பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / மதிப்பீட்டுக் கருவிகளும் நுட்பங்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதிப்பீட்டுக் கருவிகளும் நுட்பங்களும்

கணிதத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கருவிகளும் நுட்பங்களும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மதிப்பீடும் சோதித்தலும் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். கற்போரிடையே ஆராய்ந்தறியும் சிந்தனை, கூர் சிந்தனை மற்றும் கணித சிந்தனைகளை வளர்ப்பதில் பள்ளிப் பாடங்களில் கணிதம் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் ஆர்வமில்லா வகுப்பறை செயல்களும், மன அழுத்தம் தரக்கூடிய மதிப்பீட்டு முறைகளும் கணிதக் கற்றலில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே இப்பகுதியில் கணித பாடத்தின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் (CCE) உள்ள பல்வேறு நுட்பங்கள் மற்றும் கருவிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கற்றல் திறன்களான அறிதல், புரிதல் மற்றும் ஆளல் போன்றவைகளை மதிப்பீடு செய்ய பல்வேறு கணித சோதனை முறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் கணிதத்தில் பயன்படுத்தப்படும் திறந்த வகை வினா முறைகள் கற்போரை ஒரு சிக்கலுக்குப் பல்வேறு வழிகளில் தீர்வு காணும் ஆற்றலை வளர்க்கின்றன.

கற்றல் குறிக்கோள்கள்

  • தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு செயல்பாட்டின் மூலம் கணிதத்தில் கற்போரின் முன்னேற்றத்தை மதிப்பிட பல்வேறு புறவய சோதனை வகைகளைத் தயாரிக்க இயலும்.
  • கணிதத்தில் திறந்த வகை சோதனை வகைகளைக் கட்டமைக்கவும் அதைப் பயன்படுத்தவும் இயலும்.
  • கணித வினா வங்கியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் புரிந்துகொள்ள முடியும்.
  • கற்போரின் கணித ஆர்வத்தை மதிப்பிட கணித கண்காட்சி, வினாடி வினா, புதிர் விளையாட்டு மற்றும் கணித விளையாட்டு போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளைப் பயன்படுத்த இயலும்.

கணிதத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (CCE) கீழ்க்காணும் இரண்டு குறிக்கோள்களை வலியுறுத்துகின்றது.

(a) மதிப்பீட்டில் தொடர்ச்சி

(b) கற்றலில் அனைத்து நிலைகளையும் மதிப்பிடுதல்

" தொடர்ச்சி" என்பது கற்றல் நடைபெறுகையில் அவ்வப்போது சோதனை செய்தல் என்பதாகும். மாறாக கற்றலில் ஒரு முறை மட்டுமே சோதித்தறியும் நிகழ்வு அல்ல. மதிப்பீட்டு செயல்பாடுகள் குறைந்த இடைவெளியில் தொடர்ந்து செயல்படுத்துகையில் அம்மதிப்பீடு தொடர்ச்சியாகிறது. மேலும் கூறுகையில் இரண்டு தொடர்ச்சியான மதிப்பீட்டு செயல்களுக்கு இடையேயான கால இடைவெளி குறைக்கப்படும்பொழுது, அம்மதிப்பீடு தொடர்ச்சியாகிறது. மதிப்பீட்டு செயல்பாடுகள் தொடர்ச்சியாக அமைய அவை அக்கல்வியாண்டு முழுமைக்கும், பரவியிருப்பதாக அமைய வேண்டும். இதன்பொருள் கற்போரின் முன்னேற்றத்திற்கு தொடர் மதிப்பீடு, தொடர் அலகுத் தேர்வு, கற்போரின் கற்றலில் உள்ள கடினத் தன்மை அறிதல், குறைதீர் செயல்கள் மற்றும் கற்போருக்குப் பின்னூட்டம் அளித்தல் போன்றவை அதிக அளவில் நடைபெறுவதாகும்.

முழுமையான என்பதன் பொருள் மாணாக்கரின் வளர்ச்சியில் கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை மதிப்பிடுவதாகும். எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகள் மூலம் கற்போரின் எல்லா திறன் வளர்ச்சியையும் மதிப்பிட இயலாததால், பல்வேறு புதிய உத்திகள் மற்றும் நுட்பங்களையும் (தேர்வு மற்றும் தேர்வு அல்லாத) செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கணித மதிப்பீடு கணித கற்பித்தல் நோக்கத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வியில் கணிதம் கற்பித்தல் மூலம் குழந்தைகளிடையே பயனுள்ள திறன்களையும், கணித ரீதியாக சிந்தித்து ஆராயும் திறனையும், வளர்க்கின்றனர். மேலும் கருத்தியல் மற்றும் இடம் சார் புரிதல், தீர்வு காணல் மற்றும் கணித மாதிரி உருவாக்கம் ஆகியவை பயனுள்ள திறன்களில் அடங்கும். கணிதம் கற்றலின் போது மாணவர்கள் தன்னம்பிக்கை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல், கணித கருத்துக்கள் மற்றும் குறியீடுகள் மூலம் தொடர்பு கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்வர்.

தொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்

குழந்தை கணிதக் கற்றலில் அடையும் திறனை மதிப்பிட விரிவான கருவிகள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. பாரம்பரிய சோதனை முறைகளான எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வுக்கு மாற்றாக ஆசிரியர் வேறுபல முறைகளான உற்றுநோக்கல், ஒப்படைப்புகள், செயல்திட்டங்கள், தொகுப்பு(Portfolio), சரிபார்ப்பு பட்டியல், தர அளவுகோள் மற்றும் விவரண பதிவேடு ஆகியவற்றை பயன்படுத்த இயலும். பல்வகை மதிப்பீட்டு கருவிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் அடைவை முழுமையாகவும் புறவயத்தன்மையோடும் மதிப்பிட இயலும். கணித வகுப்பில்/செயலில் ஒவ்வொரு மாணவனின் கேள்விகளையும் செயல்பாடுகளையும் பதிவு செய்தல் வேண்டும். "அதிக கேள்விகள் அதிக கற்றலுக்கு வழி வகுக்கும்”.

கணிதத்தில் பல்வகை சோதனை முறைகள்

முந்தைய பகுதியில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஆசிரியர், மாணவனின் கணிதக் கற்றலில் ஏற்படும் வளர்ச்சியை மதிப்பீடு செய்வதன் மூலம் மேலும் கணித கற்றல் வளர்ச்சியைக் காண உதவுகின்றது. இதற்காக ஆசிரியர் பல்வகை சோதனை முறைகளைப் பயன்படுத்தலாம். ஆசிரியரால் உருவாக்கப்பட்ட சோதனைகளை வகுப்பில் பயன்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட நோக்கம் முழுவதும் நிறைவடைகின்றது.

புறவய தன்மை முறைகள்

கற்றல் கற்பித்தல் செயல்பாட்டைட் தொடங்கும் முன் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டிற்குப் பொருத்தமான குறிக்கோள்களை வடிவமைக்க வேண்டும். முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைய ஆசிரியரும் மாணக்கரும் இணைந்து செயலாற்ற வேண்டும். புறவய வினாக்கள் குறிப்பிட்ட கற்றல் விளைவுகளை மதிப்பிட கூடியதாக இருக்க வேண்டும். இவ்வகை சோதனை உருப்படிகள் மாணவர்களின் தொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல் அடைவுத்திறனை துல்லியமாக விளக்குகின்றன. இவ்வகையான சோதனை உருப்படிகள் குறிப்பிட்ட கருத்தின் சிறப்பு நோக்கத்தின் அடிப்படையிலானது.

கண்காட்சியில் பங்கேற்றல்

மாணவனின் கணித கற்றலை மதிப்பீடு செய்ய கண்காட்சியையும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம். முறையான வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாலும் மாணவனின் தனித் திறன்களை வெளிப்படுத்த கணித கண்காட்சியானது வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. இவவ்வகையிலான செயல்பாடுகள் கணித விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தாமல், திறன் வளர்ப்பு, நேர்மறை சிந்தனை போன்றவற்றை வளர்க்கவும் உதவுகிறது. இக்கணித கண்காட்சியின் மூலம் மாணவர்கள் மாதிரிகள், அளவீடுகள் மற்றும் வேறு சில செயல்பாடுகளின் வாயிலாக உண்மைப் பொருட்களை பயன்படுத்தி கணித கருத்துக்களை தெளிவுப்படுத்தி கொள்கின்றனர். ஸ்பென்சர் மற்றும் ஆங்கஸ் (1998) என்போரின் கருத்துப்படி மாணவர்களின் கண்காட்சி ஒரு சிக்கலான அறிவுசார் திறன்களை சார்ந்தது. மேலும் அவர்கள் “பல்வேறு தகவல்களைப் தொகுத்து அத்தகவல்களை மதிப்பீடு செய்து பின்னர் அக்கருத்துகளை மற்றவர்களுக்குத் திறன்பட வெளிப்படுத்துவர்.”

கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்வது எப்படி?

கணிதக் கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கு முன்னர் ஆசிரியர் மாணவர்களிடம் கண்காட்சிக்கான இடம் மற்றும் காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். கண்காட்சியை பற்றி மாணவர்களிடம் முன்கூட்டியே தகவல் அளிப்பதன் மூலம் தாங்கள் கண்காட்சிக்குத் தேவையான பொருட்கள் மற்றும் அதைச் செயல்படுத்தும் முறைகள் குறித்து தங்களுக்குள்ளும், ஆசிரியர்களிடத்தும், மற்றும் பாதுகாவலரிடத்தும் கருத்தாக்களைப் பகிர்ந்துகொள்வர். இக்கண்காட்சிக்கு மாணவர்கள், பல்வேறு மாதிரிகள், பொருட்கள், வரைபடங்கள், ஆர்வமூட்டும் தகவல்கள் மற்றும் புதிர்கள் போன்றவற்றைத் தயாரிப்பர். மேலும் பெற்றோர்களும் மாணவர்களின் பங்கேற்பை மேம்படுத்துவர், கண்காட்சியின் போது பல்வேறு செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அவைகள்

  • ஆசிரியர் மற்றும் மாணவர்களது மாதிரிகள் மற்றும் வரைபடங்கள் செய்து காட்டப்படுகிறது.
  • புகைப்படக் கண்காட்சி (கணிதத்திற்குப் பங்காற்றிய கணித வல்லுநர்களின் புகைப்படங்கள்)
  • கற்றல் கற்பித்தல் பொருட்கள் தயாரித்தல்.
  • பல்வேறு கணிதக் கருத்துக்களைப் பற்றி ஆசிரியர் அல்லது கணித வல்லுநர்களை அழைத்து உரையாற்றுதல்.
  • கணித மேற்கோள் புத்தகங்களைப் பார்வைக்கு வைத்தல்,
  • பெற்றோர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கணித விளையாட்டு மற்றும் செயல்பாடுகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்தல்,

மாணவர் தாங்கள் பெற்ற அறிவைப் பல்வேறு சூழல்களில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மதிப்பிடவும் கண்காட்சித் துணைபுரிகிறது. கணித கண்காட்சி மூலம் பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் பங்களிப்பைக் கண்காணிக்கையில் அவர்களின் கணிதக் கருத்துருக்களில் புரிதல் தன்மையும், அவன் / அவளுடைய கணிதக் கற்றல் மனப்பான்மையும் மதிப்பிட இயலும். மதிப்பீட்டு விளைவின் அடிப்படையில் ஆசிரியர் மேலும் கற்றலுக்குத் திட்டமிடுகின்றார். இது ஒப்பார் குழு மதிப்பீட்டிற்கும் முறைசாரா கற்றல் சூழலில் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

3.28571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top