பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது கற்றல் அடைவினைத் துல்லியமாக அளவிடும் வகையில் பொதுத் தேர்வுகளை நடத்தி மிக முக்கிய மற்றும் நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி உயர்கல்வி தொடர வழிவகுக்கிறது.

மேற்காணும் தேர்வுகள் மட்டுமின்றி தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள், உதவித்தொகைக்கான தேர்வுகள் உட்பட மாநில பள்ளித்தேர்வுகள் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தேர்வுகளை ஒளிவு மறைவின்றி நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகளில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஈடுபட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கீழ் 7 மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட தேர்வு மையங்களுக்குத் தேவையான எழுதுபொருள்கள், தேர்விற்கான முன்பணங்கள் விநியோகம் செய்தல், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் போன்ற முக்கிய பணிகள் மேற்படி மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

அரசாணை எண்.26, பள்ளிக் கல்வி (வி1) துறை நாள். 16.02.2011 ன்படி, இடைநிலைக் கல்விக் குழுமம் மற்றும் மேல்நிலைத் தேர்வுக் குழுமம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய “மாநில பள்ளித் தேர்வுகள் வாரியம்” (State Board of School Examinations) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது. மேற்படி வாரியம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து ஆலோசனைகள் பெறவும் கலந்து முடிவுகள் மேற்கொள்ளவும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  1. மேல்நிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி, ஆசிரியர் கல்வி போன்ற தேர்வுகளுக்குச்சான்றிதழ் வழங்குவதில் விதி முறைகள் உருவாக்குதல்
  2. மேற்காண் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள் அமைத்தல்
  3. மேற்காண் தேர்வுகளுக்கான ஒழுங்கு முறை விதிகள் வகுத்தல்.
  4. ஒழுங்கீனச் செயல் வழக்குகளைத்தீர்வு செய்தல் தொடர்பான விதிகள் வகுத்தல்
  5. தேர்வுப் பாடங்கள் தொடர்பான கால அளவு (நேரம்) தீர்மானித்தல்
  6. சான்றிதழ்கள் வடிவமைத்தல்.
  7. இத்தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வுத்திட்டத்தினை வடிவமைத்தல். (Preparation of scheme of Examinations)

மேற்படி குழுமத்திற்குப்பதவி வழி உறுப்பினர்கள், பல்கலைக் கழகப்பிரதிநிதிகள், நியமன உறுப்பினர்கள், பொது உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் இத்தேர்வு வாரியம் புதுப்பிக்கப்பட்டு, உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

செயல்பாடுகள்

மேல்நிலை மற்றும் இடைநிலைப்பொதுத் தேர்வுகள் (Hr.Sec & SSLC Examinations)

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது கற்றல் அடைவினைத் துல்லியமாக அளவிடும் வகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத் தேர்வுகளை நடத்தி மிக முக்கிய மற்றும் நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி உயர்கல்வி தொடர வழிவகுக்கிறது.

எட்டாம் வகுப்புத் தேர்வு (E.S.L.C Examination)

குறைந்தபட்சக்கல்வித் தகுதியை வழங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்விற்காகவும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அரசுத் தொழில் நுட்பத் தேர்வு (Technical Education)

குறைந்தபட்ச தொழில்நுட்பக் கல்வித் தகுதியை வழங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்காகவும் அரசுத் தொழில் நுட்பத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத் தேர்வு கீழ்நிலை, மேல்நிலை என இருநிலைகளில் நடத்தப்படுகிறது. கீழ்நிலைத் தேர்விற்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேல்நிலைத் தேர்விற்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma in Elementary Education)

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும், இடைநிலை ஆசிரியர்களை உருவாக்குவதற்காகத் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு இரண்டாண்டு காலப்பயிற்சிகள் பின் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறுகூட்டல் மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஜூன் 2014 முதல் மாணவர்கள் நலன் கருதி விடைத்தாள் ஒளிநகல் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடைத்தாட்களின் ஒளிநகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புப்பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜுன்/ஜுலை மாதங்களில் உடனடித் தேர்வு / சிறப்புத் துணைத் தேர்வு நடத்துதல் (Special Supplementary Examinations)

ஒரு கல்வி ஆண்டு வீணாகாமல் படிப்பினைத் தொடர மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்ற மாணவர்கள் நலனுக்காக உடனடித் தேர்வு / சிறப்புத்துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST)

ஊரக மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு ஊரக மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது.

கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஊரக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மிகாமல் இருக்கும்பட்சத்தில், இத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய அளவிலான திறனறி தேர்வு (National Talent Search Examinations)

  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான திறனறி தேர்வினைத்தமிழகத்தில் நடத்த, அரசுத்தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு அங்கமாக செயல்படுகிறது. இத்தேர்வின் முதல்நிலை அரசு தேர்வுகள் இயக்ககத்தாலும், இரண்டாம் நிலை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தாலும் நடத்தப்படுகிறது. 2014-2015-ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய/மாநிலப் பள்ளிக்குழுமங்களில் 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்படுகிறது பின்னர் தகுதியுள்ள தேர்வர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது. இந்நேர்காணலில் தெரிவு செய்யப்படும் 236 மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உதவித்தொகை மாதம் ரூ.500/-ம் , பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படியும், படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு (National Mean cum Merit Scholarship Examinations)

  • அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
  • மத்திய / மாநில அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைப்சேர்ந்த மாணவர்கள் 50%, ஏனையோர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் தேர்வெழுதத் தகுதியுடையவர்கள். தேர்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500/- உதவித்தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 6695 மாணவர்களுக்குப் படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு தேசிய திறனறிவு தேர்விலிருந்து பிரிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் மற்றும் மறுபிரதிச் சான்றிதழ் வழங்குதல் (Duplicate Certificate)

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களைத் தவறவிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (CCM) மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் (Duplicate Certificate) நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது .

12-ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மறுமதிப்பீடு (Hr.sec Revaluation)

  • 12-ஆம் வகுப்புத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scaned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடைத்தாள்களின் scaned நகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் பணி மறுமதிப்பீடு/மறுகூட்டல் பணிகளும் முடிவடைந்து திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் பொறியியல் மற்றும் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டு வருகிறது.

மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துதல் (UPSC Examinations)

மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொறுப்பேற்று சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையினைச் சரிபார்த்தல்(Mark Sheet Verfication)

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வழங்கும் பணி தற்போது கணினி வழி மற்றும் மதிப்பெண் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆன்-லைன் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் செயல்படுத்த NIC மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புலப்பெயர்ச்சிச்சான்றிதழ் வழங்குதல்

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குப் புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது (MIGRATION CERTIFICATE), நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட 5 தினங்களுக்குள் வழங்கப்படுகின்றது.

  • புலப்பெயர்ச்சிச்சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான விவரம்
  • புலப்பெயர்ச்சிச்சான்றிதழ் விண்ணப்பம்
  • மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் வழங்குதல்

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களைத் தவறவிடும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல்(CCM) மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் (Duplicate) நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • சான்றிதழ்களின் சான்றிட்டமதிப்பெண் நகல் விண்ணப்பிப்பதற்கான விவரம்
  • சான்றிதழ்களின் சான்றிட்டமதிப்பெண் நகல் விண்ணப்பம் - இடைநிலை
  • சான்றிதழ்களின் சான்றிட்டமதிப்பெண் நகல் விண்ணப்பம் - மேல்நிலை
  • சான்றிதழ்களின் சான்றிட்டமதிப்பெண் நகல் விண்ணப்பம் - Matric and Anglo Indian

மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் வழங்குதல் :

  • மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான விவரம்
  • மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பம் - இடைநிலை
  • மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பம் - மேல்நிலை
  • மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பம் - Matric and Anglo இந்தியன்

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை வழங்குதல்

ஆன்-லைன் வாயிலாகவும் மதிப்பெண் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தும் தற்சமயம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள்

  • சொல்வதை எழுதுபவரை நியமிக்கும் வழிகாட்டுதல்கள்
  • இடைநிலை - செய்முறைத்தேர்வு விலக்களிப்பு - மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் சிறைக்கைதிகள்
  • மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள்
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் - மாணவர்களின் குறைபாடுகளுக்கேற்ப
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள்

மேல்நிலைத் தேர்வு தொடர்பான அரசாணைகள்

  • மேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்விற்கான அரசாணை
  • மறுமதிப்பீட்டில் குறையும் மற்றும் கூடும் மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்
  • அச்சு நகல், மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த கூடுதல் விவரங்ககள் அச்சு நகல், மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த அரசாணை
  • மேல்நிலைப் பொதுத்தேர்விற்கான வயது வரம்பு
  • மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு- மதிப்பீட்டு முறை அரசாணை
  • மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு- தனித்தேர்வர்களை தேர்வுக்கு அனுமதித்தல் அரசாணை
  • மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகளை பின்பற்றி மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு நடத்துதல் அரசாணை
  • மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு - செய்முறைத் தேர்வுகளை அதே ஆண்டில் நடத்துதல் அரசாணை
  • மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குதல் அரசாணை

இடைநிலைத் தேர்வு தொடர்பான அரசாணைகள்

  • இடைநிலைப்பொதுத்தேர்வு- குறைந்தபட்சதேர்ச்சி
  • அறிவியல் பாட செய்முறைத் தேர்வு
  • இடைநிலைப்பொதுத்தேர்விற்கான வயது வரம்பு

ஆதாரம் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

3.42857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top