பள்ளியில் கற்றல் சூழலை ஏற்படுத்தவும், ஆசிரியர் என்ற முறையில் முறையான கல்வியை வழங்கி அடைவுகளை மேம்படுத்தவும், மனிதன் என்ற முறையில் மனித உறவுகளை வலுப்படுத்தவும், தலைவர் என்ற முறையில் பள்ளியின் அனைத்துச் செயல்களிலும் மனமுவந்து பொறுப்பை ஏற்கும் பண்பைக் கொண்டவராகவும் அமைதல் அவசியம்.
தலைமையாசிரியர் பெற்றிருக்க வேண்டிய குண நலன்களைக் கீழ்க்காணுமாறு பட்டியல் இட்டுள்ளனர்.
- கடமையுணர்வு
- கருணையுள்ளம்
- பணியாற்றுவதில் ஆர்வம்
- சுயக்கட்டுப்பாடு
- போதுமான தொழில் வல்லமை
- உடல்நலம்
- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
- சுய ஆய்வு
- மனிதநேயம்
தலைமையாசிரியரின் கடமைகள்
தலைமையாசிரியர், தன் பள்ளியின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துபவராக, மாணவர்கள், ஆசிரியர்களின் ஒழுக்கத்தைப் பராமரிப்பவராக, கற்றல் களத்தைத் திட்டமிட்டு மேற்பார்வையிடுபவராக, பாடப்புத்தகக் கருத்துகள் அனைத்திலும் மிகு புலமை வாய்ந்தவராக, ஆலோசித்து வழிகாட்டுபவராக, விளையாட்டுகளை அமைப்பவராக, பள்ளியின் ஆவணங்களைச் சீராகப் பராமரிப்பவராக, நேர்மைமிக்க பொதுநிதி ஆள்பவராக, மாணவர்களின் உடல், அறிவு மற்றும் ஒழுக்க நலன்களைப் பாதுகாப்பவராகச் செயல்பட்டுக் கடமை ஆற்ற வேண்டியவர், எனப் பஞ்சாப் கல்விச் சட்டத் தொகுப்புகள் கூறுகின்றன. தலைமையாசிரியரின் கடமைகளைப் பின்வருமாறும் ஆறு கூறுகளின் கீழ் ஆயலாம்.
- அமைப்பு மற்றும் நிர்வாகம்
- திட்டமிடுதல்
- கற்பித்தல்
- உறவுகள் பராமரித்தல்
- மேற்பார்வை
- வழிகாட்டுதல்
தலைமையாசிரியர் தன்னுடைய அனுபவம், திறமை, சக்தி, விழிப்புணர்வு, நுண்நயம், கடமை உணர்வு, சமூக உணர்வு, கற்பனைத்திறன், புதியன படைக்கும் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் கிராமத்தின் எதிர்கால, நிகழ்காலக் கல்வி நலனைக் காக்க வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்
த.சுப்பிரமணி ,நல்ல கருத்து ,வரவேற்க கூடியது , நல்ல நிர்வாகியாக ,மாணவ துணைவனாக ,பொதுமக்களின் ஆதரவு பெற்றவராக ,நம்பிக்கை யுள்ள நிர்வாகியாக இருக்கவேண்டும் .