பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் பரிந்துரைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆராய்ச்சி என்பது வளர்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைவது ஆகும். ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்ற கேள்விகளுடன் தொடங்கப்படும் எளிய ஆராய்ச்சிகள் எதிர்பாராத விளைவுகளை எல்லாம் தந்து உள்ளன. மருத்துவத் துறையிலும் ஆராய்ச்சி இன்றியமையாதது. நோயைக் கண்டறிதல், நோய்க்கான மூல காரணத்தை அறிதல், புதுப்புது மருந்துகளை உருவாக்குதல், உபகரணங்களைத் தயாரித்தல் போன்ற பல மருத்துவத்துறை பிரிவுகளில் ஆராய்ச்சி இன்றியமையாததாக உள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மருத்துவத்துறை இப்போது சிறந்து விளங்குகின்றது. அலோபதி என்னும் மேற்குலக மருத்துவத்துறை ஒரு பக்கம் என்றால் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகள் மறுபக்கம் என நம் நாட்டில் மருத்துவ முறைகள் உள்ளன. பாரம்பரிய மருத்துவ முறைகளும் இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியின் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கென்று தேசிய அளவில் ”மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்” சென்னையில் செயல்பட்டு வருகின்றது. ஆயுஷ் அமைச்சகம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தில் ஒரு பிரிவாக 1995ல் இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதித் துறை சேர்க்கப்பட்டது.

பின்னர் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவம் கருதி 2003ல் இதே அமைச்சகத்தின் கீழ் ஆயுஷ் துறை துவக்கப்பட்டது. ஆயுர்வேதம் யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவ முறைகள் இத்துறையின் கீழ்கொண்டு வரப்பட்டன.

இந்திய மருத்துவ முறைகளில் கல்வி, சிகிச்சை, மருந்து தயாரிப்பு, தரப்படுத்துதல், ஆராய்ச்சி, வெளியீடுகள் என்பனவற்றை வளர்க்கவும் கண்காணிக்கவும், வளப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள்

இந்த அமைச்சகத்தில் மேலே கூறிய ஐந்து மருத்துவ முறைகளுக்கும் பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்திய மருத்துவ முறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிக் கல்விகளுக்கான பாடத்திட்டங்களை ஏற்படுத்துவது; கல்வி கற்றவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கான அனுமதி வழங்குவது, கண்காணிப்பது ஆகிய பணிகளைச் சட்டரீதியான குழுமங்கள் மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை அந்தந்த மருத்துவ முறைகளுக்கான ஆராய்ச்சி குழுமங்கள் மேற்-கொண்டு வருகின்றன.

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றுக்கான மத்திய ஆராய்ச்சிக் குழுமங்கள் புதுதில்லியில் செயல்பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்துக்கான மத்திய ஆராய்ச்சிக் குழுமம் மட்டும் சென்னையில் செயல்பட்டு வருகின்றது. ஆயுர்வேதத்திற்கான தேசிய நிறுவனம் ஜெய்ப்பூரிலும், இயற்கை மருத்துவத்துக்கான தேசிய நிறுவனம் பூனாவிலும், யுனானி மருத்துவத்துக்கான தேசிய நிறுவனம் பெங்களூரிலும், ஹோமியோபதிக்கான தேசிய நிறுவனம் கொல்கத்தாவிலும், சித்த மருத்துவத்துக்கான தேசிய நிறுவனம் சென்னையிலும் செயல்பட்டு வருகின்றன.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்

2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுஷ் துறையில் சித்த மருத்துவம் ஒரு பிரிவாக இருந்தாலும்கூட அது ஆயுர்வேதத்துடன் இணைக்கப்பட்டு ஒரே குழுமமாகவே  இருந்தது. செப்டம்பர் 2010ல் சித்த மருத்துவத்துக்கு எனத் தனியாக மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தை இந்திய அரசு உருவாக்கியது. இக்குழுமத்தின் முதல் தலைமை இயக்குனராக டாக்டர் ஆர்.எஸ்.இராமசுவாமி டிசம்பர் 2012ல் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுமம் தற்காலிகமாக அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவன கட்டடத்தில் இயங்கி வருகின்றது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் நோக்கங்கள் ஏனைய இந்திய மருத்துவ முறைகளுக்காகச் செயல்-படும் ஆராய்ச்சிக் குழுமங்களுக்கு இருப்பது போன்றே மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்துக்கும் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன.

அவை:

 1. 1.பாரம்பரிய சித்த மருத்துவ அறிவைப் பாதுகாத்தல், அதனைப் பிறருக்குப் பகிர்தல்
 2. புதிய சித்த மருந்துகளைத் தரம் மற்றும் திறன் ஆகியவற்றுடன் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்.
 3. இந்த ஆராய்ச்சிகளை நோய் பரிகரிப்புக்கு முன்பாக மற்றும் நோய் பரிகரிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளாக மேற்கொள்ளுதல்.
 4. பல்வேறு வகையான நோய்களுக்கு ஆராய்ச்சி நோக்கத்துடன் சிகிச்சை அளித்தல் / வராமல் தடுத்தல்.
 5. ஏனைய இந்திய மருத்துவ முறைகளுக்கான ஆராய்ச்சிக் குழுமங்கள் மற்றும் இதர ஆய்வு நிறுவனங்கள் / மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன் பலவகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
 6. ஆய்வு முடிவுகள் / கட்டுரைகளை வெளி-யிடுதல், ஆய்விதழ் வெளியிடுதல், சாதனைகளை வெளிப்படுத்துதல், ஆய்வு முடிவுகளை அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துரைத்தல்.
 7. ஆய்வுத் திட்டங்களுக்கும் புது மருந்து தயாரிப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல்.
 8. மருத்துவ மூலிகைகளைக் கணக்கெடுத்தல் / வளர்த்தல்.
 9. பழங்கால சித்த மருத்துவம் தொடர்பான ஓலைச்சுவடிகள் / கையெழுத்துப் பிரதிகள் / நூல்கள் ஆகியவற்றைப் படித்து ஆய்வு செய்தல் / ஆவணப்படுத்துதல், பதிப்பித்தல், பாதுகாத்தல்.

குழுமத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் / ஆராய்ச்சித் தோட்டம்

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் ஐந்து நிலையங்கள் மூன்று மாநிலங்களில் செயல்படுகின்றன.

 • சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம், சென்னை.
 • மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி.
 • மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம்.
 • சித்த மருத்துவமனை சார் ஆராய்ச்சிப் பிரிவு, பாளையங்கோட்டை.
 • சித்த மருத்துவ மூலிகைகள் தோட்ட ஆராய்ச்சி நிலையம், மேட்டூர்

சென்னையில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையத்தில் நோயியல், உயிர்வேதியியல், மருந்தியல், மருத்துவ மூல இயல் ஆகிய துறைகள் செயல்படுகின்றன. இங்கு நோய் பரிகரிப்பு சார்ந்த ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. குறிப்பாக காளாஞ்சகப்படை, அழல் கீல்வாதம் பீனிசம் வெண்புள்ளி போன்ற நோய்களுக்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதேபோன்று நீரிழிவுக்கும் புதிய சித்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலனைக் கட்டம் முடிந்து பொதுவான நீரிழிவு நோயாளிகளுக்கு அம்மருந்தை தருவது தொடங்கி உள்ளது. இந்த சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் புறநோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சிகிச்சை பெறலாம். இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தன்னார்வலர்களாக பங்கு கொள்ளலாம். இப்போது இந்த நிலையத்தில் வர்ம சிகிச்சையும் தரப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் உள்ள மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நோயாளிகள் புறநோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சிகிச்சை பெறலாம். குறிப்பாக கருப்பை சதைக்கட்டிகள் சிறுநீரகக் கல்லடைப்பு போன்ற நோய்களுக்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்படுகின்றது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவமனை சார் ஆய்வுப் பிரிவிலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதோடு பலவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மூலிகைகள் தோட்டம் மேட்டூரில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் சித்த மருத்துவ மூலிகைகள் தோட்டம் அமைந்துள்ளது. மாதிரித் தோட்டத்தில் 236 தனிவகைத் தாவர இனங்கள் உள்ளன. பசுமை இல்லத்தில் 24 மூலிகைகள் உள்ளன. இங்கு வர்த்தக ரீதியாக அமுக்கரா, சிற்றரத்தை, திப்பிலி அகிய மூலிகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தோட்டத்தில் மூலிகைகள் பற்றிய கணக்கெடுப்பு, சேகரிப்பு, பாதுகாப்பு, வளர்த்தல் ஆகிய முக்கிய பணிகள் நடைபெறுகின்றன. பலவிதமான ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்படும் அபூர்வ மூலிகைகள் இங்கிருந்துதான் பெறப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மூலிகைப் பண்ணைகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையன்று.

ஆராய்ச்சி வகைகள்

 • குழுமத்தின் நிறுவனங்களுக்குள் நடக்கும் ஆராய்ச்சி முதல் வகையாகும். இதில் மருத்துவர்கள், மருத்துவர் அல்லாத அடிப்படை விஞ்ஞானம் பயின்றவர்கள் ஈடுபடலாம். ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி கிடைக்கும்.
 • இரண்டாவது வகை வெளியில் உள்ள நிறுவனங்கள் மூலமாகச் செய்வதாகும் இத்தகையத் திட்டங்களுக்கு ரூ.70 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும்.
 • ஒருங்கிணைந்து செயல்படுத்தும் ஆய்வுகள் மூன்றாம் வகையினதாகும் எந்த வகையாக இருந்தாலும் ஆய்வுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு முதல் கட்டமாக அவை அமைச்சகத்தின் இணைச் செயலர் தலைமையில் உள்ள திட்ட மதிப்பீட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டாக வேண்டும்.

முதல் கட்டத் தேர்வில் தேர்வாகும் திட்டங்கள் பிறகு அமைச்சகத்தின் செயலர் தலைமையில் உள்ள திட்ட அனுமதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

குழுமத்தின் பிற பணிகள்

பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிலரங்கு நடத்துதல்; ஆராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள் நடத்துதல்; ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளையும் குழுமம் செய்து வருகின்றது. இலக்கிய ஆவணப் பிரிவில் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை ”மைக்ரோஃபிலிம்” வடிவில் மாற்றப்பட்டு கணிணியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பழைய சித்த மருத்துவப் புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது.

குழுமத்தில் உள்ள குழுக்கள்

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் மிக முக்கியமான மூன்று குழுக்கள் உள்ளன. முதலாவது பொதுக்குழு. இரண்டாவது நிர்வாகக் குழு. மூன்றாவது விஞ்ஞான ஆலோசனைக் குழு. குழுமத்தின் ஆராய்ச்சிகளை நெறிப்படுத்துவதும் பாரம்பரிய சித்த வைத்தியர்களின் அறிவை அறிந்தாய்ந்து அங்கீகரித்து ஆவணப்படுத்துவதும் பரவலாக்குவதும் இந்த விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் பணிகளாகும்.

சித்த மருந்துகள் செய்முறை தர நிர்ணயக் குழு

சித்த மருந்துகள் செய்முறை தர`நிர்ணயக் குழு  மற்றும் அதன் துணைக் குழுக்களும் சேர்ந்து இந்தியாவின் சித்த மருந்துகள் செய்முறைக் குறிப்பு நூல் முதற்பாகத்தைத் தமிழில் 1984-ம் ஆண்டும், ஆங்கிலத்தில் 1992-ம் ஆண்டும், இரண்டாம் பாகத்தைத் தமிழில் 2011-ல் ஆண்டும் வெளியிட்டன. இந்தியாவின் சித்த மருந்துகளின் தர நிர்ணய நூல், பாகம் - 1, தொகுதி - மி  2009 - ம் ஆண்டும், இந்தியாவின் சித்த மருந்துகளின் தர நிர்ணய நூல், பாகம் - 1, தொகுதி-மிமி 2011- ம் ஆண்டும் வெளியிடப்பட்டன. மேலும் பல்வேறு ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்தைப் பிரபலப்படுத்துதல்

சித்த மருத்துவத்தின் புவி எல்லைகளைத் தமிழ்நாட்டைத் தாண்டியும் விரிவுபடுத்தியாக வேண்டும்; புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்; பிற மாநிலங்களில் சித்த மருத்துவமுகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாநிலத் தலைநகரங்களில் சித்தமருத்துவ மையங்கள் திறக்கப்பட வேண்டும்.

தற்போது தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை போன்ற நாடுகளில் தமிழரின் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்துக்குத் தேவை இருக்கிறது. எனவே முறைப்படி சித்த மருத்துவத்தைப் பயில மாணவர்கள் தயங்கத் தேவை இல்லை.

பாரம்பரிய சித்த வைத்தியர்கள் ஆராய்ச்சிக் குழுமம்

பாரம்பரிய வைத்தியர்களில் பலர் நாடி வல்லுனர்களாக இருந்துள்ளனர். நோய்க்கணித்தலில் தலைசிறந்து விளங்கி உள்ளனர். இப்போதும் இத்தகைய திறனுடன் சிலர் உள்ளனர். இவர்களின் அறிவை ஆவணப்படுத்த வேண்டும். உயர்நிலை மருந்துகளான கட்டு, களங்கு, முப்பு ஆகியவற்றின் செய்முறைகளைப் பதிவு செய்து அவற்றின் மருத்துவக் குணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

பாரம்பரியம் வேறு; பணம் சம்பாதிக்க வைத்தியர் ஆவது வேறு. உண்மையான பாரம்பரிய வைத்தியர்களையும் அவர்களது பரம்பரை/மூதாதையர்/குருவழி ஆகியவற்றையும் ஆராய்ந்து தக்கவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும்.

முடிவுரை

சித்த மருத்துவம் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு இன்று அறிவியல் ரீதியாக நிறுவப்பட்டு வளர்ச்சியடைந்திருப்பதில் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் பங்கு மகத்தானது”. பச்சிலை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் எனப் பலவாறாக இருந்து சித்தர்கள் வழங்கிய தத்துவப் பின்புலத்தால் மருத்துவ முறையாக காலம் காலமாக நம் வாழ்வோடு தொடர்கின்ற சித்த மருத்துவத்தை சிதறிப் போகாமல் ஒருங்கிணைத்து மேம்படுத்தச் செய்வது தமிழர்களாகிய நம் கடமையாகும். விஞ்ஞான அறிவின் பின்னணியில் சித்த மருத்துவத்தை உலகறியச் செய்து பிரபலமாக்க வேண்டும் என்பதே மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் உள்ளுறை நோக்கமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.85714285714
அழகர்சாமி Mar 28, 2020 10:05 AM

கொரோனாவுக்கு மருந்தாக சோத்துகற்றாளையை பயன்படுத்தலாமே

ரமேஷ் கே Mar 22, 2020 02:56 PM

ஆயுர்வேத எண்ணெய் பற்றிய நன்மை அறிய..
அந்த மாதிரி ( சாம்பிள் ) எண்ணெயை
எங்கே அனுப்ப வேண்டும்.. ( ஆராய்ச்சி மையம்
ம்) அதன் முகவரி வேண்டும்..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top