பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆனைமலை

ஆனைமலையின் வரலாற்று குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாள்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

காடுகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆனைமலை புலிகள் காப்பகம். சில நாட்கள் தங்கி காடுகளின் அழகை ரசிப்பதோடு மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் ஆனைமலை கடவுளே நமக்காக அருளிய அழகின் மலை. நகரத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆனைமலை சரணாலயம் கோவை மாவட்டத்தில் உள்ளது. பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களை உள்ளடக்கியது.

மக்கள் தொகை

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,208 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8279 ஆண்கள், 8929 பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 78.86% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.59 %, பெண்களின் கல்வியறிவு 72.67 % ஆகும்.

இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 74.04% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆனைமலை புலிகள் காப்பகம்

பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயம் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.

பாரம்பரிய சின்னம்

கடல்மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீட்டர் உயரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 958 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் 2000 வகையான மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. இதில் ஏராளமான மருத்துவகுணம் நிறைந்த மூலிகைச்செடிகளும் உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த சரணாலயம் யுனெஸ்காவின் பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.

விலங்குகள்

இந்த காப்பகத்தில் புலிகள், யானைகள், நீலகிரி தார், கரடி, நரி உள்ளிட்ட பல விலங்குகளும், பலவகையான அணில்களும், பாதுகாக்கப்படுகின்றன. இதுபோல 300க்கும் மேற்பட்ட பலவகையான பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த அழகிய வனப்பகுதியை சுற்றிப்பார்க்க வனத்துறை சார்பில் யானைசவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேன் மூலமாகவும் காடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம். வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகள் நிறைவு செய்கின்றன.

டாப்சிலிப் வனப்பகுதி

இந்த சரணாலயத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. அழகிய பசுமை மாறாக்காடுகளைக் கொண்ட இந்த வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு சிங்கவால் குரங்குகள் மற்றும் ஏரளாமான மான்வகைகள் உள்ளன. அவற்றை நேரடியாக எளிதில் கண்டு ரசிக்கலாம். சொந்த வாகனம் மூலம் டாப்சிலிப் செல்பவர்கள் அதனை வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்திவிட்டு வனத்துறையினர் ஏற்பாடு செய்து தரும் வாகனம் மூலமே காடுகளை சுற்றிப்பார்க்க முடியும்.

எப்படி செல்வது

கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.இங்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை சீசன் காலமாகும். மழைக் காலங்களில் இங்கு செல்வது ஆபத்தானது. காடுகளின் அழகை சில நாட்கள் தங்கி ரசிக்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ப குடில்களும் உள்ளன. முன்பதிவு அவசியம் தேவை.

வால்பாறை

புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, சுற்றுலா பயணிகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அரிய வகை வனவிலங்குகளையும், வனப்பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், வழியில் வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதாலும், பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதியில் வீசி விட்டு வருவதாலும், இயற்கை எழில் மாசுபடுவதோடு, வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுலா பயணிகள் இவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என்றனர்.

வழிபாட்டுத் தலம்

மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும்.

பொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு, மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

இத்தலத்தின் வரலாறு

இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்த்ரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்று விட்டான். பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது.

அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப் பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

ஆதாரம் : பி. ஜெயக்குமார், பொள்ளாச்சி

3.375
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top