பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வியின் நோக்கங்கள்

கல்வியின் நோக்கங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னோக்கு

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர், பின்

கார்கொள் வானிலோர் மீனினைத் தேர்ந்திலார்

அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்

ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்

வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்

வாழும் நாட்டிற் பொருள் கெடல் கேட்டிலார்

கணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்

சொல்லு வாரெண் குணப் பயன் கண்டிலார்

எனப் பாரதியார் நோக்கங்களை நிறைவேற்றாத, பயன் குன்றிய கல்வியை இகழ்ந்துரைக்கிறார்.

கல்வி சமுதாயம் வாழ்வதற்கான ஓர் அடிப்படை ; வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது; சமூக நிலையை மேம்படுத்த ஒரு கருவி. கல்வியின் நோக்கங்கள் சமுதாயத் தேவைகளோடு தொடர்புடையதாக இருக்கின்றன. குழந்தைகளின் இயல்பான தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் சமுதாயத் தேவைகளோடு சார்ந்து நிற்பவை. குழந்தைகள் சமுதாயத்தின் இளம் அங்கத்தினர் ஆவர். ஆகவே கல்வியின் நோக்கங்கள் அக் குழந்தைகளின் சமுதாய மேம்பாட்டிற்கு உதவக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும்.

பிறந்த குழந்தை, சமுதாயத்தின் மரபுகள் மற்றும் பழக்க, வழக்கங்களை அறிந்திருப்பதில்லை. எந்த மதிப்புகளையும் அல்லது கருத்துகளையும் அடைய அது எண்ணுவதில்லை. குழந்தை வளர, வளர கல்வியின் முறையான, முறையற்ற செயல்களால் அதன் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சமுதாய உணர்வுகள் மாறுகின்றன. பின்னரே தன் பொறுப்புகளை உணர்ந்து, பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ள அக்குழந்தை முயலும். சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப, குழந்தையிடம், விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த கல்வி வகை செய்கிறது. கல்வி, குழந்தைகளின் முழுமையான ஆளுமையை வளர்க்கிறது. துணிவு உடையவன், நன்நடத்தை உடையவன், உயர்பண்பு உடையவன் என வளர்ச்சி அடையச் செய்வதோடு, சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் கல்வியின் வாயிலாக, சமூக நடத்தை, ஆன்மீக நாட்டம், தேசிய விருப்பங்கள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் ஆகியன ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்படுகின்றன.

ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளையும், தெரிவு செய்யப்பட்ட இலக்குகளையும், கல்வி நடைமுறைகளோடு இணைக்கச் சரியான வழிகாட்டுதல்களாக கல்வியின் நோக்கங்கள் உதவுகின்றன. அதே நேரத்தில் உடனடித் தேவைகளையும், கல்வியின் நோக்கங்கள் பிரதிபலிக்கின்றன. தேய்ந்து வரும் சமூக மதிப்புகளையும், சமூகத்தின் விருப்பார்வங்களையும், உடனடி சமூக எதிர்பார்புகளையும், மனித குலத்தின் விரிந்த இலக்குகளையும் கல்வியின் நோக்கங்கள் வலியுறுத்துகின்றன. அவை மனித குல எதிர்பார்ப்புகளையும், சமூக மதிப்புகளையும் குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் பொருத்தமான முறையில் நினைவு கூர்வனவாய் அமையும்.

கல்வி ஒரு நோக்க அடிப்படையிலான செயல்

கல்வி என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில்

எஜீகேட்டம் - Educatum - பயிற்சி அளித்தல் - பயிற்சி மற்றும் கற்பித்தல் செயல்

எஜீசீர் - Educere - வெளிக் கொணர்வது, வழிகாட்டுவது

எஜீகேர்-Educare - வளர்ப்பது, எழுப்புவது, கல்வி அளிப்பது எனப் பொருள்படும்.

"வாழ்வின் இறுதிப் பேறாகிய வீடு பேற்றை அடைய உதவக் கூடியதே கல்வி”-உபநிடதம்

”நாட்டிற்காகப் பயிற்சி, தேசத்தின் மீது பற்று கொள்ளக் கற்றுத் தருவதே கல்வி”- கெளடில்யர்

"தன்னை உணர்தல் கல்வி" - ஆதிசங்கரர்

"இயற்கையாக மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகமான பரிபூரணத்தை வெளிக்கொணர்வது கல்வி. உள்ளத்தின் விருப்பங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயனுள்ளதாக ஆக்குவதே கல்வி” - விவேகானந்தர்.

"குழந்தையின் உடல், மனம், ஆன்மா இம் மூன்றையும் ஒரு சேர வளர்ப்பது கல்வி”- காந்தி.

"மனிதனுக்குள் இருக்கும் அனைத்தையும் வளர்ச்சி அடையச் செய்து, அதன் வழியாக அவன் தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், தன்னைப் பொருத்திக் கொள்ளவும் வகை செய்வது கல்வி " - ஜான் டூயி

கல்வி - தொடர் செயல்

கல்வி வாழ்நாள் முழுவதும் நிகழும் தொடர் செயலாகும். மனிதனின் குழவிப் பருவம் முதல், இறுதி நாள் வரை கல்வி தொடர்கிறது. மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பது கல்வி. கற்பதற்கு வயதோ வரம்போ இல்லை; முதுமையிலும் கற்கலாம்; ஆயினும் இளமையில் கற்பது எளிதாகும்.

கல்வி இருவழிச் செயல்

கற்பிக்கும் ஆசிரியரின் ஆளுமை கற்போரது ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. அறிவைப் பலவகையில் பயன்படுத்தக் கல்வி உதவி செய்கிறது. எக்கல்வியைக் கற்பிப்பவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. அதுபோலவே கற்றுகொள்பவருக்கும் நோக்கம் உண்டு. கற்போர், கற்பிப்போர் ஆகிய இருவர் நோக்கமும் இணைய வேண்டும்.

கல்வி மும்முனைச் செயல்

சமுதாய இடைவினையில் (interaction) கல்வி கற்பிப்பவரின் ஆளுமை, கல்விப் பெறுபவரின் நடத்தைப் பண்புகள், உள்ளுணர்வு, தூண்டல், மனப்பாங்கு ஆகியவற்றை நெறிப்படுத்தி அவற்றை சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆற்றுப்படுத்தும். கற்பிப்போர் கற்பிப்பதும், கற்போர் கற்பதும் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

கல்வியும், தத்துவமும்

கல்வி முடிவற்றது. ஆசிரியரின் நம்பிக்கைகள், மதிப்புகள், மற்றும் கருத்துகளால் குழந்தைகளிடம் மாற்றங்கள் ஏற்படும். ஆசிரியர் தத்துவஞானி. தன் தத்துவங்களின் வழியாகக் குழந்தையை விரும்பத்தக்க வகையில் மனிதனாக வளர்ச்சி பெறச் செய்கிறார்.

தத்துவம் என்பது ஆழ்ந்த அறிவு, சிந்தனை மற்றும் எண்ணங்கள் மூலம் கடவுள் மற்றும் இயற்கையோடு தன்னை மனிதன் இணைத்துக் கொள்ள உதவி செய்வது. தன்னுடைய அனுபவங்கள் வாயிலாகப் புதிய அறிவைத் தேடுகிறான் மனிதன். அதன் வழியாகப் பலவற்றை வேறுபடுத்தி உணர்கிறான். புதிய கருத்துகள், எண்ணங்கள், நம்பிக்கைகள், மதிப்புகள் தனக்குள் தோன்றி அதன் வழி மனிதன் வாழ்கிறான்; பிறருக்கு வழிகாட்டுகின்றான். தத்துவங்களின் வாழ்வியல் நடைமுறை உந்தமே கல்வி எனலாம். கல்வியும், தத்துவமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

கல்வித் தத்துவத்தின் வகைகள்

கல்வி என்பது வலிமையும் உணர்வும் மிக்கது; சரியான வழிகாட்டுதலும், மேற்பார்வையும், தேவைப்படும் செயல். சரியான வழிகாட்டுதலின்றி கல்வி தன்னுடைய இலக்கை அடைய இயலாது. தத்துவம், வாழ்வின் இலக்கை நிர்ணயம் செய்து, வழிகாட்டிக் கல்வியின் இலக்கை அடைய உதவுகின்றது. "உண்மையான கல்வி என்பது உண்மையான தத்துவத்தின் மூலமே நடைமுறையாகும்” என்கிறார் ஸ்பென்சர்.

*கருத்தியல் (Idealism)

*உண்மையியல் (Realism),

*(இயற்கையியல் (Naturalism))

*பயனளியியல் (Pragmatism)

கருத்தியல் கொள்கை

கருத்தியல் கொள்கை கடவுள் மீது நம்பிக்கையை வலியுறுத்திக் கூறுகிறது. கடவுளை அடைய ஆன்மீகப் பற்று அவசியம். ஆன்மீகக் கோட்பாடுகளே முழுமையானதும், உயரியவையுமாகும். மதிப்புகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. இது சாக்ரடீஸ், விவேகானந்தர், காந்தி, பிளேட்டோ போன்றவர்கள் வலியுறுத்திய கோட்பாடு ஆகும்.

கருத்தியல் கொள்கையின் கல்வி நோக்கங்கள்

*தன்னை உணர்தல்

*ஆன்மீக வளர்ச்சி

*உண்மை, அழகு, அன்பு ஆகியவற்றை அறிதல்

* கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல்

* அறிவு, பகுத்தறிவை வளர்த்தல்

* புனிதமான வாழ்க்கைக்குத் தயார் செய்தல்

உண்மையியல் கொள்கை

தனிமனித வளர்ச்சியையும், சமூக வளர்ச்சியையும், இக் கொள்கை வலியுறுத்துகிறது. பருப்பொருளான உலகத்தின் மீதான நம்பிக்கை, காரண காரியத் தொடர்பு, அறிவியல் கொள்கைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை. அறிவியல் மனப்பான்மையைக் குழந்தைகளிடம் வளர்க்க உதவி செய்கின்றது.

உண்மையியல் கொள்கையின் கல்வி நோக்கங்கள்

*உண்மையான வாழ்க்கைக்குக் குழந்தையைத் தயார் செய்தல்

* குழந்தையின் உடல் மற்றும் மன ஆற்றலை வளரச் செய்தல்

*புலன்களுக்கான பயிற்சியும் வளர்ச்சியும் வழங்குதல்

*இயற்கை சுற்றுச் சூழலைத் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துதல்

*தொழிற்கல்வி அளித்தல்

* ஐம்புலன்களுக்கான பயிற்சி மற்றும் ஐம்புலன் வளர்ச்சி என்பனவாகும்.

இயற்கையியல் கொள்கை

அரிஸ்டாட்டில், ரூசோ டார்வின், பெர்னாட்ஷா, ஹெர்பர்ட் ஸ்பென்சர், போன்றோர் இக்கொள்கையைப் பின்பற்றிக் கல்வித் தத்துவங்களை வகுத்தனர். இயற்கையே எல்லாம் என்ற நம்பிக்கையை உடையவர்கள். பருப்பொருள் உலகத்தின் இயற்கைத் தன்மைகளையும், இயற்கையையும் இது அடிப்படையாகக் கொண்டது. புத்தக அறிவை எதிர்த்து, குழந்தையை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வற்புறுத்துவதாகும்.

இயற்கையியலின் கல்வி நோக்கங்கள்

*மனிதனை முழுமையாக்குதல்.

*சூழ்நிலையோடு மனிதனை பொருத்தப்பாடு அடையச் செய்தல்.

*இயற்கையோடு இயைந்த வளர்ச்சி பெறச் செய்தல்.

*சுதந்திரமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.

* குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறை.

பயனளியியல் கொள்கை

ஆன்மீகக் கோட்பாடுகளையோ, கடவுளையோ நம்பாமல், மனிதன் மீது முழுமையான நம்பிக்கைக் கொண்ட கொள்கையே பயனளியியல் கொள்கை ஆகும். ஆன்மீகக் கோட்பாடுகள், காலம், சூழல் இவற்றிற்கேற்ப மாறும் தன்மை உடையதால், மனிதனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இது உளவியல் மற்றும் மனிதத் தன்மைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நன்மதிப்புக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை. வில்லியம் ஜேம்ஸ், ஜான் டூயி, கில்பேட்ரிக் போன்றவர்கள் இக்கோட்பாட்டாளர்களாவர்.

*நன்மதிப்புக்கள் புதிதாக உருவாக்கப்படுதல்

*இடம் காலம், சூழலுக்கேற்ப கல்வியின் நோக்கங்கள் மாறும் தன்மையுடையவை.

• சமுதாயத்தோடு ஒத்துப்போதல் மற்றும் மனிதனின் முழுமையான வளர்ச்சி.

• வாழ்க்கையை வளப்படுத்த கல்வி உதவ வேண்டும்.

* நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வி உதவுதல்.

தத்துவங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து கல்வி அளிப்பது, கல்வியின் இயற்கையான கோட்பாடுகளை, நோக்கங்களை புரிந்து கொள்ளாமையைக் குறிக்கும். கல்வியின் வழிமுறைகள் தத்துவங்களின் உதவியின்றி முறையான பாதையில் செல்ல முடியாது. ஆகவே, கல்வியின் நோக்கங்கள் தத்துவ அடிப்படைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

கல்வி நோக்கங்களின் அவசியம்

நோக்கம் என்பது முன் கூட்டித் தீர்மானித்த இலக்கை அடைய, சரியான சிந்தனை மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றுடன் எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது செயல்களைக் குறிக்கின்றது. நாம் செல்ல வேண்டிய பாதையைக்காட்டி இலக்கினை அடைய உரிய முடிவுகளை எடுக்கக் கல்வி நோக்கங்கள் மிகமிக அவசியம்.

பள்ளியில், புதிதாகச் சேரும் குழந்தைகளின் தேவைகளுக்கும், வளர்ந்து வருகின்ற அல்லது வளர்ந்துள்ள சமுதாயத்தினரின் தேவைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்கக் கூடியதாக கல்வியின் நோக்கம் அமைய வேண்டும். குழந்தைகளின் தேவை, கல்வியின் கொள்கைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகள் செய்து மதிப்புமிக்க கல்வி நோக்கங்களை உருவாக்க வேண்டும். வாழ்க்கையும், கல்வியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதையே டூயி “வாழ்க்கையே கல்வி" என்று குறிப்பிட்டார். மனிதன் பூமியில் பிறந்து வளர்ந்து ஆளாகி வாழ்வது ஒரு நோக்கத்திற்காகத்தான். தனிமனிதன் தன் நோக்கத்தை எய்துவதற்கு வழிகாட்டுவது கல்வி.

பண்பு உருவாக்கம், சூழ்நிலையோடு பொருத்தப்பாடு, வாழ்வதற்கான பொருளை ஈட்ட தொழில் செய்தல், அறிவு பெறுதல், நல்ல குடிமகனை உருவாக்குதல் போன்ற பலவகையான நோக்கங்களை அடைவதற்கான செயல்களைக் கல்வி மேற்கொள்ள வேண்டும்.

*பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையுடன் அறிவைத் தொடர்பு படுத்துவது.

*கற்றல், மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறி வருவதை என்பதை உறுதிப்படுத்துதல்.

*பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையப்படுத்துதல்.

*நாட்டின் ஜனநாயகப் பன்முகத் தன்மையைப் புறந்தள்ளாமல் தனித்துவத்தை வளர்த்தல்.

*தேர்வுமுறைகளை நெகிழ்வுடையதாக்கி ஒருங்கிணைந்த வகையில் வகுப்பறை வாழ்வோடு இணைத்தல்

உலகைப் புரிந்துகொள்ளவும், பிறர் நலன், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அறிவை உருவாக்கவும், புதிய சூழலை படைப்பாற்றல் தன்மையோடும், நெகிழ்வோடும், எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்கவும், ஜனநாயக வழிமுறைகளில் பங்கேற்க, ஒத்துழைப்பு உணர்வோடு, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற ஊக்குவிக்கவும், சமூக, பொருளாதார நிலைகளைப் பற்றிய புரிதலை உருவாக்கவும், வேலையோடு தொடர்புடைய அனுபவங்கள் பெறவும், கலை, இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றைப் பாராட்டவும், வளர்க்கவும் வகை செய்வனவாய்க் கல்வியின் நோக்கம் அமைய வேண்டும்.

கல்வியின் நோக்கங்களைத் தீர்மானிப்பவை

கல்வியின் நோக்கங்களை இருவழிகளில் தீர்மானிக்கலாம். அவை (அ) இலட்சிய வழி (Idealistic way) (ஆ) யதார்த்த வழி (Realistic way)

இலட்சிய வழி

முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது குறிக்கோளாகும். தனிமனித வளர்ச்சி, நடத்தை மாற்றம் கலாச்சார மற்றும் மன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமூக வளர்ச்சி போன்றவை கல்வியின் அடிப்படை நோக்கங்களாக அமைகின்றன.

யதார்த்த வழி

சமுதாயத்தில் நடைமுறையிலுள்ள வாழ்க்கைத் தத்துவம், அரசியல் கொள்கைகள், சமுதாயப் பிரச்சனைகள், பொருளாதார நிலை, தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை ஒரு நாட்டின் கல்வி நோக்கங்களை முடிவு செய்கின்றன. சமூகத்தின் தற்போதைய நிலையின் அடிப்படையில் தான் கல்வியின் நோக்கம் அமைய வேண்டும் என்பது யதார்த்த வழியாகும். கல்வி நோக்கங்கள், சமுதாயத்தின் மாறும் தன்மைக்கேற்ப, நெகிழுந்தன்மை உடையதாக இருக்கவேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வாழ்வின் யதார்த்தமான இடர்பாடுகளை எதிர்க்கொண்டு, அவற்றைத் தாமே தீர்த்துக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். கல்வியின் யதார்த்த வழி பின்வரும் நான்கு காரணிகளால் பாதிக்கப்படுகின்றது.

1. வாழ்க்கைத் தத்துவங்கள்

2. அரசியல் முன்னேற்றம்

3. தொழில் நுட்ப வளர்ச்சி

4. சமூக பொருளாதார நிலைகள்

வாழ்க்கைத் தத்துவங்கள்

கல்வி, வாழ்க்கை நோக்கங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது போன்றே, வாழ்க்கைத் தத்துவங்களாலும் பாதிக்கப்படுகின்றது. ஆன்மீகத் தத்துவங்களால் உந்தப்படுகின்றவர்கள் நடத்தை மற்றும் ஒழுக்க நோக்கங்களையும், இயற்கையை ஆதரிப்பவர்கள் பருப்பொருட்களின் வளமை மற்றும் மகிழ்வான வாழ்க்கை நோக்கங்களையும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

அரசியல் வளர்ச்சி

''ஒரு நாட்டின் கல்வி அமைப்புகள், அந்நாட்டை ஆள்கின்றவர்களின் சிறப்புக்களை வெளிப்படுத்தும்'' என பிரெளன் கூறுகின்றார். மக்களாட்சி நாடுகளில் நல்ல குடிமக்களை உருவாக்குவதும், சுயக்கட்டுப்பாடு மற்றும் மக்களாட்சி பண்புகளை ஊட்டுவதும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பொது உடைமை அரசாட்சி நாடுகளில் கீழ்ப்படிதல் மற்றும் கேள்விகளற்ற ஒழுக்கம் ஆகியவை கல்வியின் முதன்மையான நோக்கங்களாக உள்ளன.

தொழில் நுட்ப வளர்ச்சி

நவீன அறிவியல் யுகத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதே கல்வியில் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. முன்னேறிவரும் நாடுகள் தொழில் நுட்பத்தில் புதிய ஆய்வுகள் செய்து அவற்றைக் கல்வியில் புகுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அறிவியல் பொருளாதார நிலை

அரசியல், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நாடுகள், வலிமை மிக்கக் குடிமக்களை உருவாக்கிச் செயல் நுட்பத்தை, திறமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்தை கல்வியின் நோக்கமாகக் கொண்டுள்ளன. நம்முடைய நாட்டில் மக்களாட்சி அடிப்படையில், தங்களை நாட்டிற்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை உருவாக்குவதைக் கல்வியின் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றோம். ஆகவே, கல்வியின் நோக்கங்கள் வாழ்க்கையின் / சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் தெளியலாம்.

கல்வி நோக்கங்களின் வகைகள்

தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005, மக்களாட்சி மதிப்புகளாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள சமத்துவம், நீதி, சுதந்திரம், சமயச்சார்பின்மை மனித உரிமைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்தல் ஆகிய மதிப்புக்களைக் கட்டி வளர்க்கவும், உலகைப் பற்றிய புரிதலோடும், அறிவோடும், பிறர் நலன் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் அறிவார்ந்த அக்கறை கொள்ளவும், குழந்தைகளிடத்தில் அனுபவங்களை அளிக்கவும் கல்வி பொறுப்பேற்க வேண்டும் என்று எடுத்துக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கல்வியின் நோக்கங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

தனி மனித நோக்கம் - சமூக நோக்கம்

பொருளாதார நோக்கம் - அரசியல் நோக்கம்

பண்பாட்டு, கலாச்சார நோக்கம் - தொழில் நோக்கம்

அறிவு நோக்கம் - உடல் வளர்ச்சி நோக்கம்

நேரத்தைப் பயனுள்ளவாறுப் பயன்படுத்தும் நோக்கம் - நடத்தை நோக்கம்

ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சி நோக்கம்

தனிமனித நோக்கம்

சிறந்த கல்வி முறை, தனிமனிதனைச் சிறந்தவனாக உருவாக்க வேண்டும். மனித இனத்திற்குள்ள எல்லா நல்லவைகளும் மனிதனின் கட்டுபாடற்ற, சுதந்திரமான செயல்களால் மட்டுமே உருவாகும். எல்லாக் கல்விச் செயல்களும் இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும்.

கல்வி தனித்துவத்தை வளர்க்க முற்படும் போது தனிமனிதனின் உடல், உள்ளம், உணர்வு, மனம் சார்ந்த திறன்களை வளர்க்கக் கூடியதாக அமைய வேண்டும். மேலும் மனிதனுக்குள் இயல்பாய் உள்ள திறமைகள் தடையேதுமில்லாமல் வளரக் கல்வி உதவ வேண்டும்.

கல்வியின் தனிமனித நோக்கம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை உள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் தொடர்ந்து முழுமையான வாழ்வை வாழ இயலுமாறு செய்யக் கல்வி அவசியம்- உயிரியல் அடிப்படை.

குழந்தைகள் ஒவ்வொருவரும், ஆர்வம், சுவை, நாட்டம், தேவை, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறார்கள். ஆகவே குழந்தையின் உள்ளுறையும் திறன்களைக் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவ வேண்டும்- உளவியல் அடிப்படை.

சமுதாயம், பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றங்கள் வளர்ச்சி ஆகியவை வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றிய மாமனிதர்களால் ஏற்பட்டன. ஆகவே மனித வாழ்விற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள கல்வி வழி கோல வேண்டும்.

தனிமனிதனின் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் மக்களாட்சி சிறந்து விளங்குகிறது. அங்கு கல்வியின் நோக்கம், நற்குடிமகனை உருவாக்குவது ஆகும். நற்குடிமக்கள் நல்ல மனிதர்களிடமிருந்து மட்டுமே உருவாக முடியும்.

தனி மனிதனுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தினால் ஒழுக்கமின்மை, முரண்பாடு, மனஉளைச்சல் போன்றவை ஏற்பட்டு சமூகப் பிளவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் மனிதர் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தன் கடனை ஆற்றக் கடமைப்பட்டவர்கள். தனிமனித நோக்கத்தினால் இக்கடமையைத் தனிமனிதன் நிறைவேற்ற இயலாது.

சமூக நோக்கம்

சமூகம் என்பது, அதன் குடிமக்களை விட மேலானது. சமூகம் அவர்களின் ஆசை மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தி தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளும், தனித்தன்மை வாய்ந்தது. சமூகம் உண்மையானது. அதன் உட்பட்ட பணியாளரில் ஒருவன் தனிமனிதன் ஆவான். தனிமனிதன் சமூதாயத்தின் கட்டளைக்கு உட்பட்டு வாழ வேண்டும். அவனை சமுதாயத்தின் நோக்கத்திற்கு பொருத்தப்பாடு உடையவனாக உருவாக்க கல்விக்கு முழு சுதந்திரம் உள்ளது.

பண்டைய ஸ்பார்டா நாட்டு அரசின் கொள்கையின்படி, ஒவ்வொரு மனிதனும் பிறப்பது அவனுக்காக அன்று, தன் தாய் நாட்டிற்காகவே. ஆகவே கல்வியின் கொள்கை, ராணுவ வீரர்களை உருவாக்குவதாக அங்கு அமைந்தது.

சமூக நோக்கம் ஏன்?

தனி மனிதன் சமுதாயமின்றி வாழ வளர இயலாது. தனிப்படுத்தப்பட்ட மனிதன் என்பது கற்பனையே என்று ரேமண்ட் கூறுகிறார். மனிதன் சமூக விலங்கு என்பதால், சமூகத் தொடர்பு மூலமே அவன் வளர்ச்சி பெற முடியும்.

கல்வி ஒவ்வொரு தனி மனிதனையும், சமூகத்திற்கேற்ற திறமையானவர்களாக உருவாக்கவும், தனிப்பட்டவர்களின் திறமைகளையும், சக்திகளையும் உறுதியான முறையில் சமூதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்- என்பார் ஜான் ரூயி

காந்தி ஆதாரக் கல்வி முறையைத் தனிப்பட்டவர்களின் நன்மைக்காக மட்டுமன்றி, கிராம் மற்றும் விவசாய மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கினார்,

ஓர் உயிரி பல உறுப்புகளைக் கொண்டு, ஒவ்வொன்றும் தன் பணியைச் செய்வதோடு, பிற பகுதிகளோடும், ஒருங்கிணைந்து செயல்படுவது போல் ஒவ்வொரு தனிமனிதனும் ஒருங்கிணைந்து சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும்.

சமுதாயம் மற்றும் அதன் பண்பாட்டுடன் இணைத்து, தனி மனிதனை வளர்ச்சிப் பெறச் செய்தல் அவசியம். தான் தனது, சமுதாயம், அதன் சூழல் ஆகியவற்றோடு தன் ஆளுமையை ஒவ்வொரு தனிமனிதனும் வளர்த்துக் கொள்வதோடு, சமுதாயத்திற்குத் தன்னை அர்ப்பணித்து அதற்கு முழுமையாகப் பணியாற்ற வேண்டும்.

மனித இனம் பன்னெடுங்காலமாக திரட்டிப் பாதுகாத்து வைத்த அறிவுக்களஞ்சியத்தின் அடிப்படையில் தான் தனிமனித வளர்ச்சி நடைபெறுகிறது. எனவே கல்விக்கு சமூக நோக்கு அவசியம் என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நோக்கம்

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முறைகளில் மக்களைப் பொருத்தப்பாடு உடையவர்களாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். கல்வி சமூக பொருளாதாரப் பிரச்சனைகளை அமைதியான முறையில் களைந்து, சமத்துவ, கூட்டுறவு மற்றும் சக வாழ்வுள்ள சமுதாயத்தை அமைக்க முயல வேண்டும். பலவகைப்பட்ட சாதி, பொருளாதார சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள் இந்தியாவில் நிலவி வருகின்றன. இச் சூழலில் ஒற்றுமையை மேம்படுத்திப் பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்யும் நோக்கத்தைக் கல்வி பெற்றிருக்க வேண்டும்.

அரை நூற்றாண்டிற்கு முன்பு, டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தன. மக்கள் தொகையின் அடர்த்தி அதிகம் காரணமாக அனைவருக்கும் உணவு வழங்க அரசால் இயலவில்லை. பழைய மரபுத் தொழில் அவர்களுக்குப் போதிய வருவாய் ஈட்டித் தரவில்லை. இயற்கை வளங்கள் மற்றும் மனிதசக்தி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள, கால்நடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டும் கூட, பால்பண்ணைத் தொழில் தொடங்கப்பட்டது. இப்புதிய தேவையை உணர மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. கல்வியின் காரணமாக மக்கள் புதிய சக்தியைப் பெற்றனர். பால் பொருட்கள் இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அதன் மூலம் மக்களின் தலா வருமானம் உயர்ந்தது. நாட்டின் செல்வம் தழைக்கத் தொடங்கியது. இதையே கல்வியும், பொருளாதார முன்னேற்றமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை எனவும், அவைகள் இருவழிச் செயல் (Two way process) எனவும் பி. சி. திலக் கூறுகிறார்.

பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் பங்கு

கல்வி பயனுள்ள உற்பத்திச் செயலாகக் கருதப்படுகிறது. அதன் மூலம் நாட்டின் பலதுறைகள் செழிப்படைகின்றன. தன்னுடைய பணியால் மனிதனை மிகவும் அறிவுள்ளவனாகவும், நம்பிக்கையுள்ளவனாகவும் விரைவாகச் செயல்படக் கூடியவனாகவும், கல்வி மாற்றுகிறது. அவனுடைய வாழ்வை உயர்த்தி வளப்படுத்த கல்வி வழிவகை செய்கிறது - ஆல்பிரட் மார்ஷல்

மனப்பாங்கு, தொழில் நுட்ப அறிவு மற்றும் திறன்களில் ஏற்படும் அடிப்படையான மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதாரம் விரைவாக முன்னேறும். உணர்வூட்டப்பட்ட மனம், உண்மையான அறிவு, உயரிய திறன் மற்றும் விரும்பத்தக்க மனமாற்றம் ஆகியவை பொருளாதார முன்னேற்றத்திற்கான காரணிகள் ஆகும். ஆகவே கல்வி இத்திறமையையும், பண்புகளையும் வளர்க்க உதவ வேண்டும்.

திறனுள்ள உழைப்பாளி, நிர்வாகி, ஆசிரியர் மற்றும் தொழில் வல்லுநர் போன்றோரைக் கண்டறிய கல்வி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, தரத்தை உயர்த்தும் ஒரு சாதனம். கல்வி மனித சக்தியை ஆக்கபூர்வமாக மாற்றும் தன்மை உடையது. அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும்.

அரசியல் நோக்கம்

அரசியல் அமைப்புகள், இன்றைய சூழலில் சமுதாய வாழ்வைத் தீர்மானிக்கின்றன. சமுதாய மற்றும் வாழ்க்கைக் கருத்துகள் குடியரசுக்கும், கம்யூனிச அரசுக்கும் வேறுபட்டவை. எந்த நாட்டிலும் கல்வி, எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்பவர்களின் மதிப்புகளை, கருத்துகளை பிரதிபலிப்பதாகவே அமையும் என்று ஜே. எப். பிரெளன் கூறுகின்றார். கல்வியின் நோக்கத்தை ஆட்சி செய்யும் அரசு தீர்மானிக்கும். எல்லா நாடுகளிலும் அரசாட்சி ஒரு குறிப்பிட்ட அளவு, கட்டுப்பாட்டை கல்வியின் மீது செலுத்தும். இக்கட்டுப்பாடின்றி கல்வியை அனைவருக்கும் அரசால் வழங்கவியலாது.

கம்யூனிஸ் நாடுகளில் உழைப்பிற்கும், உழைப்பை நல்குபவனுக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது. ஆகவே அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பிற நிலைகளில் உழைப்பை மையமாகக் கொண்டே கல்வியின் நோக்கம் அமைய வேண்டும். அரசின் கொள்கைகள் அனைத்தும் கல்வி பெறுபவருக்கு மாற்றப்படும். அதனை எதிர்க்கவோ, அல்லது விமர்சிக்கவோ எவருக்கும் உரிமையில்லை. கம்யூனிஸக் கோட்பாடுகளே கல்வியின் நோக்கமாகத் திகழும்.

குடியரசு நாடுகளில், கூட்டுறவு மனப்பான்மையுடன் பணியாற்றுதல், சமுதாய மனப்பாங்கை வளர்த்தல், தனிப்பட்ட சிந்தனையைப் பெருக்குதல், அனைவருக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்குதல், சமூக நீதியைப் பாதுகாத்தல், உழைப்பையும், உழைப்பின் மேன்மையையும் உணரவைத்தல் போன்றவை கல்வியின் நோக்கங்களாக அமைந்து இருக்கின்றன.

மக்களின் நலத்தின் மீது அக்கறை உள்ள நல அரசு, குறிப்பிட்ட அளவு கல்வியின் மீது அக்கறையும், கட்டுப்பாடும் கொண்டிருக்கும். உதாரணமாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தலாம். தொடக்கக் கல்வி அளவில், அரசு அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கத் தீர்மானிக்கும். மேலும் தேவையான பாடப்புத்தகங்கள் தயாரிக்க, கல்விக்காக வரி விதிக்க, கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் கலைத் திட்டங்களை நிர்ணயம் செய்ய முடியும்.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில், கல்வியின் நோக்கம், ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் மக்களை உருவாக்குவதாக அமைகிறது.

1986 ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கையில் நமது தேசியக் கண்ணோட்டத்தில் அனைவருக்கும் கல்வி என்பது நமது கொள்கை. இந்த கொள்கைதான் நமது பொருளாதார ஆன்மீக வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாகும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பண்பாட்டு நோக்கம்

பண்பாடு என்பது மனிதனுக்குரிய ஒப்பற்ற சிறப்பாகும். மனிதன் பிறந்து அதன்பின் பண்பாட்டுச் சூழலுக்குக் கொண்டுவரப்படுகின்றான். பிற உயிரினங்கள் இயற்கைச் சூழலிலேயே வாழ்கின்றன. ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் பிறப்பதன் மூலம், அதன் பண்பாட்டில் வளர்கிறான்; வாழ்கின்றான். ஒவ்வொரு மனிதனும் பண்பாட்டிற்கான பிரதிநிதி. இப்பண்பே அவனை விலங்குகளிடமிருந்து வேறுபடச் செய்கிறது.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்பது தமிழ்வாக்கு. கரடு முரடான வாழ்க்கையிலிருந்து பண்பாட்டுப் பெருகி வளர்ந்து விரிந்து சிறப்பான ஆளுமை கொண்டவராகவும், சிறப்பான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பவர் பண்பாடு உள்ளவர் என்று கருதப்படுகிறார். ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் பிறக்கிறான். அது அவனுக்குச் சரியான, முன்மாதிரியான நடத்தைப் பண்புகளையும், மதிப்புகளையும் வழங்குகிறது.

மனிதன் குறிப்பிட்ட இயற்கைச் சூழலில் வாழ்வதால், அதனோடு தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இப்பொருத்தப்பாட்டு வழியில், அவன் மேற்கொள்ளும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும், பண்பாட்டின் முக்கிய அங்கமாகும். பல்வேறு வகைப்பட்ட சூழலிலுள்ள பலவிதமான சமுதாயத்தின் காரணமாகப் பல்வகைப் பண்பாட்டுச் சூழல் உருவாகிறது. இவை அனைத்தையும் புதிய தலைமுறைக்கு மாற்றம் செய்யக் கல்வி அவசியம்.

பண்பாடு, நம்முடைய மரபு, நம்பிக்கை போன்றவற்றை குறிப்பிடுகின்றது. இவைகள் மனிதனை தன் வாழும் சமுதாயச் சூழலோடு இசைந்து வாழ வகைச் செய்யும். சமுதாயச் சூழலுக்கு ஏற்ப இவைகளும் மாறும் தன்மை கொண்டவை. மனம், சமுதாயச் சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழலுடன் குழந்தைத் தன்னைத் தக அமைத்துக் கொள்ள கல்வி அவசியமாகும்.

கல்வி ஒவ்வொருவரையும், தன் பண்பாட்டின் அறிவைப் பெறச் செய்வதோடு, மட்டும் நின்றுவிடாமல் பிறரின் பண்பாடுகளையும் உணர்ந்து அவற்றின் முக்கியக் கூறுகளை அறிந்து புரிந்துக் கொள்ளவும், அவற்றைப் பாராட்டவும் உதவிட வேண்டும்.

கல்விக்குப் பண்பாட்டு நெறிகளைத் தேர்ந்து மேற்கொள்ளும் பணி உண்டு. அது நாட்டில் ஒருமையுணர்வுக்கும், அறிவியல் மனப்பாங்குக்கும், மனம் மற்றும் ஆன்ம விடுதலைக்கும் உதவி செய்யும் வகையில் அனைவரது உணர்வுகளையும், எண்ணங்களையும் செப்பமிடுகிறது எனத் தேசிய கல்விக் கொள்கை (1986) கூறுகிறது.

வட்டாரப் பண்பாடுகளை உள்ளடக்கிய பல மண்டலப் பண்பாடுகளைக் கொண்ட பன்முகப் பண்பாடுடைய நாடாக இந்தியா இருக்கிறது. மக்களின் மத நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், அவர்களின் சமூகத் தொடர்புகளைப் பற்றிய புரிதல்கள் ஆகியவற்றில் ஒருவரிடமிருந்து, மற்றொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக உள்ளனர். கூட்டாக வாழ்வதற்கும், வளர்வதற்கும் எல்லாக் குழுக்களுக்கும் சம உரிமை உண்டு. பன்முகப் பண்பாடுடைய நம் சமூகத்தில் இவ்வுரிமைகளைப் பிரதிபலிக்கக் கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.

நமது பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்தும் வகையில் மாறிவரும் சமூகச் சூழலில் இன்றைய முன்னுரிமைகளைச் செயற்படுத்த கடந்த காலத்தை மறு மதிப்பீடு செய்து, மறு பொருள்படும் வகையில் இளம் தலைமுைறையினரை உருவாக்கக்கூடியதாய் நமது கலைத் திட்டம் அமைய வேண்டும். மனித இனப் பரிமானத்தைப் புரிந்துக் கொள்வது, நம் நாட்டின் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்ள உதவுவதுடன் நம் நாட்டின் சிறப்புத் தன்மைகளைப் பாராட்டி ஏற்றுக் கொள்ளவும் உதவும். இந்த மண்ணின் பண்பாட்டுப் பன்முகத் தன்மை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தொழில் நோக்கம்

கல்வியின் அறிவு மற்றும் கலாச்சார நோக்கங்கள் மட்டுமே மனிதனின், சமுதாயத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவதில்லை எனக் கல்வியாளர்கள் சிலர் குறிப்பிட்டுக் கல்வியின் தொழில் நோக்கத்தையும் வலியுறுத்துகின்றனர். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பெற கல்வி உதவிட வேண்டும்.

தொழிற்சாலைகளும், இயந்திரமயமாதலும், கல்வியின் தொழில் நோக்கத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இன்றைய குழந்தை நாளைய குடிமகன். அவன் தன் எதிர்கால வாழ்விற்கு பணம் ஈட்ட வேண்டும். அவனைப் பொருளாதார சுதந்திரமுள்ளவனாகவும், திறன் மிக்கவனாகவும், எதிர்காலப் பணிக்கு தொழிலுக்கு தயாரிக்கவும் கல்வி முக்கியமானதாகும்.

தொழிலைக் கற்றுக் கொள்வதன் மூலம் வேலையின்மை என்பதிலிருந்து மாணவர்கள் தம்மைக் காப்புறுதி செய்து கொள்கின்றனர் என்று காந்தி கூறியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் செல்வத்தை உயர்த்திட இந்நோக்கம் உதவுகின்றது.

காந்தியின் ஆதாரக்கல்வி கைத்திறனை அடிப்படையாகக் கொண்டது. குழந்தைகளின் புதியன படைக்கும் திறனை வளர்த்துத், தன்னுடைய திறமை மற்றும் ஆற்றலை முழுமையாக இளமைப் பருவத்தில் பயன்படுத்திட ஆதாரக் கல்வி உதவியது.

கல்வியை ஒரு உறுதியான நோக்கத்தைக் கொண்ட செயலாக உருவாக்கிக், குழந்தைகளின் ஆர்வம், உணர்வு மற்றும் எண்ணங்களை விழித்தெழுமாறு செய்யக் கல்வியின் தொழில் நோக்கம் உதவ வேண்டும்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களுக்குக் கல்வி மற்றும் தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களைப் பள்ளி வழங்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வம் மற்றும் ஆற்றலை அறிந்து, அதற்கேற்றாற் போல் உரிய படிப்பைத் தேர்ந்தெடுக்க அறிவுரை வழங்கி பின் வயதில் சமுதாயத்திற்கும் தனக்கும் பயன்படும் வகையில் தொழிலை அல்லது பணியை மேற்கொள்ள கல்வி உதவ வேண்டும்.

மனிதனுக்கு சமூகத்தில் ஒரு நிலையான அந்தஸ்தை, கெளரவத்தை ஏற்படுத்தித் தருவதோடு, தன்னுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இந்நோக்கம் வழி செய்கின்றது.

தொழில் நோக்கம் மனிதனின் பருப்பொருள் சார்ந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து, அவனுடைய மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த வளர்ச்சிகளைத் தவிர்த்து விடுதலும் கூடும். அவைகளும் அவனுடைய முழுமையான வளர்ச்சிக்கு முக்கியமானவைகளே. மேலும் அமைதியும், மகிழ்ச்சியும், ஏற்பட மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த வளர்ச்சியும் தேவை.

தொழில் நோக்கம் மனிதனை இயந்திரத்தனமான சூழலில் சிக்கவைப்பதால், மனிதன் தன் வாழ்வை சுவையாக அனுபவிக்க விடாது. உண்மைக்கல்வி, ஒவ்வொருவரும் தன் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த உதவிட வேண்டும். தேவையற்ற விரும்பத்தகாத பழக்க வழக்கங்களும் தொழில் செய்வதால் ஏற்படுகின்றன. ஆகவே ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் மனிதன் பயன்படுத்த இயலாமல் போவதுமுண்டு.

முடிவுரை

பல தத்துவ அறிஞர்களும், கல்வியாளர்களும், பல காலங்களில், பல நாடுகளில் மாறும் சூழலுக்கேற்ப கல்வி நோக்கங்களை உருவாக்கியுள்ளனர். தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப கல்வி நோக்கங்களும் அவற்றை அடையும் முறைகளும் மாறுபடுகின்றன. இயற்கையான இம்மாற்றம் நிகழவில்லையெனில் கல்விச் செயல்கள் தேங்கும். நவீன கல்வியாளர்களின் கருத்துப்படி எல்லாக் கல்வி நோக்கங்களும் அத்யாவசியமானவையே. ஆனால் ஒன்றிணைந்த ஒரு நோக்கத்தைக் கல்வியின் நோக்கமாகத் தீர்மானிக்க இயலாது. எந்த ஒரு தனி நோக்கமும் கல்வி வளர்ச்சிக்கான விரும்பத்தக்க எல்லாப் பலன்களையும் தனித்து அளிக்க இயலாது. அவைகள் தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியின் ஒரு பகுதி அல்லது சில பகுதிகளை மட்டுமே வளர்க்கும். முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்க எல்லா நோக்கங்களையும் உட்படுத்திய கல்வி முறை தேவை.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top